கனவுகள் சிதையும் காலம்.......


அப்பொழுது எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இருந்தனர். பள்ளி முடிந்ததும், கிரிக்கெட் விளையாடுவோம். அருகிலேயே, கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய குடோன் இருக்கும். பல நேரங்களில், நண்பர்களின் ஜமா அங்கேதானிருக்கும். வேப்பமரத்தின் நிழலில், அதன் கிளை பரவியிருக்கும், படிக்கட்டுகள் கட்டுவதற்காக கட்டப்பட்ட அந்த சாய்ந்த கான்கிரீட் சறுக்கலில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்போம். எதிர்காலம் பற்றிய எண்ணங்களை. என்னை எப்படியும் நேவியில் சேர்த்துவிடவேண்டும் என்ற அப்பாவின் கனவுகளை நான் கண்டுகொண்டிருந்த நாட்கள், நல்லா படிக்கணும், எது செய்தாலும், சொந்தமா செய்யணும்னு தீர்க்கமாச் சொல்லுவான் அசோக். என்னவாக ஆகணும்னு சுயமா யோசிக்கக்கூட தெரியாமல் இருப்பான் ஸ்ரீ. ஆனால், எங்கள் மூன்று பேருக்குமாய், பொதுவாய் ஒரு கனவிருந்தது. யார் என்னவானாலும் சரி, ஒரே மாதிரியாக அடுத்தடுத்தாய் இருக்க வேண்டும் நமது வீடுகள். எப்போதும், இதே போல நாம் நண்பர்களாகவே இருக்கவேண்டும். விளையாட்டாகவும், படிக்கும்போது சிரிப்பே வந்தாலும் இந்த பதின்மங்களின் கனவு ஒரு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான நட்பின் நேர்மையான கனவு.

காலம் ஓடியது. படிப்பு, வேலை, இப்படியான சில பல காரணங்களால் சில வருடங்கள், பிரிந்திருந்தோம், பின் மீண்டும் சேர்ந்தோம், ஆனாலும் அந்த நெருங்கிய நண்பர்கள், இன்னமும் இனியெப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள், இருப்பார்கள். ஓவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்ப, பொருளாதார பின்னணியில் இருக்கிறோம். இன்னமும் எல்லாவற்றிற்கும் மையமாய் நட்புமிருக்கிறது, ஆனால் அந்தக்கனவு?

சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமான நண்பர்களோடு சேர்ந்து புது தொழில் செய்ய வருகிறான். சன்னியும் வர்ஷாவும் பெங்களூரில் இன்போஸிசில் வேலை செய்கின்றனர். சரத்தின் யோசனை அனைவருக்கும் சரியாய்ப்பட அவர்களும் இந்த யோசனையை ஏற்கின்றனர். நெட்சிட்டி எனும் தொழில்நுட்பப் பூங்காவிலிருக்கும் சைபூ எனும் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு புதிய புராஜெக்ட்டிற்காக மூவரும் இணைகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தொடங்கும் இவர்களின் இந்த வாழ்க்கையில், உலகமயமாக்கலில் சிக்கித்தவிக்கும் இன்றைய நவீன சாஃப்ட்வேர் கம்பெனியின் பின்புலம் நிறைய மாற்றங்களைத் தருகிறது.

சரத் அமெரிக்கா சென்றிருந்த காலத்தில் அவனுடைய டைரியை படித்திருக்கிறார் சரத்தின் அப்பா. அவன் திரும்பியதும் உன்னிடம் நல்ல எழுத்துத்திறமை இருக்கிறது. அதை விட்டுவிடாதே என்றும் சொல்கிறார். இலக்கியம் படிக்கிறேன் என்றபொழுது கம்ப்யூட்டர் படிக்கச் சொன்ன அதே அப்பா, இன்று இப்படிச் சொல்கிறாரே என நினைக்கிறான். ஆனால் எழுதுவது என்பது சரத்திற்கும் விருப்பமானதாகவே இருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் போதும் எழுதுவதைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான்.

சன்னியிடமும், வர்ஷாவிடமும் சிறுவயதில் அதிகம் விளையாடிய ஏரிக்கரைக்குப் போகலாமா? எவ்வளவு நாளாச்சு அங்கே போய்? என்று கேட்கிறான். ஆனால் இருவருக்குமே அதில் விருப்பமில்லை என்பது அவனுக்குப் புரிகிறது. தனியாக சென்று அங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான். அப்பொழுது வர்ஷா வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் சரத் வருத்தப்படுவானே என்று நடிக்கிறாள். அவளிடம், சரத் மிக உணர்வுப்பூர்வமாக அவர்களது கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். இதே ஏரிக்கரையில் ஓரமாய் ஒரு வீடு கட்டி நாம் மூவரும் அதிலே ஒன்றாக இருக்க வேண்டும், சன்னிக்கு இசையார்வம் அதிகம். அவன் ஒரு இசைக்குழு தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தான், அதைச் செய்ய வேண்டும், உனக்கு சேவை செய்வதில் ஆர்வம் அதிகம், எனக்கு எழுத்தாளனாக வேண்டும். இதெல்லாம் நமது பால்யத்தின் கனவு. இப்பொழுது நாம் வளர்ந்துவிட்டோம், ஒன்றாக இருக்கிறோம், பணிபுரிகிறோம், சம்பாதிக்கிறோம். இப்பொழுது நமது கனவுகள் சாத்தியப்பட நிறைய வாய்ப்புகள் உண்டே வர்ஷா? என்கிறான். ஒற்றை வரியில் வர்ஷா சொல்கிறாள் “இன்னுமா அந்தக் கனவையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய், சின்னப்புள்ள மாதிரி என்றதும் மெல்ல சிதையத் தொடங்குகிறது கனவுகள்.

கல்லூரிக் காலங்களிலிருந்தே சரத்தும் வர்ஷாவும் காதலிக்கின்றனர். ஆனால், இருவரும் அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லையே தவிர இருவருக்கும் அது புரிந்தேயிருந்தது. ஆனால், சரத் அமெரிக்கா சென்ற இந்த மூன்று வருடங்களில் வர்ஷா நிறையவே மாறியிருக்கிறாள். ஒரு முறை சரத் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றிய பேச்சு வருகிறது, அப்பொழுது என் நாவல் உண்மையான காதலை சொல்லும், உண்மையான காதல் என்றால் உண்மை மற்றும் காதல். பொய்யும், காதலும் சேரவே முடியாதுஎன்கிறான் சரத். நிறைய ஆண் நண்பர்களோடு, அதீத நட்பும் இந்த வரிகளும் வர்ஷாவை  சரத்திடமிருந்து தள்ளியே வைக்கிறது.

இது ஒருபுறமிருக்க, வெளியில் வெகுளியாக தெரியும் சன்னியோ ஒரு முழு சுயநலவாதியாகவே இருக்கிறான், மேலும், சரத் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னையும் அங்கே அழைத்துக்கொள்ள வேண்டி சன்னி விரும்பியிருக்கிறான், அதனை தவிர்த்த சரத்தின் மீது மெல்லிய வன்மம் கொண்டிருக்கிறான். அவனது அந்த சிறு ஈகோ சரத்திற்கு எதிராகவும் அவனைத் திருப்புகிறது. மேலும், அவன் ஒரு ஹோமோ செக்‌ஷுவலாகவும் இருக்கிறான். சரத்தைவிட அதிகம் பெயர் பெறவேண்டும் என்கிற வேட்கையில் அவனது கோப்புகளைத் திருடுகிறான். அதே கம்பெனியில் சரத்தை விட உயர் பதவியையும் அடைகிறான். நண்பன் உயர்ந்ததில் தானும் மகிழும் சரத்திற்கு வேறொரு நண்பர் மூலம் முழு உண்மையும் தெரிகிறது.

இடையே ஒரு இக்கட்டான நிலையில் சரத்தின் தந்தை இறந்து போகிறார். சரத்தின் அண்ணன் அப்பாவின் ஆசைப்படியே நீ நல்ல எழுத்தாளனாய் வரவேண்டும் என்கிறார். நானும், அப்பாவும் வாழ்க்கையில் தோற்றவர்கள். நீ தோற்கக்கூடாது என்கிறார். இந்த மூன்று பேரிடிகளில் நிலைகுலைந்து போகிறான் சரத். அந்த சமயத்தில் சரத்தின் அண்ணன், அவன் எழுதி வரும் நாவலின் இரு அத்தியாயங்களை இந்தியாவின் தலைசிறந்த பதிப்பகங்களுக்கு அனுப்பிவைக்கிறார். அதில் லயித்த அவர்கள் பெருந்தொகைக்கு நாவலை பதிப்பிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அண்ணனின் அறிவுரையின் பேரில் வேலையை விட்டுவிட்டு தன் அப்பா சுற்றியலைந்த, அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்ததாய் அவர் சொன்ன கல்கத்தா நகர வீதிகளில் அனுபவம் தேடிப் புறப்படுகிறான். அதற்கு முன்பு நண்பர்கள் விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவும் அந்த சில நிமிட வசனங்களும் தயவு செய்து படம் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழிந்து சன்னிக்கு, இதை வர்ஷாவும் இருக்கும்பொழுது பிரிக்கவும் என்று ஒரு பார்சல் வருகிறது, சரத்திடமிருந்து. அது சீசன்ஸ் என்கிற அவனது முதல் நாவல், அதன் முதல் பக்கத்தில் இது வெறும் புத்தகம் மட்டுமல்ல, என் வாழ்க்கை, இந்த புத்தகத்தை என் நண்பர்கள் சன்னி மற்றும் வர்ஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறான்.

எழுத்தாளரான தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்ப்பின்னணி கொண்ட சரத், க்டைசியில் எழுத்தாளராகிறான். சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியா பின்புலத்துடன் சன்னி எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறான். மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் ஒருவரின் மகளான வர்ஷா, ஆண்களோடான உறவுச் சிக்கலில் தந்து சுய அடையாளத்தை இழந்து இருப்பதைக் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளும் சராசரி பெண்ணாக ஆகிறாள். இப்படியாக குழந்தைகளின் எதிர்காலம் அமைவது அவர்களின் பெற்றோர்களின் குணாதிசயங்களைப் பொருத்தே பெரிதும் இருக்கிறது என்பதை இந்த மூவரின் வாழ்வும் சொல்லாமல் சொல்கிறது. சுயமாய் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்கு முந்தைய நட்பிற்கும் அதன் பின்னான நட்பிற்கும் உள்ள வேறுபாடுகளை மிக நுட்பமாக அலசுகிறது இந்தப் படம்.

இது உலகப்படம் அல்ல, ஆனால் ஜஸ்ட் லைக் தட் என்கிற மனப்பான்மையும், இரண்டாவது முறை செய்யும்பொழுது எதுவுமே தப்பில்லை என்று உணர்த்திக்கொள்ளும் மனதையும் கொண்ட இன்றைய இளைஞர்களின் அதிவேகமான வாழ்க்கைமுறைக்கு மிக அவசியமான படம் எனக் கருதுகிறேன். படத்தில் வரும் இரு வசனங்கள் வாழ்க்கையில் மனுஷன் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒரு நேரம் வரும், அப்பொழுது அதைச் செய்யாதவன் தோல்வியடைகிறான்” “கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இன்று என்ன இல்லை? சாப்ட்வேர் கம்பெனிகள், வெளிநாட்டு வங்கிகள், என்ன இல்லை இங்கே? எல்லாம் இருக்கிறது ஆனால் நமக்கே நமக்கான கலாச்சாரமும், மொழியும் அழிந்து வருகிறது அவ்வளவுதான்

இந்தப்படம் என் நண்பர்களோடான என் உண்மையான நிலைப்பாட்டை ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது. ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், ஆனால் ஆத்மார்த்தமாக?

ஒரே கடல் என்கிற மிகமுக்கியமான திரைப்படைத்தை இயக்கிய ஷ்யாம்பிரசாத்தின் அடுத்த படம். இவரது திரைப்படங்களில் மனித மனதின் நுட்பமான பக்கங்களை பற்றிய ஒரு பார்வையோடே இருக்கும். இந்த படமும் அப்படி மனிதர்களின் மறுபக்கத்தைக் (Grey side of everyone) காட்டக்கூடியதாகவே இருக்கிறது. இந்த படம் சேத்தன் பக்த்தின் ஒன் நைட் @ தி கால் செண்டர் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ நாவலை படிக்கனும். ரொமாண்டிக் இன்ஸ்ட்ரூமெண்ட் எனப்படும் கிடார்தான் இந்த படத்தின் அடிநாதம், பின்னணி இசையில் அதிகம் கிடார்தான். அருமையாக இருக்கிறது. பாடல்களும் அருமை.


                      1. வேணல் காட்டில்.......   
    
                      2. புலருமோ...... என் பால்ய நண்பர்கள் அசோக் மற்றும் ஸ்ரீக்காகவும்  மற்றும் பதின்மங்களில் பழகிய நண்பர்களோடு இன்னமும் நட்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிற, தொடர முடிந்த அனைத்து நண்பர்களுக்காகவும் இந்தப் பதிவு......

வண்ணதாசன் / வாழ்க்கை / வாசிப்பு

உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், மொத்த இந்தியாவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
=============================================================================
 இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரயில் பயணங்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தாரோடு சுற்றுலா செல்லும் போதெல்லாம் வெறும் கேளிக்கைகளுக்கும், தூக்கத்திற்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்தேன்.  ஆனால், இன்று பயணம் என்பது எவ்வளவு அலாதியானது? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு ஏன்? எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதரையும் வாஞ்சையோடும், இலகுவாகவும் அணுக முடிகிறது. காரணம், தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பின் பாதிப்புகளுமே.


     உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதை கழுக்கண்ணோடு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அது போல, வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள, அதை அனுபவிக்க ஒரு எழுத்தாளனின் பார்வையில் பார்க்க வேண்டும். ஏனெனில்,  நாட்டின் ஒவ்வொரு பகுதியின் மூலையிலும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். அவன் அந்த மக்களின் வாழ்க்கையை, அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருக்கிறான். எனவே, இப்போது போகிற எந்த ஊரிலும், அந்த கதாபாத்திரங்களைத் தேட முடிகிறது. மொழியை, அவர்களின் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடிகிறது.  வாசகனுக்கு ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாழ்க்கை.


புத்தகங்களின் மதிப்பை, வாசிப்பின் அருமையை உணர்த்த நாட்டின் கலாச்சாரத்தை ஒழிக்க புத்தகங்களை எரிக்க வேண்டாம், மக்கள் வாசிப்பதையே நிறுத்துங்கள் என்ற ஒற்றைத் தத்துவம் போதுமானது. குழந்தைகளுக்கு, வாசிக்கும் பழக்கத்தை மிகச்சிறிய வயதிலிருந்தே ஆரம்பிக்கச் செய்யலாம்.  தினசரி இரண்டு பக்கங்களை படுக்கைக்குச் செல்லுமுன், அல்லது படுக்கையில் வாசித்துக் காட்டுங்கள்.

அவசர உலகின் பகல்களை பணம் பண்ணும் வேட்கையில் மிதித்துத் தள்ளுகிறோம். குறைந்த பட்சம், இரவு சிறிது நேரமாவது சீரியல்களையும், சூப்பர் சிங்கர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்.  கதைகளிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் நிலையில் புத்தகங்களை வாசிக்கச் செய்யுங்கள்.

நான் என்னுடைய கடிதங்களிலும் பதிவுகளிலும் கடைசியாக கையெழுத்திடும் முன்பாக "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது" என்று எழுதுவது வழக்கம். வாழ்வின் அழகியலை உணர்ந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். பொதுவாகவே, மனிதன் பொருளீட்டும் முனைப்பில் வாழ்வின் அழகை, சின்னச் சின்ன சந்தோசங்களை தவறவிட்டு விடுகிறான். காலங்கழிந்த பின்னர், இனிமையான தருணங்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்வதுமாய் இருக்கும் அவனது வாழ்க்கையில், சில கேள்விகள் அவனை தெளிவுபடுத்துகிறது, வாழ்வின் அழகியலை இயல்பு மீறாமல் புரியச்செய்கிறது. இதற்கு தொடர்ச்சியான வாசிப்பு ஏதுவாக இருக்கிறது.

இது என் வாழ்வில் கண்கூடாக நடந்த விஷயம், வண்ணதாசன் என்கிற ஒற்றை மனிதனின் எழுத்துக்களை அவரது முழு தொகுப்பையும் வாசித்து முடித்ததும், எனக்குள் எழுந்த சில கேள்விகள் ஒவ்வொரு நாளையும், நிமிடங்களையும் சந்தோசமாக கடந்துபோகச் செய்கிறது.

ஒரு மழைக் காலையில் நனைந்து கிடக்கும் உங்கள் தினசரியைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?
தென்னை மரத்திலிருந்து இறங்கிவரும் அணிலைப் பார்க்கும்போது?
சைக்கிள் கேரியரிலிருந்து தவறி விழுந்த தக்காளிக் கூடையைப் பார்க்கும்போது?
லாரியில் அடிபட்ட நாயின் உடலை கைக்குட்டையால் மூக்கை மூடியபடி பார்த்துக் கடந்து செல்லும்போது?
ஆற்றின் படித்துறையில் காதலிக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது?
விறகு அடுப்பில் பலகாரம் சுடும் அம்மாவின் முகம் பார்க்கும்போது?
அவசரகதியான இந்த உலகின் இரவில் தற்செயலாக நிமிர்ந்து நிலா பார்க்கும்போது? (இதில் எந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமென்றாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள். சொல்கிறேன்)
         
வண்ணதாசன் என்கிற அந்த மனிதனின் முழுக்கதைகளையும், கவிதைகளையும் வாசித்து முடித்ததும் என் மனதில் எழுந்த கேள்விகள்தான் இவை அனைத்தும். மேலும் அவருடைய கேள்வி ஒன்றும் இருக்கிறது, ரயிலை பார்க்காதவர்கள் இருப்பார்களோ என்னவோ? கடலும், நதியும், அருவியும் பார்க்காதவர்கள் இருக்கக்கூடும். உச்சி வெயிலில் புறப்படத் தயாராய் நிற்கிற பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கொய்யாப் பழங்களும், திராட்சைப் பழங்களையும் போல “பாக்கெட் தண்ணீர் விற்கப்படுவதைப் பார்க்கிறவன். ஏற்கனவே கடலையும், நதியையும், அருவியையும் அறிந்தவனாயிருப்பது இன்னும் ஒரு வகை துயரமல்லவா? எவ்வளவு அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரிகள், அதனின்று எழும் கேள்விகள், இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடுங்கள். வாழ்க்கையை உணரலாம்.

சில மாதங்களுக்கு முன்பொரு மழை மாலையில், காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சுவரின் வெடிப்பில், அப்போதுதான் முளைத்தது போன்றிருந்த இரண்டே இலை கொண்ட ஒரு சிறு செடியில் ஒரு மஞ்சள் பூ பூத்திருந்தது. அதைப் பார்த்ததுமே, என்னவோ மனம் ஒரு நிறைவை அடைந்தது. எவ்வளவு சந்தோசம்! இந்த சந்தோசங்களின் தோரணங்கள் தான் வாழ்க்கை.

தொலைதூரப் பயணத்தின்போது எங்கோ தூரத்தில் கேட்கும் மெல்லிய இசை, அல்லது ஒற்றை வரி உங்களைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா?
ஆம்! என்றால் நீங்கள் வாசிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இல்லையென்றால், உடனடியாக தொடங்குங்கள் என்று அர்த்தம்.

*************************************************************


திருப்பூர் வலைப்பதிவர்கள் இணைந்து சேர்தளம் என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம் என்பது நீங்களெல்லாம் அறிந்த்தே. அதன் மூலமாக கணினியில் தமிழில் எழுத, வலைப்பதிவுகளை ஆரம்பிக்கவென எங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறோம். அதன் அடுத்த கட்டமாக, நூலகம் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறோம்.

முதலில் எங்களிடம் இருந்த புத்தகங்களை, நாங்களே ஒருவருக்கொருவர் மாற்றி படித்துக் கொண்டிருந்தோம். அதனையே, சற்று வரைமுறைகளுக்கு உட்படுத்தி, எங்களிடம் உள்ள மொத்தப் புத்தகங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு சேர்த்து, அதை அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் ஒரு சிறு நூலகம் போன்று செயல்படுத்தத் துவங்கியிருக்கிறோம்.

சிறு வாடகையின் கீழ் புத்தகங்களை இரவல் கொடுப்பதும், அதன் மூலம் நல்ல புத்தகங்களை தொடர்ந்து வாங்கிக் குவிப்பதுவுமே எங்கள் நோக்கம். இதுவரையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சேகரித்திருக்கிறோம். படிக்க எளிதாக இருந்தாலும், விஷயம் அவ்வளவு எளிதல்ல. என் மன்ங்கவர்ந்த எழுத்தாளர்களின் கையெழுத்துடனான புத்தகம், வருடக்கணக்கில் காத்திருந்து வாங்கிய புத்தகம், பரிசாக வந்த புத்தகம், இப்படி வ்வொரு புத்தகங்களுக்குப் பின்னும், ஒரு உணர்வுபூர்வமான கதை இருக்கும். அதையும் மீறி ஒரு நல்ல விஷயத்திற்காக, புத்தகங்களை வாரி வழங்கிய எங்கள் சேர்தள உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்தப் பதிவின் மூலமாய் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தகங்கள் கொடுக்கவோ, இரவல் பெறவோ விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் murli03@gmail.com / ram.kutty@gmail.com

எனவே, ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பக்கங்களையாவது வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற மறைந்த எழுத்தாளர். சுஜாதா-வின் வரிகளைப் பின்பற்றுவோம். ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பவன், ஒரு வருடத்திற்கு 600 பக்கங்களுக்கு மேல் படித்துவிட முடியும். வருடம் 600 பக்கம் வாசிப்பவனால் நல்ல எழுத்தை கண்டறிய முடியும், தீவிர இலக்கியத்திலும் தொடர முடியும் என்பதுதான் அதன் சாராம்சம்.

இதுவரை வாசிப்பனுவத்திற்குள் நுழையாதவர்கள், இன்றே செய்யுங்கள். வருகிற 23ஆம் நாள் உலக புத்தக தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்  இறந்த தினமான ஏப்ரல் 23ஆம் நாளை, அவரது நினைவாக சர்வதேச புத்தக தினமாக அறிவித்தது. 1995 ஆண்டு முதலாக ஏப்ரல் 23ஆம் நாள் சர்வதேச புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களை சந்திக்கும் போதும், விஷேசங்களின் போதும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே உயிர்ப்போடிருக்கும் மலர்க் கொத்துகளுக்குப் பதிலாய், உயரிய புத்தகங்களைப் பரிசளியுங்கள்.

மீண்டும் சொல்கிறேன், "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது"

உலகக்கோப்பை ஸ்பெசல் பதிவு


    
      கிரிக்கெட் பார்ப்பது குறித்து எதிர்மறையான கருத்துக்கள் எப்பொழுதுமே உண்டு. முட்டாள்களுக்கென முட்டாள்கள் ஆடும் கூத்து என்றும்இன்னும் சிலரோ இந்திய அணி விளையாடும் போட்டிகளை விழுந்தடித்துக்கொண்டு பார்ப்பார்கள்தோற்றதும் இவனுக எருமை மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள். ஜெயித்து விட்டால் எவ்வளவு ஈசியா ஜெயிச்சிட்டாணுக பாருங்கஒரு வேளை பிக்ஸ் பண்ணியிருப்பாங்களோ என்பார்கள். இப்போது இன்னொரு விஷயம் பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. அது அரசியல். விளையாட்டோடு கலந்த அரசியல்.


ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் தான் தேசமே ஒன்று கூடும். அதுவும், போர், மிகப்பெரிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் தான். இதெல்லாம் எதிர்பார்த்து வருவதில்லை ஆனால் இதை அனைவரும் எதிர்பார்க்கலாம். இது நமது தேசத்திற்கான திருவிழா. அனைவரும் கொண்டாடுவோம்.

சொல்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள்.  அவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அதைப்பற்றிய எந்த கவலையும் எனக்கில்லை. என்னைப் பொறுத்த  வரை கிரிக்கெட் என்பது , இந்தியாவின் நான்காவது பெரிய மதம். அதில் சச்சின் போன்ற பெருந்தெய்வங்களும் தோனியுவராஜ் போன்ற குறுங்கடவுள்களும் அடக்கம். நான் நான்காம் மதம் பிடித்தவன். தீவிர ஆத்திகன். ஏனெனில் என் சிறுவயது முதலாகவே என் அப்பாவும்சித்தப்பாவும் எனக்கு இந்த கடவுள்களைக் காட்டியே  வளர்த்தனர். நானும் என் குழந்தைக்கு இத்தகைய கடவுள் நம்பிக்கையை ஊட்டியே வளர்க்க விரும்புகிறேன். நம்பாமல் நாத்திகம் பேசுபவர்கள் பற்றிய கவலை எனக்கில்லை.

கடவுள் இல்லை என்பது உண்மையானால் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பல நேரங்களில் உண்மையை விட நம்பிக்கையையே நான் அதிகம் விரும்புகிறேன். ஆனால் இப்பொழுது நம்பிக்கையையும் தாண்டிய விஷயம், ஆசை. அதுவும் மிகச்சிறிய ஆசைதான். தோத்தா பங்காளிகளிடமே தோற்றிருக்கணும். இன்று அல்ல. அதுவும் இன்று நடக்கப்போகும் போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் சச்சினைக் கேப்டனாக்கி, ஜெயித்தபின் அவர் கைகளில் உலகக்கோப்பையைக் கொடுத்து அரங்கு முழுவதும் சுற்று வருவதை பார்க்க வேண்டும். செமி பைனலில் பங்காளிகளுக்கு கொடுத்ததைவிட செமமையான அடியை பகையாளிகளுக்கு கொடுத்து இந்த வருட உலகக்கோப்பையை இந்தியா ஜெயிக்கட்டும். என்னைப்போல என் மதத்தைப் பின்பற்றும் அனைவரும், நமது கடவுளை பிராத்திப்போம். 
எங்க எல்லாரும் சொல்லுங்க,
இந்தியா....  இந்தியா....
இந்தியா...... இந்தியா...
இந்தியா...... இந்தியா...
இந்தியா...... இந்தியா...
************************************************************

இன்று நூலகம் பற்றி எழுதுவதாகத்தான் இருந்தேன். ஆனால் எனக்கு இந்த தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இயங்க கிடைத்த இந்த முழுவாரத்திலும், என்னாலுமே தொடர்ந்து இயங்க முடியாத நிலை. வேலைப்பளு ஒருபுறம், கிரிக்கெட் போட்டிகள் ஒருபுறம். எழுதுற எனக்கே இவ்வளவு பிரச்சனை? படிக்கிற நீங்க எவ்ளோ பாவம்? எப்படியோ ஒருவாரம் தொடர்ந்து எழுதியாயிற்று. பொதுவாக ஞாயிறுகளில் மட்டுமே பதிவு எழுதும் எனக்கு இந்த அனுபவம், கிட்டத்தட்ட ஒருமாத காலம் எழுத வேண்டியதை ஒரு வாரத்தில் எழுதியது போல இருந்தது. அவசரகதியில் எழுதிய பதிவுகளில் ஏதும் தவறிருந்தாலோ யாரையும் புண்படுத்தியிருந்தாலோ, மன்னிக்கவும். 


இந்த ஒருவாரமும் பதிவிற்கு வந்து தொடர்ச்சியான பின்னூட்டங்களின் மூலம் உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நாளையோடு எனது நட்சத்திரப் பதிவுகளை முடிக்கிறேன். அதுவும் ஒரு முக்கியமான பதிவுதான். வண்ணதாசன் மற்றும் நூலகம் பற்றிய ஒரு கட்டுரையைத்தான் நாளை எழுத இருக்கிறேன். அனைவரும் அவசியம் நாளையும்வந்து வாசித்துச் செல்லுங்கள்.

நம்ம ஷோ நாளை கடைசி