கடவுள், இருந்துவிட்டுப் போகட்டுமே.....

ஷம்முகுட்டி, அக்காவின் கடைக்குட்டி. ஒருவயது ஆகிறது. தினமும் மதியம் சாப்பிட வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளது சாகசங்களைப் பட்டியலிட்டு விட்டுத் தான் சோறே போடுவார்கள். போலவே, அவளும் தினமும் நிற்பதும், நடப்பதும், சிரிப்பதுமாய், தினுசு, தினுசாக எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு கூட  “டேய் மாமான்னு சொன்னாடாஎன்றார்கள், அக்காவும், அம்மாவும். மூணு மணிநேரம் பக்கத்திலேயே உக்காந்து தேவுடு காத்துப்பார்த்தேன். ம்ஹூம்.  ‘மாகூட வரலை.

போனவாரத்தில் ஒரு நாள், வீட்டிற்குள் நுழைந்ததுமே “இங்க வா என்று சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பி குட்டிம்மா எப்படி சாமி கும்பிடணும்னு கேட்டதும்தான் தாமதம், தத்தக்கா பித்தக்காவென நடந்து சாமி ரூமிற்கு சென்று சாமி படங்களுக்கு முன்பாக நின்று கைகளைக் கூப்பி கண்களை மூடிக்கொண்டாள். பிறகு மணி அடிப்பது, விபூதி தின்பது என வரிசையாக ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனாள். ஒருபக்கம் அவளது செய்கைகள் ஆச்சர்யமாக இருந்தாலும், அம்மாவின் செய்கைகள் ஆயாசமாக இருந்தது.

அம்மாவிடம் கடவுள்கள் சம்பந்தமாக நிறைய பேசியிருக்கிறேன். அம்மாவிற்கும் சரி, அப்பாவிற்கும் சரி, கடவுள்கள் குறித்து பொதுவாக எல்லோருக்குமே இரண்டாம் கருத்து வந்துவிட்ட காலம் இது. சாமி கும்பிடுவது என்பது ஒரு சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. திருப்பதி கோவிலில் இரண்டு நாட்கள் நின்று சாமி கும்பிட்டு வந்ததைப் பெருமையாக பேசும் பக்கத்துவீட்டுக்கார்ர்களிடம் “ஆண்டவன் எங்கேயும் இருக்கான், கண்ணை மூடி பெருமாளேன்னு கும்பிட வேண்டியதுதானே? அங்க போயி பார்த்தா தான் காப்பாத்துவானா? என்று அம்மா வியாக்யானம் பேசுவார்கள். அதே அம்மாவிடம் “ஏம்மா, சாமி தான் எங்கேயும் இருக்காரே, நம்ம சாமி ரூம்ல இருக்கிற படங்களை எல்லாம் எடுத்து விடலாமே? ஒரு விளக்கையோ இல்லை வெற்றுச் சுவரையோ பார்த்து கும்பிட்டுக்கிட்டு போயிடலாமேன்னா? பதில் இருக்காது.

அம்மாவிடம் இவ்வளவு பேசும் என்னிடம் நீயேன் வருடாவருடம் சபரிமலைக்கு போகிறாய்? என்றால் பதில் இல்லை. காரணம் என் பாட்டி, சின்ன வயதிலிருந்தே இல்லாத சாமியையும், பூதத்தையும் கதை கதையாக சொல்லியே வளர்த்திருக்கிறார். இன்னமும் பாதாள உலகமும், ஏழு தலை பூதமும் இருப்பதாக நம்புகிற குழந்தைகள் இருக்கத் தானே செய்கிறார்கள். மூளை வளரும் பொழுது என்ன செலுத்தப்படுகிறதோ, அதை வெளியே எடுத்தெறிய நிறைய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சிரமப்பட்டால் அது முடியும், ஆனால், நானோ அம்மாவோ சிரமப்பட விரும்பாதவர்கள். தாம் உண்மை என்று நம்பிவிட்ட ஒன்றை விமர்சனத்துக்குள் கொண்டு போக விரும்பாதவர்கள். அதில் கிடைக்கும் நம்பகத்தன்மைக்காக அதை விட்டுக் கொடுக்க முன் வராதவர்கள்.

இப்படி எங்களைப்போல நிறையபேர் இருக்கக்கூடும். அதனாலேயே அம்மாவிடம் சொல்வேன். நம்முடைய தவறுகள் நம்மோடு போகட்டும். இனிவரும் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள். கடவுள் பற்றிய எந்த கருத்தையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்காய் விபரம் தெரிந்து வளரும்பொழுது தேவையெனில் கடவுள் இருக்கட்டும் அல்லது போகட்டும், ஆனால் அது அவர்களின் விருப்பமாக இருந்துவிட்டு போகட்டுமே. இப்படி வெள்ளி, சனி, பூஜை, சாமி, விபூதி இப்படி சம்பிரதாயங்களை பழக்காமல் இருக்கலாமே என அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு பாட்டி, என் குழந்தைகளுக்கு அம்மா தானே பாட்டி. அவர்களின் கடமை போல இது. இன்று இவள். ஷம்முகுட்டிக்கும் அதை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.

கோவையிலுள்ள என் அண்ணன் ஒருவரின் மகள்கள் இருவரும் காலையில் எழுந்ததும் குளித்த மறுநிமிடம் சாமி முன்நின்று சமஸ்கிருதம் உட்பட பல பக்திப்பாடல்களை அட்சரசுத்தமாக பாடுவார்கள். அவர்களோடு ஒப்பிட்டு தன் மகனை திட்டிக்கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்திருக்கிறேன். இந்த திட்டு அவர்கள் குழந்தையைப் போல தன் குழந்தை பாடவில்லை என்பதால் என்றால் சரி, சாமி பாட்டு பாடலைங்கிறதா இருந்தா? யோசிக்க வேண்டியிருக்கு. கோவிலுக்குப்போய் நெத்தி நிறைய விபூதி வைத்துக்கொண்டு பழமாக திரும்புபவர்களை நல்லவர்கள் என்று சொல்வதைவிட, அப்படிச் செய்யாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்லி குழந்தைகளை வளர்ப்பது என்னைப்போல ஒரு ரெண்டுங்கெட்டான் மனநிலைக்கு அல்லவா கொண்டுவந்து விடும்.கடவுளைப்பற்றிய எந்த விவாதமும் கடவுளைப்போலவே முற்றுப்பெறாமல் நின்றுவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை சிலருக்கு அன்பு கடவுள், சிலருக்கு உணவு கடவுள், சிலருக்கு தொழில் கடவுள், சிலருக்கு பணம் கடவுள், சிலருக்கு தாமே கடவுள், சிலருக்கு சிலை கடவுள்.  இருந்தும் என்னால் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பிலிருந்து என்னை ஒரளவிற்கு முறைப்படுத்திக்கொள்ள முடிந்தது. அன்பே சிவம் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்று கொண்டும் இருக்கிறேன். பரீட்சைக்கு முன்பு சாமி கும்பிடுவது, எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் உண்டியலை நிறைப்பது என முன்பிருந்த சில பல  விஷயங்களை மெதுமெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். எஸ்.வி. சேகரின் நாடகங்களைக் கேட்கத் துவங்கியது முதல் கடவுளிடம் என்னுடைய ஒரே வேண்டுதல் “ஆண்டவா, எல்லாரையும் நல்லபடியா வைப்பாஇவ்வளவுதான். அது வீட்டில் கும்பிட்டாலும் சரி, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்றாலும் சரி. 

இப்படி மெதுமெதுவாக மாற்றிக்கொண்டிருந்தாலும் தும்மல் வரும்போதும், துக்கம் வரும்போதும் “ஈஸ்வராஎன்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். சோகம் சூழ்ந்த வேளையில் நல்லதா ஒரு இசையைக் கேட்கத் துடிப்பது போல எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாமிருக்க பயமேன் என்று சொல்லியபடி சிரிக்கும் குழந்தை முருகன் தேவைப்பட்டவனாகவே இருக்கிறேன்.

         என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை. ஒருநாள் மதியம் ஷம்முக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். நானும், கோகுலும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென “மாமா, பாப்பா சிரிக்கிறா! பாப்பா தூங்கிட்டே சிரிக்கிறா!என கத்தினான். நான் அதுக்கென்ன இப்போ நீ கத்தி தூங்குறவளை எழுப்பிடாதேன்னு எரிச்சலாய் சொல்லிவிட்டு டீவிக்கு திரும்பும்போது மறுபடியும் சொன்னான் “மாமா, தூக்கத்துல சாமிகிட்ட பேசுறா மாமா, அதுனாலதான் பாப்பா சிரிக்கிறாஎன்றான். அவனையும் பார்த்தேன், திரும்பி அம்மாவையும் பார்த்தேன். அம்மா என்னைப் பார்த்து சிரித்தார்கள். நான் கோகுலைப் பார்த்து சிரித்தேன். கடவுள் சம்முவோடு சிரித்துவிட்டுப் போகட்டும்

26 கருத்துரைகள்:

பரிசல்காரன் said...

ப்பா! என்ன எழுத்து முரளி..! இப்போதைக்கு எனக்கு உங்கள் ரைட்டப் கடவுளாகத் தெரிகிறது. நமஸ்கரிக்கிறேன்! 

btw, எழுத்துக்கு எழுத்து ஆமோதிக்கிறேன்.

sugirtha said...

முரளி,

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க... இதை அழகு, நம்பிக்கை, குழந்தை வளர்ப்பு/திணிப்பு இத்தனை விஷயங்களையும் உள்ளடக்கிய ஒரு பதிவா நான் பாக்கிறேன்.

தூக்கத்துல சாமியோடு சிரிக்கறது அழகு! ஒரு வயசுக்கும் குறைவான குழந்தைகளிடம் அதை நிறைய பார்த்திருக்கிறேன், நானும் கூட யோசிச்சிருக்கேன், எதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள தெரியா வயதிலும், கனவில் என்ன வரும்? ஏன் சிரிக்கிறார்கள்?
காரணம் எதுவோ/யாரோ - தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின் அழகை மிஞ்சும் அழகை இதுவரை எங்கேயும் கண்டதில்லை.

நம்பிக்கை - கடக்கவே முடியாத தருணங்களை கடக்க, ஏதாவதொரு நம்பிக்கை, ஏதாவதொரு சார்பு, ஏதாவதொன்று, எல்லோருக்கும் தேவையாத்தான் இருக்கிறது...
//சோகம் சூழ்ந்த வேளையில் நல்லதா ஒரு இசையைக் கேட்கத் துடிப்பது போல எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாமிருக்க பயமேன் என்று சொல்லியபடி சிரிக்கும் குழந்தை முருகன் தேவைப்பட்டவனாகவே இருக்கிறேன். // :)

இப்போதெல்லாம் குழந்தை வளர்ப்பு தான் மிக கஷ்டமான காரியமாக இருக்கிறது. நாளைய சமுதாயத்தின் மீதான அக்கறை எல்லோரிடத்திலும் இருக்கிறது. எனவே எக்கச்சக்கமான கருத்துக்கள்/டிப்ஸ், இணையத்திலும், சக பெற்றோரிடமும், குடும்பத்தாரிடமும்... இருந்து அம்மாக்களுக்கு/பாட்டிக்களுக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் ஓரளவிற்கு உதவினாலும் கடைசியில் குழப்பமே மிஞ்சும். ஏனெனில் இதில் ஒருவர் சொல்வதைபோலவே எல்லோரும் சொல்வதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு இயல்பு, அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும், வழிநடத்த வேண்டும் என்றே நம்புகிறேன்.


//என்னால் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பிலிருந்து என்னை ஒரளவிற்கு முறைப்படுத்திக்கொள்ள முடிந்தது.// ஷம்முகுட்டிக்கும் முடியும்! :)


//அவர்களோடு ஒப்பிட்டு தன் மகனை திட்டிக்கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்திருக்கிறேன். இந்த திட்டு அவர்கள் குழந்தையைப் போல தன் குழந்தை பாடவில்லை என்பதால் என்றால் சரி, சாமி பாட்டு பாடலைங்கிறதா இருந்தா? யோசிக்க வேண்டியிருக்கு.//

ஒரு நம்பிக்கை திணிப்பைக் காட்டிலும் - ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு குறை கூறும் முறையை கையாள்வது, அது என்ன விசயத்திற்காக எனினும், குழந்தையின் ஆழ்- மனதை மிக கடுமையாக பாதிக்கும் என்று நம்புகிறேன். சாமி பாட்டு மட்டுமல்ல வேறெந்த பாட்டையும் ஒருவரைப்போல இன்னொருவர் ஏன் பாட வேண்டும்? ஒரு சுதாவைபோல் ஏன் ஒரு ப்ரியா இருக்க வேண்டும்? ப்ரியா ஏன் ப்ரியாவாகவே இருக்கக் கூடாது? சுதா பாடினால், ப்ரியா ஆடட்டுமே? இது என்னுடைய கருத்து, இப்படி ஒவ்வொரு அம்மாக்களுக்கும் ஒவ்வொரு கருத்து :)

அன்புடன் அருணா said...

That was just lovely and matching with my thoughts! A grand boquet! Sorry no tamil fonts!

பிரேமாவின் செல்வி said...

அருமையான பதிவு!

கிராமத்தான்-சரவணன் said...

நல்ல பதிவு !

அன்பே சிவம்: அனைவரையும் அன்பாகப் பார்க்கும் பாங்கைப் பெற என்ன முயற்சி செய்யலாம்?
FYI நான் எப்போதும் முகத்தை கடுகடு வென வைத்திருப்பவன். :-(

ஷர்புதீன் said...

almost this thoughts close with mine ...

முரளிகுமார் பத்மநாபன் said...

@பரிசல்காரன்
பாஸ்! நன்றீ நன்றீ நன்றீ

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
ரொம்ப நாளாச்சு சுகிர்தா, இப்படி பதிவு மாதிரி பின்னூட்டம் வந்து :-)
அதுக்காக ஸ்பெசல் தேங்க்ஸ்

//ஷம்முகுட்டிக்கும் முடியும்! :)// அது சரி, ஆனால் குழப்பமின்றி முடிய ஏதுவாயிருக்குமென நினைத்தேன்.

//ப்ரியா ஏன் ப்ரியாவாகவே இருக்கக் கூடாது? சுதா பாடினால், ப்ரியா ஆடட்டுமே? இது என்னுடைய கருத்து// எல்லா அம்மாக்களும் இப்படி கருதினால்தான் பரவாயில்லையே...

:-)

ஆதவா said...

நம்பிக்கை தான் கடவுள்! நாம் எதன் மீது எங்கே நம்பிக்கை வைத்திருக்கிறோமே அங்கேயெல்லாம் கடவுள் தெரிகிறார். கடவுள் மனரீதியாக உணரவேண்டிய அரூபம்!
ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை கடவுளைக் காட்டுவதில்லை!

நல்ல பதிவுங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
நன்றி மேடம், அப்பாடா இப்போதா நிம்மதியா இருக்கு, பூங்கொத்தை வாங்கிவிட்டேன் எப்படியோ... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@பிரேமாவின் செல்வி
மிக்க நன்றி மேடம் தொடர்ந்து வாங்க, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

காற்றில் எந்தன் கீதம் said...

//என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை.//

மிக அழகான யதார்த்த வரிகள்.... பூசி மெழுகாத ஒரு பதிவை படித்த திருப்தி நண்பரே.... வாழ்த்துக்கள்...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கிராமத்தான் சரவணன்
நன்றி பாஸ்

//அன்பே சிவம்: அனைவரையும் அன்பாகப் பார்க்கும் பாங்கைப் பெற என்ன முயற்சி செய்யலாம்?
FYI நான் எப்போதும் முகத்தை கடுகடு வென வைத்திருப்பவன். :-(//

என்னைக்கிண்டல் செய்றிங்க போலவே? உண்மையா கேட்டிங்கன்னா, கொஞ்சம் சிரிக்க முயற்சி பண்ணுங்க போதும்.. :-)

எங்க இங்கிருந்தே ட்ரை பண்ணுங்க பார்க்கலாம், :-( போடக்கூடாது, :-) போடனும்....
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷர்புதீன்
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
//நம்பிக்கை தான் கடவுள்! கடவுள் மனரீதியாக உணரவேண்டிய அரூபம்!
ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை கடவுளைக் காட்டுவதில்லை//
உண்மைதான் ஆதவா:-)

கோபிநாத் said...

தல...வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன் ;))

\\தாம் உண்மை என்று நம்பிவிட்ட ஒன்றை விமர்சனத்துக்குள் கொண்டு போக விரும்பாதவர்கள். அதில் கிடைக்கும் நம்பகத்தன்மைக்காக அதை விட்டுக் கொடுக்க முன் வராதவர்கள்.
\\

அட்டகாசம் ;))

இங்கையும் 2 வாலுங்கள் உண்டு...அவர்கள் பேசுவதற்க்கு எல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான் விளக்கம் தெரியும் ;)

இளங்கோ said...

குழப்பி விட்டுட்டீங்களே பாஸ்...
பட், நம்பிக்கை தானே வாழ்க்கை. கடவுள் இருந்து விட்டுப் போகட்டும்.

பாச மலர் / Paasa Malar said...

நன்கு வார்க்கப்பட்ட அனுபவம்...பெரியவர்களே குழம்பும்போது, தடுமாறும்போது குழந்தைகள் என்ன செய்வார்கள்..வளர வளரப் புரியும்...அழகிய தலைப்பு.

சுந்தர்ஜி said...

கடவுள் எல்லோரிடத்திலும் எல்லா இடத்திலும் இருப்பதை நாம் அவசியம் நேர்கையில் மட்டுமே உணர்கிறோம்.

மண்பானையில் நிரம்பியுள்ள ஒப்பிடமுடியாத சுவையான நீரை மிகுந்த தாகமுள்ளவனும் அந்தச் சுவையை அறிந்தவனுமே பருகுகிறான்.தாகம் தணிகிறான் என்பதாகத்தான் கடவுள் பற்றிய அனுபவமும்.

கடவுளின் முன் வைக்கப்படும் ப்ரார்த்தனைகளின் மொழி வேறு யாருடனும் பங்கிட்டுக் கொள்ளக்கூடியதாகவோ பாரம் தீர்ப்பதாகவோ இருப்பதுமில்லை.

இந்த அற்புதமான உலகத்தில் நாமும் இருந்துவிட்டுப் போகிறோம்.அங்கே கடவுளும் இருப்பதை நாம் அறிய நேருகையில் நமக்கான நேரம் முடிவுக்கு வருகிறது.

ஒரு பெரும் அடர் இருளில் ஒரு சிறுதீக்குச்சி எரியும்போது அந்த வெளிச்சத்தைச் சுற்றியுள்ள இருளின் இருப்பு பூதாகாரமாகத் தெரியவருகிறது.

நாம் அறிந்ததாக எண்ணுவது அந்தத் தீக்குச்சி அளவிலும் அறியாமை தீக்குச்சியைச் சூழ்ந்த பெரும் இருளாகவுமே இருக்கிறது.

க.பாலாசி said...

கிட்டத்தட்ட ரெண்டுபேரும் ஒரே மாதிரியான மனநிலையிலிருக்கிறோம் நண்பா.. உங்களுக்கு சபரிமலை, எனக்கு அம்மன், தீமிதி. எதோவொன்று அதை நம்பிக்கையாக்கி விட்டோம். நீங்கள் சொன்னதுபோலவே அதை விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் அப்படியே ஓடிவிடுவதைதான் நானும் விரும்புகிறேன். வருகின்ற தலைமுறைக்கு அன்பையும், தன்நம்பிக்கையையும் மட்டுமே கடவுளாக்குவது நம் கையில்தான்.

அருமையான எழுத்து, பகிர்வு.

சுசி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க முரளிகுமார்.

//“ஆண்டவா, எல்லாரையும் நல்லபடியா வைப்பா” இவ்வளவுதான்//
இங்க வந்ததில இருந்து என் வேண்டுதலும் இதான் :)

//என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை.//
எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க.. செம்ம்ம..

VELU.G said...

//என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை.
//

அந்த நம்பிக்கை சிதைந்தாலும் கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை.

நல்ல கருத்துள்ள கதை

shri Prajna said...

"என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை."


ஆமா முரளி நல்ல நம்பிக்கை , நல்எண்ணம் , நற்செயல் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படையான விஷயமே கடவுள் நம்பிக்கை தான்..


"சோகம் சூழ்ந்த வேளையில் நல்லதா ஒரு இசையைக் கேட்கத் துடிப்பது போல எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாமிருக்க பயமேன் என்று சொல்லியபடி சிரிக்கும் குழந்தை முருகன் தேவைப்பட்டவனாகவே இருக்கிறேன்"உயிருள்ள உறவுகளுக்கும் அப்பாற்பட்டு ஒரே ஆறுதல் கடவுள் நம்பிக்கை மட்டுமே..மூட நம்பிக்கைகளை தவிர்த்து நல்ல நம்பிக்கைகளை எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லனும்..


"என்னுடைய ஒரே வேண்டுதல் “ஆண்டவா, எல்லாரையும் நல்லபடியா வைப்பா” இவ்வளவுதான். அது வீட்டில் கும்பிட்டாலும் சரி, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்றாலும் சரி"

இது ரொம்ப நல்லா இருக்கு முரளி..

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

dr.ponz said...

பதிவின் ஒவ்வொரு வரிகளும் அருமை. அதிகம் படிக்க படிக்க,அறிவு வளர வளர,கடவுள் பற்றிய பயம் போயிடுது.ஆன கவனமா இல்லேன்னா,அந்த இடத்துல நம்மளையே அறியாம சாத்தான் குடியேற ஆரம்பிச்சுடுது.இதுக்கு கடவுள்னு ஒருத்தர் இருந்துட்டு போகட்டுமே.

அப்பாதுரை said...

சிக்கலான கருத்தை சிரிப்பு கலந்து எழுதியிருக்கிறீர்கள். நன்று.
குழந்தைகளிடம் பொய் சொல்லக்கூடாது என்பது பெற்றோர்களுக்குப் புரியப்போவதில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டு வரும் பொய் - பொய் என்று புரிவது அத்தனை எளிதல்ல. கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்பது ஏறக்குறைய ஜாதிவிட்டு காதலிப்பது/கலியாணம் செய்வது போல. stigmaவின் பயம் பொய்யை வாழ வைக்கிறது.
உண்டா இல்லையா என்பதற்குப் பதில் தேவையா இல்லையா என்ற கேள்வி வட்ட விவாதத்திலிருந்து வெளிவரச் செய்யுமோ?

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.