கடவுள், இருந்துவிட்டுப் போகட்டுமே.....

ஷம்முகுட்டி, அக்காவின் கடைக்குட்டி. ஒருவயது ஆகிறது. தினமும் மதியம் சாப்பிட வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளது சாகசங்களைப் பட்டியலிட்டு விட்டுத் தான் சோறே போடுவார்கள். போலவே, அவளும் தினமும் நிற்பதும், நடப்பதும், சிரிப்பதுமாய், தினுசு, தினுசாக எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு கூட  “டேய் மாமான்னு சொன்னாடாஎன்றார்கள், அக்காவும், அம்மாவும். மூணு மணிநேரம் பக்கத்திலேயே உக்காந்து தேவுடு காத்துப்பார்த்தேன். ம்ஹூம்.  ‘மாகூட வரலை.

போனவாரத்தில் ஒரு நாள், வீட்டிற்குள் நுழைந்ததுமே “இங்க வா என்று சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பி குட்டிம்மா எப்படி சாமி கும்பிடணும்னு கேட்டதும்தான் தாமதம், தத்தக்கா பித்தக்காவென நடந்து சாமி ரூமிற்கு சென்று சாமி படங்களுக்கு முன்பாக நின்று கைகளைக் கூப்பி கண்களை மூடிக்கொண்டாள். பிறகு மணி அடிப்பது, விபூதி தின்பது என வரிசையாக ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனாள். ஒருபக்கம் அவளது செய்கைகள் ஆச்சர்யமாக இருந்தாலும், அம்மாவின் செய்கைகள் ஆயாசமாக இருந்தது.

அம்மாவிடம் கடவுள்கள் சம்பந்தமாக நிறைய பேசியிருக்கிறேன். அம்மாவிற்கும் சரி, அப்பாவிற்கும் சரி, கடவுள்கள் குறித்து பொதுவாக எல்லோருக்குமே இரண்டாம் கருத்து வந்துவிட்ட காலம் இது. சாமி கும்பிடுவது என்பது ஒரு சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. திருப்பதி கோவிலில் இரண்டு நாட்கள் நின்று சாமி கும்பிட்டு வந்ததைப் பெருமையாக பேசும் பக்கத்துவீட்டுக்கார்ர்களிடம் “ஆண்டவன் எங்கேயும் இருக்கான், கண்ணை மூடி பெருமாளேன்னு கும்பிட வேண்டியதுதானே? அங்க போயி பார்த்தா தான் காப்பாத்துவானா? என்று அம்மா வியாக்யானம் பேசுவார்கள். அதே அம்மாவிடம் “ஏம்மா, சாமி தான் எங்கேயும் இருக்காரே, நம்ம சாமி ரூம்ல இருக்கிற படங்களை எல்லாம் எடுத்து விடலாமே? ஒரு விளக்கையோ இல்லை வெற்றுச் சுவரையோ பார்த்து கும்பிட்டுக்கிட்டு போயிடலாமேன்னா? பதில் இருக்காது.

அம்மாவிடம் இவ்வளவு பேசும் என்னிடம் நீயேன் வருடாவருடம் சபரிமலைக்கு போகிறாய்? என்றால் பதில் இல்லை. காரணம் என் பாட்டி, சின்ன வயதிலிருந்தே இல்லாத சாமியையும், பூதத்தையும் கதை கதையாக சொல்லியே வளர்த்திருக்கிறார். இன்னமும் பாதாள உலகமும், ஏழு தலை பூதமும் இருப்பதாக நம்புகிற குழந்தைகள் இருக்கத் தானே செய்கிறார்கள். மூளை வளரும் பொழுது என்ன செலுத்தப்படுகிறதோ, அதை வெளியே எடுத்தெறிய நிறைய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சிரமப்பட்டால் அது முடியும், ஆனால், நானோ அம்மாவோ சிரமப்பட விரும்பாதவர்கள். தாம் உண்மை என்று நம்பிவிட்ட ஒன்றை விமர்சனத்துக்குள் கொண்டு போக விரும்பாதவர்கள். அதில் கிடைக்கும் நம்பகத்தன்மைக்காக அதை விட்டுக் கொடுக்க முன் வராதவர்கள்.

இப்படி எங்களைப்போல நிறையபேர் இருக்கக்கூடும். அதனாலேயே அம்மாவிடம் சொல்வேன். நம்முடைய தவறுகள் நம்மோடு போகட்டும். இனிவரும் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள். கடவுள் பற்றிய எந்த கருத்தையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்காய் விபரம் தெரிந்து வளரும்பொழுது தேவையெனில் கடவுள் இருக்கட்டும் அல்லது போகட்டும், ஆனால் அது அவர்களின் விருப்பமாக இருந்துவிட்டு போகட்டுமே. இப்படி வெள்ளி, சனி, பூஜை, சாமி, விபூதி இப்படி சம்பிரதாயங்களை பழக்காமல் இருக்கலாமே என அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு பாட்டி, என் குழந்தைகளுக்கு அம்மா தானே பாட்டி. அவர்களின் கடமை போல இது. இன்று இவள். ஷம்முகுட்டிக்கும் அதை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.

கோவையிலுள்ள என் அண்ணன் ஒருவரின் மகள்கள் இருவரும் காலையில் எழுந்ததும் குளித்த மறுநிமிடம் சாமி முன்நின்று சமஸ்கிருதம் உட்பட பல பக்திப்பாடல்களை அட்சரசுத்தமாக பாடுவார்கள். அவர்களோடு ஒப்பிட்டு தன் மகனை திட்டிக்கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்திருக்கிறேன். இந்த திட்டு அவர்கள் குழந்தையைப் போல தன் குழந்தை பாடவில்லை என்பதால் என்றால் சரி, சாமி பாட்டு பாடலைங்கிறதா இருந்தா? யோசிக்க வேண்டியிருக்கு. கோவிலுக்குப்போய் நெத்தி நிறைய விபூதி வைத்துக்கொண்டு பழமாக திரும்புபவர்களை நல்லவர்கள் என்று சொல்வதைவிட, அப்படிச் செய்யாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்லி குழந்தைகளை வளர்ப்பது என்னைப்போல ஒரு ரெண்டுங்கெட்டான் மனநிலைக்கு அல்லவா கொண்டுவந்து விடும்.கடவுளைப்பற்றிய எந்த விவாதமும் கடவுளைப்போலவே முற்றுப்பெறாமல் நின்றுவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை சிலருக்கு அன்பு கடவுள், சிலருக்கு உணவு கடவுள், சிலருக்கு தொழில் கடவுள், சிலருக்கு பணம் கடவுள், சிலருக்கு தாமே கடவுள், சிலருக்கு சிலை கடவுள்.  இருந்தும் என்னால் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பிலிருந்து என்னை ஒரளவிற்கு முறைப்படுத்திக்கொள்ள முடிந்தது. அன்பே சிவம் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்று கொண்டும் இருக்கிறேன். பரீட்சைக்கு முன்பு சாமி கும்பிடுவது, எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் உண்டியலை நிறைப்பது என முன்பிருந்த சில பல  விஷயங்களை மெதுமெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். எஸ்.வி. சேகரின் நாடகங்களைக் கேட்கத் துவங்கியது முதல் கடவுளிடம் என்னுடைய ஒரே வேண்டுதல் “ஆண்டவா, எல்லாரையும் நல்லபடியா வைப்பாஇவ்வளவுதான். அது வீட்டில் கும்பிட்டாலும் சரி, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்றாலும் சரி. 

இப்படி மெதுமெதுவாக மாற்றிக்கொண்டிருந்தாலும் தும்மல் வரும்போதும், துக்கம் வரும்போதும் “ஈஸ்வராஎன்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். சோகம் சூழ்ந்த வேளையில் நல்லதா ஒரு இசையைக் கேட்கத் துடிப்பது போல எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாமிருக்க பயமேன் என்று சொல்லியபடி சிரிக்கும் குழந்தை முருகன் தேவைப்பட்டவனாகவே இருக்கிறேன்.

         என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை. ஒருநாள் மதியம் ஷம்முக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். நானும், கோகுலும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென “மாமா, பாப்பா சிரிக்கிறா! பாப்பா தூங்கிட்டே சிரிக்கிறா!என கத்தினான். நான் அதுக்கென்ன இப்போ நீ கத்தி தூங்குறவளை எழுப்பிடாதேன்னு எரிச்சலாய் சொல்லிவிட்டு டீவிக்கு திரும்பும்போது மறுபடியும் சொன்னான் “மாமா, தூக்கத்துல சாமிகிட்ட பேசுறா மாமா, அதுனாலதான் பாப்பா சிரிக்கிறாஎன்றான். அவனையும் பார்த்தேன், திரும்பி அம்மாவையும் பார்த்தேன். அம்மா என்னைப் பார்த்து சிரித்தார்கள். நான் கோகுலைப் பார்த்து சிரித்தேன். கடவுள் சம்முவோடு சிரித்துவிட்டுப் போகட்டும்

ஆரண்ய காண்டத்தில் சமூக விலங்குபாலகாண்டம், கிஸ்கிந்தா காண்டம் உட்பட ஏழுகாண்டங்கள் கொண்ட வால்மீகி ராமயணத்தில் ராமரின் வனவாசத்தை சொல்கிற ஆரண்யகாண்டம். இந்தப்படத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்புதான். ஆரண்யம் என்றால் காடு. காடு அடர் இருளையும் கொடிய விலங்குகளையும் கொண்டது. வலியது வெல்லும் என்கிற ஒற்றை விதியைத்தவிர விலங்குகளுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதுபோன்ற மனிதவிலங்குகள் சுற்றியலையும் ஆரண்யத்தின் கதை இது. மொழி படம் பார்த்துவிட்டு வெளியே வந்து யோசித்தால் பட்த்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆரண்யகாண்டம் அதற்கு நேர் எதிர், இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது. சமூகம் ஒரு காடு, மனிதர்கள் அதில் கொடிய விலங்குகள். அவ்வ்ளவுதான்.

படத்தின் முதல் காட்சியிலேயே புரிந்துவிடுகிறது இது வேற படம் என்று. கி.மு 400-ல் என்று ஒரு ஸ்லைடு வருகிறது. அடுத்ததாக ஏதோ அரைகுறை ஆடையுடன் மனிதர்களை காண்பிக்கபோகிறார்கள் என்று பார்த்தால், “எது தர்மம்? எது தேவையோ, அதுவே தர்மம் என்கிற அதர்வணவேதத்தின் வரிகளை ஸ்லைடாகப் போடுகிறார்கள். அடுத்த ஸ்லைடு என்ன்வாக இருக்கும் யோசிக்க முடிகிறதா? இன்று என படம் துவங்குகிறது...

மிகச்சாதாரண கதைதான். தற்காப்பிற்கும், பழிவாங்கும் வன்மத்திற்கும் இடையேயான மனிதர்களின் கதை. தாதா அய்யாவிடம் (ஜாக்கி ஹெராப்)  வேலை செய்பவர்கள் பசுபதி (சம்பத்) மற்றும் பலர். இவர்களைப்போலவே ஊரில் இருக்கும் இன்னொரு குரூப் கஜேந்திரன் & கோ. இதில் கஜேந்திரனுக்கு சொந்தமான சரக்கைக் கடத்திவரும் குருவிக்கு சரக்கின் மொத்தமதிப்பு தெரிந்துபோகிறது, மேலும் அதைக்கடத்தி வரும் தனக்கு கிடைக்கும் பணத்தையும் ஒப்பிடுகிறான். எனவே அதை கஜேந்திரனின் தொழில்முறை எதிரியான அய்யாவிடம் விலை பேசுகிறான். 

இதை செய்யலாம் என பசுபதியும், வேண்டாமென அய்யாவும் சொல்கின்றனர். பசுபதி உங்களுக்கு பயமா இருந்தா நான் செய்றேன், லாபத்துல பாதி என்கிறான். இதில் கடுப்பாகிறார் அய்யா, ஆனாலும் சிரித்தபடியே ஒத்துக்கொள்ளும் அவர், பசுபதியை முன்னே அனுப்பிவிட்டு அவனை வழியிலேயே தீர்த்துக்கட்டவும் கட்டளையிடுகிறார். இது பசுபதிக்கு தெரிந்து தப்பிக்கிறான், ஆனால் அவன் மனைவியை அய்யா ஆட்கள் பணயப்படுத்துகிறார்கள். மனைவியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பசுபதிக்கு. 

சரக்கோடிருக்கும் குருவி, தனது லாட்ஜ் அறையில் பக்கத்து ரூமில் இருக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரோடு இரவு சரக்கடிக்கிறான். சரக்கு பற்றிய விபரங்களை போதையில் உளருகிறான். அதீத போதையில் காலை இறந்து போகிறான். இப்பொழுது சரக்கு ஜமீன் கையில், அவரது செம்ம ஸ்மார்ட் குட்டிப்பையன் அதை எப்படி காசக்குவது என சொல்கிறான். குருவி வைத்திருக்கும் சீட்டில் உள்ள நம்பருக்கு போன் போட்டு சரக்கு தங்களிடம் இருப்பதை சொல்கிறார்கள். அது கஜேந்திரனின் போன். இந்த களேபரத்தில் ஜமீனை அய்யாவின் ஆட்கள் தூக்குகிறார்கள். மகன் கையில் இருக்கும் துண்டு சீட்டில் இருக்கும் இன்னொரு நம்பர் பசுபதியினுடையது. இவ்வளவுதான் கதை.

இனி எது எப்படி நடந்திருக்கும் என்பதை உங்களால் எளிதாக சொல்லிவிட முடியும், ஆனால் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இதுபோக படத்தில் செம இண்ட்ரஸ்டிங் கேரக்டர்ஸ் ரெண்டு இருக்கு, சுப்பு, சப்பை. இவர்களை அறிமுகம்கூட செய்ய மாட்டேன். படம்பாருங்கள். இனி படத்தின் சில சுவாரஸ்யங்கள்:

படத்தின் முதல் காட்சியிலேயே அய்யா தனது பேத்திவயதையொத்த சுப்புவிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முயன்று, தனது இயலாமையை நினைத்து அவளை அடிப்பதும், அதற்கு அவள் உங்களால  முடியலைன்னா என்னை ஏன் அடிக்கிறிங்க?என்று விசும்புவதும்,  அடுத்த ஷாட்டிலேயே பசுபதி ஏன்ய்யா நீங்க டொக்காயிட்டிங்களா? எனும்போது அய்யாவின் ரியாக்‌ஷனை எதிர்பார்க்கச் செய்யும் காட்சிகள்.

போலீஸ் ஜீப்பில் ஏறியபின் பசுபதி ஒரு திமிராக அய்யாவால என்ன ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு சொல்லு என்பான், அப்போது ரொம்ப ரிலாக்ஸ்டா.. நீ போ பசுபதி கஸ்தூரி வீட்லதான இருக்கும், நான் கூட்டிட்டுப்போறேன் எனும் அடியாளும், அதற்கு சம்பத்தின் எக்ஸ்ப்ரஸனும்.

சப்பையாக ரவிக்கிருஷ்ணா. (நம்ம 7ஜி ஹீரோ, அந்தப் பட்த்திலேயே இவன் ஏண்டா இப்படி சப்ப மாதிரி பேசுறான்னு சொல்லிக்குவோம்) ரவி,  இந்தப் படத்துக்கு அதுவும் சப்பை கேரக்டருக்கு மிகச் சரியான தேர்வு. அப்புறம் அந்தப்பொண்ணு சுப்பு. கடைசி ஐந்து நிமிஷத்தில இந்தபொண்ணு கேரக்டர் அவ்வளவு அழுத்தமான ஒண்ணா மாறுவது, சிறப்பு.

இவர்களை அனைவரையும் விட, வாழ்ந்து கெட்ட ஜமீந்தாராக வருபவர், சோமு. கூத்துப்பட்டறைக்காரராம்.  மனுஷன் பிச்சி பின்னியெடுக்கிறார். நொடிக்கொருதரம் மாறும் இவரது முகபாவங்கள் சொல்ல முடியாது, பார்த்து அனுபவியுங்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் திரியும் ஊர்க்காரனை கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக அய்யாவின் ஆட்கள் அவரை நைய்யப்புடைத்தபின்னர் தடுமாறி எழுந்துபோய் “மொதோ என்னோட சேவலை வெட்டுனீங்க, அதை மனசுல வச்சிக்கலை. ஆனா ஒரு ஜமின்தாருன்னுகூட பார்க்காம இந்த அடி அடிசீங்க, இதையும் மனசுல வச்சிகலை. இதோட நிறுத்திகிடுவோம், என்னன்னு அய்யா கிட்ட கைய குடுக்கும்போது சிரிப்பையும் மீறி ஒரு சோகம் தெரியும் பாருங்க, அதுதான் ப்ளாக் ஹ்யூமர்.இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் அதில் இவருக்கு ஒன்று நிச்சயம். கொடுக்காப்புளின்னு இவர் தன் மகனை அழைக்கும் அழகிற்காகவே இன்னொருமுறை படம் பார்க்கலாம்.

அவர் பையனாக வரும் சிறுவன், அவன் பங்குக்கு கலக்குறான். சம்பத் அவனிடம் என் பொண்டாட்டிய கடத்தினவன்தான் உங்க அப்பாவையும் கடத்தியிருக்கான். சரக்கை என்னிடம் கொடுத்துவிட்டால் உன் அப்பாவை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்வார். அதற்கு “கட்டின பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க துப்பில்லை, நீ எப்படி எங்கப்பாவை காப்பாத்துவ, போயா.. மயிறு என அழுதுகொண்டே திட்டும்போது கவனிக்கவைக்கிறான்.

சென்னை 68ல் சரக்கை நியாபகப்படுத்தினால் கை நடுக்கபேசுவானே, அஜய். அவருக்கு இதில் செம கேரக்டர் ஆண்டிகளை உஷார் செய்யும் ஒரு அடியாள். ரெண்டே ஸ்டெப்புல ஆண்டிய கரெக்ட் பண்ண ஐடியா தரேன்னு சொல்லிட்டு “உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?ன்னு கேக்கனும் மச்சி, ரஜினின்னு சொன்னுச்சுன்னு வைய்யேன் அப்டியே உட்ற்னும், கமல் சொன்ச்சுன்னு வைய்யேன், மடிஞ்சிருச்சு மச்சிநான் இதுவரைக்கும் 100 ஆண்டிகளை உஷார் பண்ணியிருக்கேன், அதுல 3 ஆண்டி என்ன கரெக்ட் பண்ணிடுச்சு மச்சி, என்பான். இதில் இந்த வரிகளை கிளைமேக்ஸில் ஒருமுறை உபயோகப்படுத்தியிருப்பார்கள். அருமை.

இப்படி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு ஸ்பெசல், அதற்கு தகுந்த ஆட்கள் தேர்வு என இயக்குனரின் திறமை படம் நெடுக... அதே போல படம் முழுவதும் செம்ம ராவான டயலாக்ஸ். உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” எனும் பசுபதியிடம் சிறுவன் சொல்லும்அப்படியில்ல, ஆனா அவரு எங்க அப்பா”,  இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமான்னு கேட்கும் ஒரு தரகு போலிஸிடம் பசுபதி சொல்லும் “கப்பு பாத்தா மப்பு கெடையாது சார்கிளைமேக்ஸில் அலட்சியமாக இரண்டு காரை கையால் தடுத்தபடி சுப்பு சொல்லும் என்னைப் பொறுத்தவரைக்கு ஆம்பளங்க எல்லாருமே சப்பைதான், மப்பில் செத்த குருவியைப் பார்த்து நீ மட்டும் என்கிட்ட உயிரோட மாட்டியிருந்த உன்னை கொன்னுருப்பேன் என்று சொல்லும் கஜேந்திரன் இப்படி படம் நெடுக சீரியஸாகவும், ராவாகவும், காமெடியாகவும் செமத்தியான டயலாக்ஸ்.

இதுபோக யுவனின் பின்னணி இசை பட்த்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். ரேடியோவில், காரில், டேப்பில், டிவியில் பாடும் பாடலகளையே பெரும்பாலான காட்சிகளில் பின்னணியாக உபயோகப்படுத்திய விதம் அருமை. அதிலும் அந்த ஸ்டண்ட் காட்சியில் கிடாரைக் கேட்கும்பொழுது எதோ வெஸ்டர்ன் மூவி பார்க்கிற ஒரு பீலிங். நமக்குன்னு இப்படி ஒரு ஸ்டைல் இல்லையேன்னு கவலையா இருக்கு. நிறைய புதுப்புது வாத்தியங்களை உபயோகித்திருக்கிறார்.


இரண்டு வருடங்களாக கிடப்பிலும், சென்சார் கையிலும் சிக்கி வெளிவந்திருக்கும் படம். குவாண்டின் ட்ராண்டினோவின் படங்களைப் போல தமிழில் படங்கள் வராதா என ஏங்குபவர்களுக்கான படம். லோ ஆங்கிள் ஷாட்ஸ், செபியா கலர் எபெக்ட், ஸ்லோமோஷன் ஸ்டண்ட்ஸ், இப்படி குவாண்டினின் படங்களில் வரும் வன்முறை அழகியல் இதிலும் உண்டு. படம் முடிந்து வெளியேவரும்போது எனக்கு தோன்றிய ஒரு விசயம், சிட்டி ஆப் காட் படம்தான். 2010ஆம் ஆண்டுக்கான தெற்காசியத் திரைப்படங்களுக்கான விழாவில் கிராண்ட் ஜூரி விருது பெற்றிருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் தியாகராஜன் குமாரராஜா. ((ஒரம்போ, குவாட்டர் கட்டிங் வசனகர்த்தா) கைய குடுங்க சார் முதலில். இது இவருக்கு முதல் படமென்றால் நம்பவே முடியாது. அவ்வளவு பர்பெக்ட் மேக்கிங், ஓவ்வொரு காட்சியிலும் அவ்வளவு ட்டெயிலிங். காஸ்டிங், மேக்கிங், இசை, திரைக்கதை, வசனம், லொக்கேஷன் இப்படி எல்லா இடங்களில் பர்பெக்‌ஷனுக்கான இவரது பிடிவாதம் தெரிகிறது.  இப்படி ஒண்ணுமே இல்லாத கதையையே இப்படி எடுத்திருக்கான்னா மனுஷனுக்கு ஆடுகளம் மாதிரி ஒரு கதை கிடைச்சிருந்ததுன்னா பிச்சி பெடலெடுத்திருப்பார்.

பார்த்த ஒரு படத்தையே இப்படி நீட்டி நிமித்தி சொல்ல வேண்டியிருக்கே , இந்த ட்ரெய்லரைப்பாருங்க, மொத்தப்படத்தையும் இரண்டு நிமிஷத்துல சொல்லியிருக்காங்க.  உண்மையிலேயே செம்ம டேலண்டான டீம் இது. இந்த ட்ரெய்லரில் வரும் குரலே அந்த ஜமீனாக வரும் சோமு அவர்கள்தான் பேசியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=qBJ_UpyQw_s  

இந்தியாகிளிட்ஸ் இணையத்தளத்தில் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் பேட்டியைப் பாருங்கள். படத்தைவிட சுவாரஸ்யம் இந்த மனிதன். இது விமர்சனம் அல்ல, நல்ல சினிமாவிற்கான என் அறிமுகக் கட்டுரை

விஜய் பிரகாஷ் - ஒரு இசை அனுபவம்

நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் ஹோசானா, எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை இந்த மூன்று பாடல்களும், சமீபமாய் நீலத்தாமராவில் வரும் பகலுன்ன மான்ய வீதியிலே இந்த எல்லாப் பாடல்களுக்கும் எனக்கும் இருக்கும் ஒரு தற்செயலான ஒற்றுமை, இவை அனைத்தும் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்கள் மற்றும் இந்த அத்தனைப் பாடல்களைப் பற்றியும் நான் பதிவிலும் எழுதியிருக்கிறேன் என்பதுதான்.
 (அல்போன்ஸ், விஜய்பிரகாஷ் மற்றும் பென்னி தயாள்)
மேலும் விஜய் பிரகாஷ், எனக்கு இவரது குரல் பிடிக்கும் அல்லது இவர் பாடுவது பிடிக்கும் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு சம்பிரதாய வார்த்தையாக மாறிப்போய்விடும். ஜீ டீவியில் வரும் சூப்பர் சிங்கர் போன்ற ஒரு நிகழ்ச்சியிலிருந்தே ( ரீ ) இவரது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் என் தங்கையெல்லாம் இவன்தான் பைனல்ஸில் வின் பண்ணுவான் பாருன்னு போட்டி போட்டு பந்தயமெல்லாம் வைத்திருக்கிறோம். காரணம் இவரது திறமை மட்டுமல்லாமல், இவர் பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்தமான பிண்ணனிப் பாடகர் சுரேஷ் வாட்கரின் மாணவன் கூட என்பது விஜயின் மீதான கூடுதல் ஒட்டுதலுக்கு காரணம்

      இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் நிறைய பாடல்கள் பாடுகிறார். இவரது தமிழ் உச்சரிப்பும் வெகு அருமையாக இருக்கிறது. வெகுசமீபத்தில் கேட்ட இவரது தி பெஸ்ட் பாடல் ஒன்று. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வைரமுத்து அவர்களின் வரிகளுக்காக தேசிய விருது பெற்ற அந்தப்பாடல்தான், கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’. இந்த படமும் சரி பாடலும் சரி தேசிய விருது பெற்றபின்னரே நான் கேட்டேன். எப்படி இவ்வளவு நல்ல படத்தையும், இசையையும் இத்தனை நாட்களாக தவறவிட்டேன் என்ற வருத்தமாக இருக்கிறது. போகட்டும்.

      அந்தப்பாடல் படத்தில் இரண்டுமுறை வருகிறது. ஒன்று படம் ஆரம்பிக்கும் பொழுது டைட்டிலில் மற்றொன்று படம் முடிந்தபின்னர் வரும் எண்ட் டைட்டிலில். பாடலோடு ஆரம்பித்து பாடலோடு முடியும் படம் முதல்மரியாதைக்குப் பிறகு இந்தப் படம்தான் என்பது வைரமுத்து அவர்களின் பேட்டியிலிருந்து தெரிந்து கொண்ட ஒரு சுவாரஸ்யம். படம் ஆரம்பிக்கும் பொழுது டைட்டிலில் பாடியிருப்பது விஜய் பிரகாஷ், இறுதியில் பாடியிருப்பது உன்னிமேனன். இதில் உன்னி மேனன் அவர்களுடைய வெர்ஷன் அந்தத் தாய் இறந்தபின்னர் வரும் பாடல், எனவே சோகம் வழியும் பாவத்தோடு பாடியிருப்பார். அது கிளாஸ்.ஆனால் விஜயினுடைய வெர்ஷன் இருக்கிறதே அது க்ளாசிக். எப்பொழுதாவது இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், உண்மையில் கட்டிப்பிடித்துப் பெருமையாக சொல்லிக்கொள்வேன்  “நான் உன் ரசிகன்என்று

(பண்டிட் அஜய் சக்ரவர்த்தி)

            எப்போ, எத்தனை தடவை கேட்டாலும், இன்னும் சொல்லப்போனால் யார் பாடினாலும் அழகாக இருக்கும் ஒரு பாடல் ஹேராமில் வரும் இசையில் தொடங்குதம்மா”. இந்தப்பாடலை நானே வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடி மொபைலில் ரெக்கார்ட் செய்த வகையில் ஒரு 40 பதிவாவது இருக்கும். அதேபோல எத்தனையோ பாடகர்களும் சரி, பாட்டுப்போட்டிகளிலும் சரி பாடிய நிறைய வெர்ஷன்களை சேகரித்து வைத்திருக்கிறேன். அத்தனையையும் இங்கே குறிப்பிட முடியாவிட்டாலும் ஒரிஜினல் பாடலுக்கு அருகாமையில் வந்த இரண்டு பாடல்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். 

            ஒன்று விஜய் டீவியின் பாடும் ஆபிஸ் என்ற நிகழ்ச்சியில் திவ்யா என்ற பெண் பாடியது  லின்க் 1  இன்னொன்று ஜீ தமிழ் டீவியில் இசை அன்பிளக்டு என்ற நிகழ்ச்சியில் விஜய் என்ற ஒரு இளைஞன் பாடிய ஒரு வெர்ஷன் லின்க்2. இப்படி எத்தனையோ பேர் பாடக்கேட்டாலும், அந்த அஜய் சக்ரவர்த்தியின் ஒரிஜினலை அசைக்க முடியாது. யார் பாடினாலும் கவனிக்காத அல்லது முயற்சி செய்யாத பதம் அவருடையது. குறிப்பாக தேய்ந்து வளரும் தேன் நிலாவே என்ற வரியிலும் தேய்ந்திடாத தீபமாக ஒளிரவா என்கிற வரியிலும் வரும் அந்த தேன்நிலாவே-வையும் ஒளிர வா-வையும் மட்டும் கவனியுங்கள். அது நிச்சயம் யாருமே முயற்சி செய்யாத ஒரு பதம். தேன்ன்ன்ன்நிலாவே எனும் பொழுது குரலை உள்ளிழுத்துக்கொண்டு சிறிதாக மீண்டு வரும் அந்த யுக்தியை எனக்கு எப்படி டெக்னிக்கலாக சொல்வது என்று தெரியவில்லை. அவசியம் கவனியுங்கள்.

      அதுபோன்ற ஒரு யுக்தியை இந்த கள்ளிக்காட்டில் பாடலில் விஜய் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய பாடலைக் கேட்கும் முன்பு உன்னிமேன்னின் வெர்ஷனைக் கேட்டுக்கொண்டால் எளிதாக அதை உணர முடியும். கள்ளிக்காட்டில், கல்லொடச்சி, முள்ளுக்காட்டில், முள்ளுத்தைக்க என்கிற இந்த வார்த்தைகளை கவனித்துப்பார்த்தால் அவருடைய பிரயோகம் உங்களுக்கு புரியும்
 கள்ளிக்காட்டில் பிறந்த தாயே – என்ன
கல்லொடச்சி வளர்த்த நீயே!
முள்ளுக்காட்டில் முளைத்த தாயே – என்ன
முள்ளுத்தைக்க விடல நீயே!
காடைக்கும் காட்டுக்குருவிக்கும்
எண்டம் புதருக்கும் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி, ஒதுங்கத்தான் இடமுண்டா?
கரட்டுமேட்டையே மாத்துனா அவ
கண்ண புளிஞ்சி கஞ்சி ஊத்துனா...

                மிகவும் அரிதான ஒரு குரல் இவருடையது, அழமான அதே சமயம் அடிக்குரலில் உச்சஸ்தாயில் பிசிறின்றி வரும் இவருடைய குரல் உண்மையிலேயே அசாத்யமான ஒன்று. ஹேட்ஸ் ஆஃப் விஜய் பிரகாஷ். இந்தப்பாடலைப் பொறுத்தவரை விஜய் பிரகாஷும் சரி, இசையமைப்பாளர் ரகுநந்தனும் சரி, இருவரும் சேர்ந்து ரசிகர்களை ஒரு விவரிக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் மிகையான வார்த்தைகளாய் இருக்க முடியாது. அதுவும் பாடலில் இடையில் வரும் கீழ்கண்ட வரிகளில் பாவமப்பா... மற்றும் தியாகமப்பா... என்ற இந்த சம்பிரதாய வரிகளுக்கு பிறகு ஒரு சில வினாடிகளுக்கே வரும் சிறு   ஆலாப் ஒன்று இருக்கிறது. அதைக்கேளுங்கள், அதன் இசையமைப்பும் அதை பாடியிருக்கும் விதமும் வெகு சுகம். அங்கு பாடகனும் இசையமைப்பாளனும் சேர்ந்து நம்மை வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு அனுபவத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.
உளவுக்காட்டுல வெத விதைப்பா...
ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா....
ஆவரங்குலையில
கைதொடைப்பா... பாவமப்பா....
வேலிமுள்ளில் அவ வெறகெடுப்பா,
நாழி அரிசி வச்சி ஒலை எரிப்பா,
புள்ள உண்ட மிச்சம் உண்டு
உயிர் வளர்ப்பா, தியாகமப்பா.......
கெழக்கு விடியும் முன்னே முழிக்கிறா,
அவ உழக்கை  புடிச்சித்தான் உழைக்கிறா,
மண்ணக் கிண்டிதான் பொழைக்கிறா
உடல் மக்கிப்போகும் மட்டும் உழைக்கிறா....
 
****************************************************** 
     
        இந்தப்பாடல் போக யுவராஜ் படத்தில் வரும் மன்மோகினி மோரே பாடல். (இந்தப்படத்திற்காக கம்போஸ் செய்து விஜய்பாடிய பாடல்தான் ஜெய்ஹோ, ஏதோகாரணங்களால் படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்தான் ஸ்லம்டாக் மில்லியனரில் பயன்படுத்தப்பட்டு ஆஸ்கார் வாங்கியிருக்கிறது. அதிலும் விஜய்தான் பாடியிருக்கிறார், அதுபோக ஹோசானா பாடலுக்கு விஜய் டீவியின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும், கள்ளிக்காடு பாடல் தேசிய விருது பெற்றிருப்பதும், உபரிச் செய்தி)  இதுவும் விஜய் பிரகாஷின் திறமைக்கு சான்றான பாடல், இதை விளக்குவதைக் காட்டிலும் கேளுங்கள், அனுபவியுங்கள், அவ்வளவுதான்.  இப்படி உச்சஸ்தாயில் பாடப்பட்ட பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், மூச்சுவிடும் ஒலியை குறைத்திருப்பார்கள், கட் பண்ணி ரெக்கார்ட் செய்திருப்பார்கள், ரெக்கார்டிங் ஜிமிக்ஸில் ஒட்டுவேளை செய்திருக்கலாம் என்று நினைத்த பல பாடல்களை இப்படி நேரடியாகப் பாடக் கேட்கும்பொழுது புல்லரித்துப் போவதுதான் நிஜம். 
இது ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் விஜய் பாடியஓம் சிவோஹம், பாடல்

இது விஜய்பிரகாஷின் பிரத்தியேக வலைதளம், இதில் இவர் சரீகம நிகழ்ச்சியில் பாடிய அருமையான பாடல்களின் தொகுப்பும் இருக்கிறது. அவசியம் கேளுங்கள்.  
கொண்டாடப்பட வேண்டியவர்கள், கலைஞர்கள்.