நெடுங்குருதி - எழுதித் தீராத கதை

இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத்தொலைக்கலாம்,
செத்து என்ன ஆகப்போகிறது இருந்து தொலைக்கலாம்.
-கல்யாண்ஜி
முரளிஅவசியம் நெடுங்குருதி நாவலை வாசியுங்கள், நிச்சயம் உங்களால் வேம்பலையிலிருந்து வெளியே வரவே முடியாது என்று அடிக்கடி சொன்ன சாமிநாதனாலும், சமீபத்தில் அவன் இவன் படத்தைப் பார்த்து வெறுப்போடிருந்த சமயம், இது நெடுங்குருதியில்  வரும் கள்வர்களின் வாழ்வியலை சொல்ல எடுத்த முயற்சி, என கார்த்திகைப்பாண்டியன் சொன்னதிலிருந்தும் நெடுங்குருதியை வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிக்கொண்டே போனது. சேர்தளம் நூலகம் (பங்களிப்பு :வெயிலான்) மூலமாக இப்போது சாத்தியமானது. இதுதான் நான் சேர்தளத்தின் நூலகத்திலிருந்து நான் எடுத்த முதல் புத்தகம்.

பொதுவாக ஒவ்வொரு நாவலும் ஒரு வாழ்க்கை. ஒரு மனிதனை, அவனைச் சார்ந்தவர்களை, அவனது வாழ்க்கை முறையை மற்றும் சமுதாயத்தை மிகவும் நெருக்கமாக அறிமுகம் செய்து போவது தான் நாவல். அப்படி ஒரு கற்பனை கிராமமான வேம்பலையும் அதன் மனிதர்களுமான வேம்பர்களுமே, இந்த நெடுங்குருதி. இந்த புத்தகத்தின் மொத்த பக்கங்களிலும் வேம்பர்கள் ஓட்டமும் நடையுமாக, மூர்க்கமான கண்களோடு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறனர். நிச்சயம் அவர்களின் வாழ்க்கை, தேங்கிய நீர்க்குளங்களைப்போல இருப்பதில்லை. மாறாகஓடிக்கொண்டேயிருக்கிறது ஒரு ஆற்றைப் போல.

பொதுவாக எஸ்.ராவின் எழுத்து நடை, அதிகம் அலங்காரமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடை. என்னைப் போன்ற மெலோட்ராமா சினிமா ரசிகர்கள் எளிதில் அவரை நெருங்கிவிட முடியுமளவிற்கு மென்மையான ஒரு நடை.  இருந்தாலும் 500 பக்கங்களுக்கு சற்றே குறைந்த இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும்பொழுது சிறிது யோசித்தேன். அதிலும் தொடர்ச்சியாக இருபது பக்கங்களைப் படித்துவிட்டு அதிலேயே இரண்டு நாட்கள் மூழ்கிக் கிடக்கும் என்னைப் போன்ற ஆமை வாசகனுக்கு, கொஞ்சமாய் அலுப்பு தட்டினாலும் பாதியிலேயே முற்றுப் பெற்று விடும் என் வாசிப்பு. சரியாக இந்த நாவலைப் படித்து முடிக்க சரியாக 43 நாட்கள் பிடித்தது. அதிலும் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அந்த சுவாரஸ்யம் சிறிது குறையாமல் தொடர முடிவதுதான், இந்த நாவலின் சிறப்பு. வேம்பலையில், நாகுவோடு சேர்ந்து குருவி பார்ப்பதும், பட்டாம்பூச்சி பிடிப்பதுவுமாய் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் வாழ்ந்து வந்தது போலவே உணர்கிறேன்.

நெடுங்குருதியைப் பொறுத்தவரையில், நாகுவின் பார்வையில் தொடங்கி, அவன் குடும்பத்தில் பயணித்து, வேம்பலை கிராமம் முழுமைக்கும் பரவுகிறது. தனது மாயக்கரங்களால் தன்னிடமிருந்து வெளியேறுபவர்களை மீண்டும் உள்ளே இழுத்துக்கொள்ளும் வேம்பலை கிராமத்தைப்போலவே கதையும் சில நேரங்களில் வேம்பர்களையும், வேம்பலையையும் சில நேரம் நெருங்கியும், சில நேரம் விலகியுமே பயணிக்கிறது. திடுமென எந்த திருப்பங்களும் இந்தக் கதையில் இல்லை. மாறாக, மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வும் கிளையிலிருந்து உதிரும் ஒரு இலையைப்போல வெகு இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கையோடு தன்னைப் பொருத்திக்கொண்ட அந்த வேம்பலை கிராமத்தையும், வேம்பர்களையும் எந்த வித அலங்காரமுமின்றி படைத்திருப்பதும், கொஞ்சமும் புறக்கணிக்கமுடியாத அவரவர் நியாயங்களையும்எந்தவித நிர்ப்பந்தமுமின்றி சொல்லிக்கொண்டே போவதுமாய் தொடர்கிறது இந்த நாவல்.

இந்த நாவலை படித்து முடிக்கும்போது, வாழ்வும், சாவும் எவ்வளவு இயல்பானது என்பதை கதைப் போக்கிலேயே உணர்ந்து கொள்ள முடியும். சர்வ நிச்சயமாக ஒன்று சொல்ல முடியும், இரண்டு கிராமங்களில், நான்கு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், இப்படி, இவ்வளவு அருகாமையில் மனிதர்களை சந்தித்தது கிடையாது, போலவே வேம்பலைக்கு முன்னர் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஊரை அணுகியதும் கிடையாது.


கதை:
       கதை நாகு எனும் சிறுவனை மையப்படுத்தி தொடங்குகிறது. பிறகு அவன் அம்மா சுப்புத்தாய், அய்யா, சகோதரிகள் நீலா, வேணி என பயணிக்கிறது. நாகுவின் அய்யா களவும் செய்யாமல், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தாந்தோன்றித்தனமாக திரிபவர். திடுமென வீட்டிலிருந்து வெளியேறி பல வருடங்களுக்குப் பிறகு செருப்பு மூட்டையுடன் வீடு வந்து சேர்கிறார். பின்னொருநாளில் அவரைத்தேடி செருப்பு வாங்குவதற்கான முதலை கொடுத்த முதலாளி, அதை வசூல் செய்ய ஒரு பக்கீரை அனுப்பி வைக்கிறான்.  பக்கீரும், நாகுவின் வீட்டிலேயே தங்கி சிறு சிறு வேலைகளை செய்து வருகிறான். தன்னிடம் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் போகும்போது திரும்பி வாங்கிக்கொள்வதாக, பணத்தை நாகுவின் அம்மாவிடம் கொடுத்து வைக்கிறான். ஆனால் அய்யா அந்தப் பணத்தை குடித்து தீர்க்கிறார். மேலும் அதை ஒரு கட்டத்தில் திரும்ப கேட்கும் பக்கீரை குடிவெறியில் கொலையும் செய்து விடுகிறார் (இது கதையில் சொல்லப்படுவதில்லை).
               
      பல மாதங்கள் கழிந்து, பக்கீரைத்தேடி, அவன் மனைவி வேமபலைக்கு தன் இரு பெண் குழந்தைகளோடு வருகிறாள். அவளை நேர்கொள்ள தயங்கும் அய்யா, பக்கீர் வெளிநாடு சென்றிருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். பக்கீரின் மனைவியோடு, நீலாவும் வேணியும் பரிச்சயமாகின்றனர். நாகு அவள் குழந்தைகளோடு திரிகிறான். பஞ்சு பறிக்க போன இடத்தில் பாம்பு கடித்து நீலா இறந்து போகிறாள். பிறகு வேணிக்கு திருமணம் நடக்கிறது. மீண்டும் அய்யா பரதேசம் கிளம்புகிறார்.
  
சுப்புத்தாயின் அய்யா தன் மகளின் நிலையைக் கண்டு அவளை தன்னோடு அழைத்து செல்கிறார். வேம்பலையின் சோகம், அவர்களை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. இடையே அம்மா இறந்து போகிறாள். நாகு வளர்கிறான். தாத்தாவோடு சேர்ந்து மாட்டுதரகு செய்கிறான். அங்கு ரத்னாவதி என்னும் பரத்தையோடு இணக்கம் கொள்கிறான். குடிப்பதும், ரத்னாவதியோடு சல்லாபிப்பதுமாயிருக்கும் நாகு, ஒருநாள் ரத்னாவதியோடு கோவிலில் இருக்கும்போது அய்யாவைப் பார்க்கிறான். பிச்சைகாரர்களோடு ஒருவராய் இருக்கிறார். மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு அவரை தன்னோடு அழைத்து வருகிறான். ஆனால் தாத்தா ஒன்றுக்கும் உதவாமல் பரதேசம் போன நாகுவின் அய்யா மீது கோபத்தில் உமிழ்கிறார். ஒரு கட்டத்தில் நாகு அய்யாவைக் கூட்டிக்கொண்டு வேம்பலைக்கே திரும்புகிறான். மீண்டும் தன் சகாவான செல்லையாவோடு சேரும் அய்யா இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறார். மீண்டும் களவுத்தொழில் சூடுபிடிக்க ஊரில் கறிவாடையும், சாராய வாடையும் மிதக்கிறது, மாடு களவாட நாகுவும் போய்வருகிறான். ஒரு களேபரத்தில் ஒரு சக வேம்பனை கத்தியால் குத்திவிட்டு வேம்பலையை விட்டு வெளியேறுகிறான். மீண்டும் தாத்தாவிடம் சேர்கிறான்.
  
மீண்டும் வேம்பலை, ஒரு துர்கனவாக தொடர்கிறது. இறந்து போன நீலா அக்கா இவனை அங்கே அழைப்பது போல கனவு காண்கிறான். ஒரு கொலையை செய்துவிட்ட பயம் அவனை அலைக்கழிக்கிறது. பித்து பிடித்ததுபோல, நோய் கண்டவனைப் போல கிடக்கிறான். அவனுக்கு மந்திரித்து வர கோவிலுக்கு அழைத்து செல்கிறார் தாத்தா. அங்கே வேம்பலை தோழி, சவளைக்கால் ஆதிலட்சுமியை பார்க்கிறான். அவள் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்கிறாள். தாத்தாவிற்கும் அது சரியெனப்பட, நாகு திருமணம் செய்து கொள்கிறான். அவன் மனைவி மல்லிகாவை ரத்னாவதியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். அங்கே ரத்னாவதியோ, செய்துவந்த தாசித் தொழிலை நிறுத்திவிட்டு நாகுவால் உருவான குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடிவெடுக்கிறாள். பிள்ளையைப் பெற்றெடுக்க ஒத்தை ஆளாக எங்கோ இருக்கும் தன் அத்தையைத் தேடிச் சேர்கிறாள். இங்கே வேம்பலையில் இருக்கும் வேம்பர்களை கைநாட்டு எடுக்க அவர்களை தேடிப் பிடிக்கிறது போலீஸ். நாகுவும் அய்யாவும் மீண்டும் வேம்பலைக்கே வந்து சேர்கின்றனர். கைநாட்டு வைத்துவிட்ட நூற்று சொச்ச வேம்பர்களையும் தினமும் இரவில் மைதானத்தில் அடைத்து வைத்து காலையில் தான் விடுவிக்கிறது, போலீஸ்.
  
களவு தவிர வேறு எதும் அறியாத வேம்பர்களுக்கு, கைகளைக் கட்டியது போல இருக்கிறது. மூர்க்கமான அவர்கள் வெகுண்டு இன்ஸ்பெக்டரை கொன்றுவிட்டு ஸ்டேசனுக்கு தீ வைக்கின்றனர். மேலும், பெரிய துப்பாக்கி படையோடு திரும்ப வரும் காவல்துறை, வேம்பலையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. அதில் நாகு செத்துப் போகிறான். அங்கே நாகு இறந்தது தெரியாமல் ரத்னாவதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தன் அய்யா பெயரான திருமால் என்ற பெயரை வைக்கிறாள். நாகு திருமணம் செய்து கொண்டு வேம்பலைக்கு சென்றதை அறிந்த ரத்னாவதி, அவனை சந்திக்கும் பொருட்டு வேம்பலைக்கு செல்லும் அவள், நாகு இறந்திருப்பதை அறிகிறாள். நாகுவின் அய்யா ரத்னாவதியை அடையாளம் காண்கிறார். மல்லிகாவை நேர்கொள்ள முடியாமல், உடனடியாக ஊர் திரும்புகிறாள். நாகு இறந்ததை சொல்லி தன் அத்தையிடம் பிதற்றுகிறாள். அப்பாவை அறியாமலே வளரும் திருமாலின் மீது அதீத பாசம் கொள்கிறாள். திருமால் நாகுவைப் போலவே இருக்கிறான். தவளையோடும், மீன்களோடும், கோவில் யானைகளோடும் சதா பேசிக்கொண்டே இருக்கிறான். தொழிலை நிறுத்திவிட்ட ரத்னாவதி ஒரு பால்கடை வைத்து நடத்துகிறாள். தன் மகனை மிஷனரி பள்ளியில் சேர்த்து படிப்பிக்க விரும்புகிறாள். அதே சமயம், இளமை அவளின் இரவுகளை நீட்டிக்கிறது. யாரையாவது கல்யாணம் செய்து கொள் என்கிறாள் அத்தை. தன்னை விரும்பும் பூபாலன் என்பவனை திருமணமும் செய்து கொள்கிறாள். மிகுந்த நல்லவனான அவனும் ஒரு கட்டத்தில் இறந்து போகிறான். மிஷனரி பள்ளியில் படித்த திருமால், வளர்கிறான். கிருத்துவ பாதிரியார் பயிற்சிக்கு செல்கிறான், பின் கம்யூனிச சிந்தாந்தத்தால்  ஈர்க்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறான். தன் தாயின் மறைவிற்கு பிறகு அந்த ஊரிலேயே இருக்கப்பிடிக்காமல், பொதுநலப்பணிகள் செய்ய பெல்காமிற்கு செல்கிறான்.

அதேபோல மல்லிகா நாகு இறந்த பின்னர், தன்னை அழைத்துப் போக வரும் பெற்றோரிடம் தன் சிசு இங்கே வேம்பலையிலேயே பிறக்க வேண்டுமென சொல்லி அனுப்பிவிடுகிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வசந்தா எனப் பெயரிடுகிறாள். சிறு வயதில் பேச்சு வராமல் சிரமப்படுகிறாள் வசந்தா. ஒரு கட்டத்தில்  நாகுவின் அய்யாவும் இறந்துவிட, ஊருக்கே திரும்புகிறாள். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் வசந்தாவும், ஜெயக்கொடியும் தோழிகள். இருவரும் ஒருவனையே காதலிக்கின்றனர், இருவரும் அவனையே திருமணம் செய்து கொள்ளலாமெனவும் சிந்திக்கின்றனர். இதையறிந்து அவளுக்கு உடனடியாக திருமணம் செய்தும் வைக்கின்றனர். இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லாத அவள், தன் கணவனோடு சண்டையிட்டுக் கொண்டு அம்மா வீட்டிற்கே வருகிறாள். பிறகு மல்லிகா சமாதானம் செய்ய, இணங்குகிறாள். தன் தந்தையின் பிறப்பிடமான வேம்பலைக்கே செல்ல முடிவெடுக்கிறாள். தன் கணவனோடு வேம்பலை வரும் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு நாகு என பெயர் வைப்பதோடு நாவல் முற்றுப் பெறுகிறது.

ஊரும், சாரமும்.
அப்பாவின் வேலையின் காரணமாக, என்னுடைய முதல் பதினான்கு வருடங்களில் இரண்டு வருடங்களுக்கு ஒரு ஊர் என்று மாறிக் கொண்டே இருந்தோம். இன்னமும் சொந்த ஊர் எது? என்று கேட்டால் ஒருவித தயக்கத்தோடு அப்பா பிறந்த ஊரைச் சொல்லி வைப்பேன். இது தான் என் பால்யம். இங்கு தான் நான் வளர்ந்தேன் என எந்த ஊரையும் முன்னிலைப்படுத்த முடியாதபடி ஒரு வாழ்க்கை. ஆனால், விழித்திருப்பதைக் காட்டிலும் அதிகம் தூங்கிக்கொண்டிருந்த அந்த பால்யகாலத்தில், எனக்கும் சொந்தமாக ஒரு ஊர் இருந்தது. கனவில் அதன் வீதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன்.
அது பாட்டியின் கதைகளில் வரும் கற்பனையான ஊர். அந்த விசித்திரமான மக்களும், எல்லாம் நல்லதுக்குத்தான்என்று சொல்லிக்கொண்டிருக்கும் மந்திரியும், கட்டைவிரல் இல்லாத ராஜாவும், ரெட்டைச் சடை ராணியும் என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு இரவுகளிலும் குடும்பம் குடும்பமாய் அந்த ஊருக்குள் நுழைவதும், பின் கனவுகளில் அலைவதுமாக தொடர்ந்தன இரவுகள். அடுத்தநாள் இரவு கதையை ஆரம்பிக்கும் முன்னர் எங்க விட்டேன்என்று கேட்கும் பாட்டியிடம் சரியாக சொல்லவேண்டுமென, விட்ட இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காத்திருந்திருக்கிறேன் அடுத்த இரவுகளுக்காக. சில நாட்கள் அம்மா, அப்பா கூட விட்ட இடத்தை சுட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு இரவுகளிலும் விட்டதிலிருந்து தொடங்கும் அவர்களின் வாழ்க்கை. இன்னமும் அந்த ஊரைப் பற்றிய ஆசைகளும் கனவுகளும் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கின்றன.
நெடுங்குருதி வாசிப்பு கூட அப்படித்தான், தினமும் இரவு  23-30 பக்கங்களை வாசித்து வாசித்து தான் முடித்தேன். பாட்டி கதைகளில் வரும் ஊரும், மனிதர்களையும் கனவுகளில் மட்டுமே தொடர முடிந்தது. நெடுங்குருதியின் அனுபவம் விழித்திருக்கும் போதும் தொடர்கிறது. நாவலின்படி வேம்பலையில் நீண்ட கோடை இருக்கிறது, வலுத்த காற்றும், மழையும், பனியும் கூட வருகிறது. வசந்தகாலம் என்ற ஒரு காலத்தைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. இது வேம்பலைக்கு வசந்த காலமில்லை என்பதையும் வேம்பர்களின் காலத்தில் வசந்தமே இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம், வெயில். நானூறு பக்கங்களுக்கும் மேலாக வெயில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

வேம்பர்கள்
எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமின்றி, காட்டாற்றில் பயணிக்கும் இலையில் உள்ள எறும்பினைப் போல வேம்பர்கள். கள்வெறியேறிய கண்களோடும், எப்போதும் மூர்க்கமோடலையும் வேம்பர்கள். பிறப்பும் இறப்பும் எத்தனை இயல்பென புரிந்து கொண்டும், அதே இயல்போடு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுமாய் வேம்பர்கள். களவையே தொழிலாகக் செய்யும் வேம்பர்கள். களவாடி ஊர் திரும்பிய பொழுதுகளில், ஒளிந்து கொள்ள வசதியாக பனையிலில் வேம்பிலும் நாட்கணக்கில் தங்கியிருக்கின்றனர். மேலும் நிசப்தங்கள் நிறைந்த பகல் பொழுதுகளிலும், தொழிலற்ற காலங்களில் வெயில் கழுத்து வரை ஏறும் வரையில் உறங்கிக் கிடக்கும் வேம்பர்கள். வெயிலுக்கு கருகி, ஒரு சிறு மழைக்கு துளிர்த்துக் கொள்ளும் வேம்பினைப் போல அத்தனை இயல்பானது வேம்பர்களின் வாழ்க்கை.  கடுமையான வெக்கையின் காரணமாக, இயற்கையாகவே மூர்க்கமேறிப்போன வேம்பர்களில் பெண்கள் அனைவரும் கணவனை இழந்தோ, இருந்தும் பயணற்றோ, குடும்ப பாரத்தை தோளில் போட்டுக்கொண்டு, இரவுகளில் விழித்தபடி கதை முழுக்கவும் சோகம் பீடித்தே இருக்கின்றனர். வேம்பலைக்கும் அவர்களின் பிறந்த ஊருக்குமாய் அலைக்கழிக்கப்படும் நிலையும் அவர்களை உள்ளூர இறுகிப் போக வைக்கிறது.

வேம்பலை
வெயில் போகும் பாதையில், ஓங்கி நிற்கும் பனைகளும், கள்ளிச்செடிகளும், வேலிப் புதர்களில் விஷப் பாம்புகளுமாய் வேம்பு நிறைந்த வேம்பலை. எறும்புகள் கூட வாழ மறுத்து புறக்கணிக்கும் உக்கிரமான வேப்பத்தைக் கொண்ட வேம்பலை. கள்ளம் தலையெடுக்கும் பொழுதுகளில் கறிவாசமும், கள் வெறியேறிய வேம்பர்கள், மூர்க்கமாக அலையும் வேம்பலை. வெக்கையில் தகித்து முறுகும் ஓடுகளும், கதவுகளற்ற வீடும் கூரையுமாய் வேம்பலை. வெக்கையேறி பிசுபிசுத்த நீண்ட பகலைப்போல ஒவ்வொரு விட்டிலும் விடியாத துயரத்தை சுமந்தபடி உறக்கமற்று  விசும்பிய பெண்கள் புரண்டு படுத்தபடியிருக்கும் இரவுகள் நிறைந்த வேம்பலை.

யதார்த்தம்
யதார்த்தமும், மாயத்தன்மையும் கலந்த, கற்பனைக் கிராமமாகவே இருக்கிறது வேம்பலை. சிறு வயதில் வானில் பறக்கும் பறவைகளோடு பேசும் நாகுவின் மகன் திருமால், அவனையே ஒத்து தவளைகளோடும், மீன்களோடும், கோவில் கல் யானைகளோடும் பேசுகிறான். பரத்தை தொழில் செய்யும் ரத்னாவதி, நாகுவோடு கொண்ட காதலால் தன் தொழிலை நிறுத்திக் கொண்டு அவனால் உருவான குழந்தையை பெற்று வளர்க்க விரும்புவதும், பால் கடை நடத்திப் பிழைப்பதும், கொடுத்த காசைத் திருப்பிக்கேட்கும் பக்கீரை குடிவெறியில் கொலை செய்துவிடும் அய்யா, முதலில் பக்கீரின் மனைவியைத் தவிர்ப்பதும், பின்னர் அவளே ரெட்டியாருக்கு தொடுப்பாகிய பின்னர், தன் மீதான குற்ற உணர்ச்சி நீங்கி அவளை விமர்சிப்பதும், என யதார்த்தமான கிராமத்து மனிதர்களும் கதை நெடுக நிறைந்திருக்கின்றனர்.

மாயத்தன்மை:
போலவே, இறந்து போன குருவனோடு ஆடுபுலி விளையாடும் சிங்கி கிழவன், வயதில் மூத்து தானியக் குலுக்கைக்குள்ளாகவே கரைந்து போகும் சென்னம்மா கிளவி, கற்களைத் தேய்த்து மாம்பழ வாசனை வரச்செய்யும் ஆதிலட்சுமி, ஆகாயத்தில் மிதக்கும் பெருமாள் சுளிகொண்ட பசு, மீன்களோடு பேசும் திருமால்மனைவியின் பச்சையிலிருந்து சிங்கி கிழவனின் கைகளில் ஏறிக்கொள்ளும் தேள்,  வேணியின் கைக்கு எட்டாத கிணற்றுத் தண்ணீர், வேம்பர்களின் குதிகாலில் பிறக்கும்போதே வரும் தழும்பு இப்படி பல மாயதன்மை கொண்ட பகுதிகளுமாகவுமே வேம்பலை இருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------
இது வேம்பலையின் கதை மட்டுமல்ல, பருத்த வேம்பின் கிளைகளைப்போல பல திசைகளில் கிளைத்து செல்கிறது கதை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் கதை, மூன்று தலைமுறையின் கதை, இந்த நெடுங்குருதி. வெயிலைக் குடித்து மூர்க்கமேறிப்போன வேம்பலை என்னும் கிராமத்தின், அதன் மக்களுக்குமிடையே கைப் பிடித்துக் கொண்டு போய் நிறுத்தி விட்டு வருகிறது எஸ்.ராவின் எழுத்து. வேம்பர்கள், கள்வர்கள். ஆனால், கதையின் போக்கில் நமக்கு எங்குமே அவர்களின் மீது கோபமோ, வெறுப்போ வருவதில்லை, மாறாக ஒரு பரிதாபமே மிஞ்சுகிறது. ஏன் இவர்களின் நிலை இப்படியே இருக்கிறது. ஏன் ரத்னாவதி சாகணும், ஏன் நாகு சாகணும்னு மனம் பதைபதைக்கிறது. அம்மா இறந்துவிட்டதை அறிந்த திருமால், ஆழமாக பெருமூச்சு விடுகிறான். பின் சொல்கிறான், “அம்மாவைப் பார்த்து பல வருடமாகிவிட்டது463 பக்கங்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் முட்டிக்கொண்டு வெளியேறுகிறது. அடுத்த எட்டு பக்கங்களில் நாவல் முடிந்துவிடும் ஆனால் அதை வாசிக்க எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது.
முப்பது வருட வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. நாகு, அய்யா, தாத்தாஅம்மா சுப்புத்தாயி, வேணி, நீலா, சிங்கி, பக்கீர், அவன் மனைவி, ரத்னாவதி, வசந்தா, பூபாலன், திருமால் இப்படி வேம்பலை மனிதர்களை இனி வரும்நாட்களில் எப்படியும் சந்திக்கத்தான் போகிறேன்.  எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி’,  சமகாலங்களில் தமிழில் உருவான மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.

33 கருத்துரைகள்:

கனவின் பயணம் said...

I believe this book was inspired by 'One Hundred years of solitude'. I havent read nedunkuruthi..but read the other one, i can relate to it based on your review. Probably you should read the other 'OHYS', to know, whether S.RA got inspired by his favourite novel or it become more than inspiration.;-)

அகல்விளக்கு said...

எத்தனையோ முறை சொற்களால் விவரிக்க முயன்று தோற்றிருக்கிறேன்...

அவ்வகையில் நீ வென்றுவிட்டாய் நண்பா...

நல்ல அறிமுகம்...

இளங்கோ said...

நானும் படிக்க நினைத்த நாவல். நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால், நிச்சயம் படிக்கத் தோன்றுகிறது.
நூல் அறிமுகத்துக்கு நன்றி முரளி.

கார்த்திகைப் பாண்டியன் said...

அனுபவிச்சு வாசிச்சு இருக்கீங்க முரளி.. நல்லா இருக்கு.. அந்த கதைங்கிற பகுதிய மட்டும் கொஞ்சம் வேற மாதிரி சொல்லி இருக்கலாமோன்னு தோணுது.. தலைவருக்கு அனுப்பி வைங்க.. சந்தோசப்படுவாரு..:-))

ஷஹி said...

பிரமாதம் முரளி..ஒரு நாவல வாசிச்சு அதன் கிளர்ச்சி மாறுமுன் அதப் பத்தி எழுதிடறதுல இருக்குற சுகமும் ஆத்மார்த்தமும் தனி..அது அந்த பதிவுக்கு குடுத்துடற நேர்த்தியும் கூட ஸ்பெஷல்..நானெல்லாம் எழுதினா "நான் படிச்சிட்டேன்..நான் படிச்சிட்டேன்னு " அலட்டற மாதிரி இருக்கும்..ஆனா நீங்க அனுபவிச்ச பரவசத்த பகிர்ந்துக்கற விருப்பம் தெரியிது நல்லா.குறிப்பா அறிமுகம் செஞ்சிருக்கிற விதம் அழகாயிருக்கு. அப்பறம் கதை சொல்லியிருக்கிறதுல மட்டும் எதுவும் விட்டுப்போயிடக் கூடாதேன்னு ஒரு பதட்டம் தெரியிது. ஊரும் சாரமும்ங்கிற தலைப்புல எழுதியிருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிது. என்னதான் எஸ்.ரா நாவலோட அறிமுகம்னாலும் நம்ம சொந்த அனுபவத்த பகிர்ந்துக்கறப்ப அது படிக்கிறவங்க மனசுல ஏற்படுத்தற impression ஏ தனி தான்..கலக்கிட்டீங்க..எஸ்.ரா வேற கருத்து சொல்லிட்டாரு போல! ஹூம்! பாருங்க பாருங்க நானும் படிச்சு உங்கள விட(!:)!) நல்லா இதே நெடுங்குருதி ய எழுதல...வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\தொடர்ச்சியாக இருபது பக்கங்களைப் படித்துவிட்டு அதிலேயே இரண்டு நாட்கள் மூழ்கிக் கிடக்கும் என்னைப் போன்ற ஆமை வாசகனுக்கு,\\

தல நீங்க சொல்லியிருக்கிறது வேகம் தான் எனக்கும்...கூட பக்கங்கள்...அதனால இன்னும் தொடவில்லை.

நீங்க கா.பா சொல்றதை வச்சி பார்க்கும் போது சீக்கிரம் ஆரம்பிக்கனுமுன்னு தோணுது.

;-)

shri Prajna said...

பொதுவாக எஸ்.ராவின் எழுத்து நடை, அதிகம் அலங்காரமில்லாத,ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடை/ என்று எளிமையாய் இவ்வளவு அருமையான நாவலை வாசிப்புக்கு பகிர்ந்தமைக்கு “அன்பு MURLI க்கு நன்றி”...

"எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திர்குள் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்த்க்கள்’ இப்படி எஸ்.ரா வே சொன்ன ஒரு எளிமையான விளக்கத்தால் அவரின் எழுத்துக்களை நாம் புரிந்து கொள்ள முடியும்..

நெடுங்குருதியில் வருவது போல் எப்பொழுதும் ஊரும் மனிதர்களும் நம் உணர்வுடனே கலந்து இருப்பது நம்மை அறியாமலே நடந்து விடும் ஒன்று..எங்கு சென்று இருந்தாலும் ஊரின் மேல் ஒரு பற்றுதல் இருக்கவே செய்யும்...மூன்று தலை முறைகளை தொட்டுச்செல்லும் கதையில் வெயிலும் தொடர்ந்து உறவாடி வருகிறது..நிலவில் காயலாம்..வெயிலில்??? எஸ்.ரா வின் எழுத்துக்களால் சாத்தியம் என்றே தோன்றுகிறது..

இயல்பான சில இழப்புகளோடு ஒரு சமூகத்தின் வாழ்வியலை சொல்லியிருகிறார் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது..வேம்பர்களில் பெண்கள் படும் துயறங்களுக்கு அவர்களின் தொழிலாக கருத்ப்படும் களவு தொழிலில் சாபமாக கூறப்பட்டிறுக்கிறதோ??
இது வேம்பர்களின் வாழ்வியல் மட்டுமல்ல மொத்த சமுகத்தின் வாழ்வியலும் இதுதான் என்று கூறுகிறதோ?அனுமான்ஷ்யம் நிறைந்து காணப்படுவது (கதையில்) யதார்தமாயும் தோன்றுகிறது
//நெடுங்குருதி நாவல் பற்றி ராமகிருஷ்ணன் தீராநதி நேர்காணலில் பின்வருமாறு பேசுகிறார். ‘என்னைப் பொறுத்தமட்டில் இந்த நாவல் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போல் தன் விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலைக் குடித்துறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களைப் போல் நடமாடுகிறார்கள். வாழ்வைப் பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை சாவைக் குறித்த புலம்புதல்களும் இல்லை. அந்த நிலவியல் வாழ்வென்பதே ஒரு மாயம்தான்’என்று கூறுகிறார்./மிகவும் சரியான பார்வை இது.././

எதாவது புத்தகங்கள் படித்தாலோ,திரைப்படங்கள் பார்த்தாலோ, நல் இசை கேட்டாலோ நம்மிடம் இவ்வள்வு எளிமையாய் பகிர்ந்து கொண்டு படிக்கும்,கேட்கும்,பார்க்கும் ஆவலை தூண்டும் முரளிக்கு
"உங்கள் எழுத்து நடையும், அதிகம் அலங்காரமில்லாத,ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடை என்றால் அது மிகையில்லை”

sugirtha said...

Excellent write up Murali...

பூந்தளிர் said...

படித்து முடித்தபோது வேம்பலையில் இருந்து வெளியே வந்ததைப் போல இருந்தது...

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனவின் பயணம்
வணக்கம் நணபா, இது குறித்து முன்னமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், மேலும் இந்தப்புத்தகத்தை நான் வாசித்ததும் கிடையாது. எப்படியும் வேம்பலைககான ஒரு இலையை எங்கே தோன்றியது என்பதை கேட்கத்தான் வேண்டும், நேரில் சந்திக்கும் போது எஸ்.ராவிடமே கேட்கத்தான் வேண்டும். :-)

more than Inspiration ங்கிறது கிண்டலாத்தெரியுதே? அப்படியா :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
நன்றி நண்பா! படிச்சவுடனே உக்காந்து ஒரு ப்ளோல எழுதிட்டேன். 10-12 பக்கம் வந்துடுச்சு, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா திருத்தி இதுக்கு மேல குறைக்க முடியாதுங்கிற நிலையில போஸ்ட் பண்ணினேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
அவசியம் படிங்க, எனக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். வெம்பலையிலிருந்து வெளியே வருவது சிரமம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைபாண்டியன்
நன்றி நண்பா, ம்ம் தலைவருக்கு அனுப்பிட்டேன், நல்லா இருக்குன்னு ரிப்ளைகூட பார்த்தேன். அது கிடக்கட்டும்,உங்களுடைய விமர்சனம் அவருடைய வலைதளத்திலேயே நேத்து பார்த்தேன் நீங்க எப்ப எழுதினீங்க? வாழ்த்துக்கள்.நண்பா!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
//அப்பறம் கதை சொல்லியிருக்கிறதுல மட்டும் எதுவும் விட்டுப்போயிடக் கூடாதேன்னு ஒரு பதட்டம் தெரியிது. ஊரும் சாரமும்ங்கிற தலைப்புல எழுதியிருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிது//
உண்மைதாங்கா, கதைன்னு மட்டும் ஏழு பக்கம் எழுதிட்டேன், அப்புறமா எடிட்டிங்ல தான் இந்த பதட்டமெல்லாம்.....

//எஸ்.ரா வேற கருத்து சொல்லிட்டாரு போல! //
ஹேப்பீ ஹேப்பீ.... :_))

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
//நீங்க, கா.பா சொல்றதை வச்சி பார்க்கும் போது சீக்கிரம் ஆரம்பிக்கனுமுன்னு தோணுது//

இந்தப்பக்கம் லிஸ்டு பெருசாயிட்டே இருக்கே, அந்த பக்கம் எதும் குறைக்க முடியுதா? :-) எனக்கும் லிஸ்ட் கூடுகிட்டே போகுதோ தவிர குறிஅயவே மாட்டேங்குது...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ ப்ரஜ்னா
//எதாவது புத்தகங்கள் படித்தாலோ,திரைப்படங்கள் பார்த்தாலோ, நல் இசை கேட்டாலோ நம்மிடம் இவ்வள்வு எளிமையாய் பகிர்ந்து கொண்டு படிக்கும்,கேட்கும்,பார்க்கும் ஆவலை தூண்டும் முரளிக்கு//

யாம் பெற்ற இன்பம், பகிர்தலின் சந்தோசத்தை உணர ஆரம்பித்துவிட்டால் அதில் பித்தேறிபோய் இப்படித்தான் எல்லாத்தையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துவிடுவோம்.

//உங்கள் எழுத்து நடையும், அதிகம் அலங்காரமில்லாத,ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடை என்றால் அது மிகையில்லை//
மிக்க நன்றீ தோழி. :-)

ஏனோதானோவென எழுதிக்கொண்டிருந்த எனக்கு, இப்படி ஒவ்வொரு பதிவுக்கும் வந்து தட்டிகொடுத்து பாராட்டுற அன்பு இருக்கும்வரை, கொஞ்சமாவது நல்லா எழுதனும்ங்கிற ஒரு ஆர்வம் வந்துகிட்டு இருக்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
தேங்க்ஸ் சுகிர்தா, அவசியம் படிங்க அருமையான வாழ்வு, இது.

முரளிகுமார் பத்மநாபன் said...

@பூந்தளிர்
சாமி, உங்களுக்குத்தான் ஒரு பெரிய ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லனும். நெடுங்குருதியை நீங்க சொல்லிதான் வாசிச்சேன்.

சுசி said...

அவ்வ்வவ்வ்வ்ளோ அருமையான விமர்சனம் முரளி. பாராட்டுகளும் நன்றிகளும்.

சுசி said...

புது வீடும் நல்லாருக்கு :)

கனவின் பயணம் said...

I havent read 'நெடுங்குருதி', i have just read 'One hundread years of solitude', that too based on S.Ra's recommendation on vikatan recently. Did he dedicate this book to ' Gabriel García Márquez '?

Initial murder -
Dreaming about dead people -
Mass murder -
Two people loving some person -
Long summer/ Long rain -
Insomnia-
Family full of tragedy over generations-
Magic allegory village-
Playing with death people -
Story ends with same name character-

Everything is there in one hundred years of solitude.

Just after reading this, i have read one other review to confirm, it has some other similar characteritic as well

Prostitute character-
Sexual problem of Nagu-
One bastard child -
Village before any inventions-
'Fear'-


I probably assume, all i had listed, was intentional by S.Ra

I am neutral to S.Ra

Comparing "Theiva Thirumagal" and " I am Sam", or "Nandalala", i encourage those efforts, they are far better than some senseless masala.

I have read 'Snow' by Orhan Pamuk and 'The Year of the Death of Ricardo Reis' and i am about to read,'Chronicle of a death foretold' ( by the same author of OHYS), they kind of have a similar theme, 'A friend\character is dead and the narrative goes from the other friend/characters' view', I can tell you, they are inspired, the treatment/experience will be completely different, except the inspiration and u will be thrilled.

But here, i feel like watching
'I am sam' movie. Though i encourage it, i would skip it, its for people who havent seen it.

I am sure, 'நெடுங்குருதி' is for those who havent read 'One hundred years of solitude'.

And ALWAYS the credit goes to original creator, except 'Well copied' for S.Ra. ;-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
சோ தேங்க்ஸ் ஆஃப் யூ சுசி மேடம் :-) புது வீடு கட்டிக்குடுத்த நண்பருக்கு சொல்லுகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனவின் பயணம்

//that too based on S.Ra's recommendation on vikatan recently//
ஆம் அந்த கட்டுரையை நானும் வாசித்திருக்கிறேன்.

//Initial murder -
Dreaming about dead people -
Mass murder -
Two people loving some person -
Long summer/ Long rain -
Insomnia-
Family full of tragedy over generations-
Magic allegory village-
Playing with death people -
Story ends with same name character
Prostitute character-
Sexual problem of Nagu-
One bastard child -
Village before any inventions-
'Fear'-//
நண்பரே! நீங்க எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். அவசியம் நெடுங்குருதியையும் வாசியுங்கள். எனக்கு ஆங்கில நாவலகளைப்படிக்க அநியாயத்துக்கும் நேரம் பிடிக்கும். துரதிஸ்டவசமாக நேரம் இப்போ இல்லை. என்னால உங்களைப்போல காலமாகவும் இருக்க முடியவில்லை. :-))

//I have read 'Snow' by Orhan Pamuk and 'The Year of the Death of Ricardo Reis' and i am about to read,'Chronicle of a death foretold' ( by the same author of OHYS), they kind of have a similar theme, 'A friend\character is dead and the narrative goes from the other friend/characters' view', I can tell you, they are inspired, the treatment/experience will be completely different, except the inspiration and u will be thrilled.
I am sure, 'நெடுங்குருதி' is for those who havent read 'One hundred years of solitude'//

உங்களோடு அவசியம் பேச வேண்டும். உங்களுடைய ப்ரொபைல் மூலம் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. என்னுடைய மின்னஞ்சல் murli03@gmail.com.
நிறைய பேசவேண்டும். நன்றீ.

வெண் புரவி said...

நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகுகிறது முரளி... எப்படியோ எஸ்.ரா. அவர்களை வரவித்துவிடுவீர்கள் போலிருக்கிறது...காத்திருக்கிறேன்.

butterfly Surya said...

சூப்பர்.

ஜீனியர் எஸ்.ரா ... வாழ்க..

அப்பாதுரை said...

எஸ்.ரா சமீபத்தில் அறிமுகமான எழுத்து. என் புரிதலுக்கும் ரசனைக்கும் சற்றுக் கனமாக எழுதுகிறார். சில எண்ண வெளிப்பாடுகளின் ஆழம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கிறேன் - அறிமுகத்துக்கு நன்றி.

dr.tj vadivukkarasi said...
This comment has been removed by the author.
கனவின் பயணம் said...

Deal Murlai. I had mailed you.

dr.tj vadivukkarasi said...

hello murli,
nice sharing. I would not call this a review, for you have been overwhelmed by an art form, and shared unintentionally,gracefully.
could this be the state of mind behind inspirations?! plagiarisms?... anyway we will discuss that later, for want of time.

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
அருண் சார், தேங்க்யூ. ஹா ஹா ஒருவழியா வர சம்மதிச்சிட்டார். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சூர்யா
அண்ணா, ரொம்ப நாளைக்கு அப்புறம் வறீங்க இல்லையா? ஜூனியர் எஸ்.ரா. ஹிஹிஹி ஆனாலும் உங்க குடும்பு அடங்கலை. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வடிவுக்கரசி
//i understand u got overwhelmed by his writing and this sharing has flown out of you, unintentionally and gracefully.abt this inspiration?! and plagiarism... i would write you later on a different occasion//

ஆமாம் மேடம், ஒருவகையில் என் வாழ்க்கையில் ஒரு நேரத்தில் பலகதவுகளை திறந்து வைத்தது, எஸ்.ராவின் எழுத்துக்களே, இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் அதீதமாகவே கொண்டாடக்கூடியவர்களில் நானும் ஒருவன்.

மற்றபடி இதர விஷயங்கள் பற்றிய உங்கள் விரிவான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

நன்றீ. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனவின் பயணம்
தேங்க்ஸ் பாஸ், மெயில் பார்த்தேன். இரண்டு நாட்களாக பதிவு பக்கம் வரமுடியலை, அவசியம் தொடர்பிலிருங்கள். நன்றி:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.