இருண்ட ஞாயிறு - GLOOMY SUNDAY

(தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும், சற்று நீளமான பதிவு இது. தயவு செய்து பதிவின் நீளம் கருதி படிக்காமல் தவிர்த்து விடாதீர்கள். அவசியம் பார்க்கவேண்டிய படமிது)

ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் பிரபல உணவு விடுதி ஒன்றில் தனது எண்பதாவது பிறந்தநாளை கொண்டாட தன் மனைவியுடன் வருகிறார், மிஸ்டர்.ஹான்ஸ். அங்கே செய்யப்படும் பாரம்பரியம் மிக்க பீஃப் ரோலுக்காக ஏக பிரபலமான அந்த ஹோட்டலில் நடக்கிற பிறந்தநாள் விருந்தில் அங்குள்ள இசைக்குழுவினரிடம் ஒரு பாடலை இசைக்கும்படி கேட்டுக்கொள்கிறார். பாடல் மெல்ல தொடங்குகிறது மிகவும் ரசித்தபடி கேட்டுக்கொண்டிருக்கும் ஹான்ஸ் அங்கிருக்கும் ஒரு பெண்ணின் போட்டோ ஒன்றினை பார்க்கிறார். எதையோ சொல்ல நினைக்கும் அவர் சடுதியில் கீழே விழுந்து இறந்து போகிறார். 

 60 வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணின் மீதான காதலில் இயற்றப்பட்ட பாடல் இது, எல்லாம் இந்த பாடலின் விதி. என்கிறார்  அந்த விடுதியின் மேனேஜர். கறுப்பு வெள்ளை புகைப்படம் கலரில் மாற, படத்தில் இருக்கும் பெண் சிரித்தபடி இயங்கத் தொடங்குகிறாள். 60 வருடங்களுக்கு முன்பு அதே விடுதியில் பியானோ கலைஞரை தேர்ந்தெடுக்க தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. அந்த விடுதியின் முதலாளி லாஸ்லோ, அவரிடம் வேலை செய்த பெண்தான் இலோனா, அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண். லாஸ்லோவின் அன்பிற்குரியவளாய் இருக்கிறாள். இருவரும் சேர்ந்து இசைக்கலைஞர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் யாருடைய இசையும் இலோனவைக் கவரவில்லை, மனமில்லாமல் ஒரு பெரியவரை தேர்வு செய்கிறார்கள். அப்போது ஆண்ட்ரே வருகிறான். அவனை பார்த்ததுமே லிலிக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. லாஸ்லோவிடம் மன்றாடி அவனை வாசிக்க செய்கிறாள். அவனது தேர்ந்த இசையில் அவன் தேர்வகிறான். அன்று முதல் அந்த விடுதியின் ஆஸ்தான இசைக்கலைஞனாகிறான்.

பீஃப் ரோலைப்போலவே ஆண்ட்ரேவின் இசையும் அந்த விடுதிக்கு பெயர் வாங்கித்தருகிறது. “நீ இசையமைக்கும்போதுதான் நான் பாடுவதை நிறுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்என்கிறாள் இலோனா. இருவருக்குமிடையில் அன்பு மலர்கிறது. அடுத்தசில தினங்களில் இலோனாவின் பிறந்தநாள் வருகிறது. லாஸ்லோ அவளுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ரத்தின கிளிப் ஒன்றை பரிசளிக்கிறான். விடுதிக்கு வந்திருக்கும் விக் எனும் ஒரு ஜெர்மனிய படைவீரன், இன்று எனக்கும் பிறந்தநாள், நான் வாங்கியிருக்கும் புதிய கேமிராவில் உன்னை படமெடுத்துக்கொள்ள விரும்புகிறேன், என்கிறான். ஒவ்வொருவரும் பரிசுகளால் இலோனாவை கவருகின்றனர். இது ஆண்ட்ரேவின்முறை, இலோனா அவனிடம் வருகிறாள். “உனக்கு கொடுக்க என்னிடம் எதுவுமில்லை, நான் இசையமைத்த இந்த பாடலை உனக்கு சமர்ப்பிக்கிறேன்என்றூ சொல்லி அந்த பாடலை வாசிக்கிறான். ஒரு நிமிடம் மொத்த விடுதியும் திரும்பிப்பார்க்கிறது, விடுதியின் ஆஸ்தான ஓவியர் அந்த பாடலில் மயங்கிப்போகிறார் தவிர பாடல் அனைவரையும் வசீகரிக்கக்கூடியதாய் இருக்கின்றது.

அன்றைய இரவு, அந்த விக் இலோனாவின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். அவனை மறுத்து ஆண்ட்ரேவிடம் வருகிறாள். ஆண்ட்ரே, லாஸ்லோ அருகில் வருவதைப் பார்த்ததும் அவளிடமிருந்து விடைபெறுகிறான். ஆனால் லாஸ்லோவோ “அந்தப் பாடல் உண்மையிலேயே மிக ரம்மியமாக இருந்தது, அவன் உன்னை விரும்புகிறான் என நினைக்கிறேன். உனக்காக அந்த பாடலை எழுதியிருக்கிறான், நான் உன் விருப்பத்திற்கு தடையாக இருக்க மாட்டேன், உனக்கு விருப்பமெனில் நீ அவனோடு போகலாம்என்கிறான். லாஸ்லோவின் பெருந்தன்மையை உணர்ந்து மகிழ்ச்சியோடு ஆண்ட்ரேவின் பின்னால் செல்கிறாள். ஆன்ட்ரேவின் குளூமி சண்டேஎனும் அந்தப்பாடலுக்கு தன்னையே பரிசாய்த் தருகிறாள். எனக்காக இன்னொருமுறை அந்த பாடலை வாசி என்கிறாள், நீயும் உடன் பாடுவதாய் இருந்தால் வாசிக்கிறேன் என்கிறான் ஆண்ட்ரே. நான் தனியாக இருக்கும்போது மட்டுமே பாடுவேன், இப்போது நான் தனியாக இல்லையே, என மறுக்கிறாள்.

ஒருபுறம், லாஸ்லோவும் விக்கும் பேசியபடியே நடந்துகொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் விக், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறான். லாஸ்லொ அவனைக் காப்பாற்றுகிறான். “எப்போதும் கிடைக்காத ஒன்றுக்காக வருத்தப்படாமல், பிடித்தமானவைக்காக வாழப்பழகு, என் விடுதியின் பீஃப் ரோல் உனக்கு பிடித்தமான ஒன்றுதானே, அதற்காக்க்கூட நீ வாழலாமேஎன்று விக்கிற்கு உற்சாகம் கொடுக்கிறான் லாஸ்லோ. அடுத்தநாள் பெர்லினுக்கு புறப்படும் விக், நான் ஆற்றில் குதித்தேன் என்று இலோனாவிடம் சொல்லி விடாதே, என்கிறான். லாஸ்லோ புன்னகையுடன் அதை ஏற்கிறான்.

ஒருநாள், லாஸ்லோவின் விடுதிக்கு வருகிற ரெக்கார்டிங் கம்பெனிக்காரர்களை லாஸ்லோவிற்கு அறிமுகம் செய்கிறாள், இலோனா. மேலும் அந்தப்பாடலை அவர்களுக்கு வாசித்துக்காட்டும்படி ஆண்ட்ரேவிடம் சொல்கிறாள். குளூமி சண்டே இசைக்கப்படுகிறது. அவர்கள் அதில் மயங்கிப்போகின்றனர். அப்பொழுது விடுதியின் ஓவியர் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு வெளியேறுகிறார், அதில் “எனக்கு இந்தப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது, நான் இனி இங்கு பணியாற்றப்போவதில்லை, இதுவரை என்னை பணியமர்த்தி இருந்தமைக்கு நன்றிஎன்று எழுதப்பட்டிருக்கிறது.

ரெக்கார்டிங் கம்பெனியாளர்கள் உடனடியாக அந்தப்பாடலை பதிவு செய்ய முன்வருகின்றனர். லாஸ்லோ நல்ல விலைக்கு பேசிமுடிக்கிறான். “எனக்கு இந்த வியாபாரத்தில் மிக உதவியாய் இருந்திருக்கின்றீர்கள், லாபத்தில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்என்று லாஸ்லோவிடம் சொல்கிறான். லாஸ்லோவோ “ஒரு நண்பனுக்கு உதவுவதற்கு பணம் பெறமுடியுமா என்ன?என்கிறான். ஆண்ட்ரே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறான். அவனது பாடலை பதிவு செய்ய வியன்னாவிற்கு செல்கிறான், இலோனாவுடன். எவ்வளவோ வற்புறுத்தியும் வியன்னா வருவதற்கு மறுத்து விடுகிறான், லாஸ்லோ. ஆனால் அவர்கள் சென்றுவிட்ட நாட்களில் இலோனாவின் பிரிவில் தவிக்கிறான். இருவரும் பாடல் பதிவு முடிந்து ஊர் திரும்புகின்றனர். 

அந்த சந்தோசத்தினை கொண்டாட இரவு மூவரும் குடித்துவிட்டு ஊர் சுற்றுகின்றனர். அப்போது லாஸ்லோவிற்கும் ஆண்ட்ரேவிற்கும் இலோனாவின் மீதான உரிமையில் கருத்து வேறுபாடுகள் வருகிறது. உனக்கு இரண்டு ஆண்களின் அன்பு இருக்கின்றது, ஆனால் எங்களுக்கு நீ யாருக்கு சொந்தம்? என்று கேள்வி வருகிறது. இலோனா மிகவும் வருத்தமடைகிறாள், பதிலேதும் சொல்லாமல் திரும்புகிறாள். அப்போது விடுதி ஓவியர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வருகிறது.இருவரின் உரையாடலும் களம் மாறுகிறது, போதையில் இருவரும் ஓருவரை ஒருவர் மன்னித்துக் கொள்கின்றனர். அடுத்தநாள் இலோனாவிடம் மன்னிப்பு கேட்டு நான் யாரும் பிரியத்தேவையில்லை, நாம் மூவரும் சேர்ந்தே இருப்போம், என்கின்றனர். அந்த சமயம் விக்கிடமிருந்து ஒரு கடிதமும், அன்று இலோனாவை எடுத்த அந்த புகைப்படமும் வருகிறது. அந்த கடிதத்தில் இன்னும் சில வருடங்களில் விக் புத்தபெஸ்ட் வருவதாகவும், தன்னை மணக்க சம்மதமா? என்ற கேள்வியை பரிசீலனை செய்யும்படியும் விக் எழுதியிருக்கிறான். 


அடுத்தடுத்த நாட்களில் நகரில் மேலும் நான்கு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அனைவரின் இறப்பின் போதும் மையமாய் குளூமி சண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்ததும் மிகவும் மனவேதனையுடன் தனது எல்லா இசைக்குறிப்புகளையும் ஆற்றில் எறிகிறான், ஆண்ட்ரே. மேலும் இனி நான் இசையமைக்கவே போவதில்லை எனவும் சொல்கிறான். ஏன் என் பாடலைக்கேட்டு மற்றவர்கள் இறக்க வேண்டும், இதற்கு காரணமான நானே சாகிறேன் என்கிறான். அவன் வைத்திருக்கும் விஷத்தை லாஸ்லோ பறித்துக்கொள்கிறான். லாஸ்லோவும், இலோனாவும் அவனை சமாதானப்படுத்துகின்றனர். நீயெப்போதும் கேட்பாயே, வார்த்தைகளற்ற இந்த இசை என்ன சொல்லவருகிறது? என்று ஒருவேளை அது மரணத்தை சொல்வதாகக்கூட இருக்கலாம் என்று இலோனா சொல்கிறாள். அதிலிருந்து அந்த இசைக்கான பாடலை எழுத முயல்கிறான். 

சில வருடங்கள் கழித்து, ஹிட்லரின் ஆதிக்கத்தில் இருக்கும் புத்தபெஸ்ட் நகருக்கு விக் வருகிறான். ஹிட்லரின் ஆதரவாளனாக, ஒரு பெரும்பணக்காரனாக, குடும்பஸ்தனாக. அவனது செயலில் ஒரு கடுமை தெரிகிறது. ஹங்கேரியில் இருக்கும் யூதர்களை விரைவில் ஹிட்லரின் படைகளை அழிக்கப்போகிறது என்ற செய்தி ஊரெங்கும் பரவுகிறது. எனவே தனது விடுதியை இலோனாவின் பெயரில் மாற்ற ஏற்பாடு செய்கிறான் லாஸ்லோ (ஏனெனில் லாஸ்லோவும், ஆண்ட்ரேவும் மட்டுமே யூதர்கள், இலோனா அல்ல எனவே இலோனாவின் விடுதியில் பணிபுரியும் யூதர்களாக தங்களைக்காட்டிக்கொள்வதற்காக). இதற்கான ஒப்புதலைப் பெற விக்கின் உதவி தேவையாய் இருக்கிறது. விக்கை சந்திக்க இலோனா செல்கிறாள். இலோனாவிடம் தனக்கு தொடர்பிருப்பதாய் காட்டிக்கொண்ட விக்கை நம்பி திரும்பி வரும் அவளிடம் சந்தேகம் கொள்கிறான் ஆண்ட்ரே. 

தொடர்ந்து வரும் விக், விடுதியில் அந்தப்பாடலை இசைக்கும்படி சொல்கிறான். மறுக்கும் ஆண்ட்ரேவை சுட்டுவிடுவதாய் சொல்கிறான். இலோனா அந்தப்பாடலைப்பாடுகிறாள். ஆண்ட்ரே பியானோவை மீட்டுகிறான். எப்போதும் பாடாத அவள் தன் உயிரைக்காக்க பாடுவதை நினைத்து வருந்துகிறான், ஆண்ட்ரே. மேலும் அவள் மீது சந்தேகப்பட்டதற்காக வருந்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கிறான். தொடரும் சோகமாய் நகரில் யூதர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். புத்தபெஸ்ட் நகரிலிருந்து வெளியே நினைக்கிறான் லாஸ்லோ. உதவி கேட்டு விக்கை அணுகுகிறான். நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆகாது என்கிறான், விக்.

ஆனால் தொடரும் விக்கின் வஞ்சத்தால் லாஸ்லோ கைது செய்யப்படுகிறான். அவனை விடுவிக்கக்கோரி விக்கிடம் செல்லும் இலோனாவை பலவந்தப்படுத்தி வன்புணருகிறான். எப்படியும் லாஸ்லோவை மீட்பதாக சொல்லி செல்லும் அவன், வேண்டுமென்றே அவனுக்கு ஆதாயம் தரும் ஒருவரை மீட்பதோடு லாஸ்லோவை ஹிட்லரின் உயிரெடுக்கும் சிம்னிக்கு அனுப்புகிறான். சில மாதங்களுக்கு பிறகு கர்ப்பிணியாக இருக்கும் இலோனா ஆண்ட்ரேவின் கல்லறையின் முன்பாக நிற்கிறாள். இனி தானே அந்த விடுதியை உங்கள் இருவரின் சார்பாக நடத்துவேன், எனக்கும் பிறக்கப்போகும் உங்கள் குழந்தைக்கும் உங்கள் இருவரின் ஆசியும் வேண்டும் என்கிறாள். அதே கருப்பு வெள்ளை புகைப்படத்திற்கு வருகிறது காட்சி. அதில் சிரித்தபடியே இலோனா.

இறந்துபோன அந்த பெரியவர் வேறுயாருமல்ல, விக், மிஸ்டர்.ஹான்ஸ்விக். அவரது உடலை கொண்டு செல்லும் வழியில்  “ஹிட்லரின் பிடியில் இருந்த 1000த்திற்கும் மேற்ப்பட்ட யூதர்களைக் காப்பாற்றிய உன்னதமானவர் இறந்தார் என டீவி செய்தியாளர்கள் படமெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறுக்கமான முகத்துடன் விடுதி உரிமையாளர் விடுதிக்குள்ளாக நுழைகிறார். இரண்டு கோப்பைகளில் ஷாம்பெயினை ஊற்றிக்கொண்டு உள்ளே வருகிறார். “80வது பிறந்த நாளைக்கொண்டாடும் என் அம்மாவிற்காகஎன்கிறார். சமையலறையில் ஆண்ட்ரே வைத்திருந்த அந்த விஷபாட்டிலை கழுவியபடியிருக்கும் 80 வயது இலோனாவை காண்பிப்பதுடன் முடிகிறது, குளூமி சண்டே.

குளூமி சண்டே என்றால் இருண்ட ஞாயிறு, உண்மையிலேயே இந்தப்பாடலைக் கேட்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த பதிவில் பார்க்கவும் (http://musicshaji.blogspot.com/2008/12/blog-post.html)

ஒரு பெண்ணுடன் இருவர் வாழ்வதுபோலவும் அதே பெண் இருவருடனும் மாறிமாறி உறவு வைத்துக்கொள்வதுபோலவும் இப்படம் இருந்தாலும் எங்கும் அது தவறாகவோ ஆபாசமாகவோ படமாக்கப் படவில்லை. எந்த அருவருப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை என் எழுத்துக்கள் அவ்வாறு செய்திருந்தால் மன்னிக்கவும். 
இரண்டு பேர் கிறங்கிப்போகுமளவுக்கு ஒரு பேரழகியாக சித்தரிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க அதுபோன்ற அழகுடன் தானே பெண்வேண்டும் அவள், ஆம். இலோனாவாக நடித்த எரிக்கா அப்படித்தானிருக்கிறார். லாஸ்லோவாகவும் ஆண்ட்ரேவாகவும் நடித்த இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். நடிப்பு எப்படியிருக்கணும்ன்னு தெரியவேண்டுமானால் நிச்சயம், அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு படம் இது. (என்ன ஒரு பவர்புல்லான கண்ணு அந்த பொண்ணுக்கு... ம்ம்ம்ம்ம்). மனதைப்பிசையும் இசை, காதலை உணர்த்தும் வசனங்கள். கூடவே அரசியல் என எந்தவகையிலும் ஒதுக்கிவிட முடியாத ஒரு ஆத்மார்த்தமான படம். குளூமி சண்டே.


 Rezso Seress என்ற ஹங்கேரிய இசைக்கலைஞரின் ஒரிஜினல் இசை வடிவம், இங்கே பியானோவில். Gloomy Sunday  
  Rezso Seres- ம் அவரது பாடலின் இசைக்கோர்வையும்.இருண்ட ஞாயிறு பாடலின் தமிழாக்கம்  

இருண்டிருக்கிறது இந்த ஞாயிறு
என் நாட்களோ தூக்கமில்லாதவை
அன்பே, என் அன்பே
நான் கூடிவாழும் நிழல்களோ எண்ணற்றவை
சிறுவெண்மலர்கள் உன்னை எழுப்பப் போவதில்லை
துயரத்தின் கரிய வண்டி உன்னை எங்கே கொண்டு சென்றது
தேவதைகள் உன்னை திருப்பிக் கொண்டுவரப் போவதில்லை
உன்னுடன் நானும் வந்துசேர நினைத்தால்
அவர்கள் கோபம்கொள்வார்களா என்ன?
இருண்ட ஞாயிறு!
இருளே வடிவான இந்த ஞாயிறு!
நிழல்களுடன் அமர்ந்து நான் இதைக் கழிக்கிறேன்
என் இதயமும் நானும் சகலமும் முடித்துவிட முடிவெடுத்துள்ளோம்
விரைவில் மெழுகுவர்த்திகள் எரியும்
துயரமான பிரார்த்தனைகள் ஒலிக்கும்
மரணம் வெறும் கனவல்ல என்று அறிவேன்
ஏனெனில் மரணத்தில் நான் உன்னை வருடுகிறேன்
என் ஆத்மாவின் கடைசி மூச்சால் நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தப்பாடல் ஷாஜி அவர்களின் பதிவிலிருந்து எடுத்தது. நன்றி ஷாஜி மற்றும் எழுத்தாளர். ஜெயமோகன்.16 கருத்துரைகள்:

டெனிம் said...

நானும் இந்தப் பாடலைப் பற்றி கேள்விப் பட்டு கேட்டு பார்த்தேன்,கொஞ்சம் நாலா காலையில் எழுந்தரிக்க அலாரம் டோன் நாக கூட வைத்துப் பார்த்தேன்,ஒன்னும் தோன்ற வில்லை.... நீளமான பதிவானாலும் நல்ல பதிவு

ராகவன் said...

அன்பு முரளி,

சூப்பர். அழகான பதிவு இது... நான் இந்த படம் பார்த்திருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி... எத்தனை அழகு அந்த கதாநாயகி... மலீனாவில் நடித்த மோனிகா தான் அழகு என்ற நினைப்பு, இவளைப் பார்த்த போது மாறியது...எரிக்காவை பார்த்த போது...

ரொம்ப அழகா எழுதியிருக்கிறீர்கள் முரளி... என் கூட்டாளியாயிருந்தா... கொஞ்சம் மிகை இருந்திருக்கும்...

வாழ்த்துக்கள் முரளி!

அன்புடன்
ராகவன்

ஆதவா said...

ரொம்ப பொறுமையாக, ரசித்து டைப்பியிருக்கீங்க.... கதையைச் சொல்லும் பொழுதே அந்த பெண்ணின் அழகு வார்த்தைகளில் தெரிகிறது!
வழக்கம் போல தேர்ந்தெடுத்த பதிவு இது!

இளங்கோ said...

இந்தப் படத்தை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் அழகாக சொல்லிய விதம் படம் பார்க்க தூண்டுகிறது.
பகிர்வுக்கு நன்றிகள் முரளி.

அப்பாதுரை said...

சேரா மெக்லாப்லின் இதைச் சில வருடங்கள் முன் பிரபலமாக்கியிருந்தார் (பாடல், பாடல் கருத்து). இந்தப் படம் பார்த்ததில்லை. பார்ப்பேனா, சந்தேகம் தான் :)
அபரிமித சோகத்தை சுவையாக எழுதியிருக்கிறீர்கள். நெஞ்சைத் தொடும் விதமாக இருக்கிறது நீங்கள் எழுதியிருக்கும் விதம்.

உலக சினிமா ரசிகன் said...

இந்தப்படம் பலான ரசிகர்களால் விரும்பி வாங்கப்பட்டது.அதனாலேயே தரக்குறைவான படம் என எண்ணியிருந்தேன்.த்ங்கள் பதிவு என் தவறான கணிப்பை மாற்றிவிட்டது.நன்றி.

Vel Kannan said...

நண்பர் முரளி ,
மிக நல்ல பதிவு இது
ஒரு அபரிதமான சோகம் அல்லது சுகம் அந்த படம் பார்த்தபின் இருக்கும். அந்த உணர்வில் மூழ்கி தோய்த்து எழுதியது போல் இருக்கிறது இந்த கட்டுரை.
நீண்ட பதிவாகியிருந்தாலும் சலிப்பேதும் ஏற்படுத்தவில்லை இதன் காரணம் அந்த படத்தை உள்வாங்கிய விதம் அதனை வெளிக்கொண்டுவந்த உங்களின் தொடர் உழைப்பு மற்றும் திறன். இதனால் தான் என்னவோ நான் இந்த கட்டுரையை ஐந்து முறை படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள் முரளி
வாழ்த்துகள் !
(ஒரு யோசனை : இம்மாதிரியான கட்டுரையை ஏதேனும் மின் இதழ்-க்கு அனுப்பி வைக்கலாம் தானே, முரளி )

shri Prajna said...

நல்லா எழுதறிங்க ..உங்க விமர்சனம் படிச்சிட்டா எப்போ படம் பாப்போம்னு ஆவல் அதிகமாயிடுத்து ..ஒரு நாயகி இரண்டு ஹீரோ இந்துமதியும், சிவசங்கரியும் (Novel name -இரண்டு பேர்)ன்னு நினைக்கிறேன்..அதுவும் அபாசமா தெரியாது..இந்த படம் பாக்கணும்..நல்ல பதிவு (வழக்கம் போல்)...வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@டெனிம்
ஆமாம் நண்பா, ஒரு நல்ல பாட்டுக்கு இப்படி முத்திரை தேவையில்லைதான். கருத்துக்கு நன்றி நண்பா

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
என்ன பொண்ணுங்க, இவ? நான் லின்க்ல சொல்லியிருக்கிற அந்தப் பாடலைலேயே ஆண்ட்ரேவிற்கு ஒரு பார்வையும் விக்கிற்கு ஒரு பார்வையையும் நொடிக்கொருமுறை மாற்றிக்கொண்டிருக்கிறாள். ச்சே.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
ஆமா ஆதவா, ரொம்பவே ரசிச்ச படம்தான், எழுதும்போதே பதிவின் நீளம் புரிந்தது, இருந்தும் எழுதினேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
படம் பார்க்கனும்ன்னா சொல்லுங்க தரேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க படம் பார்க்க விரும்பினா நான் அனுப்பிவைக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலக சினிமா ரசிகன்
பிரபாகர் சார், நன்றி உங்கள் வருகைக்கு. நீங்க இன்னும் பார்க்கலைன்னா ஒருமுறை பாருங்க, உங்க பார்வையை பதிவிடுங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@வேல்கண்ணன்
//ஒரு அபரிதமான சோகம் அல்லது சுகம் அந்த படம் பார்த்தபின் இருக்கும். அந்த உணர்வில் மூழ்கி தோய்த்து எழுதியது போல் இருக்கிறது இந்த கட்டுரை.
நீண்ட பதிவாகியிருந்தாலும் சலிப்பேதும் ஏற்படுத்தவில்லை//

ரொம்ப நன்றி கண்ணன்.நான் இங்கேதான் பயந்தேன். :-)

//நான் இந்த கட்டுரையை ஐந்து முறை படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள் முரளி
வாழ்த்துகள் !//

தேங்க்யூ சோமச், அவசியம் படத்தையும் பாருங்க.

நமக்கே நமக்குன்னு சொந்தமா வச்சிருக்கிற வலைப்பூவிலேயே போட்டுக்கொள்வதுதான் வசதியாப் படுகிறது. யாரும் கேட்டால் எழுதலாம், ஆனால் அனுப்பிவிட்டு வெயிட் பண்ணி, பிரசுரம் ஆகலைன்னா கஸ்டமா இருக்கும் அதான்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பிரஜ்னா
உங்களுக்கும்தான் வேணும்னா சொல்லுங்க டிவிவி தரேன். :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.