கனவுகள் சிதையும் காலம்.......


அப்பொழுது எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இருந்தனர். பள்ளி முடிந்ததும், கிரிக்கெட் விளையாடுவோம். அருகிலேயே, கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய குடோன் இருக்கும். பல நேரங்களில், நண்பர்களின் ஜமா அங்கேதானிருக்கும். வேப்பமரத்தின் நிழலில், அதன் கிளை பரவியிருக்கும், படிக்கட்டுகள் கட்டுவதற்காக கட்டப்பட்ட அந்த சாய்ந்த கான்கிரீட் சறுக்கலில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்போம். எதிர்காலம் பற்றிய எண்ணங்களை. என்னை எப்படியும் நேவியில் சேர்த்துவிடவேண்டும் என்ற அப்பாவின் கனவுகளை நான் கண்டுகொண்டிருந்த நாட்கள், நல்லா படிக்கணும், எது செய்தாலும், சொந்தமா செய்யணும்னு தீர்க்கமாச் சொல்லுவான் அசோக். என்னவாக ஆகணும்னு சுயமா யோசிக்கக்கூட தெரியாமல் இருப்பான் ஸ்ரீ. ஆனால், எங்கள் மூன்று பேருக்குமாய், பொதுவாய் ஒரு கனவிருந்தது. யார் என்னவானாலும் சரி, ஒரே மாதிரியாக அடுத்தடுத்தாய் இருக்க வேண்டும் நமது வீடுகள். எப்போதும், இதே போல நாம் நண்பர்களாகவே இருக்கவேண்டும். விளையாட்டாகவும், படிக்கும்போது சிரிப்பே வந்தாலும் இந்த பதின்மங்களின் கனவு ஒரு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான நட்பின் நேர்மையான கனவு.

காலம் ஓடியது. படிப்பு, வேலை, இப்படியான சில பல காரணங்களால் சில வருடங்கள், பிரிந்திருந்தோம், பின் மீண்டும் சேர்ந்தோம், ஆனாலும் அந்த நெருங்கிய நண்பர்கள், இன்னமும் இனியெப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள், இருப்பார்கள். ஓவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்ப, பொருளாதார பின்னணியில் இருக்கிறோம். இன்னமும் எல்லாவற்றிற்கும் மையமாய் நட்புமிருக்கிறது, ஆனால் அந்தக்கனவு?

சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமான நண்பர்களோடு சேர்ந்து புது தொழில் செய்ய வருகிறான். சன்னியும் வர்ஷாவும் பெங்களூரில் இன்போஸிசில் வேலை செய்கின்றனர். சரத்தின் யோசனை அனைவருக்கும் சரியாய்ப்பட அவர்களும் இந்த யோசனையை ஏற்கின்றனர். நெட்சிட்டி எனும் தொழில்நுட்பப் பூங்காவிலிருக்கும் சைபூ எனும் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு புதிய புராஜெக்ட்டிற்காக மூவரும் இணைகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தொடங்கும் இவர்களின் இந்த வாழ்க்கையில், உலகமயமாக்கலில் சிக்கித்தவிக்கும் இன்றைய நவீன சாஃப்ட்வேர் கம்பெனியின் பின்புலம் நிறைய மாற்றங்களைத் தருகிறது.

சரத் அமெரிக்கா சென்றிருந்த காலத்தில் அவனுடைய டைரியை படித்திருக்கிறார் சரத்தின் அப்பா. அவன் திரும்பியதும் உன்னிடம் நல்ல எழுத்துத்திறமை இருக்கிறது. அதை விட்டுவிடாதே என்றும் சொல்கிறார். இலக்கியம் படிக்கிறேன் என்றபொழுது கம்ப்யூட்டர் படிக்கச் சொன்ன அதே அப்பா, இன்று இப்படிச் சொல்கிறாரே என நினைக்கிறான். ஆனால் எழுதுவது என்பது சரத்திற்கும் விருப்பமானதாகவே இருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் போதும் எழுதுவதைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான்.

சன்னியிடமும், வர்ஷாவிடமும் சிறுவயதில் அதிகம் விளையாடிய ஏரிக்கரைக்குப் போகலாமா? எவ்வளவு நாளாச்சு அங்கே போய்? என்று கேட்கிறான். ஆனால் இருவருக்குமே அதில் விருப்பமில்லை என்பது அவனுக்குப் புரிகிறது. தனியாக சென்று அங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான். அப்பொழுது வர்ஷா வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் சரத் வருத்தப்படுவானே என்று நடிக்கிறாள். அவளிடம், சரத் மிக உணர்வுப்பூர்வமாக அவர்களது கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். இதே ஏரிக்கரையில் ஓரமாய் ஒரு வீடு கட்டி நாம் மூவரும் அதிலே ஒன்றாக இருக்க வேண்டும், சன்னிக்கு இசையார்வம் அதிகம். அவன் ஒரு இசைக்குழு தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தான், அதைச் செய்ய வேண்டும், உனக்கு சேவை செய்வதில் ஆர்வம் அதிகம், எனக்கு எழுத்தாளனாக வேண்டும். இதெல்லாம் நமது பால்யத்தின் கனவு. இப்பொழுது நாம் வளர்ந்துவிட்டோம், ஒன்றாக இருக்கிறோம், பணிபுரிகிறோம், சம்பாதிக்கிறோம். இப்பொழுது நமது கனவுகள் சாத்தியப்பட நிறைய வாய்ப்புகள் உண்டே வர்ஷா? என்கிறான். ஒற்றை வரியில் வர்ஷா சொல்கிறாள் “இன்னுமா அந்தக் கனவையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய், சின்னப்புள்ள மாதிரி என்றதும் மெல்ல சிதையத் தொடங்குகிறது கனவுகள்.

கல்லூரிக் காலங்களிலிருந்தே சரத்தும் வர்ஷாவும் காதலிக்கின்றனர். ஆனால், இருவரும் அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லையே தவிர இருவருக்கும் அது புரிந்தேயிருந்தது. ஆனால், சரத் அமெரிக்கா சென்ற இந்த மூன்று வருடங்களில் வர்ஷா நிறையவே மாறியிருக்கிறாள். ஒரு முறை சரத் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றிய பேச்சு வருகிறது, அப்பொழுது என் நாவல் உண்மையான காதலை சொல்லும், உண்மையான காதல் என்றால் உண்மை மற்றும் காதல். பொய்யும், காதலும் சேரவே முடியாதுஎன்கிறான் சரத். நிறைய ஆண் நண்பர்களோடு, அதீத நட்பும் இந்த வரிகளும் வர்ஷாவை  சரத்திடமிருந்து தள்ளியே வைக்கிறது.

இது ஒருபுறமிருக்க, வெளியில் வெகுளியாக தெரியும் சன்னியோ ஒரு முழு சுயநலவாதியாகவே இருக்கிறான், மேலும், சரத் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னையும் அங்கே அழைத்துக்கொள்ள வேண்டி சன்னி விரும்பியிருக்கிறான், அதனை தவிர்த்த சரத்தின் மீது மெல்லிய வன்மம் கொண்டிருக்கிறான். அவனது அந்த சிறு ஈகோ சரத்திற்கு எதிராகவும் அவனைத் திருப்புகிறது. மேலும், அவன் ஒரு ஹோமோ செக்‌ஷுவலாகவும் இருக்கிறான். சரத்தைவிட அதிகம் பெயர் பெறவேண்டும் என்கிற வேட்கையில் அவனது கோப்புகளைத் திருடுகிறான். அதே கம்பெனியில் சரத்தை விட உயர் பதவியையும் அடைகிறான். நண்பன் உயர்ந்ததில் தானும் மகிழும் சரத்திற்கு வேறொரு நண்பர் மூலம் முழு உண்மையும் தெரிகிறது.

இடையே ஒரு இக்கட்டான நிலையில் சரத்தின் தந்தை இறந்து போகிறார். சரத்தின் அண்ணன் அப்பாவின் ஆசைப்படியே நீ நல்ல எழுத்தாளனாய் வரவேண்டும் என்கிறார். நானும், அப்பாவும் வாழ்க்கையில் தோற்றவர்கள். நீ தோற்கக்கூடாது என்கிறார். இந்த மூன்று பேரிடிகளில் நிலைகுலைந்து போகிறான் சரத். அந்த சமயத்தில் சரத்தின் அண்ணன், அவன் எழுதி வரும் நாவலின் இரு அத்தியாயங்களை இந்தியாவின் தலைசிறந்த பதிப்பகங்களுக்கு அனுப்பிவைக்கிறார். அதில் லயித்த அவர்கள் பெருந்தொகைக்கு நாவலை பதிப்பிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அண்ணனின் அறிவுரையின் பேரில் வேலையை விட்டுவிட்டு தன் அப்பா சுற்றியலைந்த, அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்ததாய் அவர் சொன்ன கல்கத்தா நகர வீதிகளில் அனுபவம் தேடிப் புறப்படுகிறான். அதற்கு முன்பு நண்பர்கள் விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவும் அந்த சில நிமிட வசனங்களும் தயவு செய்து படம் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழிந்து சன்னிக்கு, இதை வர்ஷாவும் இருக்கும்பொழுது பிரிக்கவும் என்று ஒரு பார்சல் வருகிறது, சரத்திடமிருந்து. அது சீசன்ஸ் என்கிற அவனது முதல் நாவல், அதன் முதல் பக்கத்தில் இது வெறும் புத்தகம் மட்டுமல்ல, என் வாழ்க்கை, இந்த புத்தகத்தை என் நண்பர்கள் சன்னி மற்றும் வர்ஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறான்.

எழுத்தாளரான தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்ப்பின்னணி கொண்ட சரத், க்டைசியில் எழுத்தாளராகிறான். சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியா பின்புலத்துடன் சன்னி எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறான். மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் ஒருவரின் மகளான வர்ஷா, ஆண்களோடான உறவுச் சிக்கலில் தந்து சுய அடையாளத்தை இழந்து இருப்பதைக் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளும் சராசரி பெண்ணாக ஆகிறாள். இப்படியாக குழந்தைகளின் எதிர்காலம் அமைவது அவர்களின் பெற்றோர்களின் குணாதிசயங்களைப் பொருத்தே பெரிதும் இருக்கிறது என்பதை இந்த மூவரின் வாழ்வும் சொல்லாமல் சொல்கிறது. சுயமாய் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்கு முந்தைய நட்பிற்கும் அதன் பின்னான நட்பிற்கும் உள்ள வேறுபாடுகளை மிக நுட்பமாக அலசுகிறது இந்தப் படம்.

இது உலகப்படம் அல்ல, ஆனால் ஜஸ்ட் லைக் தட் என்கிற மனப்பான்மையும், இரண்டாவது முறை செய்யும்பொழுது எதுவுமே தப்பில்லை என்று உணர்த்திக்கொள்ளும் மனதையும் கொண்ட இன்றைய இளைஞர்களின் அதிவேகமான வாழ்க்கைமுறைக்கு மிக அவசியமான படம் எனக் கருதுகிறேன். படத்தில் வரும் இரு வசனங்கள் வாழ்க்கையில் மனுஷன் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒரு நேரம் வரும், அப்பொழுது அதைச் செய்யாதவன் தோல்வியடைகிறான்” “கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இன்று என்ன இல்லை? சாப்ட்வேர் கம்பெனிகள், வெளிநாட்டு வங்கிகள், என்ன இல்லை இங்கே? எல்லாம் இருக்கிறது ஆனால் நமக்கே நமக்கான கலாச்சாரமும், மொழியும் அழிந்து வருகிறது அவ்வளவுதான்

இந்தப்படம் என் நண்பர்களோடான என் உண்மையான நிலைப்பாட்டை ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது. ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், ஆனால் ஆத்மார்த்தமாக?

ஒரே கடல் என்கிற மிகமுக்கியமான திரைப்படைத்தை இயக்கிய ஷ்யாம்பிரசாத்தின் அடுத்த படம். இவரது திரைப்படங்களில் மனித மனதின் நுட்பமான பக்கங்களை பற்றிய ஒரு பார்வையோடே இருக்கும். இந்த படமும் அப்படி மனிதர்களின் மறுபக்கத்தைக் (Grey side of everyone) காட்டக்கூடியதாகவே இருக்கிறது. இந்த படம் சேத்தன் பக்த்தின் ஒன் நைட் @ தி கால் செண்டர் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ நாவலை படிக்கனும். ரொமாண்டிக் இன்ஸ்ட்ரூமெண்ட் எனப்படும் கிடார்தான் இந்த படத்தின் அடிநாதம், பின்னணி இசையில் அதிகம் கிடார்தான். அருமையாக இருக்கிறது. பாடல்களும் அருமை.


                      1. வேணல் காட்டில்.......   
    
                      2. புலருமோ...... என் பால்ய நண்பர்கள் அசோக் மற்றும் ஸ்ரீக்காகவும்  மற்றும் பதின்மங்களில் பழகிய நண்பர்களோடு இன்னமும் நட்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிற, தொடர முடிந்த அனைத்து நண்பர்களுக்காகவும் இந்தப் பதிவு......

27 கருத்துரைகள்:

my few drops said...

1. This movie is shown completely in the view of character Sarat.

2. Movie failed to show a "valid reason & pain" for Rithu & Sunny. why they changed?.

3. Sarat enjoys Rithu in car & after the play, leaves her in life. Which shows SARAT as "I didn't get you as wife, atleast let me have you for a night or does it mean Sarat also becomes a playboy in life after the incident, besides also being a writer?

-----------------------------------
Murli has a Gift of writing skill that very rare people have. His words make the readers to see a movie as described by Murli. Well myself & murli saw the film together, i feel this film to be a perfect "MOKKAI".

So, if there is no work & if there is time that one can't even spend it by sleeping, this film may be watched thinking twice.

அகல்விளக்கு said...

Dreams and seasons...

Just Amazing... :-)

Nagasubramanian said...

வசீகரமான எழுத்து நடை !!!

பாண்டித்துரை said...

முரளி
நல்ல சினமா குறித்த அருமையான பதிவு. படத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன்.
பாண்டித்துரை
சிங்கப்பூர்

சுசி said...

//ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், ஆனால் ஆத்மார்த்தமாக?//

:)))))))

நல்ல பார்வை/பகிர்வு.

முரளிகுமார் பத்மநாபன் said...

@My Few Drops
பிரதீப்,
1. ஆமாம் இது சரத்தின் பார்வையிலேயே அவனது புரிதலகளையுமே சொல்லும் படம்தான்.

2. அவரகள் மாறிவிட்டார்கள், அவ்வளவுதான். ஏன் என்பதெல்லாம் இந்தப்படத்திற்கு தேவையில்லாத விஷயம்.

3. அது கனவு காட்சியாக இருக்கலாம் அல்லது அது சரத்தின் கருப்புப்பக்கத்தைக் காட்ட வைக்கப்பட்ட காட்சியாகவும் இருக்கலாம்.

:-)

உங்க பாராட்டுக்கு நன்றி, இது நீங்கள் சொல்றமாதிரியான படம் இல்லை. சரி விடுங்க ஐந்து விரல்களும் ஒருபோல இருப்பதில்லையே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
யோவ்.. நான் ஏதோ படத்தைப்பத்தி எழுதுறேன், அங்க உண்மையாவே நிறைய ஓடிட்டு இருக்கும்போலயே, இப்போதான் உங்க பதிவையும் படிச்சேன்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@நாகசுப்ரமணியன்
நன்றி நண்பா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பாண்டித்துரை
அவசியம் பாருங்க நண்பா! ஒரு ஃபீல் குட் மூவி. படம் பார்க்கும்போது இருப்பதை விட படம் முடிந்தபின்னர் எழும் உணர்வலைகள் அடங்க நெடும் நேரம் எடுக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
நன்றி மேடம், :-)
தொடர்ந்து படிங்க.....

இளங்கோ said...

லிஸ்ட் போட்டுட்டே போறீங்க.. படம் தான் பார்க்க முடிய மாட்டேங்குது :(
நீங்க சொன்ன படங்களையாவது பாத்துரணும்.

☼ வெயிலான் said...

// 1. வேணல் காட்டில்....... 2. புலருமோ...... //

தமிழ்ப்படமா பாஸ்?
எந்தத் திரையங்கில் திரையிடப்பட்டிருக்கிறது?

ராகவன் said...

அன்பு முரளி!

வெயிலான், இது மலையாளப்படம்.

ஒரே கடல் அளவுக்கு நுன்னுணர்வுகளைச் சொல்லவில்லை... கொஞ்சம் கேரக்டரைசேஷனில் குழப்பங்கள் இருப்பதாய் பட்டது.

சன்னி ஏன் ஓரினச்சேர்க்கை உள்ளவனாய்க் காட்டவேண்டும் என்பது எனக்கு புரியவே இல்லை...ஏன் கூடாது என்றும் கேட்கலாம்... ஆனால் தேவையில்லை... போதுமான அளவு சன்னியின் குணக்கேடுகள் பேசும்போது... ஓரினச்சேர்க்கையும் ஒரு குணக்கேடாய் சொல்வது எனக்கு ஒப்புமை இல்லாத ஒன்று...

இசை நிஜமாகவே அற்புதமாய் இருக்கும்... கிதார்... ஒரு காண்டெம்பரரி கதைக்களனுக்கு பெரிதும் உதவுகிறது.

நல்லா எழுதற முரளி... திரும்பவும் சொல்றேன்... இவ்வளவு சினிமா பாக்குற நீ இன்னும் திறனாய்ந்து எழுத வேண்டும்.

அன்புடன்
ராகவன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
நேரம் கிடைக்கும்போது பாருங்க, இந்த பக்கம் வந்தா காப்பி பண்ணிக்கோங்க... ரைட்டா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
தல உங்க நக்கலுக்கு அளவே இல்லையா?

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்

//வெயிலான், இது மலையாளப்படம்//
அவரு ரவுசு உடுறாரு நீங்க பொறுப்பா பதிலெல்லாம் சொல்லிகிட்டு.... :-)

//போதுமான அளவு சன்னியின் குணக்கேடுகள் பேசும்போது... ஓரினச்சேர்க்கையும் ஒரு குணக்கேடாய் சொல்வது எனக்கு ஒப்புமை இல்லாத ஒன்று...//

பத்தோடு பதினொன்று ராகவன், மார்டன் யுகம் ஓரினச்சேர்க்கையைக் கூட பத்தோடு பதினொன்றாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அது.

//இசை நிஜமாகவே அற்புதமாய் இருக்கும்... கிதார்... ஒரு காண்டெம்பரரி கதைக்களனுக்கு பெரிதும் உதவுகிறது//
உண்மைதான்

//திரும்பவும் சொல்றேன்... இவ்வளவு சினிமா பார்க்குற நீ இன்னும் திறனாய்ந்து எழுத வேண்டும்//
அப்படியில்லை ராகவன், என் மனதை பாதித்த படங்களை பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் மழை நின்ற பொழுதுகளின் பிடியில்தான் இருக்கிறேன்.


அன்புடன்
ராகவன்

shri Prajna said...

"நட்பு "ஜாலியா இருகிறப்பவும் சோகமா இருகிறப்பவும் மனசு நட்பைத்தான் நாடும் ..பள்ளி பருவத்தில் ஒருவிதமான "sweet innocence" வெகுளித்தனமான நட்பு தொடர்ந்தாலும் இல்லாவிட்டாலும் நினைபதற்கு எப்பவும் இனிமையாய் இருக்கும் ...

வாழ்க்கை அதன் போக்கில் நம்மை அறியாமலே இழுத்து செல்லும்போது வேறு பல விஷயங்களில் நாம் பிஸி (படிப்பு பின் வேலை ,திருமணம் etc) ஆகிவிடும்போது நட்புக்கு நாம் கொடுக்கும் importancem குறைந்து விடுகிறது ...எப்போதும் கூடவரும் நட்பு சிலருக்கு வரமாய் வாய்க்கிறது..

"Sarat enjoys Rithu in car & after the play, leaves her in life. Which shows SARAT as "I didn't get you as wife, atleast let me have you for a night or does it mean Sarat also becomes a playboy in life after the incident, besides also being a writer?"

இப்படி விஷயங்கள் செய்து பின் விட்டு போவது நட்புக்கோ வாழ்கைகோ நேர்மையானது அல்ல ..இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் ஒப்புக்கு சப்பையாக உள்ளது ...

சரத் அவனுக்குன்னு சாதகமான வழிகளையே விளக்கி இருக்கிறான் போல் படுகிறது ..

/சன்னி ஏன் ஓரினச்சேர்க்கை உள்ளவனாய்க் காட்டவேண்டும் என்பது எனக்கு புரியவே இல்லை...ஏன் கூடாது என்றும் கேட்கலாம்... ஆனால் தேவையில்லை... போதுமான அளவு சன்னியின் குணக்கேடுகள் பேசும்போது... ஓரினச்சேர்க்கையும் ஒரு குணக்கேடாய் சொல்வது எனக்கு ஒப்புமை இல்லாத ஒன்று.../ ராகவன் சொல்வது சரியென்று படுகிறது

சிப்பிக்குள் முத்து போல், சேற்றில் செந்தாமரை போல் பெற்றவர்களின் நடத்தையில் பாடம் கற்று கொள்பவர்களே அதிகம் ..அதாவது மோசமான பின்புலம் இருந்தாலும் சுயஅறிவே நம் செய்கைகளை தீர்மானிக்கிறது..பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்

கலாச்சாரம் என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை ..சில காட்டுமிரண்டித்தனங்களும் அதில் அடக்கம் என்பதால் ...

"வாழ்க்கையில் மனுஷன் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒரு நேரம் வரும், அப்பொழுது அதைச் செய்யாதவன் தோல்வியடைகிறான்”கண்டிப்பா ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்...

நட்பில் நாலடியார் சொல்வது எனக்கு எப்போது காதில் ஒலிக்கும் ..என் நட்பு வட்டாரங்களில் இதை அடிக்கடி நான் ஞாபகப்படுத்திக் கொள்வேன்

"நெல்லுக்கு உமி உண்டு
நீருக்கு நுரையுண்டு
புல்லிதல் பூவிற்கும் உண்டு "

காலமெல்லாம் நட்பு வாழ்க

ராகவன் said...

அன்பு முரளி,

நான் சொல்ல வந்ததை நீ புரிந்து கொள்ளவில்லை. ஓரினச்சேர்க்கை... ஒரு குணக்கேடு கிடையாது என்பது தான் என் வாதம். ”அதையும் ஏன் சொல்ல வேண்டும்” என்பதில்... அது இயல்பான விஷயமாய் இருக்கிற பட்சத்தில் அதை ஒரு பிறழ்வு போல என்பதில் எனக்கு சரியாகப் படவில்லை.

அப்புறம் அதில் மனக்கூறுகளை ஆராய்ந்து வடிவமைத்தது போல சன்னியின் கேரக்டரையும், வர்ஷாவின் கேரக்டரையும்... இரண்டு வெவ்வேறு விதமான காலங்களாய் (வெயிற்காலம், மழைக்காலம்) என்பது போல காட்டி விட்டு... அதற்கு தேவையான கட்டமைப்புகள் கதையில் இல்லவே இல்லை. இது தான் என் வாதம்... எலக்ட்ரா பற்றி நிறைய பேசுகிறார்கள்... அதையும் பார்த்துவிட்டு... ஷயாமாவின் சினிமாக்கள் பற்றி பொதுவாய் பேசலாம்.

Spring, autumn, summer இந்த காலங்களைத் தான் கதாபாத்திரங்களின் குணத்துடனோ அல்லது அதன் தண்மைகளிலோ காட்டியிருக்க வேண்டும்... அதை படம் முழுக்கச் செய்யவே இல்லை...


அன்புடன்
ராகவன்

இக்பால் செல்வன் said...

நல்லதொரு சினிமா.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ! சிடியைத் தேடிப் பிடித்து பார்த்துவிடுகின்றேன் ........... !!!

கோபிநாத் said...

கண்டிப்பாக பார்த்துடுறேன் ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ப்ரஜ்னா
//.இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் ஒப்புக்கு சப்பையாக உள்ளது
சரத் அவனுக்குன்னு சாதகமான வழிகளையே விளக்கி இருக்கிறான் போல் படுகிறத//

முதலில் இரு விஷயங்களை சொல்கிறேன். ஒன்று அந்த காட்சி கிட்டதட்ட ஒரு கனவு காட்சியாகவே தோன்றுகிறது, அதுவும் வர்ஷாவின் பார்வையிலான கனவு போல...... எனவே கனவாயிருந்தால் சரத் கதாநாயகந்தான்.

ஒருவேளை இல்லை என்றால் இங்கு யாரும் 100 சதவிகிதம் சரியானவர்கள் இல்லை என்பதை சொல்வதான காட்சியாய் இருக்கலாம். ஒரு பொயட்டிக்கான மனநிலையில் இருக்கும் சரத் அதை செய்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது, படம் பாருங்கள் புரியும்.

கலாச்சாரம் பற்றிய உங்கள் கருத்து சரிதான்.. ஆனாலும் வீ ஹேவ் அ கல்ச்சர் இல்லையா.. நாம் அதை கோலம்போடுவதிலிருந்து உணர்ந்துகொள்ளலேமே?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்

அன்பு ராகவன்
ஓரினச்சேர்க்கை என்பதை நான் ஒரு இயல்பை மீறீய விஷயமாகவே, குணக்கேடாகவே பார்க்கிறேன், அதனாலேயே என் கருத்துக்கள் அதன் பக்கம் இருக்கிறது


//அப்புறம் அதில் மனக்கூறுகளை ஆராய்ந்து வடிவமைத்தது போல சன்னியின் கேரக்டரையும், வர்ஷாவின் கேரக்டரையும்... இரண்டு வெவ்வேறு விதமான காலங்களாய் (வெயிற்காலம், மழைக்காலம்) என்பது போல காட்டி விட்டு... அதற்கு தேவையான கட்டமைப்புகள் கதையில் இல்லவே இல்லை.
Spring, autumn, summer இந்த காலங்களைத் தான் கதாபாத்திரங்களின் குணத்துடனோ அல்லது அதன் தண்மைகளிலோ காட்டியிருக்க வேண்டும்... அதை படம் முழுக்கச் செய்யவே இல்லை...//

இதை அந்த நாவலைப்படித்து விட்டுமுடிவு செய்யலாம். ஏன்னா இந்த திரைபடத்தின் கதையில் ஓவ்வொருவருக்கும் நீங்க சொல்கிற மாதிரி குணத்தன்மைகளை சொல்லவே இல்லை. நீங்க சொல்றது சரின்னா, திரைக்கதையின் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது.

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்

அன்பு ராகவன்
ஓரினச்சேர்க்கை என்பதை நான் ஒரு இயல்பை மீறீய விஷயமாகவே, குணக்கேடாகவே பார்க்கிறேன், அதனாலேயே என் கருத்துக்கள் அதன் பக்கம் இருக்கிறது


//அப்புறம் அதில் மனக்கூறுகளை ஆராய்ந்து வடிவமைத்தது போல சன்னியின் கேரக்டரையும், வர்ஷாவின் கேரக்டரையும்... இரண்டு வெவ்வேறு விதமான காலங்களாய் (வெயிற்காலம், மழைக்காலம்) என்பது போல காட்டி விட்டு... அதற்கு தேவையான கட்டமைப்புகள் கதையில் இல்லவே இல்லை.
Spring, autumn, summer இந்த காலங்களைத் தான் கதாபாத்திரங்களின் குணத்துடனோ அல்லது அதன் தண்மைகளிலோ காட்டியிருக்க வேண்டும்... அதை படம் முழுக்கச் செய்யவே இல்லை...//

இதை அந்த நாவலைப்படித்து விட்டுமுடிவு செய்யலாம். ஏன்னா இந்த திரைபடத்தின் கதையில் ஓவ்வொருவருக்கும் நீங்க சொல்கிற மாதிரி குணத்தன்மைகளை சொல்லவே இல்லை. நீங்க சொல்றது சரின்னா, திரைக்கதையின் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது.

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@இக்பால் செல்வன்
நன்றி தலைவரே! அவசியம் பாருங்க, முடிஞ்சா பார்த்துட்டு வந்தும் ஒரு பின்னுட்டம் போடுங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
லிஸ்ட் லிஸ்ட்டே....:-)

Vel Kannan said...

அட்டகாசம் முரளி, மிக நேர்த்தியுடன் பதிவு செய்திருக்கீங்க

செல்வம் said...

முரளி...உங்கள் பதிவு அருமை. நல்ல பதிவுதான் அனைவரையும் யோசிக்கத் தூண்டும்.

ஒரு இடத்தில் மட்டும் உங்களுடன் சற்று கடுமையாக் முரண்படுகிறேன் முரளி....

“ஓரினச்சேர்க்கை என்பதை நான் ஒரு இயல்பை மீறீய விஷயமாகவே, குணக்கேடாகவே பார்க்கிறேன், அதனாலேயே என் கருத்துக்கள் அதன் பக்கம் இருக்கிறது”

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.