நகர்வு, மலைப்பயணம், தேனி


        நகர்வின் முக்கியத்துவம் அனைவருக்குமே தெரிந்ததுதான். தெரிந்தோ தெரியாமலோ மனிதன் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறான். என்ன? இலக்கும் வழிகளும் மட்டுமே  வேறுபடுகின்றன. அப்படி நகர்வின் இன்னுமொரு பரிமாணமாகவேதான் பயணத்தையும் பார்க்கிறேன். எனக்கு பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். முன் அறிமுகமில்லாத மனிதர்களோடு கிடைக்கும் அறிமுகமும், அவர்களின் மொழியும், வட்டார வழக்கும், உணவு முறைகளுமென எல்லாமே புதிது புதிதாக கிடைக்கும், பயணம். ஆனால் பெரும்பாலான பயணங்களில் ஆரம்பிக்கும்போது இருக்கிற ஒரு மகிழ்ச்சி, திரும்பிவரும்பொழுது இல்லாமல் போவது உண்டு. இது என்போன்ற வறண்ட நினைவுகளில் தவிக்கும் மனிதர்களுக்கு நிகழக்கூடும். ஏனெனில் எனது பயணங்கள் அனைத்துமே ஏதோவொரு காரணத்தை பின்னடக்கியே இருக்கிறது. அந்தப் பயணத்தில் எனது காரணம் நிறைவுறும் பொழுது கூடவே மகிழ்ச்சியும் நிறைவு பெறுகிறது. எந்த காரணமும் இல்லாமல், எந்த திட்டமிடலும் இல்லாமல் ஊர் சுற்ற முடியுமா, என்ன? 

ஆனால் ஒரு சில பயணங்கள், அப்படியேதும் இல்லாமல் தற்செயலாக அமைந்து விடுகிறது. சமீபத்தில் நண்பர்களோடு சேர்ந்து தேனியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அது அப்படியான ஒரு பயணம்தான். தீபாவளிக்கு பிறகு எங்குமே போகவில்லையே, எங்காவது போகலாமென்று நண்பர்கள் சொல்ல, அனைவருக்கும் ஊர் சுற்றும் மனநிலை தொற்றிக்கொண்டது. ஆனால் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது, இன்னமும் இங்கு மந்தமான வர்த்தக நிலைமைதான் நிலவுகிறது, ஆக பெரிதாக ஒன்றும் செலவு செய்ய முடியாது, எங்குபோவது என்று தெரியவில்லை, குற்றாலம், கன்யாகுமரி, நாகர்கோவில் இப்படி நிறைய இடங்களை யோசித்தோம். அல்லது கேரளாவிலுள்ள கெவி பற்றி கேள்விப்பட்டதில் அங்கே செல்ல வழிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது, வழி நெடுக காடுகள் தென்பட்டது. சரி வித்தியாசமாக இருக்கட்டுமென தேனியும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் செல்ல முடிவெடுத்தோம். இது எனக்கும் அசோக்கிற்கும் மட்டுமே தெரியும். மற்ற ஆறு பேருக்கும் எங்கு செல்கிறோம் என்பது தெரியாமலேயே வந்தனர். இரவு 12 மணிக்கு கிளம்பி காலை 5 மணிக்கு தேனி வந்துவிட்டோம். தேநீர் அருந்த நண்பர்களை இறக்கினோம், அப்போதுதான் கவனித்தார்கள். என்னடா! கன்யாகுமரின்னுட்டு தேனியில வந்து நிக்கிறீங்கன்னு...

ஆறு மணிக்கெல்லாம் சுருளி அருவிக்கு வந்துவிட்டோம். நீர்வரத்து குறைவுதான் என்றாலும் நல்ல கூட்டம். நமக்கான பிரத்யேக இடங்களை அடைவதன் மூலம் சுதந்திரமாக குளிக்கலாமென, வெகுஜனங்கள் குளிக்கும் இடைத்தையும் தாண்டி மேலே சென்றோம். அருமையான குளியல். அவ்வளவு காலையில் அருவியில் குளித்தது, அற்புதமாயிருந்தது. பிறகு அங்கிருந்து குமுளி, தேக்கடி சென்றோம். தேக்கடி ஏரியில் படகுசவாரி செய்ய விருப்பமில்லை எனவே சிலமணிநேரங்கள் சுற்றித்திரிந்துவிட்டு கிளம்பினோம். எங்கு பார்த்தாலும் குடும்பம் குடும்பமாய் மக்கள், கோடை விடுமுறையின் விளைவு. குழந்தைகள், இளம்பெண்கள் இவர்களோடு கூடிய குடும்பங்களை எவ்வளவு பார்த்துக்கொண்டிருந்தாலும் தகும். திரும்ப மனமில்லாமல் திரும்பினோம்.


திரும்பி வரும் வழி நெடுக திராட்சை தோட்டமும், பாவக்காய் தோட்டமும்தான். எனக்கு A good year படம் பார்த்ததிலிருந்தே திராட்சைத்தோட்டங்களில் உலாவ வேண்டும், ஒயின் தயாரிக்கும் இடங்களைப்பார்க்க வேண்டும் என்பது அதீதமான ஆசையாகவே இருந்தது. அது இப்போது நிறைவேறியது கூடிய சீக்கிரம் ஒயின்ஃபாக்டரிகளுக்கும் செல்லவேண்டும். முத்தரசு என்கிற பெரியவர், தோட்டம் முழுவதும் சுற்றிக்காண்பித்தார். பயிரிடுவது முதல், கொடிகட்டி மரமாக வளர்த்து, மருந்திட்டு அறுவடை செய்யும் வரை விபரமாக சொன்னார். பறவைகள், ஓணான் முதலிய சிறு விலங்குகள், அதுபோக நோய் தாக்காமல் இருக்க வேண்டும். உண்மையில் திராட்சை பழங்களை காக்க அவர்கள் நிறைய பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கு இரண்டு முறை காய்க்குமாம், பன்னீர் திராட்சைகள். போட்டோக்கள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். ஐந்து கிலோ திராட்சை,ரூ.100/- வாங்க்கிக்கொண்டிருந்தபோது,  “விவசாயம் போல ஒரு கடினமான தொழில் இருக்க முடியாது, எல்லாம் நல்லா போயிட்டிருக்கும்போது ஒரு மழையோ, காத்தோ எல்லாத்தையும் காலி பண்ணிடும், இல்லையா என்றேன் நண்பனிடம். அப்போ அந்தம்மா “தம்பி என் கையில் சக்கரை இல்லை, இருந்தா உன் வாயில் போட்டிருப்பேன்என்றார்கள். எனக்கு அவர்களின் அந்த பதில், அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லியது.

இரவிலிருந்தே விழித்திருந்ததில், அனைவருக்குமே ஓய்வு தேவையானதாயிருந்தது. கம்பத்தில் ஒரு நல்ல (RR Hotel) ஓட்டல் இருப்பதை அறிந்து அங்கேயே தங்க முடிவு செய்தோம். உண்மையிலேயே நல்ல ஓட்டல்தான். அருகிலேயே நல்ல சுவையான உணவு விடுதிகளோடு அமையப்பெற்றிருந்தது, கூடுதல் சிறப்பு. மக்கள் மிகவும் மரியாதையாக பழகுகின்றனர். கேட்டுக்கேட்டு பரிமாறுகின்றனர். அருமையான உபசரிப்பு. குறைந்தவிலையில் நல்ல தரமான சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு காலை வரை நல்ல தூக்கம். ஒருவழியா அனைவரையும் கிளப்பிக்கொண்டு புறப்பட காலை 11 மணியாகிவிட்டது. நேராக மேகமலைக்கும், பிறகு கும்பக்கரைக்கும் சென்றுவிட்டு திரும்புவதுதான் யோசனை.

மேகமலை, ஏலக்காய் தோட்டங்கள், எஸ்ட்டேட்டுகள் நிறைந்த ஒரு மலை. ஆனால் உள்ளூர்வாசிகளே மேகமலை பற்றி பலவிதமான கருத்துக்களை சொன்னது குழப்பமாக இருந்தது. மேலே போகவே 5 மணி நேரம் ஆகும் என்று சிலரும், ஒரு மணி நேரம் ஆகுமென சிலரும் சொல்ல, சரி போய்ப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம். ஆனால் வழி மிகவும் மோசமாக இருந்தது. மிக மோசமான வளைவுகளைக் கொண்ட உயரமான மலை என்று பலரும் எச்சரித்தனர். சரி இவ்வளவு சிரமப்பட்டு போய், அங்கு ரசிக்கும்படியான விசயங்கள் எதுவும் இல்லை என்றால் அடுத்த திட்டமும் சேர்ந்து பாழாகுமே என்று நண்பர்கள் சொல்ல, பாதியிலேயே திரும்பி விட்டோம். வருகிற வழியில் இங்கு சிவபானம் கிடைக்கும் என்று ஒருவன் திரியை கிள்ளிப்போட, பற்றிக்கொண்டது. அங்கும் இங்கும் வழிகேட்டு ஒரு முப்பது கிலோமீட்டராவது அலைந்திருப்போம். எங்கும் கிடைக்கவில்லை. அதை வாங்க வேண்டுமென்றால் ஒரு முகலட்சணம் வேண்டும் என்று உள்ளூர்வாசி ஒருவர் சொன்னார். சரி இனி அந்த முகத்துக்கு எங்கே போவது என்று ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டோம்.

திரும்பி வரும் வழியில் சாப்பிட வசதியாக ஒரு இடத்தைத் தேடிப்பிடித்தோம். அருமையான இடம் மூன்று புறமும் பச்சை பசேலென வயல்கள், இன்னொருபுறம் ஆறு. தி ட்ரீ படத்தில் வருவதுபோல ஒரு மிகப்பெரிய மரம். என்ன மரம் என்று தெரியவில்லை, மரத்திற்கு மாறாக பூக்கள், அவ்வளவு சிறிது, சிறிதாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு இந்த மரத்தடியில்தான் வெகுநேரம் படுத்திருந்தோம்.

அடுத்ததாக கும்பக்கரை. சரியாக இருபத்தியோரு வருடங்கள் முன்பு இங்கு வந்திருக்கிறேன். தேனியில் இருக்கும் மாமா வீட்டிற்கு. அப்போதெல்லாம் அவர் விடியற்காலையில் எழுப்பி ஆற்றில் குளிக்க அழைத்துச் செல்வார். வரும்போது நெற்றி நிறைய விபூதியை பூசிவிட்டு, கையில் சுருதி பெட்டியை கொடுத்து, வழி நெடுக திருவாசகம் பாடிக்கொண்டே வருவார். என்னுடைய பழைய நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டே வந்தேன். கும்பக்கரை செல்லும் வழி நெடுக மாமரங்கள்தான். காரிலிருந்து கையை நீட்டினால் ஒன்றிரண்டு காயாவது சிக்கும், (நான் கையை  நீட்டியபொழுது இரண்டுதான் கிடைத்தது) அந்த அளவிற்கு கொத்துக்கொத்தாய் இருபுறமும் மாம்பழங்கள் மற்றும் எலுமிச்சை மரங்கள். இங்கும் ஓரளவிற்கு கூட்டம் இருக்கவே செய்தது, ஆனால் கும்பக்கரையை பொறுத்தவரை முற்றிலும் பராமரிப்பற்றுக் கிடக்கிறது. வழி நெடுக பாட்டில்கள், செருப்பில்லாமல் மலை ஏற முயன்றாலோ, ஆற்றிலோ அருவியிலோ குளிக்க முயன்றாலோ, சர்வ நிச்சயமாக கால்கள் பதமாவது உறுதி. இருந்தும் ஆறு ஓடும் ஊரில் வாழ்பவர்கள் வரம் வாங்கியவர்கள். குளித்தால் அசதி நீங்கி புத்துணர்ச்சியோடு இருக்கலாம் என்று சொல்வார்கள் ஆனால் இரண்டு நாட்களாய் குளித்து குளித்தே அசதியானோம். அவ்வளவு நீர்நிலைகள். அருவி, ஆறு, குட்டை, குளம், ஏரி, வாய்க்கால், ஓடை என எல்லா வடிவங்களிலும் நீர். உபயம் வைகை ஆறு. நல்ல சுவையான தண்ணீர். 

இந்த ஒட்டுமொத்த ஊர் சுற்றலுக்குமாய் சேர்த்து, இன்னுமொரு ரசனையான அனுபவம். கும்பகரையில் மலையேறும்போது ஒரு தேவதையைப் பார்த்தேன். அவள் குளித்துவிட்டு ஈரத்தலைமுடியுடன் கீழே இறங்குகிறாள். என்னால் இரண்டு பதிவுகள் எழுதும் வரை அவளை வர்ணிக்க முடியும், இருந்தாலும் தேவதையை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன். நாங்கள் பார்த்தோம், பார்த்துக்கொண்டிருந்தோம். அவளை பார்க்கிறோம் என்றதும், மெல்ல எட்டிப்பார்க்கும் கர்வத்தோடு ஒரு சிரிப்பு சிரித்தாள். நண்பர்கள் ஊர் வந்துடுச்சுடான்னு எழுப்பிவிட்டபோதுதான் சுயநினைவிற்கே வந்தேன்.ஊப்ஸ்...... :-)

31 கருத்துரைகள்:

கோபிநாத் said...

தூள் தல ;)தேவதையை பத்தி கொளுத்திட்டு இப்படி ஊப்ஸ் போட்டா எப்படி தல !?

புதுகை.அப்துல்லா said...

சிரமம் பார்க்காமல் மேகமலை மேலே சென்றிருக்க வேண்டும். தவறவிட்டு விட்டீர்கள் :((

உலக சினிமா ரசிகன் said...

நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு நானும் போய் பத்து வருடம் ஆகிறது.உங்கள் பதிவின் மூலம் ஒரு தற்காலிகப்பயணம் போய் வந்தேன்.நன்றி.

தமிழ் பிரியன் said...

///ஆறு ஓடும் ஊரில் வாழ்பவர்கள் வரம் வாங்கியவர்கள். ////
ஹைய்யா... எங்க ஊரு.. தாங்க்ஸ்.

ஆதவா said...

இந்தமாதிரி ரசனைமிகுந்த பயணங்களை விவரமாகப் போடுங்கள் பாஸு. ஒருபக்க கட்டுரை மாதிரி சுருக்கமாக முடித்துவிட்டீர்கள். நான் ஆவலோடு எதிர்பார்த்தேன்... (மறக்காமல் வழி, ஊர் ஆகியவை குறித்து மெயில் அனுப்பவும்.)

உங்கள் நிலைமைதான் நானும். வெகுசில சமயங்களில் பயணம் பிடிக்கும் பொழுது கிளம்பிவிடுவதுண்டு. அடுத்த வாரம் எங்காவது போகலாம் என்றிருக்கிறேன்.

☼ வெயிலான் said...

வன தேவதையா பாஸ்?

மேகமலை போவதைப் பற்றி, என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். மேகமலையை அப்து அண்ணன் சொன்ன மாதிரி நீங்க தவற விட்டிருக்கக் கூடாது.

பேரரசன் said...

இம் என்சாய்,,! முரளி ,,,! :))

கும்க்கி said...

அசோக்கும் கூட வந்திருந்தாரா....


அசோஷியேஷன் மீட்டிங்கிற்காக தேனி போயிருந்தேன் முரளி கடந்த டிசம்பரில்.

இங்கிருந்தே செல்ப் ட்ரைவிங்..

ஆனாலும் மேகமலை தவிர்த்து கும்பக்கரை, சனீஸ்வரர் கோவில், அப்புறம் சுருளி பால்ஸ், கோட்டைப்புறத்து கருப்பண்ணசாமி கோவில்(வருச நாடு பக்கம்) எல்லாம் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம்.

அற்புதமான இடங்கள்...

ஆனால் வனதேவதைதான் கண்ணுக்கே படவில்லை...அதற்க்கும் அதிர்ஷ்டம் வேனும் போல...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
என் பார்வைக்கு அவ தேவதை, டிஸ்க்ரைப் பண்ணிட்டேன்னா ஒருவேளை படிக்கிறவங்களுக்கு பிடிக்காம போயிடுமோன்னு, அவங்க கணிப்புக்கே விட்டுட்டேன்.... :-)
ரைட்டா கோபி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்துண்ணா
உண்மைதான் நிறைய பேர் அதையேதான் சொல்கிறார்கள். விடுங்க அடுத்தமுறை பாத்திடவேண்டியதுதான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலகசினிமா ரசிகன்
பாஸ், அப்படியே என் தேவைகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@தமிழ்ப்ரியன்
தேனியா பாஸ்.....
சூப்பரு. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
ம்ம் கண்டிப்பா இப்ப இருக்கிற நிலைமைக்கும் எங்கயாவது போயிட்டு வந்த கொஞ்சம் பிரஷ்ஷா இருக்கும். போயிட்டுவாங்க..

கண்டிப்பா மெயில் பண்றேன், ஆதவா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
ஆமா தல, முதலில் அங்க போற ஐடியா இல்லை, அங்க இருக்கிற மக்கள் ரொம்ப சொன்னாங்க பார்க்க சொல்லி... வாங்க போயிடலாம்:-)

தேவதை செம்ம பாஸ்..... ;-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பேரரசன்
உங்க வீட்டு ஜாய் எங்க வீட்டு ஜாய் இல்ல என்ஜாய் :-))

இளங்கோ said...

//நண்பர்கள் ஊர் வந்துடுச்சுடான்னு எழுப்பிவிட்டபோதுதான் சுயநினைவிற்கே வந்தேன்.ஊப்ஸ்.....//

ஊப்ஸ்... :)

தமிழ்பாலா said...

அன்புத் தோழரே ! உமது பயணங்களுக்கு எனது வாழ்த்துக்கள் !ஆயிரம் ஆண்டுகளாக இந்த காடு எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கின்றது என்ன, மனிதன் கைபட்டு கொஞ்சம் முன்னேற்றத்தில் அவ்வளவே!
ஆனால்,இயற்கை பிரிவின்றி வேறுபாடின்றி மதமின்றி,சாதியின்றி,இனமின்றி,மொழி
இன்றி,ஒரு சமத்துவத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கையில் மனிதன் மட்டும் சாதி,மத,இன,மொழி, நாட்டால் பிரிந்துக் கிடக்கின்றான் அதையும் தாங்கள் சமூக முன்னேற்றத்திற்கான தளத்தில் எழுதி மக்களுக்கு சொன்னால் நலம்,உங்கள் நலம் அறிய ஆவல்
அன்புடன் ,
தமிழ்பாலா----

Kutti said...

முரளி நண்பா.. மேகமலை சென்று பாதியில் திரும்பியதற்கு வருந்துகிறேன்..
அங்கு 7 எஸ்டேட் உள்ளன.. ரோடுகள் தான் மிக மோசமே தவிர ரசிக்க கூடிய
இடங்கள் மிக அதிகம். அந்த இடங்கள் பற்றி நன்றாக அறிந்தவன் நான்..
http://www.stayhomz.com/megamalai_anamalai.htm
http://en.wikipedia.org/wiki/Meghamalai

Kutti said...

முரளி நண்பா.. மேகமலை சென்று பாதியில் திரும்பியதற்கு வருந்துகிறேன்..
அங்கு 7 எஸ்டேட் உள்ளன.. ரோடுகள் தான் மிக மோசமே தவிர ரசிக்க கூடிய
இடங்கள் மிக அதிகம். அந்த இடங்கள் பற்றி நன்றாக அறிந்தவன் நான்.. அந்த இடங்களை பற்றிய வலைத்தளம்:
http://www.stayhomz.com/megamalai_anamalai.htm

http://en.wikipedia.org/wiki/Meghamalai

Kutti said...

http://wikimapia.org/15043707/Highwavys-main-dam

க.பாலாசி said...

அட... நீர் கொடுத்துவைத்தவரய்யா.. திராட்சைமட்டும்தான் இனிப்பு நண்பா.. சுவாரசியம்.. இந்த பயணம்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர் முரளி!

ஆதவா சொன்னதுபோல நிறைய விவரங்கள் சேருங்கள், மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்!

அந்த மரம்,

ஈரக்கூந்தல் தேவதைஊப்ஸ்! :))

அன்புடன் அருணா said...

/எனக்கு பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். /
அட! எனக்கும்!
/என்னால் இரண்டு பதிவுகள் எழுதும் வரை அவளை வர்ணிக்க முடியும்/
எங்களாலும் படிக்க முடியும்!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@கும்க்கி
//அசோக்கும் கூட வந்திருந்தாரா....//
ஆமாண்ணே மனசாட்சி இல்லாமாலா?

//ஆனால் வனதேவதைதான் கண்ணுக்கே படவில்லை...அதற்க்கும் அதிர்ஷ்டம் வேனும் போல//

அது என்னவோ வாஸ்த்தவந்தான்... என்னோட அதிர்ஷ்டம், என்கூட வந்த எல்லா பயபுள்ளைகளுக்கும் வனதேவதை காட்சியளித்துவிட்டாள்... :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
நண்பா, ஒரு வருஷம் முன்னாடி உங்களுக்கு போட்ட பின்னூட்டத்தை நியாபகப்படுத்தியதற்கு நன்றி.... திராட்சை தோட்டம். குட் இயர்.... :-)
லவ்லி..:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@தமிழ்பாலா
நன்றி நண்பரே! உங்களுடைய அறிவுரை சார்ந்த பின்னூட்டத்திற்கு.
//அதையும் தாங்கள் சமூக முன்னேற்றத்திற்கான தளத்தில் எழுதி மக்களுக்கு சொன்னால் நலம்//
முதலில் அப்படி நான் இருக்க முயற்சிக்கிறேன். என்னால் முடிந்துவிடுகிற பட்சத்தில் அதை என்னால் மற்றவர்களுக்கும் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அக்கறையான் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@குட்டி
ஹாய் முனிஷ். நீதானாய்யா இது.... ரைட்டு. அடுத்தமுறை மேகமலை போறப்போ உம்ம வீட்லதான் கறிசோறு நியாபகத்தில் வைத்துக்கொள்ளும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@க.பாலாசி
ஆமா நண்பா! திராட்சை மட்டும்தான் இனிப்பு.... :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷங்கர்
பாஸ் செளக்கியமா? ரொம்ப நாளைக்கு பிறகு வறீங்க.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
/என்னால் இரண்டு பதிவுகள் எழுதும் வரை அவளை வர்ணிக்க முடியும்/
எங்களாலும் படிக்க முடியும்!!!//

ஹாஹா.... என் பார்வைக்கு அவ தேவதை, டிஸ்க்ரைப் பண்ணிட்டேன்னா ஒருவேளை படிக்கிறவங்களுக்கு பிடிக்காம போயிடுமோன்னு, அவங்க கணிப்புக்கே விட்டுட்டேன்.... :-)

குணசேகரன்... said...

படம் சூப்பர்...பதிவும் சூப்பர்...

http://zenguna.blogspot.com

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.