ஒரு ஜப்பானிய மனைவி

குணால் பாசு எழுதிய THE JAPANESE WIFE சிறுகதைத் தொகுப்பு பற்றிய அபர்ணா சென்னின் கருத்து.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ள வரும் அமெரிக்க பேராசிரியரின் கதை, பாலைவனத்தில் பயணம் செய்யும் பாம்பு பிடிப்பவரின் மகளின் கதை, டியனன்மென் சதுக்கத்தில் சிக்கிக்கொண்ட ஒரு இந்திய தேனிலவு ஜோடிகளின் கதை, தனது ரிஷி மூலத்தை கொல்கத்தாவில் கண்டறியும் ரஷ்ய விபசாரிப் பெண்ணின் கதை என எதிர்பாராத கதைக்கருக்களோடு கூடிய பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்புதான் இந்த THE JAPANESE WIFE.  அதிலும் தலைப்புக் கதையைப் படித்தவுடனே இது ஒரு அற்புதமான வெகுளித்தனத்தை தனக்குள்ளே கொண்ட, மறுக்கமுடியாத, மாற்றுக்கருத்தே இல்லாத, அழகான காதல் கதை என்பதையும்,  இது கண்டிப்பாக நான் செய்தாகவேண்டிய படம் என்பதை இந்த சிறுகதையை படித்தவுடனே முடிவு செய்து விட்டேன்
-இயக்குனர் அபர்ணா சென்


வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும், எதையுமே கற்றுக்கொள்ளாமல் உறங்கும் எந்த ஒரு நாளும் வீண் என உறுதியாக நம்புபவன் நான். இயற்கையிடமிருந்தோ, சக மனிதகளிடமிருந்தோ, இசையிலிருந்தோ, புத்தகங்களிலுருந்தோ அல்லது திரைப்படங்களிலிருந்தோ, கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை. அப்படி எனக்கு அன்பை சொல்லிக்கொடுத்த ஒரு திரைப்படம், தி ஜப்பனிஸ் ஒய்ஃப். குனால் பாசு என்பவர் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட அபர்ணாசென் இயக்கி 2010ல் வெளிவந்த வங்கமொழித் திரைப்படம், தி ஜப்பனிஸ் ஒய்ஃப்.

நினைத்தவுடன் முகம்பார்த்துப் பேசிக்கொள்ள முடிகிற இந்த காலகட்டத்தில், இந்த அவசர உலகினால் கைவிடப்பட்ட கடிதங்களை முன்னிருத்தும் கதை, எழுத்துக்களின் மூலம் அன்பையும், காதலையும், கண்ணீரையும் பரிமாறிக்கொண்ட இரு இதயங்களின் கதை. சொல்லப்படாத துயரமாக கதை முழுவதும் வலி தொடரும், கதை. 365 கடிதங்கள், 3 தொலைபேசி உரையாடல்கள், 15 வருட திருமண வாழ்க்கை, இவையனைத்தும், நேரில் சந்தித்திராத இருவருக்கிடையே! எப்படி? பார்க்கலாம்.

படத்தின் கதை
வங்காளத்தில் மாட்லா நதிக்கரையோர கிராமத்தில், சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்து, தன் சித்தியுடன் வசித்து வருகிறார், சிநேகமோய் சேட்டர்ஜீ. சிநேகமோய் ஒரு கணக்கு வாத்தியார்.  இவரது பேனா நண்பி மியாஹி, ஜப்பானில் வசித்துவருகிறார். தொடர் கடிதங்களின் வழியே இருவரின் குடும்ப சூழ்நிலைகளையும், மனநிலையை பரஸ்பரம் புரிந்துகொண்டிருகின்றனர். போலவே இரு சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் காலநிலை முதற்கொண்டு, கடிதம் சொல்லிக்கொடுக்கிறது. ஒரு கட்டத்தில், இந்த சரியான புரிந்துணர்வே, அவர்களை நட்பைத் தாண்டி காதலுக்குள் அழைத்துச் செல்கிறது.

உன்னைத் தவிர வேறு யாராலும் என்னை சரியாக புரிந்துகொள்ள முடியாது என்கிற ஒரு பதத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இருவரும் சந்தித்துக்கொள்லாமல் எப்படி செய்வது? தனது நாட்டின் முறைப்படி, மியாகி ஒரு மோதிரத்தை சிநேகமோய்க்கு அனுப்புகிறாள். சிநேகமோய் பதிலுக்கு தங்கள் முறைப்படு வளையலையும்ம், குங்குமத்தையும் அனுப்புகிறார். இங்கே இவனே மோதிரத்தை அணிந்து கொள்ள அங்கே அவளும் வளையலை அணிந்து குங்குமம் இட்டுக்கொள்ள முடிந்தது திருமணம். இந்த திருமணம் நடந்து 15 வருடங்களும் கடக்கின்றன. தங்களது பதினைந்தாவது திருமணதினத்திற்காக, மியாஹி தன் தந்தை செய்யத பட்டங்களையும், அவளது போட்டோ ஆல்பத்தையும் அனுப்பி வைக்கிறாள்.

     இதற்கிடையில், திருமணமான சில வருடங்களிலேயே தன் கணவனை இழந்து, ஐந்து ஆறு வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் (பால்டு) நிராதரவாக இருக்கும் சந்தியா, அவள் தன் தாயின் தோழியான மாஷி (சிநேகமோயின் சித்தி) வீட்டிற்கு வருகிறாள். கடிதங்கள் மூலமாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் சிநேகமோய் மீது வருத்தத்துடன் இருக்கும் சித்திக்கு, இவளது வருகை சற்று ஆறுதலாக இருக்கிறது, சிநேகமோயும் பால்டுவும் நன்றாக பழகுகிறார்கள். சந்தியாவும் தன்னாலான உதவிகளை அவனுக்கு செய்து வருகிறாள். அழகான பெண்ணான சந்தியாவிற்கும், வயதாக்கிக்கொண்டே போகும் சிநேகமோயிற்கும் இடையே ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா? இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட மாட்டார்களா? என சித்தி எதிர்பார்க்கிறார்.

இந்த சமயத்தில் மியாஹிக்கு கேன்சர் வருகிறது, அவளுக்காக இங்கே பல வகையான மருத்துவர்களை அணுகி, மருந்துக்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறான். நாட்கள் சென்று கொண்டேயிருக்கிறது. மழைப்பருவம் ஆரம்பிக்கிறது, கடுமையான மழையில் நனைந்தபடி மியாஹியின் மருத்துவ சான்றிதழ்களை காட்ட, அருகிலுருக்கும் நகரத்திற்கு சென்று வரும் சிநேஹமோய்க்கு நிமோனியா காய்ச்சல் வருகிறது. மாட்லா நதியில் கடக்கமுடியாத அளவு வெள்ளப்பெருக்கு உண்டாகிறது. சந்தியாவின் கைகளைப் பிடித்தபடி மியாஹி, மியாஹி என அரற்றியபடி, சிநேஹமோய் இறந்துபோகிறார்.

அடுத்தகாட்சியில், மாட்லா நதியில் அமைதியாக மிதந்துவரும் படகில், மியாஹி, வெள்ளை சேலை, மொட்டைத் தலையுடன், படகில் சிநேஹமோய் வீட்டிற்கு வருகிறார். அங்கே வெள்ளைப் புடவையுடன்  சந்தியா, மியாஹியை வரவேற்கிறாள். மியாஹியின் பார்வையாய் சிநேகமோயின் அறையை சுற்றும் கேமிரா சன்னல் வழியாக மாட்லா நதிக்கு வருவதோடு படம் நிறைவடைகிறது. இந்தக் கதையின் ஒரு கதாபாத்திரம் போலவே படம் நெடுக, நதியும் கூடவே வருகிறது.
 (மியாஹி, சிநேகமோய், சந்தியா)

இந்தப்படமே ஒரு மென்சோகக் கவிதைதான், அதிலும் ரசிக்கும்படியான வசனங்களும், ஹைக்கூ போன்ற காட்சிகளும் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன. என் பார்வையில் பட்ட சில ஹைக்கூக்கள்.

     திருமணத்திற்கு முன்பும், திருமணமாகி கணவனை இழந்தபின் சிநேகமோயின் வீட்டிற்கு வரும் சந்தியாவை, அவளது முகத்தைப் பார்க்க இவன் எடுக்கும் முயற்சிகளும், ஒவ்வொரு முறையும் சேலை தலைப்பால் முகத்தை மறைத்துக்கொள்ளும் சந்தியாவும் அவ்வளவு அழகு.

மாஷியும்(சித்தி) அவரது தோழியும் சிநேகமோய் கடிதங்கள் மூலமே திருமணமும் செய்து குடும்பம் நடத்தும் விதம் பற்றிப் பேசும்பொழுது  " எனக்குப் பேரக்குழந்தைகள் வேண்டும். ஆனால் அது கடிதங்களால்  ஆகக்கூடிய விஷயமில்லையே" என்று சொல்வார்கள், அப்பொழுது இருவரின் எக்ஸ்பிரஷன்ஸும், பக்கா. கிராமத்து பெருசுகளின் ஊமைக்குசும்பு அது.

திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தவுடன், தனது வீட்டில் ஒரேயொரு கழிவறைதானே இருக்கிறது என்று சிநேகமோய் கவலைப்படுவதாக கடிதம் எழுத, மியாகியோ ஆண்கள் எப்போதும் முக்கியமில்லாத விஷயங்களுக்குக் கவலைப்படுவார்கள் என்று கடிதம் எழுதும் காட்சியும்.

திருமணத்திற்காக மியாஹி அனுப்பிய மோதிரத்தை அணிந்தபடி அதையே பார்த்துக்கொண்டே எதிரில் வரும் நபர் மீது மோத, அவர்  “கண் தெரியவில்லையா, உனக்கு?” என்று திட்டுகிறார். சில வினாடிகள் கழித்தே அதை உணரும் சிநேகமோய், அவரிடம் வழிய சென்று “எனக்கு கண் நன்றாகத் தெரியும், இருந்தாலும் எனக்கு இப்பொழுதுதான் திருணமானமாகியிருக்கிறது”  என்று சொல்லும் காட்சியும், ராகுலின் முகபாவனைகளும்.

மியாஹி தங்களது ஒவ்வொரு திருமண தினத்தன்றும் சிநேகமோய்க்கு திருமணநாள் பரிசாக ஜப்பானிய பாரம்பரியப்படி, வண்ணவண்ண பட்டங்களை அனுப்புகிறாள். அனைத்தையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறான். ஒருநாள் அதை பால்டு எடுத்து விளையாடுகிறான், இதில் கோபப்படும் சந்த்யா பால்டுவை அடிக்கிறாள், சித்தி அவளைத் தடுத்து, "பட்டம் என்பது குழந்தைகளுக்குத்தானே? சிநேஹமோய் மாதிரியான பெரிய மனுஷங்களுக்கில்லையே? என்னும் காட்சியும் தொடர்ந்து கிராமத்தில் நடக்கும் பட்டத் திருவிழாவில் பால்டுவின் வற்புறுத்தலால் விருப்பமின்றி கலந்துகொள்ளும் சிநேகமோய், ஒரு நிலையில் அவரது பட்டத்தை அறுக்க போட்டியாளர்கள் மாஞ்சாவுடன் களமிறங்க, பால்டு உன் மனைவியை காப்பாற்று, என்றதும் வீறுகொண்டெழுந்து பட்டத்தைக் காப்பாற்றும் காட்சி. அவள் அனுப்பும் ஒவ்வொன்றையும் அவளாகவே நினைக்கும் சிநேகமோயின் கதாப்பாத்திரத்தை உணர்த்தும் காட்சியாக பார்க்கிறேன்.

அதைவிட பட்டத்தை பறக்க விட, அதன் நூலை சிவப்பாக்க  குங்குமம் வாங்க கடைக்கு செல்லும் சிநேகமோயிடம் கடைக்காரர், “உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுமே விதவைகளாயிற்றே? பின் குங்குமம் யாருக்கு? என்றுவிட்டு பிறகு அவராகவே உணர்ந்தவராய் “ஓ, உங்கள் ஜப்பான் மனைவிக்கா? என்று கடைக்காரர் கேட்குமிடமும் அதை ஆமோதிப்பதாய் சிநேஹமோய் தலையாட்டும் காட்சியும்.  

 “பால்டுவிற்கு 9 வயது ஆகிவிட்டது அவனுக்கு பூணூல் திருமணம் செய்து பார்க்க அந்த பெண் ஆசைப்படுகிறாள், அதற்கு ஆகவேண்டியதைச் செய்ய, நீ அவளோடு அருகிலுருக்கும் ஊருக்கு சென்று வாஎன்று சித்தி சொல்ல மறுக்கவியலாமல் சந்தியாவுடன் செல்லும் சிநேகமோயிற்கும் சந்தியாவிற்கும் இடையே மெல்ல புரிதல் வருவதையும், இருந்தாலும் அந்த இடைவெளியை இருவருமே கடக்காமல் உரையாடுவதும் அவ்வளவு இயல்பு. மேலும் தானும் இங்கே இருப்பதால் மாத செலவு அதிகம் ஆவதால் தன் மாமனார் வீட்டிற்கே செல்ல இருப்பதாய் சந்தியா வருத்தத்துடன் சொல்லும்பொழுது, மெல்ல அவளை அணைத்து, “நீ போக வேண்டாம், இங்கேயே இரு, ஆனால் கவலைப்படாதேஎன்று சிநேகமோய்  சொல்லும் அந்தக் காட்சியும்.

மியாஹியின் மருத்துவத்திற்காக, ஆயுர்வேத மருத்துவரின் கேள்விகளை மியாஹியிடம் கேட்க முனைவதும், மொழிப் பிரச்சனையால் தன்னால் சரிவர அவளிடம் கேட்க முடியாதையும் கடைக்காரரிடம் புலம்பலாக வெளிப்படுத்துவதும், ஜப்பான் சென்று வர எவ்வளவு செலவாகும் என்று நண்பரிடம் கேட்க, அவர்  “கம்மிதான் ஒரு முப்பது, நாப்பது ஆகும் என்று சொன்னதும், மேலே பார்த்தபடி  “ஆயிரத்திலேயா? என சிநேகமோய் கேட்கும் காட்சியும்

இந்த எல்லாக் காட்சிகளையும் விட படத்தின் கிளைமேக்ஸில், எந்த உரையாடல்களும் இல்லாமல், சிநேகமோயின் அறையை மியாஹியின் பார்வையில் காண்பது போல கேமிரா சுற்றி வரும், தான் செய்து அனுப்பிய பொருட்களின்மீது அவள் பார்வை படும்போதெல்லாம் நின்றும் பிறகு மெல்ல பயணிப்பதுவுமாய் இருக்கும் அந்த ஒற்றைகாட்சி போதும், இது ஒரு அருமையான திரைப்படம் என்பதற்கு. பின்னணிக்கு, வங்காள-ஜப்பானிய இசைகளின் கலவையாக, வங்காள பாரம்பரிய இசையை ஜப்பானிய இசைக்கருவிகளின் மூலம் வாசித்திருப்பார்கள்.

மாட்லா நதி எப்படி இருக்கும்? ஆழமாக பரந்து இருக்குமோ? என்ற மியாஹியின் கேள்விக்கு ஓவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் என்று கடிதம் எழுதுகிறார், அப்பொழுது பலவித சீதோஷ்ண நிலையில் காட்டப்படும் மாட்லா நதியும் அதன் போக்கும் அருமையான விஷுவல் ட்ரீட்....

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். தி ஜப்பனீஸ் ஒய்ஃப் - ஒரு அழகான திரை அனுபவம். படத்தின் ட்ரெய்லர்

19 கருத்துரைகள்:

அப்பாதுரை said...

புத்தகம் பற்றிய விவரங்களைச் சேர்த்திருக்கலாமே?
மிஸ்டர் மிசஸ் ஐயர் பார்த்திருக்கிறேன் - அபர்னா சென் கொஞ்சம் இழுவை. இந்தப் படம் எப்படி என்று பார்க்கிறேன்.
அறிமுகத்துக்கு நன்றி.

ஷஹி said...

கடுமையான துயரமா இருக்கே படிக்கும் போதே...பாக்க ரொம்ப இல்ல கஷ்டமா இருக்கும்? எப்புடி இத சிலாகிச்சு எழுதியிருக்கீங்க? யப்பாடி i can never tolerate this much of sickness...ஒருத்தி துணையில்லாம கஷ்டப்படுறா கண்ணெதிரே..எங்கேயோ கண் காணாம இருக்குற பொண்ணுக்காக காலமெல்லாம் வீணா கழிக்கிறான் ஹீரோ! இது ஒண்ணும் நல்ல விஷயமாப் படல முரளி...ரொமான்டிஸம் சரி தான்..யதார்த்தம் எங்க? தனக்கும் சந்தோஷம் தராம, தன்ன சுத்தி இருக்குறவங்களுக்கும் மகிழ்ச்சியில்லாம செய்யிற காதல் எதுல சேத்தி?...

shri Prajna said...

"Rahul Bose" Mr&Mrs Iyer la நடிச்சவர் தானே..supera பண்ணிருப்பார்..எனக்கு "Aparna sen" படம் ரொம்ப பிடிக்கும்..இப்போ நீங்க நல்லா (வழக்கம் போல) கதை சொல்லி இருக்கீங்க...கண்டிப்பா பாக்கனும் Murli..thanks "Good Sharing"...

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
வணக்கம் சார், நல்லா இருக்கிங்களா? கொஞ்சநாளா உங்களை காணோமேன்னு பார்த்தேன், :-))

ம்ம் நீங்க சொல்வது சரிதான், கொஞ்சம் இழுவை. ஆனால் அந்த தொய்வு இங்கு சரியாக பயன்பட்டிருக்கிறது என நினைக்கிறேன், படம் பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டமிடுங்கள், பேசுவோம்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
அக்கா! படம் பாருங்க கவிதை மாதிரி இருக்கும். பீறிட்டெழும் எந்த சோகமும் இல்லை. இயல்பான சோகம் இருக்கும். வெகு இயல்பாக.

திருமணம் முடிந்து கிட்டதட்ட பத்து பதினைந்து வருடங்கள் கழிந்தபின்னரே சந்தியாவை சந்திக்கிறான். அது இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற நிலை.

//தனக்கும் சந்தோஷம் தராம, தன்ன சுத்தி இருக்குறவங்களுக்கும் மகிழ்ச்சியில்லாம செய்யிற காதல் எதுல சேத்தி?//

இது புதுப்பார்வை, படம் பார்க்கும்பொழுது அப்படி ஒரு பார்வை எனக்கு வரவேயில்லை. எனக்கு கதைய தப்பா சொல்லிட்டேனோன்னு தோனுது. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ
அவரேதான், அவசியம் படம் பாருங்க, என் ஜப்பானியத் தோழியின் பிறந்தநாள் இன்று. இப்பொழுது தொடர்பில் இல்லை. இருந்தாலும் அவளுக்கு டெடிகேட் செய்யவே எழுதி வைத்திருந்தேன். :-)

dr.tj vadivukkarasi said...

hi murli,u have the 'art' of story telling.the movie is deeply touching.i dont think it is melancholic.unfortunately for most of us anything that touches our core is melodramatic/unpractical!!
moreover,what snehamoy has over sandhya is compassion,which is a much more evolved emotion than love.but, we have to accept, the source of tht compassion is love btw him and his wife.what is love if it does nt evolve into anything higher?
keep up this good job .

ராகவன் said...

அன்பு முரளி,

நல்லா இருக்கு உன்னுடைய திரைப்பார்வை... உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு...

நான் நல்ல படம் பார்த்து ஏறக்குறைய ஒரு வருஷம் ஆகப்போகுது...

நீ சொல்லியிருக்கிறதை பார்க்கையில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது...

கடுமையான துயரம் இதில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை... எல்லோரிடமும் ஒரு நிறைவு இருப்பதாய் படுகிறது... சித்தியைத் தவிர...

இதை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை... ஆனால் நீ கதை சொன்ன விதத்தில் எனக்கு துயரம் தெரியவில்லை...

மேலும் மாட்லா நதியைப் பற்றிய கேள்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியும் சொல்வது ரொம்பவும் அழகான விஷயமாய் படுகிறது... அதில் சீதோஷ்ணம் மட்டுமே சொல்லப்படுவதாய் தோன்றவில்லை...வெறும் விஷுவல் ட்ரீட் மட்டுமா முரளி அது? நதியைப் பற்றிய பதிலுக்கு முன்னும் பின்னும் இருக்கும் சம்பவங்களையும், உணர்வு நிலைகளையும் எனக்கு தொடர்பு படுத்தி பார்க்கத் தோன்றுகிறது...

குனால் பாசு... பற்றி படித்திருக்கிறேன்... இந்த தொகுப்பு கிடைத்தால் வாங்கி படித்துவிடுகிறேன்... அபர்னா சென்... நல்ல ஒரு இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை...

அன்புடன்
ராகவன்

சுசி said...

இந்த விமர்சனத்துக்காகவே படம் பார்க்கலாம்.. நிஜமா சொல்றேன்.. உங்க ரசனைய அவ்ளோ அழகா பகிர்ந்திருக்கிங்க..

நன்றிகள் :))

KSGOA said...

எனக்கு அபர்ணாசென்னோட “Mr&Mrs Iyer" ரொம்ப பிடிக்கும்.”ஒரு ஜப்பானிய
மனைவி” பற்றிய உங்கள் விம்ர்சனம்
படிக்கும்போது இதுவும் அதைப்போன்ற
அழகியபடம் என்றே தோன்றுகிறது.
உங்களுக்கு பெங்காலி தெரியுமா? டிவீடி
எங்கே கிடைக்கும்?

sangeetha said...

முரளி..
அருமையான பகிர்வு ..நன்றி...அபர்ணா சென் தன்னோட படங்களில் காதலை மிகைப்படுத்தாமல் அழகா இயல்பா சொல்லிருப்பாங்க...சிநேகமோய் பார்வையில் கதையை அழகா சொல்லி இருக்கீங்க...சந்தியா கதைக்குள்ள வந்ததில் இருந்து நான் சந்தியா பார்வையில் தான் படம் பார்த்தேன்...இந்த பதிவை பார்த்தவுடனே அவங்களோட சோகம் நிறைந்த கண்ணையும்(உங்க கவிதையில் வர்ற காதலி போல ) அவங்க காதலையும் பத்தி ரெண்டு வரி எழுதியிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்... :((

துபாய் ராஜா said...

படம் பார்க்க தூண்டும் அருமையான விமர்சனம்.நமது சேரன், பத்மபிரியா நடித்த "பொக்கிஷம்" படம் நினைவிற்கு வருகிறது.

சமுத்ரா said...

நல்லா இருக்கு திரைப்பார்வை..

shri Prajna said...

இன்னிக்கு தான் படம் பார்த்தேன்.அபர்னாசென் அவ்ளோ அருமையா எடுத்திருக்காங்க.ஒவ்வொரு framமும் கவிதை.அந்த நதியை explain பண்ணும் போது காண்பிக்கபடும் காட்சி.Raahul Bose என்ன ஒரு acting.ஷஹி please alow me to take ur words "தனக்கும் சந்தோஷம் தராம, தன்ன சுத்தி இருக்குறவங்களுக்கும் மகிழ்ச்சியில்லாம செய்யிற காதல் எதுல சேத்தி?..." ஹூம்ம்..

Gopi Ramamoorthy said...

முரளி,

ஆச்சரியம். நானும் கிட்டத்தட்ட இந்த மாதிரி எழுதி இருக்கேன்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/japanese-wife.html

KathaiSolli said...

அன்பான நண்பருக்கு, ஒரு உணர்வு பூர்வமான படத்தினை பற்றிய உங்கள் விமர்சனம் அருமை....

முரளிகுமார் பத்மநாபன் said...

@வடிவுக்கரசி.
மிக்க நன்றி மேடம், இன்னைக்கு அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் அதான் இன்னைக்கு போஸ்ட் பண்ணேன்,

@ ராகவன்
குரு,
நீங்க பொறாமை படுவதெல்லால் சும்மா... புக் கிடைச்சா படிச்சிட்டு சொல்லுங்க. சிறுகதைகளில் உங்கள் பார்வை வேற.

@சுசி ...

தேங்க்யூ சோ மச் மேடம்.,

முரளிகுமார் பத்மநாபன் said...

@ KSGOA
நண்பா, நான் எப்போதுமே டோரண்ட்டில் டவுன்லோடிதான் பார்க்கிறேன். உங்க பேர் என்ன? எப்படி கூப்பிடுவது?

@சங்கீதா
//சந்தியா கதைக்குள்ள வந்ததில் இருந்து நான் சந்தியா பார்வையில் தான் படம் பார்த்தேன்...இந்த பதிவை பார்த்தவுடனே அவங்களோட சோகம் நிறைந்த கண்ணையும்(உங்க கவிதையில் வர்ற காதலி போல ) அவங்க காதலையும் பத்தி ரெண்டு வரி எழுதியிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்... :((///
ஆஹா, வாங்க மேடம் நீங்களும் தொடர்ந்து படிச்சிட்டிருப்பிங்க போலயே... : -)

@ துபாய் ராஜா
//படம் பார்க்க தூண்டும் அருமையான விமர்சனம்.நமது சேரன், பத்மபிரியா நடித்த "பொக்கிஷம்" படம் நினைவிற்கு வருகிறது//
ஐய்ய்ய்யோ என்ன பாஸ் சொல்றிங்க?

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சமுத்ரா
நன்றி சமுத்ரா.
----------------------
@ கோபி ராமசாமி
நண்பா, உண்மையிலேயே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பத்திக்குப் பத்தி சரியாத்தான் வருது...
உங்களுடைய மற்ற பதிவுகளையும் படிக்கிறேன், நிறைய ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது
-----------------
@கதைசொல்லி
வணக்கம் நண்பா, மிக்க நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.