விஜய் பிரகாஷ் - ஒரு இசை அனுபவம்

நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் ஹோசானா, எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை இந்த மூன்று பாடல்களும், சமீபமாய் நீலத்தாமராவில் வரும் பகலுன்ன மான்ய வீதியிலே இந்த எல்லாப் பாடல்களுக்கும் எனக்கும் இருக்கும் ஒரு தற்செயலான ஒற்றுமை, இவை அனைத்தும் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்கள் மற்றும் இந்த அத்தனைப் பாடல்களைப் பற்றியும் நான் பதிவிலும் எழுதியிருக்கிறேன் என்பதுதான்.
 (அல்போன்ஸ், விஜய்பிரகாஷ் மற்றும் பென்னி தயாள்)
மேலும் விஜய் பிரகாஷ், எனக்கு இவரது குரல் பிடிக்கும் அல்லது இவர் பாடுவது பிடிக்கும் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு சம்பிரதாய வார்த்தையாக மாறிப்போய்விடும். ஜீ டீவியில் வரும் சூப்பர் சிங்கர் போன்ற ஒரு நிகழ்ச்சியிலிருந்தே ( ரீ ) இவரது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் என் தங்கையெல்லாம் இவன்தான் பைனல்ஸில் வின் பண்ணுவான் பாருன்னு போட்டி போட்டு பந்தயமெல்லாம் வைத்திருக்கிறோம். காரணம் இவரது திறமை மட்டுமல்லாமல், இவர் பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்தமான பிண்ணனிப் பாடகர் சுரேஷ் வாட்கரின் மாணவன் கூட என்பது விஜயின் மீதான கூடுதல் ஒட்டுதலுக்கு காரணம்

      இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் நிறைய பாடல்கள் பாடுகிறார். இவரது தமிழ் உச்சரிப்பும் வெகு அருமையாக இருக்கிறது. வெகுசமீபத்தில் கேட்ட இவரது தி பெஸ்ட் பாடல் ஒன்று. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வைரமுத்து அவர்களின் வரிகளுக்காக தேசிய விருது பெற்ற அந்தப்பாடல்தான், கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’. இந்த படமும் சரி பாடலும் சரி தேசிய விருது பெற்றபின்னரே நான் கேட்டேன். எப்படி இவ்வளவு நல்ல படத்தையும், இசையையும் இத்தனை நாட்களாக தவறவிட்டேன் என்ற வருத்தமாக இருக்கிறது. போகட்டும்.

      அந்தப்பாடல் படத்தில் இரண்டுமுறை வருகிறது. ஒன்று படம் ஆரம்பிக்கும் பொழுது டைட்டிலில் மற்றொன்று படம் முடிந்தபின்னர் வரும் எண்ட் டைட்டிலில். பாடலோடு ஆரம்பித்து பாடலோடு முடியும் படம் முதல்மரியாதைக்குப் பிறகு இந்தப் படம்தான் என்பது வைரமுத்து அவர்களின் பேட்டியிலிருந்து தெரிந்து கொண்ட ஒரு சுவாரஸ்யம். படம் ஆரம்பிக்கும் பொழுது டைட்டிலில் பாடியிருப்பது விஜய் பிரகாஷ், இறுதியில் பாடியிருப்பது உன்னிமேனன். இதில் உன்னி மேனன் அவர்களுடைய வெர்ஷன் அந்தத் தாய் இறந்தபின்னர் வரும் பாடல், எனவே சோகம் வழியும் பாவத்தோடு பாடியிருப்பார். அது கிளாஸ்.ஆனால் விஜயினுடைய வெர்ஷன் இருக்கிறதே அது க்ளாசிக். எப்பொழுதாவது இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், உண்மையில் கட்டிப்பிடித்துப் பெருமையாக சொல்லிக்கொள்வேன்  “நான் உன் ரசிகன்என்று

(பண்டிட் அஜய் சக்ரவர்த்தி)

            எப்போ, எத்தனை தடவை கேட்டாலும், இன்னும் சொல்லப்போனால் யார் பாடினாலும் அழகாக இருக்கும் ஒரு பாடல் ஹேராமில் வரும் இசையில் தொடங்குதம்மா”. இந்தப்பாடலை நானே வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடி மொபைலில் ரெக்கார்ட் செய்த வகையில் ஒரு 40 பதிவாவது இருக்கும். அதேபோல எத்தனையோ பாடகர்களும் சரி, பாட்டுப்போட்டிகளிலும் சரி பாடிய நிறைய வெர்ஷன்களை சேகரித்து வைத்திருக்கிறேன். அத்தனையையும் இங்கே குறிப்பிட முடியாவிட்டாலும் ஒரிஜினல் பாடலுக்கு அருகாமையில் வந்த இரண்டு பாடல்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். 

            ஒன்று விஜய் டீவியின் பாடும் ஆபிஸ் என்ற நிகழ்ச்சியில் திவ்யா என்ற பெண் பாடியது  லின்க் 1  இன்னொன்று ஜீ தமிழ் டீவியில் இசை அன்பிளக்டு என்ற நிகழ்ச்சியில் விஜய் என்ற ஒரு இளைஞன் பாடிய ஒரு வெர்ஷன் லின்க்2. இப்படி எத்தனையோ பேர் பாடக்கேட்டாலும், அந்த அஜய் சக்ரவர்த்தியின் ஒரிஜினலை அசைக்க முடியாது. யார் பாடினாலும் கவனிக்காத அல்லது முயற்சி செய்யாத பதம் அவருடையது. குறிப்பாக தேய்ந்து வளரும் தேன் நிலாவே என்ற வரியிலும் தேய்ந்திடாத தீபமாக ஒளிரவா என்கிற வரியிலும் வரும் அந்த தேன்நிலாவே-வையும் ஒளிர வா-வையும் மட்டும் கவனியுங்கள். அது நிச்சயம் யாருமே முயற்சி செய்யாத ஒரு பதம். தேன்ன்ன்ன்நிலாவே எனும் பொழுது குரலை உள்ளிழுத்துக்கொண்டு சிறிதாக மீண்டு வரும் அந்த யுக்தியை எனக்கு எப்படி டெக்னிக்கலாக சொல்வது என்று தெரியவில்லை. அவசியம் கவனியுங்கள்.

      அதுபோன்ற ஒரு யுக்தியை இந்த கள்ளிக்காட்டில் பாடலில் விஜய் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய பாடலைக் கேட்கும் முன்பு உன்னிமேன்னின் வெர்ஷனைக் கேட்டுக்கொண்டால் எளிதாக அதை உணர முடியும். கள்ளிக்காட்டில், கல்லொடச்சி, முள்ளுக்காட்டில், முள்ளுத்தைக்க என்கிற இந்த வார்த்தைகளை கவனித்துப்பார்த்தால் அவருடைய பிரயோகம் உங்களுக்கு புரியும்
 கள்ளிக்காட்டில் பிறந்த தாயே – என்ன
கல்லொடச்சி வளர்த்த நீயே!
முள்ளுக்காட்டில் முளைத்த தாயே – என்ன
முள்ளுத்தைக்க விடல நீயே!
காடைக்கும் காட்டுக்குருவிக்கும்
எண்டம் புதருக்கும் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி, ஒதுங்கத்தான் இடமுண்டா?
கரட்டுமேட்டையே மாத்துனா அவ
கண்ண புளிஞ்சி கஞ்சி ஊத்துனா...

                மிகவும் அரிதான ஒரு குரல் இவருடையது, அழமான அதே சமயம் அடிக்குரலில் உச்சஸ்தாயில் பிசிறின்றி வரும் இவருடைய குரல் உண்மையிலேயே அசாத்யமான ஒன்று. ஹேட்ஸ் ஆஃப் விஜய் பிரகாஷ். இந்தப்பாடலைப் பொறுத்தவரை விஜய் பிரகாஷும் சரி, இசையமைப்பாளர் ரகுநந்தனும் சரி, இருவரும் சேர்ந்து ரசிகர்களை ஒரு விவரிக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் மிகையான வார்த்தைகளாய் இருக்க முடியாது. அதுவும் பாடலில் இடையில் வரும் கீழ்கண்ட வரிகளில் பாவமப்பா... மற்றும் தியாகமப்பா... என்ற இந்த சம்பிரதாய வரிகளுக்கு பிறகு ஒரு சில வினாடிகளுக்கே வரும் சிறு   ஆலாப் ஒன்று இருக்கிறது. அதைக்கேளுங்கள், அதன் இசையமைப்பும் அதை பாடியிருக்கும் விதமும் வெகு சுகம். அங்கு பாடகனும் இசையமைப்பாளனும் சேர்ந்து நம்மை வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு அனுபவத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.
உளவுக்காட்டுல வெத விதைப்பா...
ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா....
ஆவரங்குலையில
கைதொடைப்பா... பாவமப்பா....
வேலிமுள்ளில் அவ வெறகெடுப்பா,
நாழி அரிசி வச்சி ஒலை எரிப்பா,
புள்ள உண்ட மிச்சம் உண்டு
உயிர் வளர்ப்பா, தியாகமப்பா.......
கெழக்கு விடியும் முன்னே முழிக்கிறா,
அவ உழக்கை  புடிச்சித்தான் உழைக்கிறா,
மண்ணக் கிண்டிதான் பொழைக்கிறா
உடல் மக்கிப்போகும் மட்டும் உழைக்கிறா....
 
****************************************************** 
     
        இந்தப்பாடல் போக யுவராஜ் படத்தில் வரும் மன்மோகினி மோரே பாடல். (இந்தப்படத்திற்காக கம்போஸ் செய்து விஜய்பாடிய பாடல்தான் ஜெய்ஹோ, ஏதோகாரணங்களால் படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்தான் ஸ்லம்டாக் மில்லியனரில் பயன்படுத்தப்பட்டு ஆஸ்கார் வாங்கியிருக்கிறது. அதிலும் விஜய்தான் பாடியிருக்கிறார், அதுபோக ஹோசானா பாடலுக்கு விஜய் டீவியின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும், கள்ளிக்காடு பாடல் தேசிய விருது பெற்றிருப்பதும், உபரிச் செய்தி)  இதுவும் விஜய் பிரகாஷின் திறமைக்கு சான்றான பாடல், இதை விளக்குவதைக் காட்டிலும் கேளுங்கள், அனுபவியுங்கள், அவ்வளவுதான்.  இப்படி உச்சஸ்தாயில் பாடப்பட்ட பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், மூச்சுவிடும் ஒலியை குறைத்திருப்பார்கள், கட் பண்ணி ரெக்கார்ட் செய்திருப்பார்கள், ரெக்கார்டிங் ஜிமிக்ஸில் ஒட்டுவேளை செய்திருக்கலாம் என்று நினைத்த பல பாடல்களை இப்படி நேரடியாகப் பாடக் கேட்கும்பொழுது புல்லரித்துப் போவதுதான் நிஜம். 
இது ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் விஜய் பாடியஓம் சிவோஹம், பாடல்

இது விஜய்பிரகாஷின் பிரத்தியேக வலைதளம், இதில் இவர் சரீகம நிகழ்ச்சியில் பாடிய அருமையான பாடல்களின் தொகுப்பும் இருக்கிறது. அவசியம் கேளுங்கள்.  
கொண்டாடப்பட வேண்டியவர்கள், கலைஞர்கள்.

15 கருத்துரைகள்:

மோகன் குமார் said...

Good post. I too like some of his songs. Upcoming singer.

நிரூபன் said...

விஜய் பிரகாஷின் இசை ஸ்வரங்களின் லயங்களை எங்களோடு மீட்டிப் பார்த்தமைக்காகவும், அறிமுகம் செய்தமைக்காகவும் நன்றிகள் சகோ.

Nesan said...

நல்ல தகவல் நண்பரே!

பத்மா said...

thank u thanku ...
arumaiyana pathivu

dr.tj vadivukkarasi said...

beautiful song to float with.thank you for walking with us through the song... a little deep.continue the good work.

டெனிம் said...

இசையை போலவே மென்மையாக எழுதி உள்ளீர்,உங்கள் எழுத்து நடை மிக அருமையாக உள்ளது......நமக்கு இசையில் கொஞ்சம் அறிவு கம்மி,அதனால இப்படியே எஸ்கேப் ஆகிக்கிறேன்

சுந்தர்ஜி said...

விஜய் ப்ரகாஷிலிருந்து சுரேஷ் வாத்கர் வரை செல்லும் உங்களின் இசை மற்றும் திரைப்படங்கள் மீதான ஆர்வம் என் அலைவரிசையை ஒத்திருக்கிறது. ஆழமாய் ஈர்க்கிறது.

பண்டிட் அஜய் சக்ரவர்த்தி பற்றிய குறிப்பிடலும் அப்படியே.

குறிப்பிட்ட பாடல்களில் கரைந்துகொண்டிருக்கிறேன் முரளி.

அடிக்கடி வருவேன் இனி.

பரிசல்காரன் said...

வாவ்!

ஆழமா எழுதிருக்கீங்க பாஸ்..

அருமை...

இவ்ளோ பாடல் பாடிருக்காரா வி-பி? நான் இவரோட + ஹரிசரணோட பாடல்களை கவனிச்சு மறுபடி மறுபடி கேட்பேன்..

சிஸ்டம் தர்றப்ப உங்க கலெக்‌ஷனையும் அதுல தனி ஃபோல்டர்ல போட்டுத் தாங்க. அதுக்கு தனி ஃபீஸ் உண்டு!

(இசையில் தொடங்குதம்மா என்
ஆல்டைம் ஃபேவரைட்ஸ்ல ஒண்ணு...)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன்குமார்
தேங்க்ஸ் தல, ரொம்ப நாளாச்சு நம்ம பக்கம் வந்து... :-) அப்கம்மிங்ன்னு சொல்ல முடியாது, அல்ரெடி நல்ல உயரத்துக்குப் போயிட்டான். இனி அதை தக்கவைத்துக்கொள்ளத்தான் சிரம்ப்படனும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@நிரூபன்
நன்றி நண்பா, :-) எல்லாமே இப்படி நல்ல பாடலா அமைவதுகூட ஒரு வரம்தான்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@நேசன்
நல்ல தகவலா? ரைட்டு. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@பத்மா
அடடே! பத்மா மேடமா? இப்படி பாட்டு போட்டு கூப்பிட்டாத்தான் வறிங்க.. ம்ம்ம் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வடிவுக்கரசி
கண்டிப்பா மேடம். தேங்க்யூ:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@டெனிம்
//நமக்கு இசையில் கொஞ்சம் அறிவு கம்மி//
ஹலோ ஹலோ, மச்சி நமக்கும் அதே கதிதான். வெறும் கேள்வியறிவு மட்டும்தான். இப்படி தலதெறிக்க ஓடினா எப்படி? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுந்தர்ஜீ
//விஜய் ப்ரகாஷிலிருந்து சுரேஷ் வாத்கர் வரை செல்லும் உங்களின் இசை மற்றும் திரைப்படங்கள் மீதான ஆர்வம் என் அலைவரிசையை ஒத்திருக்கிறது. ஆழமாய் ஈர்க்கிறது.
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி பற்றிய குறிப்பிடலும் அப்படியே.
குறிப்பிட்ட பாடல்களில் கரைந்துகொண்டிருக்கிறேன் முரளி.
அடிக்கடி வருவேன் இனி//

அவசியம் வாங்க ஜீ. யுவராஜ் படத்தில் வரும் அந்தப்பாடலைக் கேளுங்கள் அது ஒரு அற்புதமான கம்போஷிசனும் கூட..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.