எட்டுத்திக்கும்


      எஸ்.ராமகிருஷ்ணன், விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்தவர். வெகுஜன பத்திரிக்கையான ஆனந்தவிகடனில் வெளியான இவரது கட்டுரைகளில் மூலம் பரவாலாக அறியப்பட்டவர் என்றாலும் தன்னுடைய பிரத்யேக எழுத்து நடையின் மூலம் தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், புத்தக அறிமுகங்கள், உலக சினிமாக்களின் அறிமுகங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிவரும் முழு நேர எழுத்தாளர்.

டால்ஸ்டாயின் எழுத்து பாசமிக்க தாத்தாவின் கரங்களைப்போல நெருக்கமும் வலிமையும் கொண்டது. அந்தக் கரங்கள் மண்ணோடு நேரடியாகத்தொடர்பு கொண்டது. உலகின்மீது அதீத நம்பிக்கை கொண்டவை. அவரைக் கட்டிக்கொள்ளவும் அவரது அனுப்வங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர் தோளில் கைபோடும் நண்பனாக என்னால் ஒருபோதும் கொள்ளமுடியாது. இதற்கு நேர்மாறாக தாஸ்தாயெவ்ஸ்கியிருந்தார். அவரது கதைகளைப் படிக்கத்துவங்கியதும், அவர் உரிமையுடன் தோள்களில் கைபோட்டுக்கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் தனது இயலாமையை, புறக்கணிப்பை அதன் ஊடாகவும் தான் வாழ்வில் கண்டு மகிழ்ந்த சின்னஞ்சிறு சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வார். கனவுகளைப் பற்றி பேசுவார், வலிகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வார். உலகம் அழகான பெண்களின் காதலுக்காக மட்டுமே இயங்குகிறது என்று உற்சாகம் கொள்ளச் சொல்வார்.

இது   டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றி தன்னுடைய ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. எஸ்.ரா, இவர்களைப் படித்த அளவிற்கு நான் எஸ்.ராவைப் வாசித்திராத பொழுதும் இவரைப்பற்றி சொல்லவும் பேசவும் நிறைய இருக்கிறது என்னிடம்.

முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது துணையெழுத்தில்தான் எஸ்.ராவை வாசிக்கத்தொடங்கினேன். தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி போன்ற கட்டுரைகள் இவரது எழுத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அனுபவத்தை தேசாந்திரியில் அப்படியே தன் எழுத்துக்களில் பகிர்ந்திருப்பார். முன் அறிமுகம் இல்லாத மனிதர்களோடான ஸ்னேகம் என்பது எவ்வலவு அலாதியானது என்பதை இவரது எழுத்தில் உணரலாம். இருட்டில் விளக்கோடு உதவிய ஆட்டோகாரர், பாம்புக்கடிக்கு மருந்திட்டு காப்பாற்றிய ஏழை விவசாயி, அடுத்தவேளை சோற்றிற்கின்றி அலைந்த நேரங்களில் சந்தித்த மனிதர்கள் என இவரது கட்டுரையில் வருகிற மனிதர்கள், மனிதம் நிரம்பியவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ,  சக மனிதர்களோடான பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் மனதில் விதைக்கும் படியாக இருக்கிறது.
     
குறிப்பாக கதாவிலாசத்தில் வரும் கட்டுரைகள், அந்த எழுத்தாளர்களைப்பற்றிய வெறும் தகவல்களாகவோ, புள்ளிவிபரங்களாகவோ, அவர்களின் உயர்த்திச் சொல்லவேண்டிய எந்த கட்டாயங்களையோ சுமந்து நிற்பதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வை, எழுத்தின் மீதான அவர்களின் ஆளுமையை, அவர்களின் வாயிலாகவே சொல்லவைக்கிறது. வண்ணநிலவனையும், பஷீரையும், கு.அழகிரிசாமியையும் தேடித்தேடிப் படிக்கச் செய்கிறது. இன்னும், வாசிப்பு உலகில் அடியெடுத்து வைக்கும் எவருக்கும் அறிமுகமாய் என்னுடைய விரல்கள் இவரது கதாவிலாசத்தை நோக்கியே நீண்டிருக்கும். ஒரு எழுத்தாளனாய் தன் சமகால, முன்னோடி எழுத்தாளர்களை, அவர்களின் எழுத்துக்களின் மீதான தனது காதலை எந்தவித பிணக்குமின்றி எழுதுவது இவரது தனித்தன்மை.
     
இவரது எழுத்துக்களில் இன்னும் வசீகரமானது, இதுவரை அறியப்படாத பல விஷயங்களை, கவிதைகளை, கதைகளை அதன் வரிகளை, மேற்கோள்களாக காட்டுவதுதான். இவருடைய ஏதோவொரு கட்டுரையில் வரும் ஜென் கவிதையொன்றில்   “மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது இந்தவரிகளை எத்தனை முறை வாசித்திருப்பேனென்று தெரியாது. இதுபோன்ற வரிகள் அடுத்தடுத்ததாக  புதிய புத்தகத்தின் மீதான தேடலை ஆரம்பித்து வைக்கிறது. இந்த தேடலை இவரது எழுத்துக்கள் இயல்பாக செய்துபோகிறது.

இவரது சமீபத்திய புத்தகமான வாசகபர்வத்தின் முன்னுரையில் “ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு, மெளனமும் பதற்றமும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாக எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது என்று ஒரு வரி வரும். அதை என்னாலும் உணரமுடிகிறது என்பது ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சியே.      

எஸ்.ராவின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல, எப்படி வாசிக்க வேண்டும்எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனைபுதுமைப்பித்தனைசம்பத்தைபஷீரைவண்ணதாசனைஎம்.எஸ்ஸைநகுலனைவண்ணநிலவனைபோர்ஹேவைசெகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால்இத்தனைக்கும் காரணமான ஒரு மனிதரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்குமல்லவா?

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் என்னிடம்  “முரளி, உன்னுடைய தொடர்ச்சியான வாசிப்பனுபவம் உன் உன் எழுத்துக்களில் தெரிகிறது, அது உன் எழுத்துக்களில் சின்னச்சின்ன மாறுதல்களைப் பிரதிபளிக்கிறது” என்று சொல்கின்றனர். இதற்கு என்னுடைய பதில் ஏற்கனவே என்னுடைய ஒரு பதிவில் எழுதியது போல “என்னுடைய ஒவ்வொரு பதிவுகளையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும்அதுதான் விதி”. இப்பொழுது சந்தோஷமான அந்தத் தருணம் நெருங்கி விட்டது. என் ஆதர்ச எழுத்தாளரை சந்திக்கவிருக்கிறேன், சொல்லப்போனால் கையைப்பிடித்து அழுத்தமாக ஒரு நன்றி சொல்லப் போகிறேன்.

இதற்கு முன்பாக இரண்டு முறை நேரில் சந்தித்திருந்தாலும் அதிகம் அவருடன் உரையாட  முடியவில்லை. அதிலும் கடந்தமுறை மதுரையில் நடந்த விழாவில் செகாவ் பற்றியும் கிரேக்கத்து முயல் பற்றியும் அவர் பேசியதிலிருந்து, கூடுமான வரை விரைவில் அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன்.  சமீபத்தில் நெடுங்குருதி குறித்த ஒரு கட்டுரையை அவருக்கு அனுப்பியிருந்தேன், அது குறித்த தொடர் உரையாடலில் சேர்தளம் – திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக அவரை திருப்பூருக்கு அழைத்திருந்தோம். அவரும் வரச் சம்மதித்திருக்கிறார். வருகிற ஞாயிறு மாலை, அரோமா ஹாலில் ஒரு கலந்துரையாடல் போல நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

என் போல அவரை சந்திக்க, கலந்துரையாட விருப்பமிருக்கும் நண்பர்கள் தங்களது வருகையை பதிவுசெய்துகொள்ளுங்கள். முன்னேற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும். 

இந்தியா முழுவதும் நடந்து திரிந்த ஒரு தேசாந்திரியான இவருடன் இலக்கற்ற பயணம் மற்றும் அவரது எழுத்துக்கள் குறித்தான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வலியின் குரல் -ராகத் பதே அலி கான்


என்னுடைய பதிவுகளில் ஆங்காங்கே, இசை பற்றிய பதிவுகளில் ராகத் பதே அலிகான் பாடல்களைக் குறிப்பிட்டிருப்பேன். ஆனால், இவரைப் பற்றி  தனியாக ஒரு பதிவு எழுதவேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென இப்பொழுது எழுதக்காரணம், சூப்பர் சிங்கர் – சந்தோஷ்.

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, மேலும் சைய்ஃபின் பிரம்மாண்டமான நடிப்பைப் பார்க்கவும் நீ அவசியம் இந்தப்படத்தைப் பார், மேலும் இது போஸ்பூரி ஹிந்திப்படம், புரியவில்லை என்றால் என்னிடம் கேள்என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு என் தோழி ஒருத்தி சொல்ல அறிமுகமான படம், ஓம்காரா.  அப்பொழுது இந்த்த் திரைப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன், சைய்ஃபை விட அஜய் தேவ்கன் மற்றும் விவேக் ஓப்ராயின் நடிப்பும் பிடித்திருந்தது. சிறுகதைகளும் நாவல்களும், நாடகங்களும் திரைவடிவம் பெறுவதை ஆச்சர்யமாக ரசித்துப்பார்த்த படம். ஓம்காரா பற்றி தனியாக அவசியம் ஒரு பதிவெழுத வேண்டும், இன்னொரு நாள்.

சமீபத்தில் விஜய் டீவியில் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்த போது, சந்தோஷ் பாடிய பாடல் என்னவோ செயதது. அந்தப் பாடலில் ஒரு வலி இருப்பதை உணர முடிந்தது. எங்கேயோ கேட்டிருக்கிறேனே இந்தக்கதறலை? என்று தேடிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே சந்தோஷ் தும்சே மன்கி லகன் பாடலை அட்சர சுத்தமாக பாடிக்கேட்டிருக்கிறேன். அது ராகத் பதே அலிகானின் தனி ஆல்பங்களில் வரும் ஒரு பாடல். அந்தப்பாடலைப் போன்ற ஒரு தொனி இதில் இருப்பதால் இதுவும் ராகத்தின் பாடலாகவே இருக்கும் என்று நினைத்து தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் பதிவர் சுரேஷ்கண்ணன் பஸ்ஸில் இந்தப்பாடலை ஷேர் செய்திருந்த்திலிருந்தே கண்டுபிடிக்க முடிந்தது. 
அந்தப்பாடல் “நேனா டகுலேங்கேபடம் ஓம்காரா. பாடியது ராகத் பதே அலிகான். ராகத்தின் பாடல்களை நிறைய தொகுத்து வைத்திருக்கிறேன், திரைப்பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் கவ்வாலி ஆல்பங்கள் என. என்னுடைய மொத்த சேமிப்பிலும் இந்தப்பாடல் இல்லாமல் போனது என் துரதிஸ்டம். வெகு நாட்களாக ராகத்தின் பாடல்களை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இனிமேல் அதை தாமதிக்க முடியாது என்பதால் இதோ,ராகத் பதே அலிகான், உங்களுக்காக.....

 ராகத் பதே அலிகான், பண்டிட் நஸ்ரத் பதே அலிகானின் மறுமகன். அவரிடம் இசை பயின்றவர். குருவை மிஞ்சிய சிஷ்யர்களில் ஒருவர். பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞராக இருந்தாலும், தற்கால இந்தி சினிமாவின் தவிர்க்கமுடியாத பின்னணிப்பாடகர். பேதாஸ் பாடல்களுக்கும், மென்சோகப் பாடல்களுக்கும் ஏற்ற குரல், இவருடையது. கவ்வாலி மற்றும் சூஃபீ இசையில் பாடுபவர்களுக்கே உரித்தான உச்சஸ்தாயில் வருகிற சங்கதிகளும் கமஹங்களும் அத்துப்படி. குரலை இவ்வளவு உயர்த்திபிடித்திருக்கும் பொழுது இப்படி நெளிவு சுழிவுகளைக் கொடுப்பது என்பது வரம் வாங்கிவந்தவர்களேலே மட்டும்தான் முடியும். இவர் அந்த வகையறா.....

முதலில் “நேனா டகுலேங்கே”. இந்தப்பாடலில் ஒரு சொல்ல முடியாத துயரம் இருக்கும். ஆரோமலே பாடலில் இருப்பதுபோல உடைந்த இதயத்தின் கதறலாய் இல்லாமல், ஏமாற்றத்தின் உச்சமாக, சுயபச்சாதாபத்தை வெளிப்படுத்தும் அல்லது இரண்டையும் கலந்து தருவதுபோல ஒரு பிரதிபளிப்பு. இதை குரலில் எப்படிக்கொண்டு வருவது. அவசியம் இந்தப்பாடலைக் கேளுங்கள். இன்னும் இதன் பொருள் புரிந்து கேட்கும்பொழுது அதை எளிதாக உணர முடியும். கிட்டதட்ட கீழே இருக்கும்படியான பொருள்தரும்படியாக இருக்கும் என்னுடைய மொழிபெயர்ப்பு தவறாகவும் இருக்கலாம்.

மனமே! எதற்காகவும் கண்களை மட்டும் நம்பிடாதே,
ஏனெனில் விழித்திருக்கும் பொழுதும்
கனவு போல காட்சிகள் விரிவது
கண்களால் மட்டுமே சாத்தியம்.
தூக்கத்தைக் கெடுத்து, மனதையும் கெடுக்கிற,
நண்பனுக்கும் வழிப்போக்கனுக்குமான பேதம் காட்டாத,
கண்கள் சொல்வதைக் கேட்டிறாதே!
ஏனெனில் கண்களின் வேலை ஏமாற்றுவதுதான்

இந்தப்பாடலை சூப்பர்சிங்கரில் சந்தோஷ் பாடும் பொழுது, கிட்டதட்ட அந்த பாவத்தைக் குரலில் கொண்டுவந்திருப்பார், குறிப்பாக அந்தப்பாடலை பாடி முடித்தபின்னர், உன்னி கிருஷ்ணன் அந்த குறிப்பிட்ட இட்த்தை சொல்லி அங்கே ஒரு கதறல் இருக்குமே அதை மறுபடியும் பாடுங்கள் என்று கேட்க, இசைக்கோர்ப்பின்றி அவ்வளவு அழகாக அதை மறுபடியும் பாடிய சந்தோஷிற்கு என் வாழ்த்துக்கள். தும்சே மன்கி லகன், நேனா இரு பாடல்களுக்கும் இரண்டு ஓட்டு சந்தோஷிற்கு போட்டிருக்கிறேன். இது சந்தோஷின் வெர்ஷன்  இந்த வீடியோவின் 5வது நிமிடத்திலிருந்து 5.20 நிமிடங்கள் வரைப் பாருங்கள், உங்களுக்கு சந்தோஷைப் பிடிக்கும், சூஃபி இசைப்பிடிக்கும், ராகத் பதே அலி கானைப் பிடிக்கும்.  இது ஒரிஜினல் ராகத்தின்வெர்ஷன் 
 
அடுத்ததாக ராகத் பாடிய பாடல்களில் எப்பொழுது என் விருப்பப் பட்டியலில் இருக்கும் இன்னுமொரு பாடல், அஜா நச்லே என்ற திரைப்படதில் வரும் ஒரே பியா..... நீண்ட நாட்களுக்குப்பிறகு பாலிவுட் டான்ஸ் குயின் மாதுரி தீக்‌ஷித் நடித்து வெளிவந்த திரைப்படம். இதில் முழுப்பாடல் கூட வேண்டாம். ஒரே பியா....... ஹாய் என்று சினுங்களோடு முடிக்கும் முதல் இரண்டு வரிகள் போதும் இந்தபாடலை ரசிப்பதற்கு. பார்த்திபன் இளையராஜாவை சொல்வது போல எனக்கு இந்தப்பாடலில் அந்த ஹாயைத்தாண்டி வர முடிந்ததே இல்லை. இதை மிகச்சரியாக இமிடேட் செய்து இதுவரை எந்தமேடை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. பாடலில் ராகத்தின் குரலோடு மாதுரியையும் அவரது நடனத்தையும் ரசிக்க விரும்பினால் இந்த வீடியோவையும், இசைப்பிரியர்கள் இந்த வீடியோவையும் பாருங்கள். கீழே இதே பாடலின் அன்ப்ளக்டு வெர்ஷன் ஒன்றும் கொடுத்திருக்கிறேன், பாடல் ஆரம்பிக்கும் முன்பாக மென்மையாக தொடங்கும் க்ளாரினெட்டின் இசை பாடல் முழுவதும் சன்னமாக தொடரும், நல்ல ஹெட்போனில் கேட்பவர்களுக்கு நான் உத்திரவாதம்.

ஹாலிவுட்டின் மேட்மேக்ஸ் மெல் கிப்ஷனின் அபோகேலிப்டோ திரைப்படத்தின் பின்னணியில் ராகத்தின் சூஃபி இசைக்கோர்ப்பும் சேர்ந்திருக்கிறது. கிட்டதட்ட பெரிய வாத்திய இசை சேர்ப்புகள் இன்றி புல்லாங்குழலோடு இணைந்து உச்சஸ்தாயில் செய்யும் ஒரு பதினைந்து நிமிட ஆலாப். படத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இந்த இசைக்கான ஒலிப்பதிவு முடிந்து வரும் ராகத்திடம் இயக்குனர் மெல்கிப்ஷன், இவர் ஒரு ஒரு தனி மனித ஆர்கெஸ்ட்ரா என்று பாராட்டியிருக்கிறார். ஏனெனில் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்பத்திற்கும் தனியாக சவுண்ட்ட் ட்ராக் வெளியிடுவார்கள். மிகப்பெரிய ஆர்க்கஸ்ட்ரேஷன், சிம்பொனி, ஓபரா போன்ற கூட்டிசையே பிரதானமாக இருக்கும் ஹாலிவுட் படங்களில், இனப்பிரச்சனையை பிரதானமாக கொண்ட இந்தப்படத்தில் வலியைக் குறிப்பிட்டு வெளிப்படுத்த வேண்டிய இசை தேவைப்பட்டது, எனவே ராகத்தின் குரல் எங்களுக்கு தேவையானதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார், இந்தப்படத்தின் இசையமைப்பாளரான ஜேம்ஸ் ஹார்னர். இவர் டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே செய்தி குறித்த மேலும் வீடியோக்கள்

என்னுடைய ஃபேவரைட் என்கிற பட்டியலில் அடங்கும் ராஹத்தின் பாடல்களுக்கு இங்கே சுட்டி கொடுத்திருக்கிறேன்.  

ஜியா தடக், தடக்கு... Kalyug படத்திலிருந்து
பஹாரா பஹாரா... I HATE LUV STORIES படத்திலிருந்து
ஆஸ் பாஸ் ஹே ஹுதா...  anjaanaa anjaani படத்திலிருந்து
ஜகு சூனா சூனா ......  om santhi om படத்திலிருந்து
ஆஜ் தின்.... Love aaj kal படத்திலிருந்து
மே ஜஹான் ரஹோன்..... namastey londan படத்திலிருந்து
தும் ஜோ ஆயே  one upon a time in Mumbai படத்திலிருந்து
சஜுனா..... MY NAME IS KHAN படத்திலிருந்து

      மேலும் இன்.காமிலும் சாங்ஸ்.பிகேவிலும் இவரது மொத்தப் பாடல்களுக்கான கலெக்‌ஷனும் இருக்கிறது. அத்தனையையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இசையோடு கூடிய இனிய இரவிற்கு, இன்னுமொரு கலைஞன். 
 
இசையில் தொடங்குதம்மா.....

ஒரு ஜப்பானிய மனைவி

குணால் பாசு எழுதிய THE JAPANESE WIFE சிறுகதைத் தொகுப்பு பற்றிய அபர்ணா சென்னின் கருத்து.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ள வரும் அமெரிக்க பேராசிரியரின் கதை, பாலைவனத்தில் பயணம் செய்யும் பாம்பு பிடிப்பவரின் மகளின் கதை, டியனன்மென் சதுக்கத்தில் சிக்கிக்கொண்ட ஒரு இந்திய தேனிலவு ஜோடிகளின் கதை, தனது ரிஷி மூலத்தை கொல்கத்தாவில் கண்டறியும் ரஷ்ய விபசாரிப் பெண்ணின் கதை என எதிர்பாராத கதைக்கருக்களோடு கூடிய பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்புதான் இந்த THE JAPANESE WIFE.  அதிலும் தலைப்புக் கதையைப் படித்தவுடனே இது ஒரு அற்புதமான வெகுளித்தனத்தை தனக்குள்ளே கொண்ட, மறுக்கமுடியாத, மாற்றுக்கருத்தே இல்லாத, அழகான காதல் கதை என்பதையும்,  இது கண்டிப்பாக நான் செய்தாகவேண்டிய படம் என்பதை இந்த சிறுகதையை படித்தவுடனே முடிவு செய்து விட்டேன்
-இயக்குனர் அபர்ணா சென்


வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும், எதையுமே கற்றுக்கொள்ளாமல் உறங்கும் எந்த ஒரு நாளும் வீண் என உறுதியாக நம்புபவன் நான். இயற்கையிடமிருந்தோ, சக மனிதகளிடமிருந்தோ, இசையிலிருந்தோ, புத்தகங்களிலுருந்தோ அல்லது திரைப்படங்களிலிருந்தோ, கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை. அப்படி எனக்கு அன்பை சொல்லிக்கொடுத்த ஒரு திரைப்படம், தி ஜப்பனிஸ் ஒய்ஃப். குனால் பாசு என்பவர் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட அபர்ணாசென் இயக்கி 2010ல் வெளிவந்த வங்கமொழித் திரைப்படம், தி ஜப்பனிஸ் ஒய்ஃப்.

நினைத்தவுடன் முகம்பார்த்துப் பேசிக்கொள்ள முடிகிற இந்த காலகட்டத்தில், இந்த அவசர உலகினால் கைவிடப்பட்ட கடிதங்களை முன்னிருத்தும் கதை, எழுத்துக்களின் மூலம் அன்பையும், காதலையும், கண்ணீரையும் பரிமாறிக்கொண்ட இரு இதயங்களின் கதை. சொல்லப்படாத துயரமாக கதை முழுவதும் வலி தொடரும், கதை. 365 கடிதங்கள், 3 தொலைபேசி உரையாடல்கள், 15 வருட திருமண வாழ்க்கை, இவையனைத்தும், நேரில் சந்தித்திராத இருவருக்கிடையே! எப்படி? பார்க்கலாம்.

படத்தின் கதை
வங்காளத்தில் மாட்லா நதிக்கரையோர கிராமத்தில், சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்து, தன் சித்தியுடன் வசித்து வருகிறார், சிநேகமோய் சேட்டர்ஜீ. சிநேகமோய் ஒரு கணக்கு வாத்தியார்.  இவரது பேனா நண்பி மியாஹி, ஜப்பானில் வசித்துவருகிறார். தொடர் கடிதங்களின் வழியே இருவரின் குடும்ப சூழ்நிலைகளையும், மனநிலையை பரஸ்பரம் புரிந்துகொண்டிருகின்றனர். போலவே இரு சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் காலநிலை முதற்கொண்டு, கடிதம் சொல்லிக்கொடுக்கிறது. ஒரு கட்டத்தில், இந்த சரியான புரிந்துணர்வே, அவர்களை நட்பைத் தாண்டி காதலுக்குள் அழைத்துச் செல்கிறது.

உன்னைத் தவிர வேறு யாராலும் என்னை சரியாக புரிந்துகொள்ள முடியாது என்கிற ஒரு பதத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இருவரும் சந்தித்துக்கொள்லாமல் எப்படி செய்வது? தனது நாட்டின் முறைப்படி, மியாகி ஒரு மோதிரத்தை சிநேகமோய்க்கு அனுப்புகிறாள். சிநேகமோய் பதிலுக்கு தங்கள் முறைப்படு வளையலையும்ம், குங்குமத்தையும் அனுப்புகிறார். இங்கே இவனே மோதிரத்தை அணிந்து கொள்ள அங்கே அவளும் வளையலை அணிந்து குங்குமம் இட்டுக்கொள்ள முடிந்தது திருமணம். இந்த திருமணம் நடந்து 15 வருடங்களும் கடக்கின்றன. தங்களது பதினைந்தாவது திருமணதினத்திற்காக, மியாஹி தன் தந்தை செய்யத பட்டங்களையும், அவளது போட்டோ ஆல்பத்தையும் அனுப்பி வைக்கிறாள்.

     இதற்கிடையில், திருமணமான சில வருடங்களிலேயே தன் கணவனை இழந்து, ஐந்து ஆறு வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் (பால்டு) நிராதரவாக இருக்கும் சந்தியா, அவள் தன் தாயின் தோழியான மாஷி (சிநேகமோயின் சித்தி) வீட்டிற்கு வருகிறாள். கடிதங்கள் மூலமாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் சிநேகமோய் மீது வருத்தத்துடன் இருக்கும் சித்திக்கு, இவளது வருகை சற்று ஆறுதலாக இருக்கிறது, சிநேகமோயும் பால்டுவும் நன்றாக பழகுகிறார்கள். சந்தியாவும் தன்னாலான உதவிகளை அவனுக்கு செய்து வருகிறாள். அழகான பெண்ணான சந்தியாவிற்கும், வயதாக்கிக்கொண்டே போகும் சிநேகமோயிற்கும் இடையே ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா? இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட மாட்டார்களா? என சித்தி எதிர்பார்க்கிறார்.

இந்த சமயத்தில் மியாஹிக்கு கேன்சர் வருகிறது, அவளுக்காக இங்கே பல வகையான மருத்துவர்களை அணுகி, மருந்துக்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறான். நாட்கள் சென்று கொண்டேயிருக்கிறது. மழைப்பருவம் ஆரம்பிக்கிறது, கடுமையான மழையில் நனைந்தபடி மியாஹியின் மருத்துவ சான்றிதழ்களை காட்ட, அருகிலுருக்கும் நகரத்திற்கு சென்று வரும் சிநேஹமோய்க்கு நிமோனியா காய்ச்சல் வருகிறது. மாட்லா நதியில் கடக்கமுடியாத அளவு வெள்ளப்பெருக்கு உண்டாகிறது. சந்தியாவின் கைகளைப் பிடித்தபடி மியாஹி, மியாஹி என அரற்றியபடி, சிநேஹமோய் இறந்துபோகிறார்.

அடுத்தகாட்சியில், மாட்லா நதியில் அமைதியாக மிதந்துவரும் படகில், மியாஹி, வெள்ளை சேலை, மொட்டைத் தலையுடன், படகில் சிநேஹமோய் வீட்டிற்கு வருகிறார். அங்கே வெள்ளைப் புடவையுடன்  சந்தியா, மியாஹியை வரவேற்கிறாள். மியாஹியின் பார்வையாய் சிநேகமோயின் அறையை சுற்றும் கேமிரா சன்னல் வழியாக மாட்லா நதிக்கு வருவதோடு படம் நிறைவடைகிறது. இந்தக் கதையின் ஒரு கதாபாத்திரம் போலவே படம் நெடுக, நதியும் கூடவே வருகிறது.
 (மியாஹி, சிநேகமோய், சந்தியா)

இந்தப்படமே ஒரு மென்சோகக் கவிதைதான், அதிலும் ரசிக்கும்படியான வசனங்களும், ஹைக்கூ போன்ற காட்சிகளும் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன. என் பார்வையில் பட்ட சில ஹைக்கூக்கள்.

     திருமணத்திற்கு முன்பும், திருமணமாகி கணவனை இழந்தபின் சிநேகமோயின் வீட்டிற்கு வரும் சந்தியாவை, அவளது முகத்தைப் பார்க்க இவன் எடுக்கும் முயற்சிகளும், ஒவ்வொரு முறையும் சேலை தலைப்பால் முகத்தை மறைத்துக்கொள்ளும் சந்தியாவும் அவ்வளவு அழகு.

மாஷியும்(சித்தி) அவரது தோழியும் சிநேகமோய் கடிதங்கள் மூலமே திருமணமும் செய்து குடும்பம் நடத்தும் விதம் பற்றிப் பேசும்பொழுது  " எனக்குப் பேரக்குழந்தைகள் வேண்டும். ஆனால் அது கடிதங்களால்  ஆகக்கூடிய விஷயமில்லையே" என்று சொல்வார்கள், அப்பொழுது இருவரின் எக்ஸ்பிரஷன்ஸும், பக்கா. கிராமத்து பெருசுகளின் ஊமைக்குசும்பு அது.

திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தவுடன், தனது வீட்டில் ஒரேயொரு கழிவறைதானே இருக்கிறது என்று சிநேகமோய் கவலைப்படுவதாக கடிதம் எழுத, மியாகியோ ஆண்கள் எப்போதும் முக்கியமில்லாத விஷயங்களுக்குக் கவலைப்படுவார்கள் என்று கடிதம் எழுதும் காட்சியும்.

திருமணத்திற்காக மியாஹி அனுப்பிய மோதிரத்தை அணிந்தபடி அதையே பார்த்துக்கொண்டே எதிரில் வரும் நபர் மீது மோத, அவர்  “கண் தெரியவில்லையா, உனக்கு?” என்று திட்டுகிறார். சில வினாடிகள் கழித்தே அதை உணரும் சிநேகமோய், அவரிடம் வழிய சென்று “எனக்கு கண் நன்றாகத் தெரியும், இருந்தாலும் எனக்கு இப்பொழுதுதான் திருணமானமாகியிருக்கிறது”  என்று சொல்லும் காட்சியும், ராகுலின் முகபாவனைகளும்.

மியாஹி தங்களது ஒவ்வொரு திருமண தினத்தன்றும் சிநேகமோய்க்கு திருமணநாள் பரிசாக ஜப்பானிய பாரம்பரியப்படி, வண்ணவண்ண பட்டங்களை அனுப்புகிறாள். அனைத்தையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறான். ஒருநாள் அதை பால்டு எடுத்து விளையாடுகிறான், இதில் கோபப்படும் சந்த்யா பால்டுவை அடிக்கிறாள், சித்தி அவளைத் தடுத்து, "பட்டம் என்பது குழந்தைகளுக்குத்தானே? சிநேஹமோய் மாதிரியான பெரிய மனுஷங்களுக்கில்லையே? என்னும் காட்சியும் தொடர்ந்து கிராமத்தில் நடக்கும் பட்டத் திருவிழாவில் பால்டுவின் வற்புறுத்தலால் விருப்பமின்றி கலந்துகொள்ளும் சிநேகமோய், ஒரு நிலையில் அவரது பட்டத்தை அறுக்க போட்டியாளர்கள் மாஞ்சாவுடன் களமிறங்க, பால்டு உன் மனைவியை காப்பாற்று, என்றதும் வீறுகொண்டெழுந்து பட்டத்தைக் காப்பாற்றும் காட்சி. அவள் அனுப்பும் ஒவ்வொன்றையும் அவளாகவே நினைக்கும் சிநேகமோயின் கதாப்பாத்திரத்தை உணர்த்தும் காட்சியாக பார்க்கிறேன்.

அதைவிட பட்டத்தை பறக்க விட, அதன் நூலை சிவப்பாக்க  குங்குமம் வாங்க கடைக்கு செல்லும் சிநேகமோயிடம் கடைக்காரர், “உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுமே விதவைகளாயிற்றே? பின் குங்குமம் யாருக்கு? என்றுவிட்டு பிறகு அவராகவே உணர்ந்தவராய் “ஓ, உங்கள் ஜப்பான் மனைவிக்கா? என்று கடைக்காரர் கேட்குமிடமும் அதை ஆமோதிப்பதாய் சிநேஹமோய் தலையாட்டும் காட்சியும்.  

 “பால்டுவிற்கு 9 வயது ஆகிவிட்டது அவனுக்கு பூணூல் திருமணம் செய்து பார்க்க அந்த பெண் ஆசைப்படுகிறாள், அதற்கு ஆகவேண்டியதைச் செய்ய, நீ அவளோடு அருகிலுருக்கும் ஊருக்கு சென்று வாஎன்று சித்தி சொல்ல மறுக்கவியலாமல் சந்தியாவுடன் செல்லும் சிநேகமோயிற்கும் சந்தியாவிற்கும் இடையே மெல்ல புரிதல் வருவதையும், இருந்தாலும் அந்த இடைவெளியை இருவருமே கடக்காமல் உரையாடுவதும் அவ்வளவு இயல்பு. மேலும் தானும் இங்கே இருப்பதால் மாத செலவு அதிகம் ஆவதால் தன் மாமனார் வீட்டிற்கே செல்ல இருப்பதாய் சந்தியா வருத்தத்துடன் சொல்லும்பொழுது, மெல்ல அவளை அணைத்து, “நீ போக வேண்டாம், இங்கேயே இரு, ஆனால் கவலைப்படாதேஎன்று சிநேகமோய்  சொல்லும் அந்தக் காட்சியும்.

மியாஹியின் மருத்துவத்திற்காக, ஆயுர்வேத மருத்துவரின் கேள்விகளை மியாஹியிடம் கேட்க முனைவதும், மொழிப் பிரச்சனையால் தன்னால் சரிவர அவளிடம் கேட்க முடியாதையும் கடைக்காரரிடம் புலம்பலாக வெளிப்படுத்துவதும், ஜப்பான் சென்று வர எவ்வளவு செலவாகும் என்று நண்பரிடம் கேட்க, அவர்  “கம்மிதான் ஒரு முப்பது, நாப்பது ஆகும் என்று சொன்னதும், மேலே பார்த்தபடி  “ஆயிரத்திலேயா? என சிநேகமோய் கேட்கும் காட்சியும்

இந்த எல்லாக் காட்சிகளையும் விட படத்தின் கிளைமேக்ஸில், எந்த உரையாடல்களும் இல்லாமல், சிநேகமோயின் அறையை மியாஹியின் பார்வையில் காண்பது போல கேமிரா சுற்றி வரும், தான் செய்து அனுப்பிய பொருட்களின்மீது அவள் பார்வை படும்போதெல்லாம் நின்றும் பிறகு மெல்ல பயணிப்பதுவுமாய் இருக்கும் அந்த ஒற்றைகாட்சி போதும், இது ஒரு அருமையான திரைப்படம் என்பதற்கு. பின்னணிக்கு, வங்காள-ஜப்பானிய இசைகளின் கலவையாக, வங்காள பாரம்பரிய இசையை ஜப்பானிய இசைக்கருவிகளின் மூலம் வாசித்திருப்பார்கள்.

மாட்லா நதி எப்படி இருக்கும்? ஆழமாக பரந்து இருக்குமோ? என்ற மியாஹியின் கேள்விக்கு ஓவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் என்று கடிதம் எழுதுகிறார், அப்பொழுது பலவித சீதோஷ்ண நிலையில் காட்டப்படும் மாட்லா நதியும் அதன் போக்கும் அருமையான விஷுவல் ட்ரீட்....

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். தி ஜப்பனீஸ் ஒய்ஃப் - ஒரு அழகான திரை அனுபவம். படத்தின் ட்ரெய்லர்