நெய்தல் பழம்


குழந்தையில் ரசித்ததுதான் கடல், சிறுவயதில் கடல் காற்று சுவாசித்து வாழ்ந்தவன்தான் நானும். புயல்சின்னங்களையும், நெடுமழை பற்றிய அறிவிப்புகளும் படித்துதான் வளர்ந்திருக்கிறேன். நினைத்த பொழுதுகளில் சங்குபொறுக்கி விளையாட முடிந்தது. ஆனால் இப்பொழுது கடல், என்னிடமிருந்து மிகத் தொலைவில் இன்னமும் குழந்தைகளுக்கான சங்குகளை அள்ளி கரையில் தெளித்தபடியேதான் இருக்கிறது. பால்யத்தில் நெருங்கி அலையாடிய கடல் இன்று காலெட்டாத தூரத்தில் பரந்து கிடக்கிறது. ஆனால் இன்றும் கடலை நினைக்கும் பொழுதெல்லாம் குழந்தையாய் மாறும் மனம் வாய்த்திருப்பதில் மகிழ்ச்சிதான்.

     கடல் ஒரு அதிசயம், அதிசயம் என்பதைவிட அதிசயத்தின் கிடங்கு. ஒவ்வொரு காலகட்டங்களிலும் தனக்கான ரகசியங்களை தனக்குள்ளாகவே சேர்த்துக்கொண்டே போவதில் கடல் ஒரு மூர்க்கமான தாத்தாவைப்போல. வயதான பெரியவர்களைப் பார்க்கும்பொழுது அவர்கள்,  தனக்குள்ளாகவோ அல்லது செடியிடமோ, ஆடுகளிடமோ, வானத்திடமோ சமயங்களில் சுவரிடமோ கூட ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பார்கள். போலவோ கடலும் அலைகளின் வழியாக, நெருடும் மணல்களின் வழியாக தன்னை ஸ்பர்சிக்கும் எந்த கால்களிடமும் தன் ரகசியங்களை முனுமுனுத்தபடியே இருக்கின்றது. அப்படி எந்தப் பெரியவர்களின் பேச்சும் ஆரம்பத்தில் புலம்பலாகவே படும், நாமாக அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுதே அவை கதைகளாக நம்மை வந்தடைகிறது. அதுபோலவேதான் கடலும், சப்தங்களை சதா முனுமுனுத்தபடியே இருந்தாலும் அது ஒரு போதும் தன் ரகசிங்களை புரியச்செய்வதில்லை.

கடலின் குரல் என்றைக்கும் ஓய்வதேயில்லை, தான் உயிரோடிப்பதை கனைத்து உணர்த்தும் பெரியவர்கள் போல ஓயாது அடிக்கும் அலையினூடாக தனது இறுப்பை கடல் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. கடல் நம்மிடம் கடத்தவிரும்பும் செய்திகளை கடல் மொழி அறிந்தவர்களால் எளிதாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி ஒரு மனிதரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. சமீபத்தில் கடல் பார்க்கச் சென்றிருந்தேன்.


அழகான மாலை நேரத்தில் கடலைப் பார்க்க வரும் மக்களின் முகங்களை கவனித்திருக்கிறீர்களா? கடல் பார்ப்பதைவிட அழகு களிப்பும் கொண்டாட்டமுமாய் மழலை படிந்த முகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது. அப்படி மனிதர்களையும் கடலையும் சேர்த்து ரசித்தபடியே அன்றைய முழு இரவையும் கடலோடு களித்துவிட நினைத்திருந்தேன். மேலும்  Message in Bottle  படம் பார்த்ததிலிருந்து எங்கு கடல் பார்த்தாலும் காலி புட்டியில் பணமோ கடிதமோ வைத்து கடலில் எறிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். என்னுடைய குறிப்பு என்றேனும் ஒருநாள் எனக்கே எங்காவது கிடைக்கலாம் அல்லது யாரேனும் ஒருவரை சென்றடையலாம், அதன் மூலம் ஒரு சிறு நட்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம், இப்படிப்பட்ட லாம்களுக்காக இன்னமும் எறிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

அப்பொழுது கடலோடு பேசிக்கொண்டிருந்த ஒரு மனிதரை சந்திக்க சேர்ந்தது. முதலில் அவர் ஏதோ அலைபேசியில் பேசிக்கொண்டிக்கிறார் என்றே என் அறிவியல் மூளைக்கு எட்டியது, ஆனால் அவர் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தபடி சர்வ நிச்சயமாக அலையோடுதான் பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவரை நெருங்கி நடக்கும் பொழுதுதான் கவனித்தேன். அவரை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியவில்லை. நின்று சிறிது நேரம் அவரையே பார்த்தபடியிருந்தேன். அவரிடம் பேசலாமாவென யோசித்தபடியே நின்றிருந்தேன். மொழி பிரச்சனையின் காரணமாய், அவருடம் பேச்சைத் துவங்கமுடியாமல் அமைதியாய் அவரையும் கடலையும் பார்ப்பதுவுமாய் இருந்தேன்.

ஒருவழியாய் “என்ன வேணும்?என்பதுபோல ஒரு பார்வை பார்த்தார். நான் ஒரு தமிழ் பதிவர். என்னை பாதித்த விஷயங்களை, எனக்கு சந்தோசம் தரக்கூடிய விசயங்களை என் எழுத்தின் மூலம் பதிவு செய்துகொள்வேன். உங்களைப்போன்ற ஒரு மனிதரை நான் ஒரு கட்டுரையில் வாசித்திருக்கிறேன். அதனால் உங்களோடு பேச வேண்டும் போல் இருந்தது, உங்கள் மொழி தெரியாததால் யோசித்தபடியே நின்றிருந்தேன் என்று எனக்குத் தெரிந்த மலையாளத்தில் கொட்டினேன். சிரித்துக்கொண்டே “இவ முன்னாடி எல்லாருக்கும் ஒரு மொழிதான் என்றவர் மேலும்  என்னைப் போன்ற கதாப்பாத்திரமா? என்ன கதை? என்றார். நல்ல வேளையாய் நான் படித்த கதை இவருடையதில்லை.

இவர் ஒரு வயதான மீனவர். உடல் சுகவீனம் காரணமாக மீன்பிடிப்பதை விட்டுவிட்டவர், இளம் மீனவர்களுக்கு ஒரு குருபோல லாவகங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற மாலை நேரங்களில் மற்ற மீனவர்களுடன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருப்பார் என்றும் யாரும் இல்லாத நேரங்களில் எப்பொழுதும்போல கடலோடு மட்டுமாய்ப் பேசிக்கொண்டிருப்பார் என்றும் சொன்னார். மேலும்  “இப்படி தனியாக பேசிக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்தால் உங்களுக்கு பைத்தியமாக தோன்றவில்லையா? இங்கே அனேகம் சிறுவர்கள் ( சிறுவர்கள் என்று அவர் சொன்னது இளம்மீனவர்களை) என்னை அப்படித்தான் சொல்கிறார்கள்என்றார்.  “இல்லை, நிச்சயமாக எனக்கு அப்படித்தோன்றவில்லை, ஆனால் ஒருவேளை அந்த கட்டுரையை நான் வாசிக்காது கடந்துபோயிருந்தால் அப்படி யோசித்திருக்க  சாத்தியமிருக்கிறதுஎன்றேன். பலமாக சிரித்துக்கொண்டார் பின் “எங்கேயோ இருக்கும் ஒருவர் என்னுடைய இந்த நிமிடத்தை இப்படி சாத்தியப்படுத்தியிருக்கிறார்”  என்றார்.

பச்சை மிளகாய் அறிந்து போட்ட உப்பு நீரில் வேகவைத்த பெரிய மலை நெல்லிக்காயும் (எல்லா இடங்களிலும் இப்படிக் குறிப்பிடமுடியாதென நான் வைத்த பெயர்தான் நெய்தல் பழம்) இப்படி , ஏதோவொரு கிழங்கு ஒன்றும் தின்னக் கொடுத்தார். அருமையாக இருந்தது, இரண்டிற்குமான சுவை. அதிலும் நெய்தல்பழ நெல்லிக்காய், ஆஹா ரகம். 

“முப்பத்தைந்து கடல் மைல்களுக்கு மேலாக கடலுக்குள் பயணம் செய்துவிட்டு மீன்கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பும் நாட்கள்தான் ஒரு மீனவனின் மிகமோசமான நாட்களாக இருக்கும், எனக்கும் அப்படி வாய்த்திருக்கிறது. வெற்றுப் படகோடு கரையேறக்கூடாது என்கிற நிலையில், கொண்டு வந்த உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோய்விட்ட நிலையில், இன்னொருமொரு இரவுப் போராடிப்பார்த்துவிடலாமென நினைத்துக் காத்திருக்கும் பொழுதுகளின் சுமையை, மண்ணில் வாழும் மனிதர்கள் அறிந்திருக்க நியாயமில்லை என்றார்.

மீன்களின் வகைகளையும், ஒவ்வொரு வகை மீனின் குணாதிசயங்களையும், அவற்றை பிடிப்பது பற்றிய வெவ்வேறு வழிமுறைகளையும் சொல்லிக்கொண்டே வந்தார். அதிலும் பெரிய மீன்கள் பிடிபட்டபின்னர் தப்பிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியைப் பற்றி அவர் சொன்னது அத்துனை சுவாரஸ்யம். எனக்கு கிழவனும் கடலும் நாவலையும், ஆழிசூழ் உலகு நாவலையும் என் முன் அமர்ந்து இவர் வாசித்துக்காட்டியது போல இருந்தது. அவர் சொன்னதை வைத்து என்னால் சுவாரஸ்யமாக ஒரு ஐம்பது பக்கக் கட்டுரையையாவது சுவாரஸ்யமாக எழுதியிருக்க முடியும். என்னுடைய துரதிஸ்டம் எனக்கு அவ்வளவு நினைவாற்றல் கிடையாது. இருக்கட்டும் பரவாயில்லை. அந்தோணிராஜ் என்னும் ஒரு திறமையான மீனவனைச் சந்தித்த மட்டிலும் மகிழ்ச்சி. மேலும் வாழ்க்கையில் மறக்கவியாலாத இரவுகளில் ஒன்றாக அந்த இரவும் ஆகிவிட்டது.

பெளர்ணமி நிலா பார்த்துக்கொண்டு பொங்கும் கடலில் கால் நனைத்துக்கொண்டு கதை கேட்பது, எவ்வளவு சுகம் என்பது அனுபவித்திருப்பவர்களுக்கே வெளிச்சம். அவர் பேசியதில் நிறைய தன்னைத் தானே பெருமையாகப் பேசிக்கொண்டது போல இருந்தாலும், எனக்கு ஒரு வயதான போர்வீரனின் போர்க்குறிப்பை வாசித்து முடித்ததுபோலதான் இருந்தது. அந்த பெருமை அவருக்கு தேவையானதுதான்.  ஒரு கட்டத்தில் எனக்கு அழைப்பு வர பிரிய மனமில்லாமல் கிளம்பினேன். கிளம்பும்போது அவரிடம் மறுபடியும் இங்கே வந்தால் உங்களை எப்படி சந்திப்பது? என்று கேட்டேன்.  “இது வடூவக்கோடு, இங்கே இருக்கும் நூறு குடும்பங்களில் நானும் ஒருவன், ஆண்டனிவீடு எது? என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். இருந்தால் பார்க்கலாம், இல்லைன்னா மேட்டுல (கல்லறையில்) பூவைப்போட்டுட்டுப் போங்கஎன்றார். நான் கிழக்கே நீட்டிய கையோடு கடல்ல போடுறேன், என்றேன். சிரித்துக்கொண்டே விடைபெற்று வந்தேன்.

அறைக்குத்திரும்பிய பின் கிழவனும் கடலும் நாவலை வாசித்த அல்லது THE OLD MAN AND SEA படத்தைப் பார்த்த நண்பர்கள் யாரும் உடனிருந்தால் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கலாம் என்று மிகவும் ஆவலாக இருந்தது. அப்படியாரும் உடனில்லை, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு கடலில் கால் நனைக்க கிளம்பினேன். அன்றைய என் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் “முழுநிலா நாளில் அறிமுகமற்ற ஆக்ரோஷமான அலைகளைப் பார்த்தபடி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்திருக்க முடியுமென்றே தோன்றுகிறதுஉடையாதவொரு
கண்ணாடி சீசாவைக்
குழந்தைக்கு பொம்மையாய்,
உருட்டிக் கரைசேர்க்கிறது
அலை,
அள்ளிச் செல்லும்
மழலையின் கையில்
குழந்தைக் கடல்
    -முரளிகுமார் பத்மநாபன்

30 கருத்துரைகள்:

அன்புடன் அருணா said...

இந்தச் சீசாக் கடல் என்னையும் இப்ப்டி ஏதாவது எழுதியனுப்பச் சொல்லி அடிக்கடி பாடாய்ப் படுத்தும்!

shri Prajna said...

எல்லோருடைய காலடித்தடதையும் அலை கொண்டு அழித்தாலும்..கடலைப்பற்றிய சுவடு ஒவ்வொரு மனதிலும் நிறைந்திருக்கவே செய்கிறது.
பொளர்ணமி நிலாவில் கடல் wow super..அந்தப் பொழுது எவ்வளவு அற்புதமானது...எப்படி இப்படி ஒரு நேசம் யாரைப்பார்த்தாலும்...

karthik lekshmi narayanan said...

சில விசயங்களை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகத்தை வார்த்தையால் கொண்டு வர முடியாது.. ஆனா இங்க எனக்கும் நானே இதை அனுபவிச்ச ஒரு உணர்ச்சி இருக்கு முரளி!
ஸ்பார்க்ஸ் புக் படிக்கிற ஒரு உணர்வு! அதுவும் கடல்ல இருந்து!! உனக்கு நான் ரசிகன்!!

ஆரூரன் விசுவநாதன் said...

இப்படியான அனுபவங்கள் கிடைப்பது அரிது. வாழ்த்துக்கள் . அவரைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்.

வெண் புரவி said...

ஹலோ..
தேனிலவு போனால்...
போன இடத்துல என்ன பண்ணீட்டு இருக்கீங்க..?
கடலில் மூழ்கி நிறைய முத்துக்கள் கொண்டு வந்திருக்கீங்க!

☼ வெயிலான் said...

உலகின் மிகப்பழமையானது எது? என்று எஸ்.ரா கேட்ட கேள்விக்கு, பலவாறாய் உள்ளே ஒரு சில எனக்குள் ஓடிக்கொண்டிருந்த போது,

கடல்

என்று பதில் சொன்னார்.
ரொம்ப நல்ல பதிவு முரளி! வாழ்வைப் போல, எழுத்திலும் நிறைய மாற்றங்கள், முன்னேற்றம்.
வாழ்த்துகள்!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
வணக்கம் மேடம், நலமா?
அப்படியெல்லாம் பாடாய்ப்படுத்த விடாதிங்க எழுதிடுங்க... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ
பெளர்ணமி நிலாவில் கடல், உண்மையிலேயே அப்படியே சும்மா கடலைப் பார்த்துக்கிட்டே உக்காந்திருக்கலாம், ஸ்ரீ.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திக்
//ஸ்பார்க்ஸ் புக் படிக்கிற ஒரு உணர்வு! அதுவும் கடல்ல இருந்து!! உனக்கு நான் ரசிகன்!!//

அடே நண்பா! லவ் யூ டா. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆரூரன் விஸ்வநாதன்
மாம்ஸ், வணக்கம் மாம்ஸ். எப்டி இருகிங்க? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெண்புரவி
அருண் சார்,இது தேனிநிலவு போனப்ப இல்ல சார்... ஹிஹிஹி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
வசிஸ்டர் வாயால்....

ஈரோடு கதிர் said...

அற்புதமான ஒரு அனுபவம்
அதைவிட அற்புதமான ஒரு எழுத்து

நன்றி முரளி!

அப்பாதுரை said...

அரைலூசு என்று சுலபமாக stereotype செய்திருக்க வேண்டிய நபரை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்கள். சில நேரம் மனிதம் எந்த வடிவத்தில் வெளிப்படும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம். முதிர்ச்சியின் அதிர்ச்சிக்கு எல்லாருமே தயாராக இருப்பதில்லை. 'மேட்டுல ஒரு பூவைப் போட்டு'ப் போகச்சொன்னது பிசைகிறது. அத்தனை இழப்புக்களும், நினைத்துப் பார்க்கையில், இந்த யதார்த்தத்தில் அடங்குவதாகத் தோன்றுகிறது. நன்று.

(old man and the seaயா? உயர்நிலைப்பள்ளியில் படித்த சாரம் அப்பொழுதே என்னவோ செய்தது. சரிதான், எந்தத் தேடலில் ஈடுபட்டீர்கள் முரளிகுமார்? :)

அப்பாதுரை said...

வெண்புரவிக்கான உங்கள் பதிலை இப்போது தான் படித்தேன்.. ஹிஹி.

sugirtha said...

நெய்தல் பழம் நீங்க எழுதின நாள்ல இருந்த படிக்க நினைச்சு இப்போதான் படிச்சு முடிச்சேன் முரளி. கடல் கூட பேசற தாத்தாவே கவிதை தான் இல்லே, அதே மாதிர உங்க தலைப்பு கூட!

வயசானவங்கள அவ்வளவு எளிதில் கடந்து போயிட முடியுமா முரளி. அந்த முகச் சுருக்கத்துல வித விதமான ஓவியங்கள பார்த்துகிட்டு இருக்கிறதே அழகான அனுபவம். அவர் கடலோடு பேசிட்டிருக்கறது பார்த்தப்போ உங்களுக்குள்ளே எப்படி ஒரு உணர்வு இருந்திருக்கும்ன்னு இந்த பதிவை படிக்கும்போது உணர முடியுது. அவங்களோட நினைவுகளுக்கு வயசாகறதே இல்லை. அத்தனை நிதானமா, கடந்த நிகழ்வுகள சொல்றத ஆசையா கேட்கத் தோணும்.

-----------------------------------------
எனக்கு கூட ஒரு பாட்டில் கிடைச்சுது.. உங்களுதுதானா? ;-) Just kidding, nice effort to meet new people...

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஈரோடு கதிர்
அண்ணா, தேங்க்ஸ்ணா!:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//முதிர்ச்சியின் அதிர்ச்சிக்கு எல்லாருமே தயாராக இருப்பதில்லை// அழகு சார்.:-)

//எந்தத் தேடலில் ஈடுபட்டீர்கள் முரளிகுமார்? :)//
இதுக்கும் சிரிக்கத்தான் தெரிந்திருக்கிறது :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுகிர்தா
//கடல் கூட பேசற தாத்தாவே கவிதை தான் இல்லே?//
இப்படி ஒரு மனுஷனை, இப்படிப் பார்க்கிற அனுபவம் பெறவேனும் வாசிப்பு அவசியமாகிப்போகிறது.

//வயசானவங்கள அவ்வளவு எளிதில் கடந்து போயிட முடியுமா முரளி. அந்த முகச் சுருக்கத்துல வித விதமான ஓவியங்கள பார்த்துகிட்டு இருக்கிறதே அழகான அனுபவம். அவர் கடலோடு பேசிட்டிருக்கறது பார்த்தப்போ உங்களுக்குள்ளே எப்படி ஒரு உணர்வு இருந்திருக்கும்ன்னு இந்த பதிவை படிக்கும்போது உணர முடியுது.//

நன்றி சுகிர்தா :-)

Anbe Sivam said...

இவ்வளவு நுணுக்கமா பார்க்குறீகளா அப்பு!! பிரமாதமா இருக்கு முரளி.

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

விக்னேஷ்வரி said...

ரசனையான, சுவாரஸ்ய, ஒன்றிவிடும் எழுத்துக்கு இடையே உங்கள் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் நெருடலாவே இருக்கு. இன்னும் மாத்திக்கலையா நீங்க..

முரளிகுமார் பத்மநாபன் said...

@செந்தில்
// இவ்வளவு நுணுக்கமா பார்க்குறீகளா அப்பு!!//
யோவ் நீ உண்மைய சொல்லு? பாராட்ரியா இல்ல கலாய்க்கிறியா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
//புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி, சார். உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வம்சி சிறுகதைபோட்டியில் பரிசு பெற்றது, நீங்கள்தானே?

முரளிகுமார் பத்மநாபன் said...

@என்றும் இனியவன்
//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றீ, வாழ்த்துக்கள்.

// பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க,//
இதுக்கெல்லாமா பரிசு குடுப்பீங்க, ரைட்டு கேப்போம்.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@விக்னேஷ்வரி
//ரசனையான, சுவாரஸ்ய, ஒன்றிவிடும் எழுத்துக்கு இடையே உங்கள் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் நெருடலாவே இருக்கு. இன்னும் மாத்திக்கலையா நீங்க..//

என்ன பிழை கண்டீர், தங்கையே.. சொல்லும், யாம் திருத்திக்கொல்கிறோம். :-) ஏப்பி நியூ யியர் சிஸ்.

செல்வம் said...

கடல்...கல்லூரிக் காலத்தில் ஒரு தோல்வி ஏற்பட்ட போது நண்பர்கள் சுமார் 10 பேர் மெரீனாவிற்கு சென்று ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கலாம் என்றெண்ணிச் சென்றோம். கடலைப் பார்த்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் வெறுமனே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கடல் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பியது.

அந்த மனிதருடன் நீங்கள் உரையாடிய போது நானும் உங்க கூட இருந்திருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது...

செல்வம் said...

கடல்...கல்லூரிக் காலத்தில் ஒரு தோல்வி ஏற்பட்ட போது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கலாம் என்று மெரீனாவிற்குச் சென்றோம். கடலைப் பார்த்தவுடன் யாரும் யாருடனும் பேசவில்லை. கடல் எங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பியது.

அந்த மனிதருடன் நீங்கள் உரையாடிய போது நானும் அருகே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது மனம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@செல்வம்
நன்றி செல்வம், நம்ம ஆபீஸ் முன்னாடி ஒரு பெரியவர் இரவுகளில் தூங்குவாரே, நியாபகம் இருக்கிறதா? அவருடன் பேசிக்கொண்டிருந்தது கூட ஒரு அனுபவம்..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.