ஷம்முகுட்டி, அக்காவின் கடைக்குட்டி. ஒருவயது ஆகிறது. தினமும் மதியம் சாப்பிட வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளது சாகசங்களைப் பட்டியலிட்டு விட்டுத் தான் சோறே போடுவார்கள். போலவே, அவளும் தினமும் நிற்பதும், நடப்பதும், சிரிப்பதுமாய், தினுசு, தினுசாக எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு கூட “டேய் மாமான்னு சொன்னாடா” என்றார்கள், அக்காவும், அம்மாவும். மூணு மணிநேரம் பக்கத்திலேயே உக்காந்து தேவுடு காத்துப்பார்த்தேன். ம்ஹூம். ‘மா’ கூட வரலை.
போனவாரத்தில் ஒரு நாள், வீட்டிற்குள் நுழைந்ததுமே “இங்க வா” என்று சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பி குட்டிம்மா எப்படி சாமி கும்பிடணும்னு கேட்டதும்தான் தாமதம், தத்தக்கா பித்தக்காவென நடந்து சாமி ரூமிற்கு சென்று சாமி படங்களுக்கு முன்பாக நின்று கைகளைக் கூப்பி கண்களை மூடிக்கொண்டாள். பிறகு மணி அடிப்பது, விபூதி தின்பது என வரிசையாக ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனாள். ஒருபக்கம் அவளது செய்கைகள் ஆச்சர்யமாக இருந்தாலும், அம்மாவின் செய்கைகள் ஆயாசமாக இருந்தது.
அம்மாவிடம் கடவுள்கள் சம்பந்தமாக நிறைய பேசியிருக்கிறேன். அம்மாவிற்கும் சரி, அப்பாவிற்கும் சரி, கடவுள்கள் குறித்து பொதுவாக எல்லோருக்குமே இரண்டாம் கருத்து வந்துவிட்ட காலம் இது. சாமி கும்பிடுவது என்பது ஒரு சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. திருப்பதி கோவிலில் இரண்டு நாட்கள் நின்று சாமி கும்பிட்டு வந்ததைப் பெருமையாக பேசும் பக்கத்துவீட்டுக்கார்ர்களிடம் “ஆண்டவன் எங்கேயும் இருக்கான், கண்ணை மூடி பெருமாளேன்னு கும்பிட வேண்டியதுதானே? அங்க போயி பார்த்தா தான் காப்பாத்துவானா? என்று அம்மா வியாக்யானம் பேசுவார்கள். அதே அம்மாவிடம் “ஏம்மா, சாமி தான் எங்கேயும் இருக்காரே, நம்ம சாமி ரூம்ல இருக்கிற படங்களை எல்லாம் எடுத்து விடலாமே? ஒரு விளக்கையோ இல்லை வெற்றுச் சுவரையோ பார்த்து கும்பிட்டுக்கிட்டு போயிடலாமேன்னா? பதில் இருக்காது.
அம்மாவிடம் இவ்வளவு பேசும் என்னிடம் நீயேன் வருடாவருடம் சபரிமலைக்கு போகிறாய்? என்றால் பதில் இல்லை. காரணம் என் பாட்டி, சின்ன வயதிலிருந்தே இல்லாத சாமியையும், பூதத்தையும் கதை கதையாக சொல்லியே வளர்த்திருக்கிறார். இன்னமும் பாதாள உலகமும், ஏழு தலை பூதமும் இருப்பதாக நம்புகிற குழந்தைகள் இருக்கத் தானே செய்கிறார்கள். மூளை வளரும் பொழுது என்ன செலுத்தப்படுகிறதோ, அதை வெளியே எடுத்தெறிய நிறைய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சிரமப்பட்டால் அது முடியும், ஆனால், நானோ அம்மாவோ சிரமப்பட விரும்பாதவர்கள். தாம் உண்மை என்று நம்பிவிட்ட ஒன்றை விமர்சனத்துக்குள் கொண்டு போக விரும்பாதவர்கள். அதில் கிடைக்கும் நம்பகத்தன்மைக்காக அதை விட்டுக் கொடுக்க முன் வராதவர்கள்.
இப்படி எங்களைப்போல நிறையபேர் இருக்கக்கூடும். அதனாலேயே அம்மாவிடம் சொல்வேன். நம்முடைய தவறுகள் நம்மோடு போகட்டும். இனிவரும் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள். கடவுள் பற்றிய எந்த கருத்தையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்காய் விபரம் தெரிந்து வளரும்பொழுது தேவையெனில் கடவுள் இருக்கட்டும் அல்லது போகட்டும், ஆனால் அது அவர்களின் விருப்பமாக இருந்துவிட்டு போகட்டுமே. இப்படி வெள்ளி, சனி, பூஜை, சாமி, விபூதி இப்படி சம்பிரதாயங்களை பழக்காமல் இருக்கலாமே என அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு பாட்டி, என் குழந்தைகளுக்கு அம்மா தானே பாட்டி. அவர்களின் கடமை போல இது. இன்று இவள். ஷம்முகுட்டிக்கும் அதை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.
கோவையிலுள்ள என் அண்ணன் ஒருவரின் மகள்கள் இருவரும் காலையில் எழுந்ததும் குளித்த மறுநிமிடம் சாமி முன்நின்று சமஸ்கிருதம் உட்பட பல பக்திப்பாடல்களை அட்சரசுத்தமாக பாடுவார்கள். அவர்களோடு ஒப்பிட்டு தன் மகனை திட்டிக்கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்திருக்கிறேன். இந்த திட்டு அவர்கள் குழந்தையைப் போல தன் குழந்தை பாடவில்லை என்பதால் என்றால் சரி, சாமி பாட்டு பாடலைங்கிறதா இருந்தா? யோசிக்க வேண்டியிருக்கு. கோவிலுக்குப்போய் நெத்தி நிறைய விபூதி வைத்துக்கொண்டு பழமாக திரும்புபவர்களை நல்லவர்கள் என்று சொல்வதைவிட, அப்படிச் செய்யாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்லி குழந்தைகளை வளர்ப்பது என்னைப்போல ஒரு ரெண்டுங்கெட்டான் மனநிலைக்கு அல்லவா கொண்டுவந்து விடும்.
கடவுளைப்பற்றிய எந்த விவாதமும் கடவுளைப்போலவே முற்றுப்பெறாமல் நின்றுவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை சிலருக்கு அன்பு கடவுள், சிலருக்கு உணவு கடவுள், சிலருக்கு தொழில் கடவுள், சிலருக்கு பணம் கடவுள், சிலருக்கு தாமே கடவுள், சிலருக்கு சிலை கடவுள். இருந்தும் என்னால் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பிலிருந்து என்னை ஒரளவிற்கு முறைப்படுத்திக்கொள்ள முடிந்தது. அன்பே சிவம் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயன்று கொண்டும் இருக்கிறேன். பரீட்சைக்கு முன்பு சாமி கும்பிடுவது, எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் உண்டியலை நிறைப்பது என முன்பிருந்த சில பல விஷயங்களை மெதுமெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். எஸ்.வி. சேகரின் நாடகங்களைக் கேட்கத் துவங்கியது முதல் கடவுளிடம் என்னுடைய ஒரே வேண்டுதல் “ஆண்டவா, எல்லாரையும் நல்லபடியா வைப்பா” இவ்வளவுதான். அது வீட்டில் கும்பிட்டாலும் சரி, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்றாலும் சரி.
இப்படி மெதுமெதுவாக மாற்றிக்கொண்டிருந்தாலும் தும்மல் வரும்போதும், துக்கம் வரும்போதும் “ஈஸ்வரா” என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். சோகம் சூழ்ந்த வேளையில் நல்லதா ஒரு இசையைக் கேட்கத் துடிப்பது போல எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாமிருக்க பயமேன் என்று சொல்லியபடி சிரிக்கும் குழந்தை முருகன் தேவைப்பட்டவனாகவே இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை கடவுள் என்கிற விஷயமே, ஒரு அழகான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதே அழகு சிதையாமல் வைத்திருக்கும் வரை, கடவுள் குறித்த எந்த பயமும் நமக்குத் தேவையில்லை. ஒருநாள் மதியம் ஷம்முக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். நானும், கோகுலும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென “மாமா, பாப்பா சிரிக்கிறா! பாப்பா தூங்கிட்டே சிரிக்கிறா!” என கத்தினான். நான் அதுக்கென்ன இப்போ நீ கத்தி தூங்குறவளை எழுப்பிடாதேன்னு எரிச்சலாய் சொல்லிவிட்டு டீவிக்கு திரும்பும்போது மறுபடியும் சொன்னான் “மாமா, தூக்கத்துல சாமிகிட்ட பேசுறா மாமா, அதுனாலதான் பாப்பா சிரிக்கிறா” என்றான். அவனையும் பார்த்தேன், திரும்பி அம்மாவையும் பார்த்தேன். அம்மா என்னைப் பார்த்து சிரித்தார்கள். நான் கோகுலைப் பார்த்து சிரித்தேன். கடவுள் சம்முவோடு சிரித்துவிட்டுப் போகட்டும்





