உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், மொத்த இந்தியாவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
=============================================================================
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரயில் பயணங்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தாரோடு சுற்றுலா செல்லும் போதெல்லாம் வெறும் கேளிக்கைகளுக்கும், தூக்கத்திற்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்தேன். ஆனால், இன்று பயணம் என்பது எவ்வளவு அலாதியானது? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு ஏன்? எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதரையும் வாஞ்சையோடும், இலகுவாகவும் அணுக முடிகிறது. காரணம், தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பின் பாதிப்புகளுமே.
உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதை கழுக்கண்ணோடு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அது போல, வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள, அதை அனுபவிக்க ஒரு எழுத்தாளனின் பார்வையில் பார்க்க வேண்டும். ஏனெனில், நாட்டின் ஒவ்வொரு பகுதியின் மூலையிலும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். அவன் அந்த மக்களின் வாழ்க்கையை, அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருக்கிறான். எனவே, இப்போது போகிற எந்த ஊரிலும், அந்த கதாபாத்திரங்களைத் தேட முடிகிறது. மொழியை, அவர்களின் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடிகிறது. வாசகனுக்கு ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாழ்க்கை.
புத்தகங்களின் மதிப்பை, வாசிப்பின் அருமையை உணர்த்த “நாட்டின் கலாச்சாரத்தை ஒழிக்க புத்தகங்களை எரிக்க வேண்டாம், மக்கள் வாசிப்பதையே நிறுத்துங்கள்” என்ற ஒற்றைத் தத்துவம் போதுமானது. குழந்தைகளுக்கு, வாசிக்கும் பழக்கத்தை மிகச்சிறிய வயதிலிருந்தே ஆரம்பிக்கச் செய்யலாம். தினசரி இரண்டு பக்கங்களை படுக்கைக்குச் செல்லுமுன், அல்லது படுக்கையில் வாசித்துக் காட்டுங்கள்.
அவசர உலகின் பகல்களை பணம் பண்ணும் வேட்கையில் மிதித்துத் தள்ளுகிறோம். குறைந்த பட்சம், இரவு சிறிது நேரமாவது சீரியல்களையும், சூப்பர் சிங்கர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள். கதைகளிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் நிலையில் புத்தகங்களை வாசிக்கச் செய்யுங்கள்.
நான் என்னுடைய கடிதங்களிலும் பதிவுகளிலும் கடைசியாக கையெழுத்திடும் முன்பாக "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது" என்று எழுதுவது வழக்கம். வாழ்வின் அழகியலை உணர்ந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். பொதுவாகவே, மனிதன் பொருளீட்டும் முனைப்பில் வாழ்வின் அழகை, சின்னச் சின்ன சந்தோசங்களை தவறவிட்டு விடுகிறான். காலங்கழிந்த பின்னர், இனிமையான தருணங்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்வதுமாய் இருக்கும் அவனது வாழ்க்கையில், சில கேள்விகள் அவனை தெளிவுபடுத்துகிறது, வாழ்வின் அழகியலை இயல்பு மீறாமல் புரியச்செய்கிறது. இதற்கு தொடர்ச்சியான வாசிப்பு ஏதுவாக இருக்கிறது.
இது என் வாழ்வில் கண்கூடாக நடந்த விஷயம், வண்ணதாசன் என்கிற ஒற்றை மனிதனின் எழுத்துக்களை அவரது முழு தொகுப்பையும் வாசித்து முடித்ததும், எனக்குள் எழுந்த சில கேள்விகள் ஒவ்வொரு நாளையும், நிமிடங்களையும் சந்தோசமாக கடந்துபோகச் செய்கிறது.
ஒரு மழைக் காலையில் நனைந்து கிடக்கும் உங்கள் தினசரியைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?
தென்னை மரத்திலிருந்து இறங்கிவரும் அணிலைப் பார்க்கும்போது?
சைக்கிள் கேரியரிலிருந்து தவறி விழுந்த தக்காளிக் கூடையைப் பார்க்கும்போது?
லாரியில் அடிபட்ட நாயின் உடலை கைக்குட்டையால் மூக்கை மூடியபடி பார்த்துக் கடந்து செல்லும்போது?
ஆற்றின் படித்துறையில் காதலிக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது?
விறகு அடுப்பில் பலகாரம் சுடும் அம்மாவின் முகம் பார்க்கும்போது?
அவசரகதியான இந்த உலகின் இரவில் தற்செயலாக நிமிர்ந்து நிலா பார்க்கும்போது? (இதில் எந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமென்றாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள். சொல்கிறேன்)
வண்ணதாசன் என்கிற அந்த மனிதனின் முழுக்கதைகளையும், கவிதைகளையும் வாசித்து முடித்ததும் என் மனதில் எழுந்த கேள்விகள்தான் இவை அனைத்தும். மேலும் அவருடைய கேள்வி ஒன்றும் இருக்கிறது, ரயிலை பார்க்காதவர்கள் இருப்பார்களோ என்னவோ? கடலும், நதியும், அருவியும் பார்க்காதவர்கள் இருக்கக்கூடும். உச்சி வெயிலில் புறப்படத் தயாராய் நிற்கிற பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கொய்யாப் பழங்களும், திராட்சைப் பழங்களையும் போல “பாக்கெட் தண்ணீர்” விற்கப்படுவதைப் பார்க்கிறவன். ஏற்கனவே கடலையும், நதியையும், அருவியையும் அறிந்தவனாயிருப்பது இன்னும் ஒரு வகை துயரமல்லவா? எவ்வளவு அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரிகள், அதனின்று எழும் கேள்விகள், இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடுங்கள். வாழ்க்கையை உணரலாம்.
சில மாதங்களுக்கு முன்பொரு மழை மாலையில், காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சுவரின் வெடிப்பில், அப்போதுதான் முளைத்தது போன்றிருந்த இரண்டே இலை கொண்ட ஒரு சிறு செடியில் ஒரு மஞ்சள் பூ பூத்திருந்தது. அதைப் பார்த்ததுமே, என்னவோ மனம் ஒரு நிறைவை அடைந்தது. எவ்வளவு சந்தோசம்! இந்த சந்தோசங்களின் தோரணங்கள் தான் வாழ்க்கை.
தொலைதூரப் பயணத்தின்போது எங்கோ தூரத்தில் கேட்கும் மெல்லிய இசை, அல்லது ஒற்றை வரி உங்களைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா?
ஆம்! என்றால் நீங்கள் வாசிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இல்லையென்றால், உடனடியாக தொடங்குங்கள் என்று அர்த்தம்.
*************************************************************
திருப்பூர் வலைப்பதிவர்கள் இணைந்து சேர்தளம் என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம் என்பது நீங்களெல்லாம் அறிந்த்தே. அதன் மூலமாக கணினியில் தமிழில் எழுத, வலைப்பதிவுகளை ஆரம்பிக்கவென எங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறோம். அதன் அடுத்த கட்டமாக, நூலகம் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறோம்.
முதலில் எங்களிடம் இருந்த புத்தகங்களை, நாங்களே ஒருவருக்கொருவர் மாற்றி படித்துக் கொண்டிருந்தோம். அதனையே, சற்று வரைமுறைகளுக்கு உட்படுத்தி, எங்களிடம் உள்ள மொத்தப் புத்தகங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு சேர்த்து, அதை அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் ஒரு சிறு நூலகம் போன்று செயல்படுத்தத் துவங்கியிருக்கிறோம்.
சிறு வாடகையின் கீழ் புத்தகங்களை இரவல் கொடுப்பதும், அதன் மூலம் நல்ல புத்தகங்களை தொடர்ந்து வாங்கிக் குவிப்பதுவுமே எங்கள் நோக்கம். இதுவரையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சேகரித்திருக்கிறோம். படிக்க எளிதாக இருந்தாலும், விஷயம் அவ்வளவு எளிதல்ல. என் மன்ங்கவர்ந்த எழுத்தாளர்களின் கையெழுத்துடனான புத்தகம், வருடக்கணக்கில் காத்திருந்து வாங்கிய புத்தகம், பரிசாக வந்த புத்தகம், இப்படி ஒவ்வொரு புத்தகங்களுக்குப் பின்னும், ஒரு உணர்வுபூர்வமான கதை இருக்கும். அதையும் மீறி ஒரு நல்ல விஷயத்திற்காக, புத்தகங்களை வாரி வழங்கிய எங்கள் சேர்தள உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்தப் பதிவின் மூலமாய் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பக்கங்களையாவது வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற மறைந்த எழுத்தாளர். சுஜாதா-வின் வரிகளைப் பின்பற்றுவோம். ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பவன், ஒரு வருடத்திற்கு 600 பக்கங்களுக்கு மேல் படித்துவிட முடியும். வருடம் 600 பக்கம் வாசிப்பவனால் நல்ல எழுத்தை கண்டறிய முடியும், தீவிர இலக்கியத்திலும் தொடர முடியும் என்பதுதான் அதன் சாராம்சம்.
இதுவரை வாசிப்பனுவத்திற்குள் நுழையாதவர்கள், இன்றே செய்யுங்கள். வருகிற 23ஆம் நாள் உலக புத்தக தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினமான ஏப்ரல் 23ஆம் நாளை, அவரது நினைவாக சர்வதேச புத்தக தினமாக அறிவித்தது. 1995 ஆண்டு முதலாக ஏப்ரல் 23ஆம் நாள் சர்வதேச புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களை சந்திக்கும் போதும், விஷேசங்களின் போதும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே உயிர்ப்போடிருக்கும் மலர்க் கொத்துகளுக்குப் பதிலாய், உயரிய புத்தகங்களைப் பரிசளியுங்கள்.
மீண்டும் சொல்கிறேன், "வாழ்க்கை அழகானது அதை உணரும்போது"