க்ளேமெண்ட் மேத்யூவும், ராம் சங்கர் நிக்கும்ப்த்தும்

 மழலைக் கனவின் ஆசிரியர்கள் : க்ளேமெண்ட் மேத்யூவும், ராம் சங்கர் நிக்கும்ப்த்தும் 

ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே டவுன்லோட் செய்தும் பார்க்காமல் வைத்திருந்தேன் மேலும் அதிகம் கவனம் இல்லை இந்தப்படத்தில்.  ரொம்ப சிம்பிளா நம்ம உலக சினிமா பாஸ் சொல்லியிருந்தார், “இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி இப்படி. இந்த ஆட்டோகிராப் மாதிரிங்கிற விட்டுறலாம். சரி பாஸ் வேற சொல்லியிருக்கார் பார்க்கலாம்ன்னு பார்த்தேன். உண்மைதான். ஒரு ஒண்ணரை மணிநேர திரைப்படம் என்ன செய்துவிட முடியும், என்று கேட்பவர்களுக்கான படம். என்னென்னவோ செய்தது. விபரம் தெரிந்த பள்ளி பருவத்திற்கு சென்று மீள்கிறது நினைவுகள். சசி, கல்யாணி டீச்சர், டிராயிங் மாஸ்டர் கோவிந்து, மாலா டீச்சர், கதிர்வேல் அய்யா, தர்மலிங்கம் மாஸ்டர் இப்படி ஆசிரியர்களும் சக வகுப்புத் தோழர்களின் முகம் முதலாய் நினைவில் வருகிறது. பீப்பீப்பூமரத்தில் மீண்டும் பூக்கள் பூக்கத்தொடங்கியிருக்கிறது.


 மிகப்பெரிய இசை நிகழ்ச்சிக்கு முன்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ஒரு மேதையோடு ஆரம்பிக்கிறது படம். அவரது அம்மாவின் மரணம் குறித்து, பிரான்ஸிலிருந்து ஒரு போன் வருகிறது. நிகழ்ச்சி முடிந்து ஊருக்கு வருகிறார். அம்மாவின் சடங்குகள் முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் அவரை, அவரோடு பள்ளியில் படித்த சக மாணவன் சந்திக்கிறான். கிட்டதட்ட 50 வருடங்கள் கழித்து. இதை அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாக வைத்திருந்தார். அவருக்குப் பிறகு இதை உனக்காக நான் இதை பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன் என்று இருவருக்கும் பொதுவான ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பைக் கொடுக்கிறார். அவர்தான் க்ளெமண்ட் மேத்யூ. பள்ளியின் நுழைவாயிலோடு ஆரம்பிக்கிறது அவரது நாட்குறிப்பு.

ஏழை மாணவர்களுக்காக சில பெரும்பணக்காரர்களால் நடத்தப்படும், கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு பள்ளி அது. மிகவும் கடுமையான தலைமை ஆசிரியர், எந்த தவறுக்கும் தகுந்த தண்டனை என்ற மேம்பட்ட குறிக்கோளோடு மாணவர்களை அடக்கி வைத்திருக்கிறார். அந்த பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார், மேத்யூ. முதல் நாளிலேயே, அவரது கண் முன்பாக சக ஆசிரியர் ஒருவரின் கண்ணில் பலமான அடி விழுகிறது. அவருக்கு முன்பாக அந்த பணியில் இருந்த ஆசிரியர் தனது கையில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை காட்டுகிறார். மாணவர்களின் அட்டகாசங்களை ஒருவர் மாறி ஒருவராக அடுக்குகின்றனர். மேத்யூ அதற்கான தண்டனைகளை கவனிக்கிறார். இப்படியான தண்டனைகள் அவர்களை எந்த விதத்திலும் திருத்தாதே, மேலும் அவர்களை இன்னுமல்லவா கெடுத்துவிடும் என தலைமை ஆசிரியரிடம் அது குறித்து பேசுகிறார். அவர், நீ இந்த இடத்திற்கு புதிது, விரைவிலேயே அவர்கள் நடத்தும் பாடங்கள் உனக்கு புரிய ஆரம்பிக்கும், அப்பொழுது, எனது Action- Reaction விதி உனக்கு பிடிபட ஆரம்பிக்கும், என்கிறார்.

தனது முதல் வகுப்பிலேயே மாணவர்களின் அட்டகாசங்களுக்கு ஆளாகிறார். இருப்பினும் தனது அன்பால் மாணவர்களை மெல்ல திசைதிருப்ப முயற்சிக்கிறார். மெல்ல மாணவர்களைப் படிக்கிறார், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயத்தை மெல்ல மெல்ல ஒவ்வொரு மாணவர்களின் உள்ளத்திலும் பதியச் செய்கிறார். இசை, கோரஸ் எனும் குழுப்பாடலை பாடச் செய்கிறார். அதிலும் தொடர்ந்து தோல்விகளால் அவதிப்படும், சகமாணவர்களால் கிண்டல் செய்யப்படும் பிர்ரே மொரானே என்னும் மாணவனின் அசாத்தியமான குரலை, பிரத்யேகப்படுத்துகிறார். இந்த கோரஸ் பாடல். மெல்ல பள்ளியில் அமைதியைத் தருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே ஒரு மெல்லிய புரிதலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆசிரியரின் கண் காயத்துக்கு அதற்கு காரணமான மாணவனையே அவருக்கு உதவியாக அனுப்புவதும், அந்த ஆசிரியர் படும் சிரமம், அந்த மாணவனை மெல்ல திருத்துவதும, இப்படியாக மாணவர்கள் ஆசிரியர்களை அணுகும் முறையிலேயே மாற்றம் கிடைக்கிறது. எல்லாம் சரியாக செல்லும் பொழுது ஒரு தவறுக்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகிறார், மேத்யூ. அவரால் உருவாக்கப்பட்ட அந்த சிறுவன்தான் பின்னாளில் மிகப்பெரிய இசைமேதையாக ஊருக்குத் திரும்பிவரும், மொரானே.

கண்கள் கலங்கி பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறார், மொரானே. அதிலும் நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள், “நல்ல மாணவர்களை உருவாக்கி விட்டேன் என்கிற திருப்தியோடு இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறேன், மீண்டும் தோல்வியடைந்த ஒரு இசைக்கலைஞனாக, வேலையற்ற ஆசிரியனாக என முடிகிறது. இப்போ அவர் என்ன ஆனார்? என்கிற கேள்விக்கு அழகான சந்தோசமாக ஒரு பதிலை கிளைமாக்ஸாக்கியிருப்பார்கள், படம் பார்க்காதவர்களுக்கான ஒரு சின்ன சஸ்பென்ஸ், இது.

மொரானேவும் இஷானும், மேத்யூவும் நிக்கும்த்தும்.


சமீபத்தில் பார்த்துப் பிடித்திருந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத படம் தெய்வத்திருமகள். காரணம் அந்த காப்பி ஃபார்மட். அந்த அருமையான கருவை எடுத்துக்கொண்டு, சீன் மேக்கிங் எனப்படும் திரைக்கதையை நமக்கு ஏற்றாற்போல எழுதி இயக்குவது, ஒரு கலை. அதை வெகு அழகாக சில படங்களில் உணர முடியும். எனக்கு கோரஸ் படம் பார்த்தவுடன் மனதிற்கு தோன்றிய விஷயம், அமீர்கான் இயக்கத்தில் வெளிவந்த தாரே ஜமீன் பர் படம்தான். இந்த இரு படங்களுக்கும் ஒரே ஒற்றுமை வாழ்வில் தோல்விகளை மட்டுமே பெற்று வரும் சிறுவனுக்கு வெற்றியைப் பரிசளிக்கும் ஆசிரியரின் கதை எனும் படத்தின் மையக்கரு மட்டும்தான். இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடியான சில மசாலாக்கள் இங்கும், பார்வையாளனை மட்டம் தட்டி அவனுக்கு புரியவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் ஜஸ்டிஃபிகேஷன் செய்யாதிருத்தலுமென அங்கும் சூழலுக்கேற்றபடி இரு வேறு உலகங்களுக்கான பின்புலம் பின்னப்பட்டிருக்கும். முழுப்படத்தையும் பார்த்தால்தான் என்றில்லை, இன்னமும் தாரே ஜமீன் பர் படத்தில் இஷான் தனது ஓவியத்தை பார்க்கும்போதும், பரிசு வாங்கியபின்னர் தனது ஆசிரியரைக் கட்டிக்கொள்ளும் காட்சியை மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சரி, கண் கலங்காமல் இருந்ததில்லை.
     
கோரஸ், இன்னும் ஸ்பெசல். கண் கலங்க வேண்டிய அவசியம் கூட இல்லை, மிகவும் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்ள முடிந்த்து. ஹேப்பி எண்டிங் என்றூ சொல்வார்களே, அது போல பக்கா ஹேப்பி எண்டிங் படம். அவசியம் குழந்தை பெற்றவர்கள், இந்த இரண்டு படங்களையும் பார்த்து வையுங்கள்.

மிகவும் சாதாரணமாக கதைதான், ஆனால் அருமையான திரைக்கதையும், ரம்மியமான இசையும், மிகையற்ற நடிப்புதான் இந்தப்படத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது. ஒவ்வொரு காட்சியும் சில சில விஷயங்களை நியாபகப்படுத்துகிறது. சதா திருடிக்கொண்டேயிருக்கும் ஒரு மாணவன், ஆசியர்களுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு செய்து கொண்டிருக்கும் மாணவன், எப்பொழுதும் தவறுகளையும் தண்டனைகளையும் தொடர்ந்து பெற்றுவரும் மாணவன் இப்படி பள்ளி முழுவதும் வித்தியாசமான மாணவர்கள் என இப்படியாக ஒவ்வொரு மாணவர்களையும் அறிமுகப்படுத்தியவிதமும், மெரானேவின் அம்மாவிடம் காதல் வயப்படும், மேத்யூவும், அதில் அவரது ஏமாற்றமும், ஒரு மென்சோகக் கவிதை. மொரானேவிற்கும் மேத்யூவிற்கும் இடையே மெல்ல வரும் விரிசலும் அதை அவர் கையாளும் விதமும் என படம் நெடுக சின்னச்சின்ன கவிதைகளும், ஹைக்கூக்களுமாய் கொட்டிக்கிடக்கிறது.

குறிப்பாக பாப்பினட். முதல் நாளிலேயே, பாப்பினட் எனும் சிறுவனை சந்திக்கிறார். நாசி படையினரால் தன் பெற்றோரை இழந்த மாணவனை, உனது பெற்றோர்கள் அடுத்தவாரம் வந்துவிடுவார்கள என்று சொல்லியே அங்கே தங்க வைத்திருக்கின்றனர். அவனும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பள்ளி நுழைவாயிலில் காத்திருக்கிறான். படத்தின் இறுதிக்காட்சியில் ஒருவழியாக பாப்பினட்டின் கனவு நிறைவேறியது, ஆம் அவன் பள்ளியைவிட்டு வெளியேறிய நாள் சனிக்கிழமை, எனும் பொழுது என்னால் தனிச்சையாக சிரிக்க முடிந்தது.


ஒரு காட்சியில் உங்களுக்கு குழந்தைகள்? என்று கேட்கும் பெண்ணிடம் மேத்யூ, எனக்கு அறுபது குழந்தைகள் என்பார், அது எப்படி என அவளும் சரி, படம் பார்க்கு நாமும் சரி கேட்கப்போவதில்லை, ஏனெனில் அதை நாம் உணரத் தொடங்கியிருப்போம். இன்னொன்று இந்த விடியோவைப் பார்க்காமேலேயே மேலே உள்ள க்ரூப் போட்டோவில் யார் பாப்பினட், யார் மேத்யூ என்றெல்லாம் கண்டு பிடித்துவிட்டீர்களேயானால், நான் கொஞ்சமாவது சரியாத்தான் எக்போஸ் பண்ணியிருக்கேன்னு திருப்தியாயிடுவேன்.

நெடுங்குருதி - எழுதித் தீராத கதை

இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத்தொலைக்கலாம்,
செத்து என்ன ஆகப்போகிறது இருந்து தொலைக்கலாம்.
-கல்யாண்ஜி
முரளிஅவசியம் நெடுங்குருதி நாவலை வாசியுங்கள், நிச்சயம் உங்களால் வேம்பலையிலிருந்து வெளியே வரவே முடியாது என்று அடிக்கடி சொன்ன சாமிநாதனாலும், சமீபத்தில் அவன் இவன் படத்தைப் பார்த்து வெறுப்போடிருந்த சமயம், இது நெடுங்குருதியில்  வரும் கள்வர்களின் வாழ்வியலை சொல்ல எடுத்த முயற்சி, என கார்த்திகைப்பாண்டியன் சொன்னதிலிருந்தும் நெடுங்குருதியை வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிக்கொண்டே போனது. சேர்தளம் நூலகம் (பங்களிப்பு :வெயிலான்) மூலமாக இப்போது சாத்தியமானது. இதுதான் நான் சேர்தளத்தின் நூலகத்திலிருந்து நான் எடுத்த முதல் புத்தகம்.

பொதுவாக ஒவ்வொரு நாவலும் ஒரு வாழ்க்கை. ஒரு மனிதனை, அவனைச் சார்ந்தவர்களை, அவனது வாழ்க்கை முறையை மற்றும் சமுதாயத்தை மிகவும் நெருக்கமாக அறிமுகம் செய்து போவது தான் நாவல். அப்படி ஒரு கற்பனை கிராமமான வேம்பலையும் அதன் மனிதர்களுமான வேம்பர்களுமே, இந்த நெடுங்குருதி. இந்த புத்தகத்தின் மொத்த பக்கங்களிலும் வேம்பர்கள் ஓட்டமும் நடையுமாக, மூர்க்கமான கண்களோடு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறனர். நிச்சயம் அவர்களின் வாழ்க்கை, தேங்கிய நீர்க்குளங்களைப்போல இருப்பதில்லை. மாறாகஓடிக்கொண்டேயிருக்கிறது ஒரு ஆற்றைப் போல.

பொதுவாக எஸ்.ராவின் எழுத்து நடை, அதிகம் அலங்காரமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடை. என்னைப் போன்ற மெலோட்ராமா சினிமா ரசிகர்கள் எளிதில் அவரை நெருங்கிவிட முடியுமளவிற்கு மென்மையான ஒரு நடை.  இருந்தாலும் 500 பக்கங்களுக்கு சற்றே குறைந்த இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும்பொழுது சிறிது யோசித்தேன். அதிலும் தொடர்ச்சியாக இருபது பக்கங்களைப் படித்துவிட்டு அதிலேயே இரண்டு நாட்கள் மூழ்கிக் கிடக்கும் என்னைப் போன்ற ஆமை வாசகனுக்கு, கொஞ்சமாய் அலுப்பு தட்டினாலும் பாதியிலேயே முற்றுப் பெற்று விடும் என் வாசிப்பு. சரியாக இந்த நாவலைப் படித்து முடிக்க சரியாக 43 நாட்கள் பிடித்தது. அதிலும் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அந்த சுவாரஸ்யம் சிறிது குறையாமல் தொடர முடிவதுதான், இந்த நாவலின் சிறப்பு. வேம்பலையில், நாகுவோடு சேர்ந்து குருவி பார்ப்பதும், பட்டாம்பூச்சி பிடிப்பதுவுமாய் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் வாழ்ந்து வந்தது போலவே உணர்கிறேன்.

நெடுங்குருதியைப் பொறுத்தவரையில், நாகுவின் பார்வையில் தொடங்கி, அவன் குடும்பத்தில் பயணித்து, வேம்பலை கிராமம் முழுமைக்கும் பரவுகிறது. தனது மாயக்கரங்களால் தன்னிடமிருந்து வெளியேறுபவர்களை மீண்டும் உள்ளே இழுத்துக்கொள்ளும் வேம்பலை கிராமத்தைப்போலவே கதையும் சில நேரங்களில் வேம்பர்களையும், வேம்பலையையும் சில நேரம் நெருங்கியும், சில நேரம் விலகியுமே பயணிக்கிறது. திடுமென எந்த திருப்பங்களும் இந்தக் கதையில் இல்லை. மாறாக, மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வும் கிளையிலிருந்து உதிரும் ஒரு இலையைப்போல வெகு இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கையோடு தன்னைப் பொருத்திக்கொண்ட அந்த வேம்பலை கிராமத்தையும், வேம்பர்களையும் எந்த வித அலங்காரமுமின்றி படைத்திருப்பதும், கொஞ்சமும் புறக்கணிக்கமுடியாத அவரவர் நியாயங்களையும்எந்தவித நிர்ப்பந்தமுமின்றி சொல்லிக்கொண்டே போவதுமாய் தொடர்கிறது இந்த நாவல்.

இந்த நாவலை படித்து முடிக்கும்போது, வாழ்வும், சாவும் எவ்வளவு இயல்பானது என்பதை கதைப் போக்கிலேயே உணர்ந்து கொள்ள முடியும். சர்வ நிச்சயமாக ஒன்று சொல்ல முடியும், இரண்டு கிராமங்களில், நான்கு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், இப்படி, இவ்வளவு அருகாமையில் மனிதர்களை சந்தித்தது கிடையாது, போலவே வேம்பலைக்கு முன்னர் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஊரை அணுகியதும் கிடையாது.


கதை:
       கதை நாகு எனும் சிறுவனை மையப்படுத்தி தொடங்குகிறது. பிறகு அவன் அம்மா சுப்புத்தாய், அய்யா, சகோதரிகள் நீலா, வேணி என பயணிக்கிறது. நாகுவின் அய்யா களவும் செய்யாமல், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தாந்தோன்றித்தனமாக திரிபவர். திடுமென வீட்டிலிருந்து வெளியேறி பல வருடங்களுக்குப் பிறகு செருப்பு மூட்டையுடன் வீடு வந்து சேர்கிறார். பின்னொருநாளில் அவரைத்தேடி செருப்பு வாங்குவதற்கான முதலை கொடுத்த முதலாளி, அதை வசூல் செய்ய ஒரு பக்கீரை அனுப்பி வைக்கிறான்.  பக்கீரும், நாகுவின் வீட்டிலேயே தங்கி சிறு சிறு வேலைகளை செய்து வருகிறான். தன்னிடம் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் போகும்போது திரும்பி வாங்கிக்கொள்வதாக, பணத்தை நாகுவின் அம்மாவிடம் கொடுத்து வைக்கிறான். ஆனால் அய்யா அந்தப் பணத்தை குடித்து தீர்க்கிறார். மேலும் அதை ஒரு கட்டத்தில் திரும்ப கேட்கும் பக்கீரை குடிவெறியில் கொலையும் செய்து விடுகிறார் (இது கதையில் சொல்லப்படுவதில்லை).
               
      பல மாதங்கள் கழிந்து, பக்கீரைத்தேடி, அவன் மனைவி வேமபலைக்கு தன் இரு பெண் குழந்தைகளோடு வருகிறாள். அவளை நேர்கொள்ள தயங்கும் அய்யா, பக்கீர் வெளிநாடு சென்றிருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். பக்கீரின் மனைவியோடு, நீலாவும் வேணியும் பரிச்சயமாகின்றனர். நாகு அவள் குழந்தைகளோடு திரிகிறான். பஞ்சு பறிக்க போன இடத்தில் பாம்பு கடித்து நீலா இறந்து போகிறாள். பிறகு வேணிக்கு திருமணம் நடக்கிறது. மீண்டும் அய்யா பரதேசம் கிளம்புகிறார்.
  
சுப்புத்தாயின் அய்யா தன் மகளின் நிலையைக் கண்டு அவளை தன்னோடு அழைத்து செல்கிறார். வேம்பலையின் சோகம், அவர்களை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. இடையே அம்மா இறந்து போகிறாள். நாகு வளர்கிறான். தாத்தாவோடு சேர்ந்து மாட்டுதரகு செய்கிறான். அங்கு ரத்னாவதி என்னும் பரத்தையோடு இணக்கம் கொள்கிறான். குடிப்பதும், ரத்னாவதியோடு சல்லாபிப்பதுமாயிருக்கும் நாகு, ஒருநாள் ரத்னாவதியோடு கோவிலில் இருக்கும்போது அய்யாவைப் பார்க்கிறான். பிச்சைகாரர்களோடு ஒருவராய் இருக்கிறார். மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு அவரை தன்னோடு அழைத்து வருகிறான். ஆனால் தாத்தா ஒன்றுக்கும் உதவாமல் பரதேசம் போன நாகுவின் அய்யா மீது கோபத்தில் உமிழ்கிறார். ஒரு கட்டத்தில் நாகு அய்யாவைக் கூட்டிக்கொண்டு வேம்பலைக்கே திரும்புகிறான். மீண்டும் தன் சகாவான செல்லையாவோடு சேரும் அய்யா இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறார். மீண்டும் களவுத்தொழில் சூடுபிடிக்க ஊரில் கறிவாடையும், சாராய வாடையும் மிதக்கிறது, மாடு களவாட நாகுவும் போய்வருகிறான். ஒரு களேபரத்தில் ஒரு சக வேம்பனை கத்தியால் குத்திவிட்டு வேம்பலையை விட்டு வெளியேறுகிறான். மீண்டும் தாத்தாவிடம் சேர்கிறான்.
  
மீண்டும் வேம்பலை, ஒரு துர்கனவாக தொடர்கிறது. இறந்து போன நீலா அக்கா இவனை அங்கே அழைப்பது போல கனவு காண்கிறான். ஒரு கொலையை செய்துவிட்ட பயம் அவனை அலைக்கழிக்கிறது. பித்து பிடித்ததுபோல, நோய் கண்டவனைப் போல கிடக்கிறான். அவனுக்கு மந்திரித்து வர கோவிலுக்கு அழைத்து செல்கிறார் தாத்தா. அங்கே வேம்பலை தோழி, சவளைக்கால் ஆதிலட்சுமியை பார்க்கிறான். அவள் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்கிறாள். தாத்தாவிற்கும் அது சரியெனப்பட, நாகு திருமணம் செய்து கொள்கிறான். அவன் மனைவி மல்லிகாவை ரத்னாவதியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். அங்கே ரத்னாவதியோ, செய்துவந்த தாசித் தொழிலை நிறுத்திவிட்டு நாகுவால் உருவான குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடிவெடுக்கிறாள். பிள்ளையைப் பெற்றெடுக்க ஒத்தை ஆளாக எங்கோ இருக்கும் தன் அத்தையைத் தேடிச் சேர்கிறாள். இங்கே வேம்பலையில் இருக்கும் வேம்பர்களை கைநாட்டு எடுக்க அவர்களை தேடிப் பிடிக்கிறது போலீஸ். நாகுவும் அய்யாவும் மீண்டும் வேம்பலைக்கே வந்து சேர்கின்றனர். கைநாட்டு வைத்துவிட்ட நூற்று சொச்ச வேம்பர்களையும் தினமும் இரவில் மைதானத்தில் அடைத்து வைத்து காலையில் தான் விடுவிக்கிறது, போலீஸ்.
  
களவு தவிர வேறு எதும் அறியாத வேம்பர்களுக்கு, கைகளைக் கட்டியது போல இருக்கிறது. மூர்க்கமான அவர்கள் வெகுண்டு இன்ஸ்பெக்டரை கொன்றுவிட்டு ஸ்டேசனுக்கு தீ வைக்கின்றனர். மேலும், பெரிய துப்பாக்கி படையோடு திரும்ப வரும் காவல்துறை, வேம்பலையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. அதில் நாகு செத்துப் போகிறான். அங்கே நாகு இறந்தது தெரியாமல் ரத்னாவதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தன் அய்யா பெயரான திருமால் என்ற பெயரை வைக்கிறாள். நாகு திருமணம் செய்து கொண்டு வேம்பலைக்கு சென்றதை அறிந்த ரத்னாவதி, அவனை சந்திக்கும் பொருட்டு வேம்பலைக்கு செல்லும் அவள், நாகு இறந்திருப்பதை அறிகிறாள். நாகுவின் அய்யா ரத்னாவதியை அடையாளம் காண்கிறார். மல்லிகாவை நேர்கொள்ள முடியாமல், உடனடியாக ஊர் திரும்புகிறாள். நாகு இறந்ததை சொல்லி தன் அத்தையிடம் பிதற்றுகிறாள். அப்பாவை அறியாமலே வளரும் திருமாலின் மீது அதீத பாசம் கொள்கிறாள். திருமால் நாகுவைப் போலவே இருக்கிறான். தவளையோடும், மீன்களோடும், கோவில் யானைகளோடும் சதா பேசிக்கொண்டே இருக்கிறான். தொழிலை நிறுத்திவிட்ட ரத்னாவதி ஒரு பால்கடை வைத்து நடத்துகிறாள். தன் மகனை மிஷனரி பள்ளியில் சேர்த்து படிப்பிக்க விரும்புகிறாள். அதே சமயம், இளமை அவளின் இரவுகளை நீட்டிக்கிறது. யாரையாவது கல்யாணம் செய்து கொள் என்கிறாள் அத்தை. தன்னை விரும்பும் பூபாலன் என்பவனை திருமணமும் செய்து கொள்கிறாள். மிகுந்த நல்லவனான அவனும் ஒரு கட்டத்தில் இறந்து போகிறான். மிஷனரி பள்ளியில் படித்த திருமால், வளர்கிறான். கிருத்துவ பாதிரியார் பயிற்சிக்கு செல்கிறான், பின் கம்யூனிச சிந்தாந்தத்தால்  ஈர்க்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறான். தன் தாயின் மறைவிற்கு பிறகு அந்த ஊரிலேயே இருக்கப்பிடிக்காமல், பொதுநலப்பணிகள் செய்ய பெல்காமிற்கு செல்கிறான்.

அதேபோல மல்லிகா நாகு இறந்த பின்னர், தன்னை அழைத்துப் போக வரும் பெற்றோரிடம் தன் சிசு இங்கே வேம்பலையிலேயே பிறக்க வேண்டுமென சொல்லி அனுப்பிவிடுகிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வசந்தா எனப் பெயரிடுகிறாள். சிறு வயதில் பேச்சு வராமல் சிரமப்படுகிறாள் வசந்தா. ஒரு கட்டத்தில்  நாகுவின் அய்யாவும் இறந்துவிட, ஊருக்கே திரும்புகிறாள். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் வசந்தாவும், ஜெயக்கொடியும் தோழிகள். இருவரும் ஒருவனையே காதலிக்கின்றனர், இருவரும் அவனையே திருமணம் செய்து கொள்ளலாமெனவும் சிந்திக்கின்றனர். இதையறிந்து அவளுக்கு உடனடியாக திருமணம் செய்தும் வைக்கின்றனர். இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லாத அவள், தன் கணவனோடு சண்டையிட்டுக் கொண்டு அம்மா வீட்டிற்கே வருகிறாள். பிறகு மல்லிகா சமாதானம் செய்ய, இணங்குகிறாள். தன் தந்தையின் பிறப்பிடமான வேம்பலைக்கே செல்ல முடிவெடுக்கிறாள். தன் கணவனோடு வேம்பலை வரும் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு நாகு என பெயர் வைப்பதோடு நாவல் முற்றுப் பெறுகிறது.

ஊரும், சாரமும்.
அப்பாவின் வேலையின் காரணமாக, என்னுடைய முதல் பதினான்கு வருடங்களில் இரண்டு வருடங்களுக்கு ஒரு ஊர் என்று மாறிக் கொண்டே இருந்தோம். இன்னமும் சொந்த ஊர் எது? என்று கேட்டால் ஒருவித தயக்கத்தோடு அப்பா பிறந்த ஊரைச் சொல்லி வைப்பேன். இது தான் என் பால்யம். இங்கு தான் நான் வளர்ந்தேன் என எந்த ஊரையும் முன்னிலைப்படுத்த முடியாதபடி ஒரு வாழ்க்கை. ஆனால், விழித்திருப்பதைக் காட்டிலும் அதிகம் தூங்கிக்கொண்டிருந்த அந்த பால்யகாலத்தில், எனக்கும் சொந்தமாக ஒரு ஊர் இருந்தது. கனவில் அதன் வீதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன்.
அது பாட்டியின் கதைகளில் வரும் கற்பனையான ஊர். அந்த விசித்திரமான மக்களும், எல்லாம் நல்லதுக்குத்தான்என்று சொல்லிக்கொண்டிருக்கும் மந்திரியும், கட்டைவிரல் இல்லாத ராஜாவும், ரெட்டைச் சடை ராணியும் என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு இரவுகளிலும் குடும்பம் குடும்பமாய் அந்த ஊருக்குள் நுழைவதும், பின் கனவுகளில் அலைவதுமாக தொடர்ந்தன இரவுகள். அடுத்தநாள் இரவு கதையை ஆரம்பிக்கும் முன்னர் எங்க விட்டேன்என்று கேட்கும் பாட்டியிடம் சரியாக சொல்லவேண்டுமென, விட்ட இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காத்திருந்திருக்கிறேன் அடுத்த இரவுகளுக்காக. சில நாட்கள் அம்மா, அப்பா கூட விட்ட இடத்தை சுட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு இரவுகளிலும் விட்டதிலிருந்து தொடங்கும் அவர்களின் வாழ்க்கை. இன்னமும் அந்த ஊரைப் பற்றிய ஆசைகளும் கனவுகளும் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கின்றன.
நெடுங்குருதி வாசிப்பு கூட அப்படித்தான், தினமும் இரவு  23-30 பக்கங்களை வாசித்து வாசித்து தான் முடித்தேன். பாட்டி கதைகளில் வரும் ஊரும், மனிதர்களையும் கனவுகளில் மட்டுமே தொடர முடிந்தது. நெடுங்குருதியின் அனுபவம் விழித்திருக்கும் போதும் தொடர்கிறது. நாவலின்படி வேம்பலையில் நீண்ட கோடை இருக்கிறது, வலுத்த காற்றும், மழையும், பனியும் கூட வருகிறது. வசந்தகாலம் என்ற ஒரு காலத்தைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. இது வேம்பலைக்கு வசந்த காலமில்லை என்பதையும் வேம்பர்களின் காலத்தில் வசந்தமே இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம், வெயில். நானூறு பக்கங்களுக்கும் மேலாக வெயில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

வேம்பர்கள்
எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமின்றி, காட்டாற்றில் பயணிக்கும் இலையில் உள்ள எறும்பினைப் போல வேம்பர்கள். கள்வெறியேறிய கண்களோடும், எப்போதும் மூர்க்கமோடலையும் வேம்பர்கள். பிறப்பும் இறப்பும் எத்தனை இயல்பென புரிந்து கொண்டும், அதே இயல்போடு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுமாய் வேம்பர்கள். களவையே தொழிலாகக் செய்யும் வேம்பர்கள். களவாடி ஊர் திரும்பிய பொழுதுகளில், ஒளிந்து கொள்ள வசதியாக பனையிலில் வேம்பிலும் நாட்கணக்கில் தங்கியிருக்கின்றனர். மேலும் நிசப்தங்கள் நிறைந்த பகல் பொழுதுகளிலும், தொழிலற்ற காலங்களில் வெயில் கழுத்து வரை ஏறும் வரையில் உறங்கிக் கிடக்கும் வேம்பர்கள். வெயிலுக்கு கருகி, ஒரு சிறு மழைக்கு துளிர்த்துக் கொள்ளும் வேம்பினைப் போல அத்தனை இயல்பானது வேம்பர்களின் வாழ்க்கை.  கடுமையான வெக்கையின் காரணமாக, இயற்கையாகவே மூர்க்கமேறிப்போன வேம்பர்களில் பெண்கள் அனைவரும் கணவனை இழந்தோ, இருந்தும் பயணற்றோ, குடும்ப பாரத்தை தோளில் போட்டுக்கொண்டு, இரவுகளில் விழித்தபடி கதை முழுக்கவும் சோகம் பீடித்தே இருக்கின்றனர். வேம்பலைக்கும் அவர்களின் பிறந்த ஊருக்குமாய் அலைக்கழிக்கப்படும் நிலையும் அவர்களை உள்ளூர இறுகிப் போக வைக்கிறது.

வேம்பலை
வெயில் போகும் பாதையில், ஓங்கி நிற்கும் பனைகளும், கள்ளிச்செடிகளும், வேலிப் புதர்களில் விஷப் பாம்புகளுமாய் வேம்பு நிறைந்த வேம்பலை. எறும்புகள் கூட வாழ மறுத்து புறக்கணிக்கும் உக்கிரமான வேப்பத்தைக் கொண்ட வேம்பலை. கள்ளம் தலையெடுக்கும் பொழுதுகளில் கறிவாசமும், கள் வெறியேறிய வேம்பர்கள், மூர்க்கமாக அலையும் வேம்பலை. வெக்கையில் தகித்து முறுகும் ஓடுகளும், கதவுகளற்ற வீடும் கூரையுமாய் வேம்பலை. வெக்கையேறி பிசுபிசுத்த நீண்ட பகலைப்போல ஒவ்வொரு விட்டிலும் விடியாத துயரத்தை சுமந்தபடி உறக்கமற்று  விசும்பிய பெண்கள் புரண்டு படுத்தபடியிருக்கும் இரவுகள் நிறைந்த வேம்பலை.

யதார்த்தம்
யதார்த்தமும், மாயத்தன்மையும் கலந்த, கற்பனைக் கிராமமாகவே இருக்கிறது வேம்பலை. சிறு வயதில் வானில் பறக்கும் பறவைகளோடு பேசும் நாகுவின் மகன் திருமால், அவனையே ஒத்து தவளைகளோடும், மீன்களோடும், கோவில் கல் யானைகளோடும் பேசுகிறான். பரத்தை தொழில் செய்யும் ரத்னாவதி, நாகுவோடு கொண்ட காதலால் தன் தொழிலை நிறுத்திக் கொண்டு அவனால் உருவான குழந்தையை பெற்று வளர்க்க விரும்புவதும், பால் கடை நடத்திப் பிழைப்பதும், கொடுத்த காசைத் திருப்பிக்கேட்கும் பக்கீரை குடிவெறியில் கொலை செய்துவிடும் அய்யா, முதலில் பக்கீரின் மனைவியைத் தவிர்ப்பதும், பின்னர் அவளே ரெட்டியாருக்கு தொடுப்பாகிய பின்னர், தன் மீதான குற்ற உணர்ச்சி நீங்கி அவளை விமர்சிப்பதும், என யதார்த்தமான கிராமத்து மனிதர்களும் கதை நெடுக நிறைந்திருக்கின்றனர்.

மாயத்தன்மை:
போலவே, இறந்து போன குருவனோடு ஆடுபுலி விளையாடும் சிங்கி கிழவன், வயதில் மூத்து தானியக் குலுக்கைக்குள்ளாகவே கரைந்து போகும் சென்னம்மா கிளவி, கற்களைத் தேய்த்து மாம்பழ வாசனை வரச்செய்யும் ஆதிலட்சுமி, ஆகாயத்தில் மிதக்கும் பெருமாள் சுளிகொண்ட பசு, மீன்களோடு பேசும் திருமால்மனைவியின் பச்சையிலிருந்து சிங்கி கிழவனின் கைகளில் ஏறிக்கொள்ளும் தேள்,  வேணியின் கைக்கு எட்டாத கிணற்றுத் தண்ணீர், வேம்பர்களின் குதிகாலில் பிறக்கும்போதே வரும் தழும்பு இப்படி பல மாயதன்மை கொண்ட பகுதிகளுமாகவுமே வேம்பலை இருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------
இது வேம்பலையின் கதை மட்டுமல்ல, பருத்த வேம்பின் கிளைகளைப்போல பல திசைகளில் கிளைத்து செல்கிறது கதை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் கதை, மூன்று தலைமுறையின் கதை, இந்த நெடுங்குருதி. வெயிலைக் குடித்து மூர்க்கமேறிப்போன வேம்பலை என்னும் கிராமத்தின், அதன் மக்களுக்குமிடையே கைப் பிடித்துக் கொண்டு போய் நிறுத்தி விட்டு வருகிறது எஸ்.ராவின் எழுத்து. வேம்பர்கள், கள்வர்கள். ஆனால், கதையின் போக்கில் நமக்கு எங்குமே அவர்களின் மீது கோபமோ, வெறுப்போ வருவதில்லை, மாறாக ஒரு பரிதாபமே மிஞ்சுகிறது. ஏன் இவர்களின் நிலை இப்படியே இருக்கிறது. ஏன் ரத்னாவதி சாகணும், ஏன் நாகு சாகணும்னு மனம் பதைபதைக்கிறது. அம்மா இறந்துவிட்டதை அறிந்த திருமால், ஆழமாக பெருமூச்சு விடுகிறான். பின் சொல்கிறான், “அம்மாவைப் பார்த்து பல வருடமாகிவிட்டது463 பக்கங்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் முட்டிக்கொண்டு வெளியேறுகிறது. அடுத்த எட்டு பக்கங்களில் நாவல் முடிந்துவிடும் ஆனால் அதை வாசிக்க எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது.
முப்பது வருட வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. நாகு, அய்யா, தாத்தாஅம்மா சுப்புத்தாயி, வேணி, நீலா, சிங்கி, பக்கீர், அவன் மனைவி, ரத்னாவதி, வசந்தா, பூபாலன், திருமால் இப்படி வேம்பலை மனிதர்களை இனி வரும்நாட்களில் எப்படியும் சந்திக்கத்தான் போகிறேன்.  எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி’,  சமகாலங்களில் தமிழில் உருவான மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.