கால் முளைத்த கனவு........


எழுத்தாளர்களை சந்திப்பது என்பது எப்பொழுதுமே நிறைய சவால்களையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு எழுத்தாளரைத் தேடிச்சென்று சந்தித்தேன், ஆனால் அந்த சம்பவம், மிகவும் மோசமானதாக அமைந்துபோனது என் துரதிஸ்டமே. பின் எப்போதும், எழுத்தாளருக்கும் அவருடைய எழுத்துக்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளே முன்னே வந்து நிற்க, அதன் பிறகு எழுத்தாளர்களை தேடிச் சென்று சந்திப்பதை ஒதுக்கியே வைத்திருந்தேன்.

பிரிதொரு நாள், கல்யாண்ஜியை சந்தித்தேன். எழுத்தாளர் எனும் பிம்பத்தை உடைத்தெறிந்தார். ரத்தமும் சதையுமாய் மனிதராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சொல்லப்போனால் அவருடைய எழுத்துக்கள் பற்றிகூட பேசவில்லை. நெடுநாள் பழகிய மனிதரோடு பேசுவதுபோல கையைப்பிடித்துக்கொண்டு வெளியிலுள்ள அரசமரத்தின் இலைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வண்ணதாசனோடு பேசிக்கொண்டிருந்தது அவரை வாசிப்பது போலவே இருந்தது. மீண்டும் தொடர்ந்து, இலக்கியக் கூட்டங்களிலும், புத்தகத் திருவிழாக்களிலும் எழுத்தாளர்களை தேடித்தேடி சந்திக்க ஆரம்பித்தேன்.

ஆனால் எப்பொழுது சந்தித்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் எதுவும் பேசிவிட முடியாதபடிக்காகவே அமைந்தது, எனக்கும் என் ஆதர்ஸ எழுத்தாளரான எஸ்.ராவிற்கும் இடையேயான எந்த ஒரு சந்திப்பும்.

நெடுங்குருதி நாவலைப் பற்றிய என் பதிவில் எழுதியிருந்த கட்டுரையை வாசித்த நண்பர்கள் வெயிலானும், கா.பாவும், இந்தக் கட்டுரையை அவருக்கே அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்கள். பின் அந்த கட்டுரையை எஸ்.ராவிற்கு அனுப்பியிருந்தேன்.   

“ஒரு எழுத்தை இவ்வளவு பொறுமையாக வாசித்து, பின் அதை நுட்பமாக பதிவும் செய்திருக்கிறீர்கள், நன்றி. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட என்ன பெரிய சந்தோசம் இருந்துவிட முடியும், உங்களை சந்திக்க வேண்டும் முரளிஎன்று பதிலனுப்பியிருந்தார். 

வாசிப்பு, எழுத்து என பல கதவுகளை எனக்குள்ளாக திறந்து வைத்த ஒரு மனிதர், சேர்ந்தார்ப்போல ஒரு அரைமணி நேரம் பேசிக்கொண்டிருக்க முடியுமாவெனவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த, மனதில் மானசீகமாக ஒரு குருவினைப்போலக் கருதிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடமிருந்து இப்படி ஒரு மெயில், பதிலாக வருகிறது. இதைப் படித்துவிட்டு நான் மிகவும் சந்தோசமாக உணர்ந்தேன் என்று சொன்னால் நீங்களே அடிக்க வருவீர்கள். முடிந்தால் என் மகிழ்ச்சியை அளவிட்டுக்கொள்ளுங்கள்...

“சார், நீங்க இங்க வருவதாக குறிப்பிட்ட அந்த நாட்களில் உங்களுக்கு இங்கு ஏதும் விழாவோ, கூட்டமோ இருக்கின்றதா? எனக் கொஞ்சமும் நம்ப முடியாமல் கேட்டேன்.  

இல்லை. முரளி, உங்களையும் இன்னும் சில நண்பர்களையும் சந்திக்க வேண்டும் அவ்வளவுதான்என்றார். 

அவ்வளவுதான் என்றால் அவ்வளவு மட்டுமா? அவ்வளவும்தான். 
---------------------------------------------------------------

உடனடியாக சேர்தள நண்பர்களோடு கலந்தாலோசித்து, எட்டுத்திக்கும் எனும் தலைப்பில் வாசக சந்திப்பிற்கு திட்டமிட்டோம். நாங்கள் அவர் இங்கிருக்கும் இரண்டு நாட்களுக்குமென சில நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் நடந்ததே வேறு. அவர் தன் பயணக்கட்டுரைகளில் குறிப்பிடுவதுபோல, திசைத்தடை இன்றி நகர்ந்து கொண்டேயிருந்தார். ஒருவழியாக அவரது வழியில் பயணிக்கத் தொடங்கவே மதியமாகி விட்டது. இப்படி மனம்போன போக்கில் வாழ்வதென்பது, ஒருவரம். அந்த வகையில் ராமகிருஷ்ணன் வரம் வாங்கி வந்தவர்தான். முதலில் அவரோடு பேசுவதில் நிறைய சிரமங்கள் இருந்தது. ஒரு வித மிரட்சியுடன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அந்தத் தயக்கத்தை அறிந்தவராய், மெல்ல தன்னுடைய இயல்பான பேச்சால் அந்த தயக்கத்தை மெல்ல தளர்த்திக்கொண்டே வந்தார். என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார், ஒரு மணிநேரம் எங்கே அமர்ந்து எழுதுவீர்கள் என்பது வரை கேட்டார். அவருக்காக வரைந்து வைத்திருந்த அவருடைய ஓவியத்தை கொடுத்தேன்.   நீங்களே வரைந்ததா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டு, நல்லா வரைந்திருப்பதாக சொல்லி பெற்றுக்கொண்டார். அதன் பின்  ஒரு கட்டத்தில் வெகு இயல்பாக அவரோடு பேச முடிந்தது. கிட்டத்தட்ட மற்ற நண்பர்களுக்கும் இதேபோல ஒவ்வொரு அனுபவம். 


அன்னூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இரண்டு ஆசிரியர்களின் முயற்சியால் ஒரு சர்வதேச தரமிக்க ஒரு வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார்கள், அங்கு சென்று நம்மால் அவர்களுக்கு ஏதும் செய்ய முடிகிறதாவென பார்க்கலாம், என்றார். எனக்கு கதிர் அண்ணாவின் பதிவில் படித்ததிலிருந்து அவரை சந்திக்கும் ஆவல் இருந்தது. நான், எஸ்.ரா, ரவி, அருண் (இருவரும் நாளைய இயக்குனர்கள்) என நான்கு பேராக சென்றோம்.


அருமையான மதியம் அது, உண்மையாக நீண்ட நாட்களுக்குப்பிறகு இத்தனைக் குழந்தைகளோடு பொழுதைப்போக்கினேன். ஒவ்வொரு குழந்தைகளையும் கதை சொல்ல சொல்லி, குழந்தைகளோடு குழந்தைகளாக சேர்ந்து அமர்ந்துகொண்டு கதை கேட்கத் தொடங்கினார். அழகாக, இதுவரை கேட்டிராத பல கதைகளை குழந்தை மொழியில் கேட்டுக்கொண்டிருந்தோம். பிறகு அவர் ஒரு கதை சொன்னார், குழந்தைகளுக்காக பிரத்யேகமாய். பேசும் தக்காளிக்கதை. தன்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகம் செய்துகொள்வதைவிட ஒரு கதைசொல்லியென அறிமுகம் செய்துகொள்வதிலேயே, மிகவும் மகிழ்வாக உணர்கிறேன் எனப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லியிருந்தார். அது எவ்வளவு நிஜம், என்பதை அவரிடம் கதை கேட்கும்பொழுதுதான் உணரமுடியும். 

கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப்போல ஒரு உடல்மொழியோடு, லயமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஊருக்கு யாரெல்லாம் போனாங்க? என்று அவர் கேட்டதும், கழுதை, கழுதை மேல தக்காளி, தக்காளி மேல எறும்பு என்று ஒட்டுமொத்தக் குழந்தைகளோடு நானும், நண்பர்களும், ஏன் அந்த இரு ஆசிரியர்களும் சேர்ந்து சொன்னோம். 

இந்தப் பள்ளியைப்பற்றிய எஸ்.ராவின் கட்டுரை

பின் மீண்டும் திருப்பூர் வந்து சேர்ந்தபின்னர், செந்திலின் ஆலோசனையின் பேரில் சுக்ரீஸ்வர்ர் கோவிலுக்கு சென்றோம். அங்கும் நிறைய பேசினோம். சோழர்கள் கால கோவில் என்பதோடு மட்டுமில்லாமல் அவர்களால், அவர்களுடைய கட்டிடமுறையில் வடிவமைக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில், அது. எனவே எங்களுக்கு அங்கு பேசுவதற்கு ஆயிரம் வருடக்கதை இருந்தது.


தொடர்ந்து இரவு உணவு முடித்துவிட்டு, சினிமாவிற்கு செல்லலாமா? என்றார். இல்லை, நாம் பேசிக்கொண்டிருக்கலாமே என்றோம் அனைவரும். சரி, அப்படியானால் பேசுவோம். என்று தொடர்ந்தார். பயணம், இசை, சினிமாவென ஆரம்பித்த எங்கள் உரையாடல் செல்வம், திரு மற்றும் சிவாவின் புண்ணியத்தில் இலக்கியம் நோக்கி பயணித்தது. ஜெ.மோ. சு.ரா, கி.ரா, பாலா, ரஜினி, கவுண்டமணி என பலதரப்பட்ட ஆளுமைகளைப் பற்றி அறியாத பல விஷயங்களை அவர் சொல்ல ஆச்சர்யம் குறையாமல் கேட்டுக்கொண்டிருந்தோம். உரையாடல் சுவாரஸ்யம் கூடிக்கொண்டேயிருக்க இரவு மணியாவது தெரியாமல், பேசிக்கொண்டிருந்தோம். எதேச்சையாக மணியைப் பார்க்க 2.30 மணிக்கு மேலாகியிருந்தது. 


அடுத்தநாளும் அவருடனே சுற்றிக்கொண்டிருந்தேன், திருப்பூரில் ஆயத்த ஆடைகளின் உற்பத்தி முறைகளை, திருப்பூர் சந்தித்து வரும் பொருளாதார சிக்கல்களையும் அதை கூறுகளை ஒரு எழுத்தாளராக அவருக்கு சுட்டிக்காட்ட விரும்பினோம். அதன்படி நண்பர்கள் சாமி மற்றும் அருணாச்சலம் அவர்களின் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினோம். உலகின் தலைசிறந்த ஆடை விற்பனையாளர்களுக்கென இங்கே தயாரிக்கப்படும் ஆடைகளையும், அதன்பின் உள்ள தொழிலாளர்கள் நிலையையும் பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம்.

பின்னர் வாசகர் சந்திப்பிற்கு நேரமாகிக்கொண்டிருந்ததால், அங்கிருந்து கிளம்பி கூட்டம் நடக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரு முப்பது பேர் வரை வருவார்கள் எனத்திட்டமிட்டிருந்தோம். ஆனால், எழுபதுபேர் வந்திருந்தார்கள். எட்டுத்திக்கும் எனும் தலைப்பில் பயணங்கள் குறித்து எஸ்.ராவை பேசக்கேட்டிருந்தோம். ஏனெனில் தீவிர இலக்கிய கலந்துரையாடல் என்பது குறிப்பிட்ட சில நண்பர்களோடு நடத்த முடியும், இப்படி பலதரப்பட்ட மக்களோடு சந்திக்கும் பொழுது உரையாடல் சுவாரஸ்யம் கருதி இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ஒண்ணரை மணிநேரம் அதே தலைப்பில் பேசினார். பின் வாசகர்களோடான கலந்துரையாடல் நடந்தது. ஆனால் வந்திருந்த பல வாசகர்கள், யாமம், உபபாண்டவம் என இலக்கியம் குறித்தும் கேள்விகள் எழுப்பியதில் மகிழ்ச்சி.

இந்தியாவில் இலக்கியத்திற்கென கொடுக்கப்படும் விருதுகளில், ஒரு உயரிய விருதான தாகூர் விருதினை பெற்ற எஸ்.ராவிற்கு விழாவில் சேர்தளம் சார்பாக ஏதாவது ஒரு நினைவு பரிசு கொடுக்க முடிவெடுத்து நண்பர்.ஆதவாவின் அப்பா, ஓவியர்.வீரப்பன் அவர்கள் வரைந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடுக்க முடிவெடுத்தோம். வீரப்பன் ஐயா அவர்களே, தனது ஓவியத்தை பரிசளிக்க விழா நிறைவடைந்தது. 


அமெரிக்காவிலிருந்து ராகவன் எனும் நண்பர் தொடர்புகொண்டு இந்த நிகழ்ச்சியை நான் நேரலையாக இணையத்தில் தொகுக்க விரும்புகிறேன், எனக்கு உதவமுடியுமாவென அழைத்திருந்தார். அவருடைய ஆர்வமான பங்கேற்பால், நிகழ்ச்சி முழுவதையும் நேரடியாகவும் இணையத்தில் கேட்க முடிந்தது, நன்றி ராகவன். இந்த விழாவில் எஸ்.ராவின் உரையை கேட்க இங்கே சொடுக்குங்கள்.  

நிறைய பாராட்டுக்கள், ஆலோசனைகள். வந்திருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு சொன்ன விஷயம், ரொம்ப நன்றிங்க இந்த எளிமையான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காகஎன்பதுதான். எனக்கும் அப்படித்தான். ஏதோ மிகப்பெரிய ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்துமுடித்து விட்ட திருப்தி இருந்தது.

இரவு உணவை முடித்துக்கொண்டு, ரயில் நிலையத்தில் அவரை வழியனுப்ப சென்றோம். கிளம்பும்போது எஸ்.ரா சொன்னார், கடுமையான பணிச்சுமைக்கிடையேதான் இங்கே வந்தேன். ஆனால், உண்மையிலேயே இரண்டு நாள் எப்படிப் போனது என்று தெரியவில்லை, முதலில் என்மேலிருக்கும் பிரமிப்பின் காரணமாய் சற்று விலகியிருந்த அனைவரும், மெல்ல மெல்ல ஒரு நெடுநாள் தோழனைப்போல என்னோடு பழகியது, மிக்க மகிழ்ச்சி. இனி திருப்பூருக்கு எப்ப வேணாலும் கூப்பிடுங்க, என்று.

மாலையில் பேசிக்கொண்டிருந்த போது, சுந்தர ராமசாமி மீது தனக்கு இருக்கும் மரியாதையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். என்றாவது ஒருநாள் நான் அறியக்கூடிய எழுத்தாளனாய் ஆன பிறகு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பத்தை மனதிற்குள் விதைத்துப்போனவர், சு.ரா. என்று சொன்னார். எனக்கும் அப்படித்தான். எழுத்தாளனாய் அல்ல, ஒரு மனிதனாய் இப்படித்தான் இருக்கவேண்டுமென முடிவெடுத்துக்கொண்டேன்.

எஸ்.ரா என்கிற ஒரு மனிதனை சந்தித்த மகிழ்ச்சி ததும்ப, ரயில் கிளம்பியதும், மனமில்லாமல் திரும்பி வந்தேன். நண்பர் ஒருவர் கேட்டார்,
என்னப்பா? ரெண்டு நாளா எஸ்.ராவோடயே சுத்திட்டியே, எஸ்.ரா போரடிச்சிட்டாரா? என்றார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு சொன்னேன், “ஆமால்ல, ரெண்டு நாள் ஆயிடுச்சுல்ல” 


இந்த நிமிடம் வரை கனவுபோலவே இருக்கிறது. என் கனவுகளுக்கு மெல்ல கால் முளைத்து என்னை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. எல்லாக் கனவுகளும் கைக்கெட்டும் தூரத்தில்..

36 கருத்துரைகள்:

வெண் புரவி said...

'LABLE:ஒரு குளம் சில கற்கள்'

இது நல்லா இருக்கு. பல குளம்... ஒரே கல்... அது எஸ்.ரா.

அந்த கல் ஏற்படுத்திய அலை இன்னும் கூட மெல்லியதாய் இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது ஆங்காங்கே ஈ.ரா-வைப் பற்றி என்னை அறியாமலே பெசிவிடுகிறேன். நண்பர்கள் பரிகசிக்கிறார்கள்.
ஆனால் அதுவும் நல்லாத்தானிருக்கு.

வெண் புரவி said...

'LABLE:ஒரு குளம் சில கற்கள்'

இது நல்லா இருக்கு. பல குளம்... ஒரே கல்... அது எஸ்.ரா.

அந்த கல் ஏற்படுத்திய அலை இன்னும் கூட மெல்லியதாய் இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது ஆங்காங்கே ES.RAA-வைப் பற்றி என்னை அறியாமலே பெசிவிடுகிறேன். நண்பர்கள் பரிகசிக்கிறார்கள்.
ஆனால் அதுவும் நல்லாத்தானிருக்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

அருண் சார், இந்த ஞாயிறு நீயா?நானா?வில் எஸ்.ரா பேச வந்தபொழுது, எனக்கு எட்டு பேர் போன் பண்ணியிருந்தார்கள். :-)

செல்வம் said...

நல்லாத் தொகுத்து இருக்கீங்க முரளி...

உலக சினிமா ரசிகன் said...

அவரது எழுத்தைப்போல...நேரில் அவரை மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர்வோம்.
வாழ்நாள் முழுக்க அவர் வந்து சென்ற தடம் அழியாது மனதில்...

sugirtha said...

Murali,

We all love to talk, but rarely do we listen. ஒருவர் பேசுவதை கேட்கும்போது நம்மால் ஒரு empty cup போல் இருக்க முடிந்தால் அதை விட ஒரு ஆனந்தம் இருக்க முடியுமா? அதாவது ஒரு குழந்தை தனக்கு பரீட்சியமில்லாத/ அதுவரை அறிந்திராத எந்த ஒரு விஷயத்தையும் எப்படி எதிர்பார்ப்புகள், முன் முடிவுகள் என்று எதுவும் இல்லாது ஆர்வத்தோடு கவனிக்குமோ அப்படி, ஒரு தளும்பாத கோப்பைப் போல... நீங்கள் அந்த இரண்டு நாள் அப்படி தான் இருந்திருக்கிறீர்கள் என்பதை சொல்கிறது இந்தப் பதிவு.

கதை சொல்வது ஒரு கலை என்றால் கதை கேட்பது அவ்வளவு ஆனந்தம். புகைப்படங்களில் கூட ஒவ்வொரு முகத்திலும் அந்த ஆனந்தம் தெரிகிறது. ரெண்டு நாள் கதையை நீங்கள் இந்தப் பதிவில் சொல்ல நான் கேட்டதும் ஆனந்தம் தான் :)

//எழுத்தாளருக்கும் அவருடைய எழுத்துக்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளே முன்னே வந்து நிற்க,// என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களைக் கொண்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி கொண்டு அதை அந்த எழுத்தாளரோடு பொருத்திப் பார்த்தல் அத்தனை ஆரோக்கியமானதன்று. வண்ணதாசன் கூட ஒரு புத்தகத்தில் ''என் கதைகள் மட்டுமே நானல்ல'' என்று சொல்லி இருக்கிறார். இதை அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன். உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். I may not agree but can totally understand :)

dr.tj vadivukkarasi said...

very nice murli. happy(?!the same'happy')to see S.Ra with u thirupoors. i can connect to your experience.these are the very few things i miss here. by the way.. tell us the 'tomato'story. as you said,an unplanned life has its own mysteries and beauty. S.Ra is gifted. u too,for u ve drenched yourself in the rains of S.Ra

இராஜராஜேஸ்வரி said...

என் கனவுகளுக்கு மெல்ல கால் முளைத்து என்னை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. எல்லாக் கனவுகளும் கைக்கெட்டும் தூரத்தில்../

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

மோகன் குமார் said...

மிக ரசித்து வாசித்தேன் கட்டுரையை. மகிழ்ச்சியாக உள்ளது. நாம் ரசித்த எழுத்தாளரை நேரில் பார்த்தும் அவர் மீது கொண்ட அபிமானம் விலகாமல் இருப்பது பெரும் ஆச்சரியமே. எஸ். ரா பல விதங்களில் வியக்க வைக்கும் மனிதர்

அப்புறம் ஒரு விஷயம். நீங்கள் எஸ். ராவின் வாசகர்/ ரசிகர் என்கிற அடையாளத்திலேயே மிக அதிக மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. அதையும் தாண்டி உங்களுக்கென்று ஒரு ஐடண்டிட்டி இலக்கிய உலகில் வருவதற்கு வாழ்த்துக்கள்.

sivaraj said...

:)

ராகவன் said...

அன்பு முரளி,

ரொம்ப அழகா எழுதியிருக்கிறாய் முரளி! இது தான் உன் ஃஃபோர்டே முரளி... புகுந்து விளையாடற எழுத்து...

பிசிறு இல்லாமல்... ஒரு நதிச்சுழி எழுத்து... எங்குமே சுனக்கம் இல்லை... சொல்லிக் கொண்டே சென்றதில் நானும் அங்க தான்யா இருந்தேன் அப்படிங்கிற மாதிரி ஒரு பதிவு... அருமை...

எழுத்தாளர்க்கென்று ஏதாவது பிம்பம் இருக்கா என்ன? மனுஷன் தானே எழுதறான் முரளி?

எழுத்தைப் பற்றி அல்லாத எழுத்தாளருடனான தொடர்பு சிலாக்கியமானது தான்... நானும் அனுபவிக்கிறேன்...அதை.

சுகிர்தாவின் பின்னூட்டம்...அழகு...

அன்புடன்
ராகவன்

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
சார், ஈ.ரான்னா ஈரோடு ராமசாமி தானே? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@செல்வம்
நன்றி செல்வம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@உலக சினிமா ரசிகன்
தேங்க்ஸ் பாஸ், நீங்கதான் வராம போயிட்டிங்க, நம்ம சந்திப்பு கூட இப்படியே தள்ளிக்கிட்டே போகுது. நான் வரும்போதெல்லாம் நீங்க இருப்பதேயில்லை. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
//We all love to talk, but rarely do we listen. ஒருவர் பேசுவதை கேட்கும்போது நம்மால் ஒரு empty cup போல் இருக்க முடிந்தால் அதை விட ஒரு ஆனந்தம் இருக்க முடியுமா?//
எனக்கு கேட்கத்தான் பிடிக்கும், சுகிர்தா.

//கதை சொல்வது ஒரு கலை என்றால் கதை கேட்பது அவ்வளவு ஆனந்தம்//
எஸ்.ராவின் கதையில் வரும் ஒரு கதாப்பாத்திரம் போலதான் நானும், ஒரு கதைமுழுங்கி. :-)

//புகைப்படங்களில் கூட ஒவ்வொரு முகத்திலும் அந்த ஆனந்தம் தெரிகிறது. ரெண்டு நாள் கதையை நீங்கள் இந்தப் பதிவில் சொல்ல நான் கேட்டதும் ஆனந்தம் தான் :)//
இன்னொரு புகைப்படம் இருக்கிறது. அதை அனுப்புகிறேன். பாருங்கள்

//என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களைக் கொண்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி கொண்டு அதை அந்த எழுத்தாளரோடு பொருத்திப் பார்த்தல் அத்தனை ஆரோக்கியமானதன்று. வண்ணதாசன் கூட ஒரு புத்தகத்தில் ''என் கதைகள் மட்டுமே நானல்ல'' என்று சொல்லி இருக்கிறார். இதை அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன். உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். I may not agree but can totally understand :)//

புரிதலுக்கு நன்றி, நீங்க சொல்வதுதான் நிதர்சனம். நானும் அதை ஆமோதிக்கிறேன்.

ஆனால் தன்னுடைய கட்டுரைகளில் முகமறியாத மனிதர்களுடன் ஸ்னேகம் பேசுபவர்கள், பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் உண்மையில் அப்படி இல்லாமல் சந்திப்பவர்களோடு எரிந்துவிழுவதும், மனைவியை வீட்டில் பூட்டிவிட்டு செல்பவருமாய் இருந்தால்..... ஒப்பீடு தேவைப்படுகிறதே.

என் எழுத்துக்கள்தான் நான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வடிவுகரசி
//by the way.. tell us the 'tomato'story. as you said,an unplanned life has its own mysteries and beauty. S.Ra is gifted. u too,for u ve drenched yourself in the rains of S.Ra//

உண்மைதான் மேடம். தக்காளிக் கதையை தனியாக சொல்கிறேன். :-)
மிக்க நன்றி, உங்கள் தொடர் வாசிப்பிற்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றீ மேடம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன்குமார்
//அப்புறம் ஒரு விஷயம். நீங்கள் எஸ். ராவின் வாசகர்/ ரசிகர் என்கிற அடையாளத்திலேயே மிக அதிக மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. அதையும் தாண்டி உங்களுக்கென்று ஒரு ஐடண்டிட்டி இலக்கிய உலகில் வருவதற்கு வாழ்த்துக்கள்//

இல்ல சார் நிச்சயம் அப்படி இல்லை, எஸ்.ராவின் வாசகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அதோடு நின்றுவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தும் ஆயிரம் பேரை சந்தித்தாலும் அம்மா, அப்பா ஸ்பெசல்தானே, அப்படிதான் எஸ்.ரா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவராஜ்
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்
குரு, அண்ணி வந்துட்டாங்க போல, சந்தோசம் முகத்தில தெரியுது, அதைக்காட்டிக்காத மாதிரி,, குனிந்தபடியிருப்பது அழகு (ப்ரொஃபைல் போட்டோ) ‘:-)

//ரொம்ப அழகா எழுதியிருக்கிறாய் முரளி! இது தான் உன் ஃஃபோர்டே முரளி... புகுந்து விளையாடற எழுத்து...
பிசிறு இல்லாமல்... ஒரு நதிச்சுழி எழுத்து... எங்குமே சுனக்கம் இல்லை... சொல்லிக் கொண்டே சென்றதில் நானும் அங்க தான்யா இருந்தேன் அப்படிங்கிற மாதிரி ஒரு பதிவு... அருமை...//
ரொம்ப சந்தோசமா இருக்கு, இதைப்படிக்க....

//எழுத்தாளர்க்கென்று ஏதாவது பிம்பம் இருக்கா என்ன? மனுஷன் தானே எழுதறான் முரளி?
எழுத்தைப் பற்றி அல்லாத எழுத்தாளருடனான தொடர்பு சிலாக்கியமானது தான்... நானும் அனுபவிக்கிறேன்...அதை//

ம்ம் அதையேதான் நானும் சொல்லவந்தேன், எழுத்தாளனை எழுத்தாளனாக பார்க்காமல், சக மனிதராக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் அப்படியே தொடங்க என்னால் முடியாது....

//சுகிர்தாவின் பின்னூட்டம்...அழகு...//
நன்றி குரு.,:-)

கோபிநாத் said...

எப்போ பதிவு வருமுன்னு வெயிட்டிங் ;)

அருமையான பகிர்வு தல ;-)

sugirtha said...

ம்ம் புகைப்படம் அனுப்புங்க முரளி...பாக்கறேன்.

//என் எழுத்துக்கள்தான் நான். :-)// ம்ம் முரளி... :-)

நன்றி ராகவன்!!நலமா?

KSGOA said...

நல்ல பதிவு.கவிதையான தலைப்பு.
பகிர்வுக்கு நன்றி.

அப்பாதுரை said...

//எழுத்தாளருக்கும் அவருடைய எழுத்துக்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளே முன்னே வந்து நிற்க//

எனக்கு அந்த அனுபவங்கள் நிறைய உண்டு. எழுத்தை மனதில் வைத்து எழுத்தாளர் என்ற மனிதரைச் சந்திக்கும் பொழுது நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருப்பது புரியாமல் சந்திப்புக்களை ஆவலோடு ஏற்படுத்தி பின்னர் ஏமாறிய அனுபவங்கள்.
எஸ்.ரா அனுபவம் நன்றாக அமைந்திருப்பது போல் தெரிகிறது. பாராட்டுக்கள்.
மிக எளிமையானவர் போலிருக்கிறது எஸ்.ரா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
தேங்க்ஸ் தல..... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ KSGOA
நண்பா! உங்க பேரு என்ன? இது கூப்பிட வசதியா இல்லையே? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//எஸ்.ரா-அனுபவம் நன்றாக அமைந்திருப்பது போல் தெரிகிறது. மிக எளிமையானவர் போலிருக்கிறது எஸ்.ரா//
உண்மைதான் சார், எனக்கு மட்டுமல்ல நண்பர்கள் அனைவரும் இதேபோல ஒரு மனோபாவத்தோடு இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

நதிமேல் பூப்போல அள்ளி எழுத்தால் இழுத்துக் கொண்டே போகிறீர்கள் முரளி...கலக்குங்க!

அருண்மொழித்தேவன் said...

சூப்பர் பதிவு முரளி :)

KSGOA said...

கேஎஸ்-பேரு. கோவா-நான் வசிக்கும்
இடம்.

செல்வராஜ் ஜெகதீசன் said...

அருமையான பகிர்வு.

shri Prajna said...

வழக்கம் போல் நல்ல flow,ராகவன் சொன்னதுபோல் பிசிறில்லாமல்,அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டது எனக்கு ரொம்ப சந்தோசம் இல்லாவிட்டால் நீங்கள் எழுதியிருப்பதை மட்டும் படித்திருந்தால் கண்டிப்பாய் மிஸ் பண்ணிய feeling இருந்திருக்கும்.நீங்க சொல்வதில் எனக்கும் உடன்பாடே எழுத்துகளை மட்டும் வைத்து அணுகும்போது வேறோர் பிம்பம் எதிர்கொள்வது சிரமம்.எஸ்.ரா. அப்படி இல்லாதது மகிழ்ச்சி.சுகி comment நன்றாயிருக்கு..

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
தேங்க்ஸ் மேம், :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றீ கேஎஸ். கோவால யாரையாவது தெரிஞ்சிருந்தா நல்லயிருக்குமேன்னு நினைச்சேன். அப்பாடா இனி கேஎஸ் இருக்காரு....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ ப்ரஜ்னா
நன்றி ஸ்ரீ. :-)

பத்மா said...

dhool kilappiteenga murali

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.