நவரசா ஒன்பதாவது சுவை - திருநங்கைகளின் உலகம்.


திருநங்கைகளோடான சந்திப்புகள் அடிக்கடி நடக்க, நகரவீதியில் முக்கியமான வீதியில் அலுவலகம் வைத்திருக்கும் எனக்கு ஏதுவாகிப்போகிறது. ஓவ்வொருமுறையும் காசு கேட்டு வரும் அவர்களோடி பிணக்கின்றி என் பேச்சு முடிந்ததே கிடையாது. ஒருமுறை என் அலுவலகத்தில் காசு கொடுக்க மறுத்த என் அலுவலரை கேவலமாக, கொச்சையாக திட்டுவதும், கும்மியடிப்பதும் நடந்தது. பிச்சையாக பணம் கேட்டு வரும் அவர்களிடம் ‘என் அலுவலகத்தின் முகப்பில் இருக்கும் கண்ணாடி கதவினை சுத்தம் செய்யுங்கள், 200 ரூபாய் தருகிறேன் என்று இதுவரை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன், இதுவரை ஒருவரும் அதற்கு முன்வந்ததே கிடையாது. பதிலாக, வசைபாடி விட்டுதான் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல், நாம் எதுவும் பேசாமல் கொடுக்கும் 5 ரூபாய் அவர்களுக்கு போதுமானதாயிருக்கிறது. இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடுபவர்கள், படிப்பறிவு இல்லாத, கூலிவேலை செய்பவர்களும், செக்ஸ் தொழிலில் ஈடுபடுபவர்களுமே.
ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? என நிறைய கேள்விகள் மனதில் ஓடும். ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அதிமுக்கியமான வேலைகள் வந்துவிடுவதால் என் சமுதாய அக்கறையின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டுவிடும். நான்தான் இப்படி என்றால் கொஞ்சம் படித்த, நல்ல நிலையில் இருக்கும் அரவாணிகள் கூட இவர்களின் நிலையை பற்றி கவலைப்படுபவர்களாயில்லை என்பதுதான் கஸ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சமுதாய சூழலில்தான்,  இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றில்லாமல் இவர்களின் வாழ்வியலை ஓரலவிற்கேனும் சமரசமின்றி பதிவு செய்த ஒரு படம்தான் நவரசா. இயக்கம்-சந்தோஷ்சிவன்.


அரசுத்துறையில் வேலை செய்கிற, காலையில் செய்தித்தாளை ஒருவரி விடாமல் படித்துவிட்டு அது சரி, இது சரி, இந்தியா முன்னேறவே போவதில்லை என வாயளவிலேயே பேசிக்கொண்டிருக்கும் ஒரு டிபிக்கள் மிடில்கிளாஸ் அப்பா, நுனி நாக்கில் ஆங்கிலமும், ஷாப்பிங், லேடிஸ் கிளப் என தன்னை ஒர் இன்டெலக்ட்சுவலாக நினைத்துக்கொண்டிருக்கும் மாடர்ன் ஏஜ் அம்மா, இவர்களின் செல்லப்பெண் பதிமூன்று வயது ஸ்வேதா.
இப்படியான ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒரே சாபமாக கெளதம். ஸ்வேதாவின் சித்தப்பா. எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறான். அவனுக்கு மீசை சுத்தமாக முளைக்கவேயில்லை. அதனால் ஒட்டு மீசை வைத்துக்கொண்டிருக்கிறான். இது அவனுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை கொடுத்திருக்கலாம் அதனால்தான் அப்படியிருக்கிறாரென ஸ்வெதா நினைக்கிறாள், கடவுளிடமும் அதற்காக வேண்டிக்கொள்கிறாள். ஸ்வேதாவை விடவும் வயது குறைவாக இருந்தாலும் எந்நேரமும் அவளோடு சுத்திக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன். இவர்கள்தான் இந்த திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள்.
ஸ்வேதாவின் பருவமடைந்ததை கொண்டாடிக்கொண்டிருக்கும் அந்தநாளில் கெளதம் அந்த வீட்டின் பாரம்பரிய நகைகளை எடுத்து சட்டை பைகளில் திணித்துக்கொண்டிருப்பதை ஸ்வேதா கவனிக்கிறாள். அங்கிருந்து அருகிலுள்ள ஒரு தெருவின் பாழடைந்த வீட்டிற்குள் செல்லும் அவனை பின்தொடர்கிறாள். வெளியிலிருந்து பார்க்கும் ஸ்வேதா உள்ளே நடப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள். அங்கே கெளதம் புடவைகட்டிக்கொண்டு அந்த நகைகளை அணிந்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறான். அதிர்ச்சியோடு வீடு திரும்பும் அவள், தன் தந்தையிடம் சொல்ல விழைகிறாள். அதற்குள் கெளதம் வீடு வந்துவிட தவிர்க்கிறாள். அடுத்த சில தினங்களுக்கு கும்பகோணத்திலிருக்கும் சொந்தங்களின் திருமணத்திற்கு அப்பாவும் அம்மாவும் செல்லவிருப்பதால் ஸ்வேதாவிற்கு துணையாக கெளதமை வீட்டிலேயே இருக்கச்செய்துவிட்டு செல்கின்றனர்.
வீட்டில் தனியாக இருக்கும் ஸ்வேதா, கெளதமிடம் தான் பார்த்ததை சொல்கிறாள், முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு சமாளித்துக்கொண்டு அவன் தன்னை ஒரு பெண்ணாக உணர்வதை சொல்கிறான். நாளை நடக்கப்போகும் கூவாகத்திருவிழாவில் கலந்துகொண்டு அரவானைத் திருமணம் செய்து முழுமையாக பெண்ணாக மாறப்போவதாகவும் சொல்கிறான். இது எதையும் ஸ்வேதாவால் நம்ப முடியவில்லை. உடனே மகாபாரத்தில் அரவாண் கதையை சொல்கிறான். பாரதப்போரில் வெற்றி பெற ஒரு சர்வ லக்‌ஷணம் பொருந்திய ஒரு ஆண்மகனை பலியிட வேண்டுமென்பதால், அர்ச்சுனனின் மகனான அரவாண் முன்வருகிறான். ஆனால் இல்லற சுகம் அறியாத அவன் தான் இறப்பதற்கு முன் திருமணம் செய்ய நினைக்கிறான், ஆனால் அவனை திருமணம் செய்ய எந்த பெண்ணும் முன்வராததால் கிருஷ்ணனே மோகினி அவதாரமெடுத்து அவனை மணக்கிறார், அடுத்தநாள்  அரவாண் பலியிடப்படுகிறான். மோகினி விதவைக்கோலம் பூணுகிறாள். இந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கூவாகத்தில் விழாவாக கொண்டாடுவார்கள். ஆணாக பிறந்து பெண்மையை உணரும் எங்களைப்போன்றவர்கள் அங்கு சென்று அரவானை திருமணம் செய்து முழு பெண்ணாக மாறுவார்கள் என்று விளக்குகிறான். மெல்ல அதை நம்பும் ஸ்வேதா, பயந்து எங்கே சித்தப்பா ஓடிவிடுவானோவென நினைத்து தனது கையோடு கட்டியபடி உறங்குகிறாள்.
காலையில் கெளதம் அங்கு இல்லை, ஸ்வெதாவிற்கு புரிகிறது. அவளும் கூவாகம் செல்ல முடிவெடுக்கிறாள். அப்பா அம்மா போன் செய்தால் சமாளிக்க சிறுவனை அமர்த்திவிட்டு கிளம்புகிறாள். விழுப்புரத்திலிருந்தே எங்கு பார்த்தாலும் திருநங்கைகளில் கூட்டமாகவே இருக்கிறது. ஒரு இக்கட்டான நிலையில் ஸ்வேதாவோடு சேர்கிறாள், மும்பையை சேர்ந்த பாபி டார்லிங் எனும் ஒரு திருநங்கை. ஸ்வேதாவும் அவளுக்கு இடையே ஒரு நட்பு மலர்கிறது. இளைஞர்களின் சீண்டலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஸ்வேதாவின் அருகாமை தேவையானதாயிருக்கிறது. இந்த வருடம் நடக்கபோகும் மிஸ் கூவாகம் போட்டியில் கலந்துகொள்ளவே தான் மும்பையிலிருந்து வந்திருப்பதாக சொல்கிறாள். அரவாணியாக வாழ தொடங்கிய பின் தான் சந்தித்த அவமானங்களை துயரங்களை ஸ்வேதாவிடம் சொல்லி அழுகிறாள். ஸ்வேதாவிற்கு பாபியின் மீதான கரிசனம் அதிகமாகிறது.

நாள் முழுவதும் தனது சித்தப்பாவைத் தேடிக்கொண்டிருக்கும் ஸ்வேதாவின் பார்வையின் மூலமாகவே திரைப்படம் இருப்பதால் சில விவகாரமான காட்சிகள் புத்திசாலித்தனமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது நாசூக்காக சொல்லப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ஸ்வேதா ஒரு பதிமூன்றே வயதான இளம்பெண், அவள் எது மாதிரியான விஷயங்களில் அவளது நாட்டம் இருக்குமோ அந்த விஷயங்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் சிகரெட் குடித்துக்கொண்டிருக்கும், மது அருந்தும் திருநங்கைகளையும் ஆங்காங்கே அவுட் ஆஃப் போகஸில் காட்டுகிறார்கள். காண்டம் வேண்டுமென்றும், வேசலின்ஜெல் வேண்டுமென்றும் கடையில் கேட்கும் ஒரு அரவாணியின் குரல் மட்டும் நமக்கு கேட்கிறது. திருநங்கைகளை ஒட்டுமொத்த சமுதாயமும் ஒதுக்குவதன் காரணத்தையும் அதற்கு அவர்களின் தரப்பு நியாயத்தையும் முழுமையாக ஆராயாவிட்டாலும் முடிந்தவரை உண்மையாக இந்த திரைப்படத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதற்காகவே பாரட்டலாம்.
ஸ்வேதா, ஒருவழியாக கெளதமியாக மாறிய சித்தப்பாவை கண்டடைகிறாள், வற்புறுத்தி வீட்டிற்கும் அழைத்துவருகிறாள். பெண்ணாக மாறிய கெளதமியாகவே வீட்டில் இருக்கிறாள். அடுத்த நாள் ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருகின்றனர். நீங்க உள்ளயே இருங்க, நான் அப்பா அம்மாவிடம் பேசுகிறேன், நான் சொல்லும்போது வெளிய வாங்க என்று சொல்லிவிட்டு தன் அப்பாவிடம் நேரம் பார்த்து பேசுகிறாள்.

 தான் கூவாகம் சென்றதையும் அங்கு நடந்தவற்றையும் சொல்கிறாள், சித்தப்பாவை ஒரு நல்ல டாக்டரிம் காட்டினால் சரியாகிவிடும் என்கிறாள். அதைக்கேட்டு கோவமடையும் அப்பா, பெல்ட்டை எடுத்துக்கொண்டு “கெளதம், கெளதம்கத்துகிறார். மெல்ல வெளிவரும் கெளதம் பழையபடி பேண்ட், சட்டை, ஒட்டுமீசை சகிதம் வருகிறான். ஸ்வேதா அதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், அப்பா ஏம்மா இப்படி ஒரு பொய்ய சொன்ன? என்கிறார்.
ஆமா, நான் சொன்னதுதான் பொய். சித்தப்பா கூவாகம் போனதோ, அங்கே கல்யாணம் பண்ணி பெண்ணா மாறியதோ பொய்யில்லை, எனப்புலம்புகிறாள். மேலும் நான் எவ்ளோ கஸ்டப்பட்டு உங்களை இங்க கூட்டி வந்தேன்? ஏன் இப்படி அப்பாவுக்கு பயந்து வேசம் போடறிங்க சித்தப்பா? எப்போ உங்களுக்கு பிடிச்சமாதிரி வாழப்போறிங்க? பகலெல்லாம் ஆம்பிளையாவும் இரவு பெண்ணாகவும் எத்தனை நாள் இந்த ரெட்டை வேசம்? என பொரிந்து தள்ளுகிறாள். அவளுடைய கோவத்தையும் அதிலிருக்கும் நியாயத்தையும் உணரும் அவன், தனது மீசையை உறிக்கிறான். இதையெல்லாம் கேட்ட அப்பா மிகவும் அதிர்ச்சியடைகிறார், அம்மாவோ “என்ன தம்பி இதெல்லாம்? நான் வேற ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கேன்என அழுகிறாள்.
ஒரு வருடம் கழித்து ஸ்வேதாவின் குரலில் தொடர்கிறது படம், மத்தவங்களுக்கு சிரமம் கொடுக்காம சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார், ஒரு வருஷம் ஆச்சு, எங்க இருக்காரோ? என்ன செய்றாரோ? தெரியலை. ஆனா என்னோட பர்த்டே அன்னைக்கு ஒரு போன், சர்ப்ரைஸ், அது சித்தப்பா. எனக்கு ரொம்ப சந்தோசம், எதாவது வேலை செய்றிங்களான்னு கேட்டேன், சிரித்தார். ஆனா எனக்கு ஒரு சத்தியம் செய்தார், என்னைக்காவது ஒருநாள் உன்னை வந்து பார்ப்பேன் என்றார். அது நடக்கும், எல்லாமே மாறித்தானே ஆகனும், அப்பா சொன்னதுமாதிரி எதிர்காலத்துமேல நம்பிக்கை இருக்குஎன முடிகிறது அந்த காட்சி. எதிர்காலத்தில் இப்படியான ஒரு அனாதரவான நிலை திருநங்கைகளுக்கு இருக்காது என்ற நம்பிக்கையான பார்வையோடும் உறுதியானதுமான குரல் அது.
அடுத்த காட்சி, வயிற்றைப்பிடித்தபடி சுருண்டுகிடக்கும் கெளதமியை காண்பிக்கின்றனர், பிண்ணனியில் “ நான் யார்? யார் நான்? என்கிறது கெளதமியின் குரல் கேட்கிறது, தொடர்ச்சியாக வருகிறது ஸ்வேதாவின் குரல்  “எதிர்காலத்துமேல நம்பிக்கை இருக்கு”. படம் முடிகிறது.
இந்த திரைப்படத்தில் அரவாணிகளாக வருகிற அனைவரும் நிஜமான திருநங்கைகளே, குஷ்பு என்கிற திருநங்கைதான் கெளதமாக நடித்திருக்கிறார். இவர் பெங்களூரில் ஒரு சங்கமாவில் பணியாற்றி வருகிறார். ஸ்வேதாவாக ’குட்டி’ புகழ் ஸ்வேதா.

படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு விஷயம்
ஸ்வேதா, என்ன பொண்ணுடா இது? ஏற்கனவே இந்த பெண்ணைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் நான் பார்த்த ஸ்வேதாவின் முதல் படம். நடிப்பு அனாயாசமாக வருகிறது இவருக்கு, நல்ல உருண்டு திரண்ட எக்ஸ்ப்ரசிவான விழிகள் இவரது சிறப்பு. குரலும் மிகவும் தீர்க்கமாய், ஏகப்பட்ட மாடுலேஷனோடு. படம் முடிந்து ஸ்வேதா கண்ணுலயே நிற்கிறாள். இந்த பொண்ணு நடித்த மல்லி, குட்டி டிவிடி யாரிடமாவது இருக்கா? இருந்தா ப்ளீஸ் செண்ட் மீ. இன்னொன்னு பாபி டார்லிங்கை கிண்டல் செய்யும் கிராமத்து இளைஞன் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

8 கருத்துரைகள்:

ராகவன் said...

அன்பு முரளி,

அருமையான பகிர்வு... நல்ல கதையும் கூட... சந்தோஷ் சிவன் மட்டும் இது மாதிரி பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவது சந்தோஷமான விஷயம்... ஸ்வேதாவும் அற்புதமான கதாபாத்திரம்... ஸ்வேதா தீப்பெட்டி தொழில் பற்றிய ஒரு படத்திலும் சிறப்பாக நடித்திருந்தாள்.
திருநங்கைகளை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தோம் ஒரு பனியன் கம்பெனியில்... நீங்கள் இருக்கும் திருப்பூரில் தான். ஐந்து பேரை தெரிவும் செய்தோம்... வேலைக்கு எடுத்து கொள்வதாக கம்பெனி உரிமையாளரும் ஒத்துக்கொண்டார்... முதலில் ட்ரிம்மிங் செக்ஷனில் வேலைக்கு அமர்த்துவதை முடிவானது... அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும், அவர்களை அணுகுவது எப்படி என்றெல்லாம் வகுப்புகள் நடத்தினோம்... எல்லாம் நல்ல படியாக தான் சென்றது... ஆனால் கடைசியில் அவர்கள் இது எங்களுக்கு தோது படாது என்று சொல்லிவிட்டார்கள்... ஈரோடில் இருக்கும் ஒரு திருநங்கைகள் குழு நல்ல ருசியான பிரியாணி செய்வதாக கேள்விபட்டிருக்கேன். நானும் ஒரு சிறுகதை எழுதினேன்... ப்ருஹன்னளை என்ற பெயரில்... நல்லாயிருந்தது... பதிவு... வாழ்த்துக்கள் முரளி... அப்புறம்... நான் நிறைய முறை வந்திருக்கேன் உங்க தளத்திற்கு...

அன்புடன்
ராகவன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்

நன்றி ராகவன்,
//நான் நிறைய முறை வந்திருக்கேன் உங்க தளத்திற்கு...//
நல்ல பதிவுகளை தேடி படிக்கும் உங்களைப்போன்றவர்கள் என் பக்கம் நிறைய வந்ததற்கு பெருமை படுகிறேன்.

அனாதை ஆசிரமங்கள் அமைப்பது நல்லதுன்னாலும் அனாதைகளே இல்லாமலிருப்பது அதைவிட நல்லதல்லவா? அதுபோல நாம் அவர்களுக்கு கொடுப்பதில் இல்லை அவர்களின் சுதந்திரம், அது அவர்களிடம் இருக்கிறது. அதை புரியச்செய்ய வேண்டும், அவ்வளவே.
திருநங்கைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் போதுமான கல்வியறிவை கொடுத்துவிட்டால் சுயமாக சிந்தித்துக்கொள்வார்கள்.

மீண்டும் நன்றீ ராகவன், இனி என் வருகை பதிவு செய்யப்படும். :-)

Part Time Jobs said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

ஆதவா said...

எனது அலுவலகத்திற்கு யாசகம் கேட்டு வரும் திருநங்கைகளை தினமும் பார்க்கிறேன். பலசமயம் என்னுடன் பண்புரிபவரோடு இதைப் பற்றி கலந்தாலோசிப்பதுண்டு. அவர்களே சொல்லுவார்கள். “எந்த வேலைக்கும் எங்களை சேர்க்காமத்தானே பிச்சை எடுக்குறோம்” என்று. அது நியாயமானதாகவே தென்பட்டாலும் நீங்கள் சொல்வதைப் போல நான் சொன்னது கிடையாது. அவர்களும் முன்வரமாட்டார்கள் என்றபின் நாம் பச்சாதாபப்பட்டு பயனில்லை.

இந்த படத்தை எங்கே பிடித்தீர்கள்? (நம்ம ஊர்ல ரிலீஸ் இல்லையே/??) தற்சமயம் திருநங்கைகளைக் கொண்டு நல்ல முறையில் சில படங்கள் வரவிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

(Buried பார்த்துவிட்டேன்.)

தமிழ் said...

இதுவரை திருந‌ங்கைகளை அருகிலிருந்து பார்க்கும்/பழகும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை.. அமைந்தால், அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்தப் பதிவு/படம் உதவும்.. நன்றி முரளி !

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
உண்மைதான் அவர்கள் இதுபோன்ற விஷ்யங்களுக்கு முன்வருவதேயில்லை. தனியாக வருபவர்களிடம் நாம் பேசலாம், நிறைய பேசுவார்கள். ஆனால் கூட்டமாக வரும்போது அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. அதுதான் பிரச்சனை. இந்தப் படத்தை நான் டவுன்லோட் செய்துதான் பார்த்தேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@தமிழ்
//இதுவரை திருந‌ங்கைகளை அருகிலிருந்து பார்க்கும்/பழகும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை.. அமைந்தால், அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்தப் பதிவு/படம் உதவும்.. நன்றி முரளி !//

நன்றி தமிழ், நல்லாயிருக்கிங்களா?

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான ,ஆழமான அக்கறையுடன் திருநங்கைகளின் பிரச்சினைகள அலசி இருக்கிறார்கள்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.