வேர் அறுந்த மரம்


பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல் தன்னால் முடிந்ததை சக மனிதர்களுக்கு செய்துவிட்டுப் போகும் மனிதர்களே, மகாத்மாக்களாக அறியப்படுகின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு மகாத்மா, மூவாயிரம் மரங்களை நட்டுவைத்து, வளர்ந்து, இந்த மண்ணிற்கும் மனிதர்களுக்கு அரிய உதவியை செய்த மரங்களின் தந்தை சத்தியமங்கலம் ஏழூர் ”அய்யாசாமி”  அய்யா,  இன்று இயற்கையுடன் கலந்தார். மரங்களுக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்த அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன். இனி அவருக்காக அவரது மரங்கள் மூச்சு விடட்டும்.

எனக்கு ஈரோடு கதிர் அவர்களின் பதிவிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. கடுமையான வேலைகளால் என்னால் இன்று செல்ல முடியவில்லை. அவசியம் செல்ல வேண்டும், இப்பொழுது பங்ளாதேஷில் பணி புரிந்துவரும் நண்பர் பெரியசாமியிடம் சொன்னேன், மிகவும் வருத்தப்பட்டார், இருவரும் விஜய குமாரிடம் பேசியிருக்கிறோம். 

    கடுமையான வேலைப்பளுவால் இந்த வாரம் பதிவு எழுத முடியவில்லை, எனவே, உபயோகமான எதாவது ஒரு பதிவை மீள்பதிவாக்க தேடிக்கொண்டிருந்தேன். யூஸ்&த்ரோ, மற்றும் இந்த பதிவைத்தான் தேர்ந்தெடுத்து வைத்தேன். சென்ற வாரம் நண்பர் பெரியசாமியோடு பேசிக்கொண்டிருந்த பொழுது அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா வரவிருப்பதாகவும், அப்பொழுது மீண்டும் ஒரு முறை பெரியவரை சென்று பார்த்துவிட்டும் முடிந்த பணவுதவியை செய்துவரவும் முடிவு செய்தோம். 
     
      சென்றமுறை இந்த பதிவை எழுதியபோது நிறைய நண்பர்கள் அடுத்த முறை செல்லும்பொழுது தெரியப்படுத்துங்கள், நாங்களும் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். எனவே இப்பொழுது இந்த பதிவை மீள்பதிவாக வெளியிட்டு நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாமென நேற்றுதான் நினைத்தேன். இப்போ ஏண்டா நினைத்தோம் என்று நினைக்கும்படியாக அய்யா இறந்தேபோய் விட்டார். இருந்தாலும் அவருக்கு கொடுத்த வாக்குப்படி, ஒரு 50 மரக்கன்றுகளுடன் போகணும், போய் பார்க்கணும். நண்பர்களிடம் கலந்து பேசி அவரது குடும்பத்திற்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்ய இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
**********************************************


ஒரு மனிதர் தனியாளாக 3000 மரங்களுக்கும் மேல் நட்டு, பராமரித்து, வளர்த்திருக்கிறார் என்ற செய்தியை 03.12.2009, புதியதலைமுறை இதழில் பக்கம் 28-ல் மரங்களின் மகாத்மா என்கிற கட்டுரைப்படித்தேன். அடுத்தநாள், சென்னையிலிருந்து நண்பர் பெரியசாமியிடமிருந்து போன் வந்தது. நண்பா, கட்டுரை படித்தீர்களா? அவர் சத்தியமங்கலம்தானாமே? ஒரு நடை போய்பார்த்துவிட்டு வரலாமா? யோசிச்சு சொல்லுங்க, என்றார். இதில் யோசிக்க என்ன இருக்கிறது, போகலாம் என்றேன்.அவரை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிச்செல்வது என்று யோசித்தோம். ஒருவழியாக மரக்கன்றுகளையே வாங்கிப்போவதென்று முடிவு செய்தோம். இரண்டு வேப்பங்கன்றுகளும், ஒரு புங்கை, ஒரு மாமர நாத்தும் வாங்கிகொண்டோம். வழிநெடுக பெரியவரைப் பற்றியே பேசிக்கொண்டே சென்றோம். 3000 மரங்களை நட்டுவைப்பது, வளர்ப்பது என்பது நீரும் நீர் சார்ந்த இடங்களில் சாத்தியமான ஒன்றுதான் என்பதில் ஆரம்பித்து, இல்லை ஒரு மரம் வளர்க்க குறைந்தது எட்டிலிருந்து பத்து மாதங்களாவது அதை சரிவர பராமரிக்கத் தேவையிருக்கும் என்பதில் நின்றது. ஆக 3000 மரங்கள் என்பது நிச்சயம் ஒரு தனி மனிதனைப் பொருத்தவரை, சாத்தியமற்ற ஒன்றுதான். அப்படியே சாத்தியப்படுத்தினால், அது சாதனைதான். 

ஒருவழியாக சத்தியமங்கலம் சென்று சேரும்போது மணி 12ஐ தொட்டுவிட்டிருந்தது. மேலும் அவருக்கு பழங்கள் ஏதாவது வாங்கிப் போகலாமென முடிவு செய்து, கடை தேடினோம். அரசு மானியத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாமனியனுக்கு, ஒரு கிலோ பழம் என்பது வைத்து சாப்பிடக்கூடிய விஷயமல்ல, என்பதாலும், கட்டுரையில் அவர் சட்டை அணிவதில்லை என்று படித்த ஞாபகத்திலும் அவருக்கு ஒரு வேட்டியும், துண்டும் வாங்கலாமென முடிவு செய்து, கதர்பவனைத் தேடி. அதை வாங்கி முடிக்கவும், அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் விஜி என்கிற விஜயகுமார் ( எங்களை அழைத்துச் செல்லவந்தவர்) எங்களுக்கு செல்போனில் அழைக்கவும் சரியாக இருந்தது. விஜி அவர்கள் எங்களை முதலில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். 
ஆகா, எத்தனை மரங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் தழும்பி ஓடியிருக்கும் என கருதப்படுகிற ஒரு வாய்க்காலின் இருமருங்கிலும் வேப்பமரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள்தான். எல்லா மரங்களும் சுமார் 15 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்தான். அகண்டு விரிந்து கிளை பரப்பி சுதந்திரமாக வளர்ந்திருக்கின்றன, மரங்கள்.  கொஞ்சம் மரங்களை எண்ணலாமென்று தோன்றவே, மனதிற்குள் மரங்களை எண்ணத்தொடங்கினேன். 172 மரங்களை ஒரு நூறு மீட்டர் தொலைவு நடப்பதற்குள், பார்த்துவிட்டேன். இன்னும் இப்படியே எவ்வளவு தூரம் நடக்கனும் என்று விஜியிடம் கேட்டோம். இரண்டரையிலிருந்து மூணு கிலோமீட்டர் வரை இருக்கும் என்றார். கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது

சரி போய் பெரியவரைப் பார்க்கலாம், எனக் கிளம்பினோம்.  வீட்டிற்கு வந்ததும், ஆறடி உயரத்தில் மெலிந்த தேகத்தோடு அந்த மனிதர் எழுந்துவந்து வணக்கம் சொல்லி அழைத்து சென்றார். தன் பேரனிடம் கலர் (கோலி சோடா) வாங்கிவரச் சொல்லி எங்களுக்குக் கொடுத்தார். ஐந்தடி உயரக்கூரை, என்போன்றவர்கள் உள்ளே குனிந்தே நிற்க வேண்டும். ஒரு சுவர் முழுக்க அவருக்கு கொடுக்கப்பட்ட மரியதைகள், புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மகாத்மா என்ற விருது, ஒரு ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் வந்து சந்தித்த செய்தியாளர்கள், நண்பர்கள் இவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவருக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அந்த நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார். 
                
    எப்படி உங்களுக்கு இவ்வளவு மரங்களை தனிஒருவராக வளர்த்தீர்கள்? இதில் உங்களுக்கு சிரமம் ஏது இல்லையா? என்றதற்கு விதைகளை எடுத்து வீட்டிலேயே நாத்துசெய்துகொண்டும் ஒவ்வொருமுறை ஆடுமேய்க்கும்போது அப்படியே நட்டுவைத்து விடுவேன், முட்களை பிடுங்கி வேலிமாதிரி கட்டிவிடுவேன், கொஞ்ச நாளைக்கு தண்ணிவிடுவேன், அப்புறம் அதுதானா கிடுகிடுன்னு வளர்ந்திடும் என்றார், மிக எளிமையாக. மரங்கள் சின்னதா இருக்கும்போதுகூட சிரம்மில்லை, பெரிதாக வளர்ந்த பின் ஆளாளுக்கு அதை வெட்டத்தொடங்கினார்கள். புள்ளைங்க மாதிரி வளர்த்த ஒவ்வொண்னையும் கண்ணுமுன்னால வெட்டி எடுத்துட்டு போகும்போது மனசு ரொம்ப கஸ்டமா இருக்கும். ஊர் மணியக்காரரிடம், இதுகுறித்து சொன்னபோது நீயா தண்ணி ஊத்தி வளர்த்த, எல்லாம் அதுவா வளர்ந்ததுஎன்று சொல்லி அனுப்பிவிட்டதை, வருத்தத்தோடு நினைவுகூர்ந்தார்.
                
      சரிங்கையா, இப்போ என்ன வருமானம் உங்களுக்கு என்றோம், ஒரு வருடம் முன்பு வரை பக்கத்திலுள்ள உரக்கம்பேனிக்கு வேலைக்குபோனதாகவும், தற்சமயம் இளைப்பு அதிகமானதால், வேலைக்குப்போக முடிவதில்லை என்றும் சொன்னார். மேலும், ஒரே பொண்ணு திருப்பூர்ல கட்டி கொடுத்தோம், மருமகனும் இப்போ செத்து போயிட்டாரு, அவ இப்போ இங்க ஒரு ஸ்பின்னிங் மில்லுக்கு வெலைக்கு போறா, அவ ரெண்டு பசங்களுக்குப் போக எங்களையும் சேர்த்து கவனிக்கனும். அப்புறம் அரசாங்கம் மாதாமாதம் முதியோர்களுக்கென கொடுக்கும் ரூ.400ம் என்று வாழ்க்கை ஓடுகிறது என்றார்.

அதுவரை அவருக்கு பணம் எதுவும் கொடுத்தால் தவறாக எடுத்துக்கொள்வாறோ என்று யோசித்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ஏதாவது கொடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. அவருக்கென வாங்கிய வேட்டித்துண்டோடு ஒரு ஐநூறு ரூபாயையும் வைத்து, காசு கொடுக்கிறோமென்று தவறாக நினைக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள், என்று அவரிடம் கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். அடுத்தமுறை வரும்போது அவசியம் எங்கள் வீட்டில் சாப்பிடும்படியாக வாங்க, என்றார்.
                
     விஜி மற்றும் தேவேந்திரன் என்ற இருவரும் அவரது பக்கத்து வீட்டுக்கார்ர்கள், அவர்கள்தான் இப்போது பெரியவரை அனுசரனையாக கவனித்துகொள்கிறார்கள் மற்றும் மரங்களை பராமரிப்பதிலும், புதிதாக மரங்களை நட்டு வளர்ப்பதையும் செய்து வருகிறார்கள். எங்களை வழியனுப்ப வந்த விஜி மற்றும் தேவேந்திரன் இருவரிடமும் அந்த பெரியவர் செய்ததை விட அவரை கவனித்துக்கொள்வதன் மூலம் மிக நல்ல காரியத்தை செய்துவருகிறீர்கள், வாழ்த்துக்கள், உங்களுக்கோ பெரியவருக்கோ எதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளுங்கள், என்று அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு, அவர்களுக்கென கொண்டுவந்திர்ந்த டி-ஸர்ட்டுகளை கொடுத்துவிட்டு, அடுத்தமுறை அவரும்போது 50 மரக்கன்றுகள் கொண்டுவருவதாகச் சொல்லிக்கிளம்பினோம். 
******************************************************************

      இதர: பேஸ்புக் தளத்தில் ஓசை செல்லா அவர்களைத் தொடர்பவர்கள், கவனிக்கவும். இவரும் ஈரோடு கதிர் அண்ணாவும் சேர்ந்து இவரது குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி செய்ய இருக்கிறார்கள். அவர்கள் அது குறித்து திட்டமிட்டதும் தெரிவிப்பார்கள். உதவி செய்ய நினைப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். 

10 கருத்துரைகள்:

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப்பா! எவ்வ்ளோ அர்த்தமுள்ள் வாழ்வு!

சுசி said...

தலைப்பு அவளவு பொருத்தமா இருக்கு.

அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

வானம்பாடிகள் said...

பார்த்து ஒரு மாதம் தானாச்சு:(.

உலக சினிமா ரசிகன் said...

பின் வரும் தலைமுறைக்காக வாழ்ந்தவர் அவர்...அந்த மரங்கள் அவரது ஆன்மாவை தாங்கும் போதி மரங்களாக என்றும் வாழும்.

மோகன் குமார் said...

நெகிழ்வாய் உள்ளது. நீங்கள் படங்களுடன் எழுதிய பதிவு இன்னும் நினைவில் உள்ளது.

ராகவன் said...

அன்பு முரளி,

இது வேர் விட்ட மரம் தானே... இத்தனை மரங்களை நட்டவர், வளர்த்தவர்... எப்படி சாகமுடியும்?

உன்னோட எழுத்து அழகு...

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

நண்பா என்ன சொல்வது.. ஆசையாசையா வளர்த்த மரங்களை அவர் கண்ணெதிரே மற்றவர்கள் வெட்டும்போது என்ன துடி துடித்தாரோ அதே மனநிலையைத்தான் அவர் இறந்த செய்தியும் தருகிறது.

jonnam said...

இது வேர் அருந்த மரம் அல்ல . 3000 த்திற்கும் மேற்ப்பட்ட மரங்களுக்கு தன் உயிரையே ஊற்றியவர் . அவர் ஆத்மா சாந்தியடைய வணங்குவோம்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

well written...! Pray for our trees...

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.