வண்ணதாசன் / வாழ்க்கை / வாசிப்பு

உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், மொத்த இந்தியாவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
=============================================================================
 இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரயில் பயணங்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தாரோடு சுற்றுலா செல்லும் போதெல்லாம் வெறும் கேளிக்கைகளுக்கும், தூக்கத்திற்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்தேன்.  ஆனால், இன்று பயணம் என்பது எவ்வளவு அலாதியானது? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு ஏன்? எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதரையும் வாஞ்சையோடும், இலகுவாகவும் அணுக முடிகிறது. காரணம், தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பின் பாதிப்புகளுமே.


     உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதை கழுக்கண்ணோடு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அது போல, வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள, அதை அனுபவிக்க ஒரு எழுத்தாளனின் பார்வையில் பார்க்க வேண்டும். ஏனெனில்,  நாட்டின் ஒவ்வொரு பகுதியின் மூலையிலும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். அவன் அந்த மக்களின் வாழ்க்கையை, அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருக்கிறான். எனவே, இப்போது போகிற எந்த ஊரிலும், அந்த கதாபாத்திரங்களைத் தேட முடிகிறது. மொழியை, அவர்களின் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடிகிறது.  வாசகனுக்கு ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாழ்க்கை.


புத்தகங்களின் மதிப்பை, வாசிப்பின் அருமையை உணர்த்த நாட்டின் கலாச்சாரத்தை ஒழிக்க புத்தகங்களை எரிக்க வேண்டாம், மக்கள் வாசிப்பதையே நிறுத்துங்கள் என்ற ஒற்றைத் தத்துவம் போதுமானது. குழந்தைகளுக்கு, வாசிக்கும் பழக்கத்தை மிகச்சிறிய வயதிலிருந்தே ஆரம்பிக்கச் செய்யலாம்.  தினசரி இரண்டு பக்கங்களை படுக்கைக்குச் செல்லுமுன், அல்லது படுக்கையில் வாசித்துக் காட்டுங்கள்.

அவசர உலகின் பகல்களை பணம் பண்ணும் வேட்கையில் மிதித்துத் தள்ளுகிறோம். குறைந்த பட்சம், இரவு சிறிது நேரமாவது சீரியல்களையும், சூப்பர் சிங்கர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்.  கதைகளிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் நிலையில் புத்தகங்களை வாசிக்கச் செய்யுங்கள்.

நான் என்னுடைய கடிதங்களிலும் பதிவுகளிலும் கடைசியாக கையெழுத்திடும் முன்பாக "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது" என்று எழுதுவது வழக்கம். வாழ்வின் அழகியலை உணர்ந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். பொதுவாகவே, மனிதன் பொருளீட்டும் முனைப்பில் வாழ்வின் அழகை, சின்னச் சின்ன சந்தோசங்களை தவறவிட்டு விடுகிறான். காலங்கழிந்த பின்னர், இனிமையான தருணங்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்வதுமாய் இருக்கும் அவனது வாழ்க்கையில், சில கேள்விகள் அவனை தெளிவுபடுத்துகிறது, வாழ்வின் அழகியலை இயல்பு மீறாமல் புரியச்செய்கிறது. இதற்கு தொடர்ச்சியான வாசிப்பு ஏதுவாக இருக்கிறது.

இது என் வாழ்வில் கண்கூடாக நடந்த விஷயம், வண்ணதாசன் என்கிற ஒற்றை மனிதனின் எழுத்துக்களை அவரது முழு தொகுப்பையும் வாசித்து முடித்ததும், எனக்குள் எழுந்த சில கேள்விகள் ஒவ்வொரு நாளையும், நிமிடங்களையும் சந்தோசமாக கடந்துபோகச் செய்கிறது.

ஒரு மழைக் காலையில் நனைந்து கிடக்கும் உங்கள் தினசரியைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?
தென்னை மரத்திலிருந்து இறங்கிவரும் அணிலைப் பார்க்கும்போது?
சைக்கிள் கேரியரிலிருந்து தவறி விழுந்த தக்காளிக் கூடையைப் பார்க்கும்போது?
லாரியில் அடிபட்ட நாயின் உடலை கைக்குட்டையால் மூக்கை மூடியபடி பார்த்துக் கடந்து செல்லும்போது?
ஆற்றின் படித்துறையில் காதலிக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது?
விறகு அடுப்பில் பலகாரம் சுடும் அம்மாவின் முகம் பார்க்கும்போது?
அவசரகதியான இந்த உலகின் இரவில் தற்செயலாக நிமிர்ந்து நிலா பார்க்கும்போது? (இதில் எந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமென்றாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள். சொல்கிறேன்)
         
வண்ணதாசன் என்கிற அந்த மனிதனின் முழுக்கதைகளையும், கவிதைகளையும் வாசித்து முடித்ததும் என் மனதில் எழுந்த கேள்விகள்தான் இவை அனைத்தும். மேலும் அவருடைய கேள்வி ஒன்றும் இருக்கிறது, ரயிலை பார்க்காதவர்கள் இருப்பார்களோ என்னவோ? கடலும், நதியும், அருவியும் பார்க்காதவர்கள் இருக்கக்கூடும். உச்சி வெயிலில் புறப்படத் தயாராய் நிற்கிற பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கொய்யாப் பழங்களும், திராட்சைப் பழங்களையும் போல “பாக்கெட் தண்ணீர் விற்கப்படுவதைப் பார்க்கிறவன். ஏற்கனவே கடலையும், நதியையும், அருவியையும் அறிந்தவனாயிருப்பது இன்னும் ஒரு வகை துயரமல்லவா? எவ்வளவு அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரிகள், அதனின்று எழும் கேள்விகள், இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடுங்கள். வாழ்க்கையை உணரலாம்.

சில மாதங்களுக்கு முன்பொரு மழை மாலையில், காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சுவரின் வெடிப்பில், அப்போதுதான் முளைத்தது போன்றிருந்த இரண்டே இலை கொண்ட ஒரு சிறு செடியில் ஒரு மஞ்சள் பூ பூத்திருந்தது. அதைப் பார்த்ததுமே, என்னவோ மனம் ஒரு நிறைவை அடைந்தது. எவ்வளவு சந்தோசம்! இந்த சந்தோசங்களின் தோரணங்கள் தான் வாழ்க்கை.

தொலைதூரப் பயணத்தின்போது எங்கோ தூரத்தில் கேட்கும் மெல்லிய இசை, அல்லது ஒற்றை வரி உங்களைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா?
ஆம்! என்றால் நீங்கள் வாசிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இல்லையென்றால், உடனடியாக தொடங்குங்கள் என்று அர்த்தம்.

*************************************************************


திருப்பூர் வலைப்பதிவர்கள் இணைந்து சேர்தளம் என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம் என்பது நீங்களெல்லாம் அறிந்த்தே. அதன் மூலமாக கணினியில் தமிழில் எழுத, வலைப்பதிவுகளை ஆரம்பிக்கவென எங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறோம். அதன் அடுத்த கட்டமாக, நூலகம் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறோம்.

முதலில் எங்களிடம் இருந்த புத்தகங்களை, நாங்களே ஒருவருக்கொருவர் மாற்றி படித்துக் கொண்டிருந்தோம். அதனையே, சற்று வரைமுறைகளுக்கு உட்படுத்தி, எங்களிடம் உள்ள மொத்தப் புத்தகங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு சேர்த்து, அதை அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் ஒரு சிறு நூலகம் போன்று செயல்படுத்தத் துவங்கியிருக்கிறோம்.

சிறு வாடகையின் கீழ் புத்தகங்களை இரவல் கொடுப்பதும், அதன் மூலம் நல்ல புத்தகங்களை தொடர்ந்து வாங்கிக் குவிப்பதுவுமே எங்கள் நோக்கம். இதுவரையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சேகரித்திருக்கிறோம். படிக்க எளிதாக இருந்தாலும், விஷயம் அவ்வளவு எளிதல்ல. என் மன்ங்கவர்ந்த எழுத்தாளர்களின் கையெழுத்துடனான புத்தகம், வருடக்கணக்கில் காத்திருந்து வாங்கிய புத்தகம், பரிசாக வந்த புத்தகம், இப்படி வ்வொரு புத்தகங்களுக்குப் பின்னும், ஒரு உணர்வுபூர்வமான கதை இருக்கும். அதையும் மீறி ஒரு நல்ல விஷயத்திற்காக, புத்தகங்களை வாரி வழங்கிய எங்கள் சேர்தள உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்தப் பதிவின் மூலமாய் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தகங்கள் கொடுக்கவோ, இரவல் பெறவோ விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் murli03@gmail.com / ram.kutty@gmail.com

எனவே, ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பக்கங்களையாவது வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற மறைந்த எழுத்தாளர். சுஜாதா-வின் வரிகளைப் பின்பற்றுவோம். ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பவன், ஒரு வருடத்திற்கு 600 பக்கங்களுக்கு மேல் படித்துவிட முடியும். வருடம் 600 பக்கம் வாசிப்பவனால் நல்ல எழுத்தை கண்டறிய முடியும், தீவிர இலக்கியத்திலும் தொடர முடியும் என்பதுதான் அதன் சாராம்சம்.

இதுவரை வாசிப்பனுவத்திற்குள் நுழையாதவர்கள், இன்றே செய்யுங்கள். வருகிற 23ஆம் நாள் உலக புத்தக தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்  இறந்த தினமான ஏப்ரல் 23ஆம் நாளை, அவரது நினைவாக சர்வதேச புத்தக தினமாக அறிவித்தது. 1995 ஆண்டு முதலாக ஏப்ரல் 23ஆம் நாள் சர்வதேச புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களை சந்திக்கும் போதும், விஷேசங்களின் போதும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே உயிர்ப்போடிருக்கும் மலர்க் கொத்துகளுக்குப் பதிலாய், உயரிய புத்தகங்களைப் பரிசளியுங்கள்.

மீண்டும் சொல்கிறேன், "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது"

32 கருத்துரைகள்:

shri Prajna said...

/அவனது வாழ்க்கையில், சில கேள்விகள் அவனை தெளிவுபடுத்துகிறது, வாழ்வின் அழகியலை இயல்பு மீறாமல் புரியச்செய்கிறது. இதற்கு தொடர்ச்சியான வாசிப்பு ஏதுவாக இருக்கிறது./

நிதர்சனமான உண்மை ..

வாசிப்பு ஒரு மனிதனை தன்னை உணர செய்பவனாகவும்..நிறைய விஷயங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்..உதவுகிறது...ஒரு மனிதன் அனுபவித்து தான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆயுசு போறாது..ஆனால் வாசிப்பு நிறைய அனுபவங்களையும்,படிப்பினையும் தருகிறது...

தங்களின் நூலக முயற்சியும் வரவேற்பிற்குரிய விஷயம்.

shri Prajna said...
This comment has been removed by a blog administrator.
sugirtha said...

நல்ல பதிவு முரளி...

அன்புடன் அருணா said...

"வாழ்க்கை அழகானது இதை வாசிக்கும் போது"!!!!பூங்கொத்து!

கோபிநாத் said...

:)

சுசி said...

// "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது" //

அழகான வரிகள். சுட்டு வைத்துக்கொள்கிறேன்.

விட்டுப்போன வாசிப்புப் பழக்கம் மீண்டும் தொடர வேண்டும் என்று நினைக்க வைத்த பகிர்வு. ஒருவேளை பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் அந்தப் பழக்கம் மறந்து போயிற்றோ என்றும் நினைப்பதுண்டு.

இந்தியாவுக்கு வாழ்த்துகள்.

மோகன் குமார் said...

வண்ண தாசன், சேர்தளம் இவை குறித்த தங்கள் கருத்து அனைத்தும் அருமை. இந்த வாரம் வித்யாசமான அனுபவம் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்த்துகள்

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்ல பதிவு முரளி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@பிரஜ்னா
//ஒரு மனிதன் அனுபவித்து தான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆயுசு போறாது..ஆனால் வாசிப்பு நிறைய அனுபவங்களையும்,படிப்பினையும் தருகிறது...//

நன்றி தோழி, அருமையான கருத்து...

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
நன்றி சுகிர்தா.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
//"வாழ்க்கை அழகானது இதை வாசிக்கும் போது"!!!!பூங்கொத்து!//

தேங்க்யூ மேடம், கிஃப்ட் உங்க பின்னூட்டம்.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
தேங்கஸ் தல, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
சுசி மேடம், நன்றி
//அழகான வரிகள். சுட்டு வைத்துக்கொள்கிறேன்//
தாராளமா... :-)


//விட்டுப்போன வாசிப்புப் பழக்கம் மீண்டும் தொடர வேண்டும் என்று நினைக்க வைத்த பகிர்வு//

அப்பாடா... வெற்றி.

//ஒருவேளை பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் அந்தப் பழக்கம் மறந்து போயிற்றோ என்றும் நினைப்பதுண்டு//
இல்லை அப்படியில்லை, பதிவுகளை படிக்க ஆரம்ப்பித்தபின் இன்னும் விஸ்தாரமாகிப் போகிறது வாசிப்பனுபவம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
// இந்த வாரம் வித்யாசமான அனுபவம் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்த்துகள்//
உண்மைதான் மோகன் ஜீ, ஆனால் தொடர்ந்து எழுதியாக வேண்டுமென்கிற கட்டாயம், கொஞ்சம் நெருக்கடியைக் கொடுத்ததும் உண்மை. இதனால் தரக்குறைவு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@செல்வராஜ் ஜெகதீசன்
நன்றி செல்வராஜ் சார், உங்க வருகைக்கும் கருத்துக்கும்.... :-)

நந்தா ஆண்டாள்மகன் said...

அருமையான பதிவு முரளி..தங்களின் நூலக முயற்சியை பாராட்டுகிறேன் நண்பரே.

கிருஷ்ண பிரபு said...

/-- இதுவரையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சேகரித்திருக்கிறோம். --/

டேய்... எவ்வளோ பெரிய வேலையை குழுவாக செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்லா இருக்கு!

கும்க்கி said...

தாத்தாதான் எங்களுக்கு நிறைய காட்டினார் - பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல் நெல்லையப்பர் கோயில் யானை வரை

பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழா தேரும்
அம்மா காட்டியவை

பாம்பன் பாலம், பப்பநாதசாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம்
காட்டியது ஆச்சி.

எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.
இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது.

மூத்த பெண்ணுக்கு
மலைகளை காட்டினோம்
இவன் பார்க்க
இப்போது
திராட்சைத் தோட்டம்.

கட்டுப்படியாவதைக்
காட்டும் வாழ்க்கை
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை...

எனக்கெல்லாமுமான வண்ணதாசன் கவிதை தொகுப்பிலிருந்து....

ஆதவா said...

///மிகச்சிறிய வயதிலிருந்தே ஆரம்பிக்கச் செய்யலாம். தினசரி இரண்டு பக்கங்களை படுக்கைக்குச் செல்லுமுன், அல்லது படுக்கையில் வாசித்துக் காட்டுங்கள்///

எனது லட்சியங்களும் இதுவும் ஒன்றுங்க முரளி. எனக்கு என் அப்பா எனக்கு செய்ததை நான் என் குழந்தைகளுக்கு இருமடங்காகச் செய்வேன்... புத்தகங்கள் வாசிப்பது இன்னொரு கண்ணுக்குப் புலனாகாத உலகத்தை சுற்றிவருவதைப் போன்றது.

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, நீங்கள் பட்டியலிட்டிருக்கும் கேள்விகள் சிலவற்றை இன்னமும் வித்தியாச நோக்குடன் பார்க்கிறேன். குறிப்பாக அணிலும், நிலாவும். எங்கள் வீட்டில் அணில்கள் இரண்டு அல்லது மூன்று உலவுகின்றன. தினமும் நாங்கள் வளர்க்கும் கோழிகளுடன் அதுவும் அமர்ந்து ஒரே ஒரு அரிசியை மட்டும் இரு கைகளாலும் எடுத்து உண்பது காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. (கொஞ்சம் ஜூம் லென்ஸ் இருந்தால் போட்டோ எடுத்திருப்பேன்..) அதேபோலத்ட்தான் நிலாவும்... அடிக்கடி முழு அல்லது அரை நிலவை பார்க்கும் குணமுடையவன் நான்... சிலசமயம் அதன் ஈர்ப்பில் லயித்திருக்கிறேன்!! (இரவு படுப்பதே மொட்டைமாடியி என்பதால் நட்சத்திரங்களும், செவ்வாய் கிரகமும் ரொம்ப தேடிப்பிடித்து சனிக்கிரகம் இதுவாகத்தான் இருக்கும் என்று தீர்வுடனும் பார்ப்பதே தொழில்!!)

அதேபோல சின்னச் சின்ன விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கச் சொன்னதும் புத்தகங்கள்தான். நீங்கள் குறிப்பிட்ட மஞ்சள் பூவைப் போல/// என்னைக் கேட்டால் நம் வாழ்வின் இடுக்குகளை மெல்ல மெல்ல காட்டிக் கொடுப்பதும் இந்த சின்னச் சின்ன விசயங்கள்தாம்.

Tanvi said...

ரொம்ப ரசனையான பகிர்வு ப்ரதர்.

வாசிப்புப் பழக்கம் ஒழிந்து போய்விடக்கூடாதெனும் உங்கள் ஆதங்கம் தெரிகிறது.

சேர்தளத்தின் இம்முயற்சி எளிதானதல்ல. வாழ்த்துகள். ரொம்ப மகிழ்வா இருக்குக் கேட்க.

அப்பாதுரை said...

'ரேடியோ என்றால் எப்படி இருக்கும்?' என்று கேட்டாள் என் பெண். சிறிது யோசித்து விட்டு, 'ஐ-பாட் போல் இருக்காது' என்றேன்.

அப்பாதுரை said...

நூலகம் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். ஒரு யோசனை வழங்கலாமா? திருப்பூரில் தொடக்க மற்றும் நடுநிலப்பள்ளிகளுடன் இணைந்து வாரத்தில் ஒரு நாள் மாலை ஒரு புத்தகம் படிக்கலாமே? volunteer நிறைவும், நல்ல புத்தகம் படித்த நிறைவும், இளையவரின் மனதில் நல்ல படிப்பின் அவசியத்தை ஏற்படுத்திய நிறைவும் கிடைக்கும். வாசிக்காத புத்தகங்களும் வாழ மறந்த நாட்கள் தானே ஒரு வகையில்?

முரளிகுமார் பத்மநாபன் said...

@நந்தா ஆண்டாள்மகன்
//அருமையான பதிவு முரளி..தங்களின் நூலக முயற்சியை பாராட்டுகிறேன் நண்பரே.//

நன்றி நண்பா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கிருஷ்ணபிரபு
கிருஷ்ணா இதை உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கனும், தப்பு என்னுடையதுதான். மன்னிச்சூ.....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரணவம் ரவிகுமார்
நன்றி ரவி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கும்க்கி
//எனக்கெல்லாமுமான வண்ணதாசன்//
அண்ணே சொல்லவேயில்ல, எப்போ போலாம் திருநெல்வேலி?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
//(இரவு படுப்பதே மொட்டைமாடியி என்பதால் நட்சத்திரங்களும், செவ்வாய் கிரகமும் ரொம்ப தேடிப்பிடித்து சனிக்கிரகம் இதுவாகத்தான் இருக்கும் என்று தீர்வுடனும் பார்ப்பதே தொழில்!!) //

அருமை ஆதவா, எனக்கு அதுக்கு குடுத்து வைக்கலை.....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@தன்வி
நன்றி தங்கச்சி, இன்னும் மத்த போஸ்ட்டையெல்லாம் படிக்கலை போல... ரைட்டு கவனிச்சிக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//? திருப்பூரில் தொடக்க மற்றும் நடுநிலப்பள்ளிகளுடன் இணைந்து வாரத்தில் ஒரு நாள் மாலை ஒரு புத்தகம் படிக்கலாமே? //

//வாசிக்காத புத்தகங்களும் வாழ மறந்த நாட்கள் தானே ஒரு வகையில்?//
நிதர்சனம்.
:-) அழகா சொல்லியிருக்கிங்க///

அப்பாதுரை said...

பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கலாமே என்று சொல்ல வந்தேன்... முக்கியமானது விட்டுப் போனது! என் உயர்நிலைப் பள்ளி நாட்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 'மரத்தடி நூலகம்' என்று ஒரு அமைப்பு சில புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கக் கொடுப்பார்கள்.. இரண்டு இளைஞர்கள் ரொம்ப நாள் இந்தப் பணியைச் செய்தார்கள். முதலில் வரவேற்பு இல்லை.. நாளாக பத்துப் பதினைந்து பிள்ளைகளாவது தினமும் மரத்தடி நூலகம் சென்று படிப்பார்கள். ரா.பி.சேதுப்பிள்ளை எழுத்து அறிமுகம் அங்கே தான் ஆனது.

லேகா said...

//எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதரையும் வாஞ்சையோடும், இலகுவாகவும் அணுக முடிகிறது. காரணம், தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பின் பாதிப்புகளுமே.//
//குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள். கதைகளிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் நிலையில் புத்தகங்களை வாசிக்கச் செய்யுங்கள்//

உண்மையான வரிகள் முரளி.

வண்ணதாசனின் கதை மனிதர்கள் சௌந்தர்யமிக்கவர்கள் அவரின் படைப்புகளை போலவே..எத்தனை மோசமான மனநிலையையும் மாற்றி போட்டு விடும் எழுத்து...பேசிப் பேசி தீராததும் கூட!!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.