நீலத்தாமரா – ஒரு சுகானுபவம்

(அம்மிணி-ரீமா, ரத்னம்-ஸம்வ்ரிதா, குஞ்ஞுமோல் -அர்ச்சனாகவி)


நெருங்கிய நண்பர்கள் பலரும் தொடர்ந்து, இந்த திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லியபடியே இருந்தனர். அவசியம் நீ பார்த்துவிட்டு இந்த படத்தினைப் பற்றி எழுது, இது உன் ரசனைக்கு ஏற்றபடம் என ஏகப்பட்ட ஹைப்கள். படம் பார்க்கும் முன்பே இப்படி அதீத எதிர்பார்ப்புடன் பார்க்கும் அனேக படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை. இந்த படம் அப்படியல்ல. அருமையான மெலோடிராமா. மூத்த எழுத்தாளர். எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களின் நாவலைத் தழுவி 1970களில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் மறுஉருவாக்கம்தான் இந்தத் திரைப்படம். இது சராசரியான ரசிகர்களுக்கான  படமா என்றால், என்னைப் பொறுத்தவரை இல்லைதான். ஏனெனில் நிறைய காட்சிகள் நேரடியாக சொல்லப்படாமல், குறீயீடுகளின் மூலமாகவும், மறைமுகமாகவும் சொல்லப்படுகிற திரைக்கதை. எனவே கதையினூடே பயணிக்க வேண்டியது ரசிகனின் கடமையாகிறது. சொல்லப்படாத விஷயங்களை நாம் அனுமானிக்க வேண்டியிருக்கும். ஆனால் நல்ல சினிமா பார்க்க விரும்புபவர்கள். அவசியம் பார்க்கவேண்டிய படம்.

கடவுளிடம் பணம் வைத்து மனதார வேண்டிக்கொள்கிற விஷயம் நிறைவேறும்போது மட்டும் பூக்கும் என ஊரில் காலங்காலமாக நம்பப்படுகிற நீலத்தாமரையைப் பற்றிய டாக்குமெண்டரி படம் எடுக்க ஊருக்கு வருகிறாள், மாலுக்குட்டியம்மா என்கிற வயதான பெண்ணின் பேத்தி (அமலா பால்). மாலுகுட்டியம்மாவின் மகன் ஹரிதாசனின் மகள்தான் அவள். அவளுடைய சிறு வயதிலேயே ஹரிதாசன் இறந்து விட்டிருக்கிறான். அதனால் மறுமணம் செய்துகொண்ட ரத்னம் (மருமகள்), வயதான தனது மாமியாரைப் பார்க்க மகளுடன் வந்திருக்கிறாள். இப்பொழுது இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் வேலை செய்த, குஞ்ஞுமோலுவும் மாலுகுட்டியம்மாவைப் பார்க்க வருகிறாள்.
ரத்தினமும், குஞ்ஞுமோலும் ஒன்றாக தங்க வேண்டிய அவசியம் வருகிறது. இருவரும் தத்தம் வாழ்க்கையைப்பற்றி பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ரத்னம் “என் கணவர் தனது கடைசி நாட்களில் உனக்காக ஒரு கடிதம் எழுதினார், ஆனால் அதை அவர் கடைசி வரையிலும் அஞ்சல் செய்யவே இல்லை, அந்த கடிதம் என்னிடம் இருக்கிறது. படிக்கிறாயா? என்கிறாள். ஆனால் அதை குஞ்ஞுமோல் மறுத்துவிடுகிறாள். அந்த ஒரு இரவில், குஞ்ஞுமோல் மற்றும் ரத்னம் இருவரின் நினைவுகளில் ப்ளாஷ்பேக்காக கதை நகருகிறது.

முப்பது வருடங்களுக்கு முன்பு குஞ்ஞுமோல் அவளது முறைமாமன், மற்றும் பாட்டியோடு மாலுக்குட்டியம்மாவின் வீட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். அவ்வளவு பெரிய வீட்டில், சட்டம் படித்துக்கொண்டிருக்கும் தனது மகன் வந்து போகும் நாட்களைத்தவிர ஒற்றை ஆளாக இருக்கும் அவர் குஞ்ஞுமோலை மட்டும் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்.  குஞ்ஞுமோல் மிகுந்த அன்புடன் மாலுக்குட்டியம்மாவை கவனித்துக்கொள்கிறாள். அருகில் வசிக்கும்,  எப்பொழுதும் தனது வயது, திருமணம், காதல் குறித்த விஷ்யங்களையே பேசிக்கொண்டிருக்கும் அம்மினி என்ற பெண்ணோடு நட்பு கொள்கிறாள். மேலும், இரவுகளில் மட்டும் பாடும் பக்கத்துவீட்டு பாகவதர். கோவில் வாசலிலேயே குடியிருக்கும் பெரியவர் என குஞ்ஞுமோலுக்கு புதுப்புது உறவுகளும், நம்பிக்கையும் தொடர்கிறது. அனைவருக்கும் பிரியமானவளாய் இருக்கிறாள்.

சில மாதங்களில் படிப்பு முடிந்து வீடு திரும்பும் ஹரிதாசனுக்கு குஞ்ஞுமோலைப் பார்த்த்துமே  ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளுக்கும். சிறுசிறு ஊடல்களுக்கு பிறகு இருவரும் உடல் ரீதியான உறவு கொள்கின்றனர். நாட்கள் நகர, ஹரிதாசனுக்கு அவனது மாமாவின் மூலமாக வெளியூரில் வேலை கிடைக்கிறது. எப்படியும் திரும்பிவந்து தன்னை திருமணம் செய்து கொள்வான் என நம்புகிறாள். ஆனால் அவன் வெளியூரில் இருக்கும்பொழுதே அதே மாமா தனது பெண்ணான ரத்தினதிற்கு ஹரிதாசனைப் பேசி முடிக்கிறார், இவையனைத்தும் குஞ்ஞுமோலின் கண்முன்னமே, அவளது ரகசியமான கண்ணீரையும் தாண்டி அவளது இயலாமையோடு நடந்தேறுகிறது. திருமணம் முடிந்து வீடு திரும்புகிறான் ஹரிதாசன்.

தன் வயதை ஒத்த பணிப்பெண்ணாக குஞ்ஞுமோலுடன் சினேகமாக பழக ஆரம்பிக்கிறாள், ரத்னம். ஹரிதாசனுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை அவள் மூலம் தெரிந்து கொள்கிறாள். ஆனால் எப்பொழுதும் தனித்தே, எதையோ பறிகொடுத்தது போலவே திரியும் அவளது போக்கும், இன்னும் சில தடயங்களின் மூலமும் தனது கணவனால் கைவிடப்பட்டவள்தான் குஞ்ஞுமோல் என்பதை அறிகிறாள். இதற்காக கணவனுடன் சண்டையிடுகிறாள். ஆனால் அவனோ எந்தவிதமான மனவருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறான். அவனைத் திருத்துவது ஆகாத காரியம் என்பதை அறிகிறாள். மேலும் குஞ்ஞுமோல் இங்கேயே இருப்பதன் மூலம் அவளுக்கும் வேதனை என்பதால் வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே சண்டையிட்டு குஞ்ஞுமோலை வீட்டை விட்டு அனுப்புகிறாள். இருவரின் பார்வையிலும் மேற்கண்ட காட்சிகள் காட்டப்பட்டு ப்ளாஷ்பேக் முடிகிறது.
    அப்போது போகிற குஞ்ஞுமோல், தனது முறைமாமனையே திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். அதன் பிறகு இருபது வருடங்கள் கழிந்து, இப்பொழுதுதான் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் மல்லுகுட்டியம்மாவைப் பார்க்க வருகிறாள்.
     டாக்குமெண்டரி படம் எடுத்துமுடித்தவுடன், தனது பெண்ணுடன் ஊர் திரும்புகிறாள், ரத்னம். தனக்கு உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை எனவே நான் உங்களுடன் சில நாட்கள் தங்கிச் செல்கிறேன் என்கிறாள் குஞ்ஞுமோல். இருவரும் சிரித்தபடியே வீட்டிற்குள் நுழைய படம் முடிகிறது. முடிகிறதா? அவ்வளவுதானா? என்றால் ஆம், படம் முடிகிறது. அவ்வளவுதான்.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில:
போல்ட் அண்ட் ப்யூட்டிஃபுலான ரத்னமின் கேரக்டர்தான் பட்த்திலேயே அதிகம் பாதித்த கதாபாத்திரம். அவளுடைய தெளிவான முடிவுதான் அனைவருக்குமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறது. இரண்டாவது திருமணத்தை பலரின் வெறுப்பிற்குப் பிறகும் செய்து கொள்கிறாள்.
குஞ்ஞுமோலை வசியம் செய்யும் ஹரிதாசன், இரவில் மாடிக்கு வரும்போது முன்றாவது படியில் காலை வைக்காதே, அது உடைந்திருக்கிறது, சப்தம் வரும் என்கிறான். அதையே குஞ்ஞுமோல் அவனுடைய மனைவியிடம் சொல்லுமிடம் ஒரு மென்சோகக் கவிதை.
குஞ்ஞுமோலின் ஒரே ஸ்னேகிதியான, அம்மிணியின் பிரச்சனையை சொல்லாமலேயே அவள் திடுமென தற்கொலை செய்துகொள்வதன் மூலமே முதிர்கன்னியான் அவளது பிரச்சனைகளை சொல்லாமல் சொல்லியிருப்பது.
ஹரிதாசனுக்கும் குஞ்சுமோலுக்குமிடையே உடலுறவு முடிந்த அடுத்தநாள் காலை அம்மிணியிடம் ஓரிரு ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் காட்சியில் குஞ்ஞுமோலின் வெட்கம் தெறிக்கும் நடிப்பும், சேஃப் (SAFE) என்ற வார்த்தைக்கான அர்த்தம் தேடுவதன் மூலம் ஹரிதாசன் திட்டமிட்டு மிகவும் ஜாக்கிரதையாக வளைத்திருக்கிறான் என்பதை சொல்லும் காட்சி.
தத்துவார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் பைத்தியம் எனப்படுகிற அந்த மரத்தடி கிழவர், இரவுகளில் பாடும் அந்த பக்கத்துவீட்டு காட்டப்படாத பாகவதர், அதுவும் அவர் இறந்த்தாக சொல்லப்பட்டபின்னும் அந்தப் பாடல் குஞ்ஞுமோலுக்கு மட்டும் கேட்பது,  முரடனைப்போல தோற்றமளித்தாலும் குஞ்ஞுமோலைத் திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கை நடத்தும் முறைமாமன்.இப்படி நிறைய ரசிக்க, யோசிக்கவென பல காட்சிகள் உண்டு. நல்ல மெலோடிராமா விரும்பிகள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படம், நீலத்தாமரா...

இசை:
இந்தப்படத்தில் வித்யாசாகரின் இசை இல்லையென்றால், நிச்சயம் இவ்வளவு உருக்கத்தைக் கொடுத்திருக்குமாவென்பது சந்தேகம்தான். வித்யாசாகரின் இசை அதி அற்புதம். புல்லாங்குழலை படத்தின் பின்ன்ணியில் அதிகம் உபயோகித்திருக்கிறார். படத்தில்  ஐந்து + ஒரு பாடல்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். வித்யாசாகர் ஒரு உண்மையான இசைக்கலைஞன். நான் நண்பர்களிடம் பேசும் போது “He is an True Composer” என சொல்வேன். அது எவ்வளவு உண்மை என்பது அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்கிறது அவரது பாடல். ஆனால் ரசிக்கும் மனது மட்டும் வாய்த்துவிட்டால்  இசைக்கும் மொழிகள் கிடையாது என்பதை சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார், கர்நாடக சங்கீதம் ஞானம் உள்ளவர்கள் இன்னும் புட்டு புட்டு வைக்கலாம் இந்தப் பாடலகளை. ஆனாலும் என்னைப்போன்ற அடிப்படை இசையறிவற்ற ஆனால் கேள்விஞானம் மட்டும் கொண்டவர்களுக்குக்கூட இந்தப் பாடல்கள் மிக அருமையான ஒரு சுகானுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

அதிலும் இந்த படத்தின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது இரண்டு பாடல்கள், முதல்பாடல் : பகலுன்மான்ய வீதியிலே குஞ்னு தாமரே.....  இந்தப்பாடல் இந்துஸ்தானிய ஸ்டைலில் கையாளப்பட்ட பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர்கள் பல்ராம் (காற்றின் மொழி பாடியவர்) விஜய் பிரகாஷ் (ஓம் சிவ் ஓம், ஹொசானா பாடியவர்) இருவரும் சேர்ந்து பாடிய பாடல். பாடல் முழுவதையும் பல்ராமும் இடையே வரும் சங்கதிகளையும், கமகங்களையும் விஜய்பிரகாஷ் பாடியிருக்கிறார். இதுபோன்ற இசையை இதற்குமுன்பாக ஜாகீர் உசைன் அவர்களின் தபேலா கச்சேரிகளில் மட்டுமே கேட்டிருக்கிறேன். மனதை இளக்கும் இசை, இந்த ஒருவாரத்தில் எத்தனை முறை இந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என தெரியவில்லை. இதே பாடலை தமிழிலும் கண்டேன் காதலை படத்தில் உபயோகித்திருப்பார், வித்யாசாகர். அதிக கவனம் பெறாமல் போன, ஆனால் அருமையான பாடல் அது.  நான் மொழியறிந்தேன்... உன் வார்த்தையில்.... சுரேஷ் வாட்கர் பாடியபாடல்.

இரண்டாவது பாடல் : அனுராக விலோச்சன்னாயி  , இந்தப் பாடலின் ஸ்பெசலே அதன் துள்ளலான இசையும் ஸ்ரேயா கோஷலின் ரம்யமான குரலும்(குறிப்பாக பாடலின் இடையே வரும் அவளுடைய அந்த ஹம்மிங், அய்யோ. விஜய்பிரகாஷும் சரி, ஷ்ரேயா கோஷலையும் அவர்களின் காம்படிஷன் ரவுண்டுகளிலிருந்தே பார்த்து வருகிறேன், என்ன வளர்ச்சி, இவர்களிடம்!).  தேவதைகளின் தேசமான கேரளத்தின் பச்சைபசேலென்ற இடங்களும் அந்த பச்சைநீர்க் குளங்களும். அவசியம் பார்த்துக்கொண்டே கேளுங்கள்.

இதுபோக இந்த படத்தின் பாடல்கள் அல்லாது, (ஐந்து+ஒருபாடல்) குஞ்ஞுமோலை வசியம் செய்ய ஹரிதாசன் தன்னுடைய டேப்ரெக்கார்டரில் யேசுதாஸ் பாடிய ஒரு ஹிந்திபாடலை போடுவான். 1979களில் வந்த LAHU KE DO RANG (ரத்தம் இரண்டு நிறம்) என்ற படத்தில் பப்பிலஹரி இசையில் வெளிவந்த சித் நா க்கரோ, அப் தோ ருக்கோ...... என்ற இந்த பாடலை இந்தப்படத்தில் பொருத்தியிருக்கும் இடம் அருமை. 80களில் ஹிந்தி பாடல்கள் எவ்வளவு ரம்யமாக இருந்தன என்பதையும், கதை நடக்கும் காலகட்டத்தை உணர்த்தவும் இந்த பாடல் இங்கே பொருத்தப்பட்டிருக்கிறது. 

25 கருத்துரைகள்:

ராகவன் said...

அன்பு முரளி,

நீலத்தாமரா... நல்ல படம் என்பதில் சந்தேகமே இல்லை.

என்னை வெகுவாக சலனப்படுத்திய படம்... யூகிக்கக்கூடிய மாதிரி படம் தான் என்றாலும், அதைக் கையாண்டவிதம் அருமை. அம்மிணி இறந்ததற்கு காரணம் முதிர்கன்னி என்பது மட்டுமா? எனக்குத் தெரியலை... திரும்ப பார்க்கவேண்டும்.

அர்ச்சனாகவியின் நடிப்பு அபாரம்... மாமியார் மருமகளிடையே இருக்கும் அந்த அற்புதமான புரிதலும் கவிதை.
இது எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும் படம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

குறியீடுகள் இருப்பதாகவும் எனக்குத் தெரியலை... சில விஷயங்களை சட்டிலா சொன்னது தவிர... குறியீடுகள் எனக்குப் புரியவில்லை... தலைப்பான நீலத்தாமரா மட்டுமே குறியீடு...

கடிதத்தை அவள் படிக்காமலே விடுவது தான் கவிதை...

நல்ல படம் முரளி... அற்புதமான பாடல்கள்... பாடல் வரிகள் அபாரம்.

அன்புடன்
ராகவன்

சு.சிவக்குமார். said...

அர்ச்சனாக் கவியோட கண்ணைப் பற்றியும் ஒரு சில வரிகள் எழுதியிருக்கலாம்..இன்னொரு கோணத்தில் நாயகன் அவளுக்கு எந்த இடத்திலும் அவளை மணம் செய்யப் போவதாக உறுதி தரவில்லை.தன் வீட்டில் இருக்கும் ஒரு பண்டத்தை எவ்வளவு இயல்பாக யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் எடுத்துக் கொள்வானோ அப்படித்தான் அவளையும் எடுத்துக்கொள்வான். என்ன எடுத்துக்கொள்ளும் விதம்,வழிகள் வேறு.. மேலும் இருவருமே ஏறக்குறைய ஒரே வயது என்வே இது முதிர்வைத்தாண்டிய ஒரு உடல்தூண்டலாக கூட எடுத்துக்கொள்ளாம்..

M.T.V.R. எவ்வளவு சிறந்த படைப்பாளி என்பது இதில்தான் தெரிகிறது.அந்த உறவுக்கான காரண்காரியம்,தவறு,சரிகள்,தர்க்கங்கள், என்று எதுவுமில்லாமல் ஒரு பார்வையாளனாகவே கதையை நகர்த்திக்கொண்டு போகிறார்..எந்த இடத்திலும் அவர் வெளிப்படவே இல்லை....

க‌ரிச‌ல்கார‌ன் said...

அட்ட‌காச‌ம் பாஸ்!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நேயர் விருப்பம்-1 ஒ.கே
(அமலா பால்''ன் புகைப்படம் போடாததற்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன் )

கோபிநாத் said...

நான் நேரத்தே கண்டூ ;)

கோபிநாத் said...

பின்ன விமர்சனம் அடிபேலியானு ;)

Ravikumar Tirupur said...

விமர்சனம் அருமை! உங்களுக்கு வாய்த்திருக்கிறது பொறுமை!

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
குருவணக்கம், :-)

உண்மைதான் யூகிக்ககூடியதாக இருந்தாலும், சொல்லாமல் விடுபடுகிற சொற்களைப் போல ஒரு அழகு இருக்கிறது.

அம்மிணி மரணம், நீலத்தாமரை, பக்கத்துவீட்டு பாகவதரின் பாடல் இது எல்லாமே, ஏதோ ஒரு விஷ்யத்தை சொல்லாமல் சொல்ல முயற்சிக்கிறது அல்லவா? அதைத்தான் குறியீடு என்று சொல்லியிருக்கிறேன். ஒருவேளை தவறான வார்த்தைப் பிரயோகமாக இருக்கலாம், இந்த இடத்தில்.

பகலுன்ன மான்ய வீதியிலே’ பாடலுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா? முழுப்பாடலுக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவக்குமார்.
//தன் வீட்டில் இருக்கும் ஒரு பண்டத்தை எவ்வளவு இயல்பாக யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் எடுத்துக் கொள்வானோ அப்படித்தான் அவளையும் எடுத்துக்கொள்வான்//

மிகச்சரியான பதம் இது.

//M.T.V.R. எவ்வளவு சிறந்த படைப்பாளி என்பது இதில்தான் தெரிகிறது.அந்த உறவுக்கான காரண்காரியம்,தவறு,சரிகள்,தர்க்கங்கள், என்று எதுவுமில்லாமல் ஒரு பார்வையாளனாகவே கதையை நகர்த்திக்கொண்டு போகிறார்..எந்த இடத்திலும் அவர் வெளிப்படவே இல்லை....//

இது உங்களுக்கான இடம் சிவா, என்னைவிட அனுபவித்து பார்த்த மனிதர் நீங்க, உங்களுக்குன்னு சில விஷயங்களை நான் விட்டுத்தானே ஆகனும் அந்த ஸ்பேஸ்தான் இது...

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கரிசல்காரன்
நன்றி நண்பரே! உங்கள் பின்னூட்டத்திற்கும் இந்தப்பதிவை பஸ்ஸில் ஷேர் செய்தமைக்கும்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
//நேயர் விருப்பம்-1 ஒ.கே//
விரைவில் நோட்புக்கிலும் எழுத்தப்படும்..

(சிவக்குமார் பார்க்கச்சொல்லி, திரு எழுதச்சொன்னப் படமிது, அறிமுகம் செய்தமைக்கும், நம்பிக்கைகும் நன்றீ)

//(அமலா பால்'ன் புகைப்படம் போடாததற்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன் )//

எனக்கு ரீமா களிங்கல் படத்தை மட்டுமே இன்னும் நாலு பதிவுக்காவது யூஸ் பண்ணனும்னு தோணுது, அமலாவாது பாலாவது எல்லாம் அப்புறம் பார்க்கலாம்... ஹிஹிஹிஹி...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
//நான் நேரத்தே கண்டூ ;)//
இது ஓரளவுக்கு புரியுது, நீங்க நேத்தே பாத்துட்டேன்னு சொல்ல வறீங்க, :-)

//பின்ன விமர்சனம் அடிபேலியானு ;)//
ஆனா இது ஒண்ணும் புரியலையே தல, விமர்சனம் போட்டா பின்னாடி அடிப்பிங்களா? என்னா சொல்ல வறீங்க?
:-))

Iqbal Selvan " இக்பால் செல்வன் '' said...

ஏற்கனவே பல முறை பார்த்தப் பாடல் என்றாலும்.. உங்களின் விமர்சனத்தினால் மீண்டும் ஒருமுறைப் பார்க்க தூண்டப் பட்டேன் .. சில புது கவனிப்புகளையும் தாங்கள் கூறியது சிறப்பு ...

shortfilmindia.com said...

அந்த ஸ்ரேயா கோஷல் பாடல் ஹாண்டிங்..
கேபிள் சங்கர்

விக்னேஷ்வரி said...

ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க ப்ரதர். பட டிவிடி எங்கே கிடைக்கும்..

முரளிகுமார் பத்மநாபன் said...

@ரவிக்குமார்
இயக்குனரே! நீங்களே இப்படி சொன்னா எப்படி? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
தேங்க்யூ மேடம், படமும் பாருங்க பெண்களுக்கான் படம் இது.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இக்பால் செல்வன்
//சில புது கவனிப்புகளையும் தாங்கள் கூறியது சிறப்பு//

நன்றி நண்பா! தொடர்ந்து வாங்க....
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@கேபிள்சங்கர்
தல, பகலுன்ன மான்ய வீதியிலே பிடிக்கலையா என்ன? எனக்கு ரெண்டாவதுதான் அந்த ஸ்ரேயா, ஸ்ரீகுமார் பாடல்....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்னேஷ்வரி
//ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க ப்ரதர். பட டிவிடி எங்கே கிடைக்கும்..//

தேங்க்ஸ் சிஸ். கடையிலும் என்னிடமும்... ஆமா அவ்ளோ நல்லபுள்ளையா நீங்க?

அப்பாதுரை said...

கதைக்கருக்கள் சிலருக்கு எப்படியெல்லாம் வாயிக்கின்றன! வாசுதேவனின் புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றனவா?

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஸ்பேனிஷ் படம் ஒன்று காரணமில்லாமல் நினைவுக்கு வருகிறது. கர்ப்பத்துடன் காதலனைப் பிரிந்து போகும் பெண், முப்பது வருடமோ என்னவோ பொறுத்து பழைய காதலனை மீண்டும் காண வருகிறாள். கல்லூரியில் படிக்கும் ஒரு வளர்ந்த பெண்ணையும் அழைத்து வருகிறாள். திருமணமாகிக் குழந்தையே பெறாத காதலன், இவளைத் தன்னுடைய பெண் என்று நினைத்துப் பாதி ரகசியமாகவும் பாதி வெளிப்படையாகவும் புழுங்கிப் புழுங்கிக் கவனிக்கிறான். அவனை அவ்வாறு நினைக்க விட்டு, கடைசியில் அவள் அவனுடைய பெண் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லிப் போகிறாள் பழைய காதலி. பிரிந்ததுமே கருவைக் கலைத்து விட்டதாகச் சொல்லாமல் சொல்லும் அந்தக் காட்சியை மறக்கவே முடியவில்லை.

இடுகைக்கு நன்றி முரளி! நீலத்தாமரா படத்தை அவசியம் பார்க்கப் போகிறேன். நீங்கள் எழுதியிருக்காவிட்டால் படம் பற்றி நான் தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். மிகவும் நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
நன்றி அப்பாதுரை சார், அது என்ன படம்? செமத்தியா இருக்கே நீங்க சொல்ற நாட். நினைவில் வந்தால் அவசியம் மெயில் பண்ணுங்க. நீலத்தாமரை பாருங்க, பார்த்ததும் நீங்கள் இடப்போகும் பின்னுட்டத்திற்காக காத்திருக்கிறேன் . மீண்டும் நன்றி :-)

கும்க்கி said...

அதையே குஞ்ஞுமோல் அவனுடைய மனைவியிடம் சொல்லுமிடம் ஒரு மென்சோகக் கவிதை...

குஞ்ஞுமோல்....ஹரிதாசின் மனைவியிடம் என்றிருந்தால் நலம்...


டொரெண்ட்டில் இறக்கி வைத்து நீண்ட நாட்களாக பார்க்கமலிருந்தேன் முராரி...காணாமல் போய்விட்டது..திரும்ப தேடிப்பிடிக்கவேண்டும்...

shri Prajna said...

"நீலத்தாமரா" எவ்ளோ அருமையான படத்தை பதிவு செய்திருகிறீர்கள் ..Thank U Murli

ஒரு அழகான நீரோட்டம் போல் நகரும் கதை, மெல்லிய மூங்கில் இலை மாதிரி எளிமையான வடிவத்தில் சொல்லப்பட்டிருப்பது அருமை ..

படத்தின் ஒவ்வொரு பகுதியும் கவிதையாய்...

வாழ்க்கையின் ஓட்டத்தில் சில நிலைகளில் மனிதர்களின் உணர்வுகளோடு உறவாடி..காயப்படுத்தி கடந்துபோயவிடும் காலம் ...குஞ்ஞுமோல் அப்பாவியான அந்த கேரக்டர் ..ஏமாற்றத்தோடு மனவேதனை பட்டு கண்ணீரோடு கலங்கி மருகுவது..

எந்த உறுத்தலும் இல்லாமல் தன் சுயநலத்தோடு வாழும் ஹரிதாசன்..பண்டம் மாதிரியில்ல பெண் என்பதை காலம் அவனுக்கு கொடுக்கும் தண்டனை மூலம் கற்பித்து இருக்கும் ..அவனுடைய கடிதத்தை படிக்காமல் விட்டதே சரி..

அம்மணியின் மரணத்தின் போது ரத்னம் பதட்டத்தோடு குஞ்ஞுமோல் தான் எதாவது செய்துகொண்டளோ என்றும பின் இல்லை எனும் போது அவள் ஆறுதலடைவதும் ...மனிதர்களை உள்ளுணர்வுகளின் போக்குகளோடு இயல்பாய் வெளிப்படுத்தி இருப்பது simply superb

இசையை பாடல்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..கேக்கறதுக்கு அவ்ளோ சுகமாய் இருக்கிறது ..

தமிழிலும் இப்படி படங்கள் வந்தால் நன்றாய் இருக்கும் ...என்ற ஆதங்கத்தை எங்கே சொல்ல?? ..
இந்த "நீலத்தாமர" வை நான் வீட்டில் வைத்திருக்கிறேன்...ரொம்ப ஆசை பட்டு கேரளா போயிருந்த போது வாங்கி வந்தேன் ...ரொம்ப அழகாய் இருக்கும் அந்த பூ ..இப்படி ஒரு அர்த்தமா அது மலர்வதற்கு ...

Anyway Thank U Murli

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.