(அம்மிணி-ரீமா, ரத்னம்-ஸம்வ்ரிதா, குஞ்ஞுமோல் -அர்ச்சனாகவி)
நெருங்கிய நண்பர்கள் பலரும் தொடர்ந்து, இந்த திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லியபடியே இருந்தனர். அவசியம் நீ பார்த்துவிட்டு இந்த படத்தினைப் பற்றி எழுது, இது உன் ரசனைக்கு ஏற்றபடம் என ஏகப்பட்ட ஹைப்’கள். படம் பார்க்கும் முன்பே இப்படி அதீத எதிர்பார்ப்புடன் பார்க்கும் அனேக படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை. இந்த படம் அப்படியல்ல. அருமையான மெலோடிராமா. மூத்த எழுத்தாளர். எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களின் நாவலைத் தழுவி 1970களில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் மறுஉருவாக்கம்தான் இந்தத் திரைப்படம். இது சராசரியான ரசிகர்களுக்கான படமா என்றால், என்னைப் பொறுத்தவரை இல்லைதான். ஏனெனில் நிறைய காட்சிகள் நேரடியாக சொல்லப்படாமல், குறீயீடுகளின் மூலமாகவும், மறைமுகமாகவும் சொல்லப்படுகிற திரைக்கதை. எனவே கதையினூடே பயணிக்க வேண்டியது ரசிகனின் கடமையாகிறது. சொல்லப்படாத விஷயங்களை நாம் அனுமானிக்க வேண்டியிருக்கும். ஆனால் நல்ல சினிமா பார்க்க விரும்புபவர்கள். அவசியம் பார்க்கவேண்டிய படம்.
கடவுளிடம் பணம் வைத்து மனதார வேண்டிக்கொள்கிற விஷயம் நிறைவேறும்போது மட்டும் பூக்கும் என ஊரில் காலங்காலமாக நம்பப்படுகிற நீலத்தாமரையைப் பற்றிய டாக்குமெண்டரி படம் எடுக்க ஊருக்கு வருகிறாள், மாலுக்குட்டியம்மா என்கிற வயதான பெண்ணின் பேத்தி (அமலா பால்). மாலுகுட்டியம்மாவின் மகன் ஹரிதாசனின் மகள்தான் அவள். அவளுடைய சிறு வயதிலேயே ஹரிதாசன் இறந்து விட்டிருக்கிறான். அதனால் மறுமணம் செய்துகொண்ட ரத்னம் (மருமகள்), வயதான தனது மாமியாரைப் பார்க்க மகளுடன் வந்திருக்கிறாள். இப்பொழுது இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் வேலை செய்த, குஞ்ஞுமோலுவும் மாலுகுட்டியம்மாவைப் பார்க்க வருகிறாள்.
ரத்தினமும், குஞ்ஞுமோலும் ஒன்றாக தங்க வேண்டிய அவசியம் வருகிறது. இருவரும் தத்தம் வாழ்க்கையைப்பற்றி பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ரத்னம் “என் கணவர் தனது கடைசி நாட்களில் உனக்காக ஒரு கடிதம் எழுதினார், ஆனால் அதை அவர் கடைசி வரையிலும் அஞ்சல் செய்யவே இல்லை, அந்த கடிதம் என்னிடம் இருக்கிறது. படிக்கிறாயா?” என்கிறாள். ஆனால் அதை குஞ்ஞுமோல் மறுத்துவிடுகிறாள். அந்த ஒரு இரவில், குஞ்ஞுமோல் மற்றும் ரத்னம் இருவரின் நினைவுகளில் ப்ளாஷ்பேக்காக கதை நகருகிறது.
முப்பது வருடங்களுக்கு முன்பு குஞ்ஞுமோல் அவளது முறைமாமன், மற்றும் பாட்டியோடு மாலுக்குட்டியம்மாவின் வீட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். அவ்வளவு பெரிய வீட்டில், சட்டம் படித்துக்கொண்டிருக்கும் தனது மகன் வந்து போகும் நாட்களைத்தவிர ஒற்றை ஆளாக இருக்கும் அவர் குஞ்ஞுமோலை மட்டும் வேலைக்கு வைத்துக்கொள்கிறார். குஞ்ஞுமோல் மிகுந்த அன்புடன் மாலுக்குட்டியம்மாவை கவனித்துக்கொள்கிறாள். அருகில் வசிக்கும், எப்பொழுதும் தனது வயது, திருமணம், காதல் குறித்த விஷ்யங்களையே பேசிக்கொண்டிருக்கும் அம்மினி என்ற பெண்ணோடு நட்பு கொள்கிறாள். மேலும், இரவுகளில் மட்டும் பாடும் பக்கத்துவீட்டு பாகவதர். கோவில் வாசலிலேயே குடியிருக்கும் பெரியவர் என குஞ்ஞுமோலுக்கு புதுப்புது உறவுகளும், நம்பிக்கையும் தொடர்கிறது. அனைவருக்கும் பிரியமானவளாய் இருக்கிறாள்.
சில மாதங்களில் படிப்பு முடிந்து வீடு திரும்பும் ஹரிதாசனுக்கு குஞ்ஞுமோலைப் பார்த்த்துமே ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளுக்கும். சிறுசிறு ஊடல்களுக்கு பிறகு இருவரும் உடல் ரீதியான உறவு கொள்கின்றனர். நாட்கள் நகர, ஹரிதாசனுக்கு அவனது மாமாவின் மூலமாக வெளியூரில் வேலை கிடைக்கிறது. எப்படியும் திரும்பிவந்து தன்னை திருமணம் செய்து கொள்வான் என நம்புகிறாள். ஆனால் அவன் வெளியூரில் இருக்கும்பொழுதே அதே மாமா தனது பெண்ணான ரத்தினதிற்கு ஹரிதாசனைப் பேசி முடிக்கிறார், இவையனைத்தும் குஞ்ஞுமோலின் கண்முன்னமே, அவளது ரகசியமான கண்ணீரையும் தாண்டி அவளது இயலாமையோடு நடந்தேறுகிறது. திருமணம் முடிந்து வீடு திரும்புகிறான் ஹரிதாசன்.
தன் வயதை ஒத்த பணிப்பெண்ணாக குஞ்ஞுமோலுடன் சினேகமாக பழக ஆரம்பிக்கிறாள், ரத்னம். ஹரிதாசனுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை அவள் மூலம் தெரிந்து கொள்கிறாள். ஆனால் எப்பொழுதும் தனித்தே, எதையோ பறிகொடுத்தது போலவே திரியும் அவளது போக்கும், இன்னும் சில தடயங்களின் மூலமும் தனது கணவனால் கைவிடப்பட்டவள்தான் குஞ்ஞுமோல் என்பதை அறிகிறாள். இதற்காக கணவனுடன் சண்டையிடுகிறாள். ஆனால் அவனோ எந்தவிதமான மனவருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறான். அவனைத் திருத்துவது ஆகாத காரியம் என்பதை அறிகிறாள். மேலும் குஞ்ஞுமோல் இங்கேயே இருப்பதன் மூலம் அவளுக்கும் வேதனை என்பதால் வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே சண்டையிட்டு குஞ்ஞுமோலை வீட்டை விட்டு அனுப்புகிறாள். இருவரின் பார்வையிலும் மேற்கண்ட காட்சிகள் காட்டப்பட்டு ப்ளாஷ்பேக் முடிகிறது.
டாக்குமெண்டரி படம் எடுத்துமுடித்தவுடன், தனது பெண்ணுடன் ஊர் திரும்புகிறாள், ரத்னம். தனக்கு உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை எனவே நான் உங்களுடன் சில நாட்கள் தங்கிச் செல்கிறேன் என்கிறாள் குஞ்ஞுமோல். இருவரும் சிரித்தபடியே வீட்டிற்குள் நுழைய படம் முடிகிறது. முடிகிறதா? அவ்வளவுதானா? என்றால் ஆம், படம் முடிகிறது. அவ்வளவுதான்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில:
போல்ட் அண்ட் ப்யூட்டிஃபுலான ரத்னமின் கேரக்டர்தான் பட்த்திலேயே அதிகம் பாதித்த கதாபாத்திரம். அவளுடைய தெளிவான முடிவுதான் அனைவருக்குமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறது. இரண்டாவது திருமணத்தை பலரின் வெறுப்பிற்குப் பிறகும் செய்து கொள்கிறாள்.
குஞ்ஞுமோலை வசியம் செய்யும் ஹரிதாசன், இரவில் மாடிக்கு வரும்போது முன்றாவது படியில் காலை வைக்காதே, அது உடைந்திருக்கிறது, சப்தம் வரும் என்கிறான். அதையே குஞ்ஞுமோல் அவனுடைய மனைவியிடம் சொல்லுமிடம் ஒரு மென்சோகக் கவிதை.
குஞ்ஞுமோலின் ஒரே ஸ்னேகிதியான, அம்மிணியின் பிரச்சனையை சொல்லாமலேயே அவள் திடுமென தற்கொலை செய்துகொள்வதன் மூலமே முதிர்கன்னியான் அவளது பிரச்சனைகளை சொல்லாமல் சொல்லியிருப்பது.
ஹரிதாசனுக்கும் குஞ்சுமோலுக்குமிடையே உடலுறவு முடிந்த அடுத்தநாள் காலை அம்மிணியிடம் ஓரிரு ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் காட்சியில் குஞ்ஞுமோலின் வெட்கம் தெறிக்கும் நடிப்பும், சேஃப் (SAFE) என்ற வார்த்தைக்கான அர்த்தம் தேடுவதன் மூலம் ஹரிதாசன் திட்டமிட்டு மிகவும் ஜாக்கிரதையாக வளைத்திருக்கிறான் என்பதை சொல்லும் காட்சி.
தத்துவார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் பைத்தியம் எனப்படுகிற அந்த மரத்தடி கிழவர், இரவுகளில் பாடும் அந்த பக்கத்துவீட்டு காட்டப்படாத பாகவதர், அதுவும் அவர் இறந்த்தாக சொல்லப்பட்டபின்னும் அந்தப் பாடல் குஞ்ஞுமோலுக்கு மட்டும் கேட்பது, முரடனைப்போல தோற்றமளித்தாலும் குஞ்ஞுமோலைத் திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கை நடத்தும் முறைமாமன்.இப்படி நிறைய ரசிக்க, யோசிக்கவென பல காட்சிகள் உண்டு. நல்ல மெலோடிராமா விரும்பிகள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படம், நீலத்தாமரா...
இசை:
இந்தப்படத்தில் வித்யாசாகரின் இசை இல்லையென்றால், நிச்சயம் இவ்வளவு உருக்கத்தைக் கொடுத்திருக்குமாவென்பது சந்தேகம்தான். வித்யாசாகரின் இசை அதி அற்புதம். புல்லாங்குழலை படத்தின் பின்ன்ணியில் அதிகம் உபயோகித்திருக்கிறார். படத்தில் ஐந்து + ஒரு பாடல்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். வித்யாசாகர் ஒரு உண்மையான இசைக்கலைஞன். நான் நண்பர்களிடம் பேசும் போது “He is an True Composer” என சொல்வேன். அது எவ்வளவு உண்மை என்பது அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையில்லை” என்கிறது அவரது பாடல். ஆனால் ரசிக்கும் மனது மட்டும் வாய்த்துவிட்டால் இசைக்கும் மொழிகள் கிடையாது என்பதை சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார், கர்நாடக சங்கீதம் ஞானம் உள்ளவர்கள் இன்னும் புட்டு புட்டு வைக்கலாம் இந்தப் பாடலகளை. ஆனாலும் என்னைப்போன்ற அடிப்படை இசையறிவற்ற ஆனால் கேள்விஞானம் மட்டும் கொண்டவர்களுக்குக்கூட இந்தப் பாடல்கள் மிக அருமையான ஒரு சுகானுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
அதிலும் இந்த படத்தின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது இரண்டு பாடல்கள், முதல்பாடல் : பகலுன்மான்ய வீதியிலே குஞ்னு தாமரே..... இந்தப்பாடல் இந்துஸ்தானிய ஸ்டைலில் கையாளப்பட்ட பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர்கள் பல்ராம் (காற்றின் மொழி பாடியவர்) விஜய் பிரகாஷ் (ஓம் சிவ் ஓம், ஹொசானா பாடியவர்) இருவரும் சேர்ந்து பாடிய பாடல். பாடல் முழுவதையும் பல்ராமும் இடையே வரும் சங்கதிகளையும், கமகங்களையும் விஜய்பிரகாஷ் பாடியிருக்கிறார். இதுபோன்ற இசையை இதற்குமுன்பாக ஜாகீர் உசைன் அவர்களின் தபேலா கச்சேரிகளில் மட்டுமே கேட்டிருக்கிறேன். மனதை இளக்கும் இசை, இந்த ஒருவாரத்தில் எத்தனை முறை இந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என தெரியவில்லை. இதே பாடலை தமிழிலும் கண்டேன் காதலை படத்தில் உபயோகித்திருப்பார், வித்யாசாகர். அதிக கவனம் பெறாமல் போன, ஆனால் அருமையான பாடல் அது. நான் மொழியறிந்தேன்... உன் வார்த்தையில்.... சுரேஷ் வாட்கர் பாடியபாடல்.
இரண்டாவது பாடல் : அனுராக விலோச்சன்னாயி , இந்தப் பாடலின் ஸ்பெசலே அதன் துள்ளலான இசையும் ஸ்ரேயா கோஷலின் ரம்யமான குரலும்(குறிப்பாக பாடலின் இடையே வரும் அவளுடைய அந்த ஹம்மிங், அய்யோ. விஜய்பிரகாஷும் சரி, ஷ்ரேயா கோஷலையும் அவர்களின் காம்படிஷன் ரவுண்டுகளிலிருந்தே பார்த்து வருகிறேன், என்ன வளர்ச்சி, இவர்களிடம்!). தேவதைகளின் தேசமான கேரளத்தின் பச்சைபசேலென்ற இடங்களும் அந்த பச்சைநீர்க் குளங்களும். அவசியம் பார்த்துக்கொண்டே கேளுங்கள்.
இதுபோக இந்த படத்தின் பாடல்கள் அல்லாது, (ஐந்து+ஒருபாடல்) குஞ்ஞுமோலை வசியம் செய்ய ஹரிதாசன் தன்னுடைய டேப்ரெக்கார்டரில் யேசுதாஸ் பாடிய ஒரு ஹிந்திபாடலை போடுவான். 1979களில் வந்த LAHU KE DO RANG (ரத்தம் இரண்டு நிறம்) என்ற படத்தில் பப்பிலஹரி இசையில் வெளிவந்த சித் நா க்கரோ, அப் தோ ருக்கோ...... என்ற இந்த பாடலை இந்தப்படத்தில் பொருத்தியிருக்கும் இடம் அருமை. 80களில் ஹிந்தி பாடல்கள் எவ்வளவு ரம்யமாக இருந்தன என்பதையும், கதை நடக்கும் காலகட்டத்தை உணர்த்தவும் இந்த பாடல் இங்கே பொருத்தப்பட்டிருக்கிறது.







