தொலைந்து போனவனின் வாழ்க்கை


I NOW WALK, INTO THE WILD


தேனி பயணத்தின் போது நாங்கள் பயணம் செய்த காரில் ஆடியோ  சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை. பயணங்களின் போது நீளும் இரவுகளுக்கு இசையைப் போல உற்ற தோழன் இருக்கவே முடியாது. நண்பனுடைய (கார்பன்) மொபைல் போனிலிருந்து பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அதில் ஒரு பாடல் திரும்ப திரும்ப அனைவராலும் கேட்கப்பட்டது. அது கற்றது தமிழ் படத்தில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய்? பறக்கவே என்னை அழைக்கிறாய்" என்ற பாடல். இந்த பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் மனம் ஒரு மிகுந்த தடுமாற்றத்திற்கு வரும். மனதில் அடுக்குகளிலிருந்து நினைவுகள்  முன்னும் பின்னுமாய் மோதிக்கொண்டிருக்கும். பாடலைக் கேட்கும்போதே வீடு போய் சேர்ந்ததும் படத்தை மறுபடியும் ஒருமுறை பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன். பார்த்தேன் ஆனால் விஷயம் அதுவல்ல. ஏதாவது ஒரு பயணக்கட்டுரையை படிக்கும்போதோ அல்லது இந்த படத்தை பார்க்கும்போழுதோ உடனடியாக என் மனதில் தோன்றும் இன்னொரு படம்தான் இன் டு தி வைல்ட்.

            நியூயார்க் நகரத்தின் தினசரிகளில் பத்திகளில் எழுதிக்கொண்டிருந்த ஜோன் க்ரகையருக்கு, கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸ் என்ற இளைஞனின் பயணத்தைப்பற்றி எழுதிய தொடருக்கு பலத்த வரவேற்பு கிடைக்கவே அதை ஒரு புத்தகமாக எழுதினார். அந்த புத்தகமும் நியூயார்க் டைம்ஸில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் பெஸ்ட் செல்லராக இருந்தது. அதுதான் INTO THE WILD, 1996 ஆம் வருடம் வெளிவந்த இந்த நாவலை அடிப்படையாக கொண்டு 2007ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. நடிகர். சீன் பென் (ஐயாம் சாமின் ஒரிஜினல் தெய்வத்திருமகன்) இயக்கியிருக்கிறார். இவர் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக இந்த நாவலை பலமுறை வாசித்து, சிலாகித்து பிறகே அதை இயக்க திரைப்படமாக எடுக்க முயன்றிருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்படி ஒரு அருமையான நாவலுக்கும், வெற்றிபெற்ற சினிமாவிற்கும் மூலமாய் விளங்கிய கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸ் யார்?

இயக்குனர் சீன்பென்னும், நாவலாசிரியர் க்ரகையரும் மேஜிக் பஸ்ஸின்முன்பு


என்னுடைய பள்ளிப்படிப்பு முடிக்கும் பொழுது அடுத்தது என்னவாக ஆகவேண்டும் என்று எனக்கே தெரியாது, அப்பா ஆசைப்பட்டபடி மெரைன் இஞ்சினியரிங் படிக்கணும் என அப்பாவைபோலவே ஆசைப்பட்டேன். ஆனால் இன்று அப்படியில்லை, மாணவர்களுக்கு,  அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து ஒரு நல்ல பார்வை இருப்பதாகவே படுகிறது. மேலை நாடுகளில் அப்படியல்ல நாற்பது வருடங்களுக்கு முன்பிலிருந்தே அவரவர் விருப்பபடி மேல்படிப்பை தேர்வு செய்து வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கல்லூரி முடிந்ததும் அவர்கள் தனித்தனியாக வாழவும் தொடங்கி விடுகின்றனர். இது அப்படிப்பட்ட ஒரு மாணவனின் கதை. என் வாழ்கை இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவனின் வாழ்க்கை.  அவன்தான் கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸ்.

 மனிதனின் எந்த உறவுகளும் எதன் பொருட்டாவது இன்னொருவரை சார்ந்து வாழ்வதுதான் நமது சமூக அமைப்பு.    அதன் இன்னொரு படியாக இந்த சார்பு நிலையே திரிந்து தேவையாகிப்போவதும், தேவையின் பொருட்டே உறவுகள் வளர்வதுமாய் இருக்கும் இந்த சமுதாய நிலையையே வெறுக்கும் ஒரு இளைஞன். கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸ், ஒரு பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த 23 வயது இளைஞன். முதல் வகுப்பில் சட்டம் முடித்த அவனுக்கு அவனது பெற்றோர் ஒரு காரை பரிசளிக்கின்றனர். அதை மறுக்கும் அவனது உரையாடல் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் புரிதல் இல்லாமையை காட்டுகிறது. மேலும் மேல்படிப்பை தொடரச் சொல்லும் பெற்றோரின் முடிவிலும் அவனுக்கு உடன்பாடு இல்லை. இதுபோல அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் இடையே நிலவும் தவறான புரிதல்கள், பொருள் சார்ந்த இந்த உலகத்தின் மீதான அவனது வெறுப்பு, எதன் பொருட்டாவது இன்னொருவரை சார்ந்து வாழும் இந்த சமூக அமைப்பின் மீதான வெறுப்பு என்பதையும் தாண்டி எதன்மீதும் அதீத பற்றற்றிருப்பது அவனது குணம்.

ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை அவனுக்கு பிடித்தமானதாகவும் இல்லை. மாறாக தீவிர இலக்கியங்களின் மீதான அவனது ஆர்வமாயிருக்கிறான். இலக்கற்ற பயணமும் சாகசப் பயணங்களும் அவனுக்குப் பிடித்தமானதாயிருக்கிறது. இந்த மனநிலை அவனை ஒரு சாகசப்பயணத்தை துவக்கச் செய்கிறது. வெறுமனவே சுற்றுலா செல்வது போல அல்ல அவனது பயணம். அமெரிக்காவின் பிரஜை என்பதற்கான அத்தாட்சி, தன்னுடைய கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம், என தன்னை கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸாக அடையாளப்படுத்தும் ஒவ்வொன்றையும் அழித்துவிட்டு கிளம்புகிறான். கல்லூரிப்படிப்பின்போது ஸ்காலர்ஷிப்பில் கிடைத்த மொத்த பணத்தையும் ட்ரஸ்டிற்கு எழுதிவைத்துவிட்டு மிச்சமிருக்கும் ஒரு சில டாலர்களையும் கூட எரித்துவிட்டு கிளம்புகிறான். புத்தகங்களும் பிரத்தேயக உடைகளுமே அவனுடைய பையில் இருக்கிறது. தன் பெயரைக்கூட அலெக்ஸாண்டர் சூப்பர்ஸ்டாப்ம் என மாற்றிக்கொண்டு பயணிக்கிறான்.

மனிதர்களே இல்லாத அலாஸ்கா காடுதான் அவனுடைய இலக்கு, தெரிந்தே அங்கு தன்னைத் தொலைத்துக்கொள்ள விரும்பி செல்கிறான். அலாஸ்காவை நோக்கி ஒரு வழிப்போக்கனாக, ஒரு நாடோடியைப்போல நகர்ந்து கொண்டேயிருக்கிறான். இந்தப் பயணத்தின் ஊடாக அவன் சந்திக்கும் மனிதர்கள் அவர்களோடு இவனது அனுபவங்களுமே இந்தத் திரைப்படம். நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் சில சமாதானங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால் இந்த திரைப்படமே ஒரு நாவலைப்போலவே அதித்யாயங்களாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறுவதுதான் முதல் அதித்யாயம் பிறகு இன்று புதிதாய் பிறந்தேன் என்று அடுத்த அதித்யாயம். இப்படியாக செல்கிறது படம்.

 வழியில் ஒரு வயதான் ஹிப்பி ஜோடியை சந்திக்கிறான். அவர்களோடு சில  நாட்கள் தங்குகிறான். அந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு பிணக்கை இருவரிடமும் தனித்தனியாக பேசுவதன் மூலம் சரிசெய்கிறான். இரவு உறங்கும் பொழுது என்றும் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு சேர்ந்திருக்க கடவுளைப் பிராத்திக்கிறேன் என கடற்கரை மணலில் குறிப்பெழுதி வைத்துவிட்டு, தன் பயணத்தைத் தொடர்கிறான். அடுத்த்தாக மிகப்பெரிய கோதுமை வயலை அடைகிறான். (இந்த காட்சிகளைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒட்டகக்கண் என்ற நாவல் நினைவிற்கு வருகிறது, அதை தனிப்பதிவாக எழுதுகிறேன்) அங்கு பணிபுரியும் நண்பர்களோடு நட்போடு பழகுகிறான். அவர்களோடு சேர்ந்து பணியாற்றுகிறான். அதிலும் குறிப்பாக ஒருவரிடம் நெருங்கிப்பழகும் அவன் தன்னுடைய பயணம் குறித்து சொல்கிறான். அவர் “நீ சின்னப்பையன், நீ இன்னும் வாழத்தொடங்கவேயில்லை என்கிறார். அவனும் அதையே சொல்கிறான், “ஆம் நான் இன்னும் வாழ்த்தொடங்கவேயில்லை, அலாஸ்காவின் காடுகளில் தான் அதை ஆரம்ப்பிக்க இருக்கிறேன்என திடமாய் சொல்கிறான்.

அங்கிருந்தும் கிளம்புகிறான், தனது பயணத்தின் அடுத்த சாகசமாக மிகப்பெரிய காற்றாற்றினூடாக பயணிக்கிறான். வழியில் ஒரு காதலர்களையும் சில மலையேறுபவர்களையும் சந்திக்கிறான். அவர்களோடு உணவருந்தி விட்டு தன்னுடைய சிறு போட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நடக்கிறான்.  அலாஸ்காவிற்கு முன்னூறு மைல்கள் தொலைவில் இருக்கிறான். அங்கிருந்து ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் திருட்டுத்தனமாக பயணித்து அருகிலிருக்கும் நகரத்தை அடைகிறான்,  அங்கு ஒரு வயதான மனிதருடன் பழக்கம் ஏற்படுகிறது. இவன் வயதில் அவனுக்கு ஒரு பேரன் இருக்கிறான். ஆனால் அவர்கள் அருகில் இல்லை, அவர் தனிமையில் இருக்கிறார். எனவே இவனோடு மிகுந்த வாஞ்சையோடு பழகுகிறார். அவர், அவம் மீது இருக்கும் பாசம் காரணமாய் அவனை தொடர்ந்து சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் இந்தப்பயணம் அவன் விரும்பி ஏற்றுக்கொண்டது என்பதை புரியும்பொழுது அவரே அவனை அலாஸ்கா காடுகளின் எல்லையில் விட்டுச்செல்கிறார்.

அலாஸ்காவின் காடுகளில், கடுமையான பனிக்காலத்தில், மலைகள், ஆறுகள், என தொடர்ந்து நடக்கிறான். இறுதியாய் மலைக்காடுகளின் இடையே ஓரு பழைய பஸ்ஸை கண்டடைகிறான். அந்த பஸ்ஸிற்கு மேஜிக் பஸ் என்று பெயர் வைக்கிறான், உண்மையிலேயே அது ஒரு மேஜிக் பஸ்தான். உள்ளேயே, சமையல், படுக்கை என வசதிகள் கொண்ட ஹிப்பிகளின் வண்டிபோல இருக்கிறது. தொடர்ந்து பனிக்காலத்தில் பயணிக்க முடியாது என்பதால் அங்கு சில வாரங்கள் தங்கிவிட்டு, பனிக்காலம் முடிந்ததும் திரும்ப தனது பயணத்தைத் தொடர நினைக்கிறான். ஆனால்  பனிக்காலம் முடிந்து பனியெயெல்லாம் உருகி, அவன் இருக்கும் இடத்தைச் சுற்றி பெரும்வெள்ளக்காடாக மாறுகிறது. எனவே பயணத்தைத் தொடர முடியாத நிலை. உணவின் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நிலையில்  உணவு முற்றிலுமாக தீர்ந்து போய் தன்னிடம் இருக்கும் புத்தகத்தின் உதவியோடு காட்டில் கிடைக்கும் எந்தெந்த செடிகொடிகள் சாப்பிட உகந்தவை, என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் தனது உணவுத்தேவையை சமாளிக்கிறான். ஒரு கட்டத்தில் தவறுதலாக ஒரு விஷச்செடியை தின்றுவிடுகிறான். அது அவனை ஒருநாளில் கடுமையான உபாதைகளைக் கொடுத்து கொல்கிறது. அதே மேஜிக் பஸ்ஸில் அவன் உயிர் பிரிகிறது.

            கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸின் நினைவாக என்று வரிகளோடு படம் நிறைவு பெறுகிறது. இவர்தான் அந்த உண்மையான கிரிஸ்டோபர் மெக்கண்டல்ஸ். இவரது பையில் கிடைத்த கேமிராவில் டெலவலப் செய்யப்படாத நிலையில் இருந்த அவரது செல்ப் போர்ட்ரெய்ட் இது.


எமிலி ஹிரிச் என்ற ஹாலிவுட் நடிகர் , மெக்கண்டல்ஸாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாயிருக்கும். படத்தில் இவர் பயணம் செய்யத் துவங்கியதாக சொல்லப்படும் இடத்திலிருந்து  மனுஷன் இளைத்துக்கொண்டே போகிறார். அதுவும் மேஜிக் பஸ்ஸில் உணவின்றி தவிக்கும் பொழுதுகளில் அநியாயத்திற்கும் மெலிந்து போகிறார். இவரது இந்த ஈடுபாடே சீன் பென்னின் அடுத்த இயக்கத்திலும் (MILK)  இவரை நடிக்க வைத்திருக்கிறது. அவர் ஈடுபாட்டை புரிந்து கொள்ளமுடிகிறது. படத்தில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் இசை. இதனை என்னால் இப்படித்தான் சொல்லமுடியும் “It's Awesome" 

 தான் சாப்பிட்டது விஷச்செடி என்பதை அறிந்ததும் கதறி கதறி அழும் பொழுது அவன் தனது வாழ்க்கையை எவ்வளவு நேசித்திருக்கிறான் என்பது புரியும். எத்துனை மனிதர்களுக்கு இது சாத்தியம் என்பது தெரியாது. ஆனால் மெக்கண்டல்ஸ் அதை செய்திருக்கிறான். எண்ணம்போன்ற வாழ்க்கையை வாழ மிகவும் சிரப்படுகிறான். ஒரு கைப்பை அரிசியுடன் 113 நாட்கள் அந்த பஸ்ஸிலேயே வாழ்ந்திருக்கிறான். விஷத்தின் பாதிப்பு அவனுக்கு கடுமையான வலியைக் கொடுக்கிறது. எப்படியாவது தன்னை யாராவது வழிப்போக்கர்கள் காப்பாற்றி விடமாட்டார்களா? என தவித்து “நான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். சாவில் விளிம்பில் இருப்பதை உணர்கிறேன். இது நிச்சயம் விளையாட்டல்ல, கடவுளின் கருணையால் யாரவது என்னைக்காப்பாற்றுங்கள்என எலக்ட்ரானிக் செய்தியைக்கூட பதிவு செய்கிறார். ஆனால் அவர் இறந்து இரண்டு வாரங்கள் கழித்தே அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மையான அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் பகிர்ந்து கொளவதிலேயே இருக்கிறது என்பதை வலியோடு உணர்த்துகிறது, படம். இது சர்வ நிச்சயமாக ஒரு படம் மட்டுமல்ல என்பதை பார்த்தால் மட்டுமே உணர முடியும். 

18 கருத்துரைகள்:

asker said...

சிறந்த உலக சினிமா திரைப்படங்களுக்கு தொடர்பு கொள்க
http://moviesnow69.blogspot.com/

asker said...

சிறந்த உலக சினிமா திரைப்படங்களுக்கு தொடர்பு கொள்க http://moviesnow69.blogspot.com/

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எனது விருப்ப படங்களில் ஒன்று..பகிர்வுக்கு நன்றி

கோபிநாத் said...

நோட் பண்ணிக்கிட்டேன் - இந்த வாரம் முடிச்சிடுவோம் ;)

சுசி said...

நல்ல விமர்சனம்.

கும்க்கி said...

ம்...

டொரெண்ட் ஆட் பன்னியாச்சு..

பயபுள்ள நம்மள மாதிரியே திங்க் பண்ணியிருக்கேன்னு தோணுது...

என்ன ஒன்னு கல்யாணமாகி குட்டி போட்டாச்சு....

இல்லைனா இதேதான் நம்ம நிறைவேறா ஆசையும்...

அன்புடன் அருணா said...

/உண்மையான அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் பகிர்ந்து கொளவதிலேயே இருக்கிறது என்பதை வலியோடு உணர்த்துகிறது, படம். இது சர்வ நிச்சயமாக ஒரு படம் மட்டுமல்ல என்பதை பார்த்தால் மட்டுமே உணர முடியும்./
அய்யய்யோ இப்போவே பார்க்கணும் போலிருக்கே!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@asker
நன்றி நண்பா, சிடி கிடைக்குமா என்ன, உங்களிடம்?

முரளிகுமார் பத்மநாபன் said...

@asker
நன்றி நண்பா, சிடி கிடைக்குமா என்ன, உங்களிடம்?

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
உண்மைதான், நினைவுகளை கிளறிக்கொள்ள உதவியாய் இருக்கும், இந்தப்படம்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
ஹலோ சார், இதுவரைக்கும் எதையெல்லாம் முடிச்சிருக்கிங்க, லிஸ்ட் குடுஙக? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
தேங்க்ஸ் மேடம், படமும் பாருங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கும்க்கி
அண்ணே இது எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்.. ஆனா பயபுள்ள செஞ்சிகாட்டிட்டானே.
ஒருவேளை விஷசெடியை சாப்பிடலைன்னா இந்நேரம் இந்தியாவின் எதோ ஒரு மூலையில் கூட உலவிக்கொண்டிருக்கலாம்...... :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
//அய்யய்யோ இப்போவே பார்க்கணும் போலிருக்கே!!//

சந்தோசம் மேடம், தயவு செய்து பாருங்க... :-)

sugirtha said...

Awesome!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
நன்றி சுகிர்தா, தொடர்ந்து படிங்க :-)

manjoorraja said...

படத்தைப் பற்றிய உங்களின் பதிவும் அருமை.

ஜாக்கி சேகர் said...

நான் தமிழில் இந்த படத்தை யாராவது எழுதி இருக்கின்றார்காளா என்று தேடி பார்த்தேன்... பட் நீ எழுதி இருக்கின்றாய்... நன்றாக எழுதி இருக்கின்றாய் வாழ்த்துகள் முரளி..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.