உஸ்தாத் ஹோட்டல்


இது ஃபைஸி (Feyzee) என்கிற ஃபைசலின் கதை, ஆனாலும் இந்தக்கதை அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. இப்படியான ஒரு வசனத்துடன் (மம்முக்காயாவின் கரகர குரலில்) ஆரம்பிக்கிறது, இந்த உஸ்தாத் ஹோட்டல் திரைப்படம். ஃபைசலின் அம்மா கருவுற்றிருக்கிறாள், அவள் கணவன், அப்துல் ரஸாக், ஒரு வியாபாரி. தனக்கு பிறக்கப்போகும் ஆண் குழந்தைக்கு ஃபைசல் என்று பெயர் வைப்பேன், அவனை ஃபைஸி என்று செல்லமாக கூப்பிடுவேன் என்று வைராக்யத்தோடு(?) வாழும் மனிதன். ஆனால் வரிசையாக பெண் குழந்தைகளாக பிறக்கிறது. தன் முயற்சியில் சற்றும் மனம்தளறாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து நான்கு வருடங்களில் நாலு குழந்தைகள், நான்கும் பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. முறையே ஃபாத்திமா, ஃபெளசியா, ஃபெரோஸா, ஃபஸீகா.

குழந்தைகளைப் போலவே ரஸாக்கின் வியாபாரமும் வருடாவருடம் பெருகிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு பிரசவத்தின் போதும் மனைவியுடன் இருக்கும் ரஸாக், இந்த முறை துபாய்க்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். அவன் துபாயில் இருக்கும் போது அவனுக்கு இங்கே ஆண் குழந்தை பிறக்கிறது, இறுதியாக ஃபரீதா ஒரு ஆண் குழந்தையை ஃபைஸியை பெற்றெடுத்துவிட்டாள். ஆனால் வரிசையாக கருவுற்றதில் அவள் நோய்வாய்பட்டு இறந்துபோகிறாள். துபாயில் நல்ல நிலையில் வியாபரம் இருப்பதால் இங்கே ஹோட்டல் நடத்திவரும் தன் தந்தையான கரீம் இக்காவுடன் (திலகன்) இருக்காமல், தன் ஐந்து குழந்தைகளோடு துபாய் செல்கிறான், ரஸாக்.

அம்மா இல்லாமல், ஆனால் அம்மா இல்லாத குறையே தெரியாமல் ஐந்து அக்காக்களோடு அன்பாக வளர்கிறான், ஃபைஸி. அக்காக்களோடு அதிக நேரம் செலவிடுவதில், அவன் பெரும்பாலும் சிறுபிராயத்தை சமையலறையிலேயே கழிக்கிறான். வருடங்கள் ஓடுகிறது, ஒவ்வொரு அக்காவாக திருமணமாகி செல்ல செல்ல, ஃபைஸி, தனிமையை உணர்கிறான்.  அதுவும் ஒரு சுபயோக சுபதினத்தில் அப்பா, இதுதான் உன் சின்னம்மா என்றூ ஒரு பெண்ணையும் அவள் மகனையும் வீட்டிற்கு அழைத்து வர, ஃபைஸி வீட்டிலேயே அன்னியமாய் உணர்கிறான். அதேசமயம் ரஸாக் அவனை அமெரிக்காவில் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிக்க அனுப்ப முடிவெடுக்கிறார், ஆனால் சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க விரும்புவதாய் சொல்லி அங்கே செல்கிறான். ரஸாக்கும் சந்தோசமாக சம்மதிக்கிறார், நீ படித்துமுடித்துவிட்டு இங்கே வந்து ஒரு 5ஸ்டார் ஹோட்டல் தொடங்க வேண்டும், ஒரு சமையல்காரன் மகன் ரஸாக் என்கிற பெயர் போய், 5ஸ்டார் ஹோட்டல் முதலாளியின் தந்தை, ரஸாக்கென்று இந்த ஊர் சொல்லனும் என்று வாழ்த்தி அனுப்புகிறார்.


                
     மூன்று வருடம், படிப்பு முடிந்து ஊருக்கு திரும்ப இருக்கும் ஃபைஸி, தான் இங்கே ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளுடன் சேர்ந்து வாழ இங்கேயே ஒரு வீடு பார்த்துக்கொண்டிருப்பதாகவும், நான் ஊருக்கு வரும்பொழுது இதற்கான சம்மதத்தை அப்பாவிடம் வாங்கி வையுங்கள் என்று அக்காக்களுக்கு கடிதத்தோடு புகைப்படங்களை அனுப்புகிறான். அப்பாவுக்கு பயப்படும் அக்காக்கள், இங்கே வேறு ஒரு திட்டமிடுகிறார்கள். ஃபைஸி கேரளா வருகிறான், ஏர்போர்ட்டிலிருந்து அவன் அங்கிருந்து நேராக அழைத்து செல்லப்படுவது பெண் பார்ப்பதற்காக. பெரிய தொழிலதிபர் மகள் நித்யாமேனன். பெண் பார்க்கும் படலம் சரியாக நடந்தாலும், இருவரும் பேசிக்கொள்ளும் போது, தான் ஒரு இண்டீரியர் டிசைனர் என்றும் திருமணத்திற்கு பின் உங்களுடைய 5ஸ்டார் ஹோட்டலை நான்தான்  டிசைன் செய்வேன் என்கிறாள். அப்பொழுது, ஃபைஸி தான் சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கவில்லை கேட்டரிங்தான் படித்தேன், எனக்கு ஒரு சிறந்த செஃப் ஆக வேண்டும் என சொல்கிறான். அதன்பின் நடக்கும் களேபரத்தில் தன் அப்பாவின் தீராத கோபத்திற்கு ஆளாகிறான்.  பொய் சொல்லி கேட்டரிங் படித்தது தன்னை ஏமாற்றியதும், மீண்டும் அவன் இங்கே இருக்கப்போவதில்லை என்பது தெரிந்தும் தனது 5ஸ்டார் ஹோட்டல் கனவு பொய்த்த கோபத்திலும் அப்பா அவனுடைய பாஸ்போர்ட்டை பிடிங்கிக் கொண்டுவிடுகிறார். இருவருக்கும் சண்டை அதிகாமாகிறது. அப்பாவின் வார்த்தைகளால் உடைந்து போன ஃபைஸி வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

வீட்டிலிருந்து வெளியேறி, உஸ்தாத் ஹோட்டல் என்ற ஹோட்டலை நடத்திவரும் தனது தாத்தாவான கரீம் இக்காவிடம் (திலகன்) போய் சேருகிறான். கரீம் இக்கா, ஒரு ஒரு கடலோரத்தில் தனது ஹோட்டலை தன் பால்ய கால சகா, உமர் இக்காவோடு (மம்முக்காயா) சேர்ந்து நடத்திவருகிறார். ( அந்த கடலோர ஹோட்டலை, திலகனின் குரலிலேயேஇந்த உலகத்தில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான், இங்கேதான்என்ற வரிகளோடு அறிமுகமாகிறது). உண்மையிலேயே அந்த இடம் சொர்கம்தான். படம் பார்க்கும்போது புரியலாம். அவரிடம் வேலை செய்பவர்கள் யாரும் அவரிடம் முதலாளி போல இருப்பதில்லை. அனைவரும் குடும்பமாக இருக்கின்றனர். மாதாமாதம் அவர்களின் குடும்ப செலவு போக வேறென்ன தேவையிருந்தாலும் அதை செய்துவருகிறார். பாரம்பரியமான அந்த ஹோட்டல் சிறு அளவில் இருந்தாலும் உஸ்தாத் ஹோட்டல் பிரியாணி, அந்த பிராந்தியத்தில் அவ்வளவு பிரபலம்.

தாத்தாவுக்கு உதவியாக சிறுசிறு உதவிகள் செய்துகொண்டு, கொஞ்சம் பணம் சம்பாதித்து பின் வெளிநாடு செல்லும் ஆசையில் இருக்கிறான். இதற்கிடையே அந்த ஹோட்டலிலேயே தஞ்சமிருக்கும் ஒரு இசைக்குழுவினரோடு பழக்கம், அவர்கள் மூலமே அவர்கள் குழுவில் பாடிக்கொண்டிருக்கும் ஷஹானாவோடு (நித்யாமேன்ன்) மீண்டும் பழக வாய்ப்பும்கிடைக்கிறது. ஃபைஸியின் உண்மையான பயணம் அவன் தாத்தாவிடமிருந்தே அர்த்தத்தோடு ஆரம்பிக்கிறது. முதன் முதலாக அந்த ஹோட்டலில் சமைக்கும் ஃபைஸியிடம் "யார் வேணும்னாலும் வயிறு நிறைய சமைக்க முடியும், ஆனா மனசும் நெறையணும், அதுதான் ஒரு உண்மையான சமையல்காரனின் திறமை.."என்று சொல்கிறார் கரீம் இக்கா. இப்படியாக ஆரம்பித்து சமையல் என்றால் என்ன, என்பது முதற்கொண்டு அவனுக்கு சமையல் கலையை ஒரு அனுபவமாக சொல்லிக் கொடுக்கிறார். மேலும்  ஹோட்டல் வருமானத்தில் ஒரு பங்கை மாதாமாதம் மதுரையில் ஒரு முகவரிக்கு அனுப்பிவைக்கிறார், அது யாருக்கு செல்கிறது என்ற விஷயம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. .

இதற்கிடையே ஒருநாள் ஹோட்டலில் டேபிளை சுத்தம் செய்துகொண்டிருக்கும் ஃபைஸியை அவன் தந்தை பார்க்கிறார். அவனையும், கரீம் இக்காவையும் சேர்த்து கோபிக்கிறார். இவனும் உங்களைப்போலவே இங்கேயே கிடந்து அவதிப்படப்போகிறான் என்று திட்டுகிறார். அடுத்த நாளே அருகில் இருக்கும் பீச் பே எனும் 5ஸ்டார் ஹோட்டலில் தன் செல்வாக்கில் ஃபைஸியை செஃப்-ஆக சேர்த்துவிடுகிறார். ஃபைஸிக்கு தாத்தாவின் செல்வாக்கை அறிய ஆவலாக இருக்கிறது, உங்களுக்கு அந்த ஹோட்டலின் தலைமை செஃப்பிற்கு என்ன தொடர்பு தாத்தா? என்கிறான்.  அந்த 5ஸ்டார் ஹோட்டலில் தயாராகும்  ஸ்பெசல் மலபாரி பிரியாணி, இந்த கரீம்இக்காவின் சமையல் குறிப்புதான், அங்கே விற்கும் ஒவ்வொரு பிரியாணிக்கும் எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள், என்கிறார் பெருமையாக, தாத்தாவின் வெள்ளந்தியான மனதை வியக்கிறான் ஃபைஸி.

நாட்கள் அழகாக நகர்கின்றன, தான் பணிபுரியும் ஹோட்டலில், சமையலில் புதுப்புது முயற்சிகளோடு முக்கியமான இடத்திற்கு நகர்கிறான்.  அதே சமயம் தாத்தாவிற்கும் உதவியாய் இருக்கிறான். ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனம், உஸ்தாத் ஹோட்டல் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கி கடலோரத்தில் பெரிய ஹோட்டல் கட்ட முடிவெடுக்கின்றனர். அதற்கான ஒரு சூழ்ச்சியான திட்டத்தை முன்வைக்கின்றனர். அதை எதிர்க்கும் காரணத்தால் சுகாதாரத்துறையினர் உதவியோடு, உஸ்தாத் ஹோட்டலை சீல் வைக்கின்றனர். கரீம் இக்கா தன்னை நம்பியிருக்கும் குடுப்பத்திற்காக வருந்துகிறார். (எப்பாடுபட்டாவது ஹோட்டலை மீண்டும் திறந்திடவேண்டும் தாத்தா, எனும் ஃபைஸியை, ஏக்கமும், நம்பிக்கையும் நிறைந்த ஒரு பார்வை பார்ப்பார், பாருங்கள். திலகன் என்ற அந்த மனிதனை இழந்தததற்காக ஏன் வருத்தம் என்பது புரியலாம், புரியும்)

 ஃபைஸியின் யோசனைப்படி, அதே பணியாளர்கள் தங்கள் சேமிப்பையும், நகைகளை கொடுக்கின்றனர். உஸ்தாத் ஹோட்டல், ஷஹானாவின் இண்டீரியர் டிசைனில் புதுப்பொழிவு பெறுகிறது. மீண்டும் களை கட்டுகிறது. தனது தாத்தவுடன் சேர்ந்து ஹோட்டலை நல்ல நிலைக்கு மீட்டுக்கொண்டு வரும் நேரம், ஃபைஸிக்கு பீச்பே ஹோட்டல் விருந்தினர் ஒருவர் மூலமாக அவன் விரும்பிய படி வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. அதைஇத்தனை நாள் எதற்காக காத்திருந்தேனோ அது நடக்கப்போகிறது தாத்தா, நான் வெளிநாடு போகப்போறேன், நான் விரும்பியபடியே ஒரு பெரிய இண்டர்நேஷனல் ஹோட்டலில் எனக்கு வேலையும் கிடைத்திருக்கிறதுஎன தன் தாத்தாவிடம் மிகுந்த சந்தோசத்துடன் சொல்கிறான். மேலும் தன்னுடைய பாஸ்போட்டை எப்படியாவது அப்பாவிடமிருந்து வாங்கி தரும்படி கேட்கிறான்.

ஃபைஸியின் இறுப்பும், துணையும் தரும் நெகிழ்ச்சியில் இருக்கும் கிழவருக்கு, இந்த செய்தி துயரத்தை விதைக்கிறது. மாரடைப்பு வந்து படுக்கைக்கு போகிறார். மருத்துவமனையில் தாத்தாவைப் பார்க்கவரும் ஃபைஸியிடம், நீ உன் விருப்பப்படி வெளிநாடு செல்லும் முன், நான் மதுரைக்கு பணம் அனுப்புவேனே, அங்கே நீயே சென்று இந்த மாதம் அனுப்பவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு வா, அப்படியே இந்தகுறிப்பையும், என்று எழுதிக்கொடுக்கிறார். ஃபைஸி தாத்தாவின் விருப்பத்தை சிரமேற்கொண்டு விருப்பத்துடன் மதுரைக்கு வருகிறான். அங்கே அவன் சந்திப்பது மறக்கப்பட்டாவர்களை நினைத்திருக்கும் மனிதன், நாராயணன் கிருஷ்ணன். (தெரியாதவர்கள் கடைசியில் கொடுத்துள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு கூட தொடருங்கள்) அவரை சந்தித்து தாத்தா கொடுத்த குறிப்பைக்கொடுக்கிறான். அதில்இவன் என் பேரன் ஃபைஸி, இவனுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன், எதுக்கு  சமைக்க வேணுமென்பதை நீதான் கற்றுத் தரவேண்டும்என்று எழுதியிருக்கிறது.

ஒரு கல்யாண மண்டபத்தில் தயாராகும் விருந்துபோல உணவுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல தயாரான உணவுடன் கிருஷ்ணன் குழு கிளம்ப, ஃபைஸியையும் அழைக்கிறார். சாலையோர நடைபாதைகளில் வசிப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஒவ்வொரு இடமாய் வண்டி நிற்க, அங்கிருக்கும் அனைவருக்கும் சமைத்துக் கொண்டுவந்த உணவை பரிமாறுகின்றனர், ஊட்டி விடுகின்றனர். ஃபைஸி அனைத்தையும் ஆச்சர்யமாகப் பார்க்கிறான். அவனிடம் கிருஷ்ணன்நீ உஸ்தாத் ஹோட்டலிலா வேலை செய்கிறாய்?” என்கிறார். இல்லை நான் ச்செஃப், நான் ஃப்ரான்ஸ் செல்ல இருக்கிறேன். என்னும் ஃபைஸியிடம்,  “நானும் ஒரு செஃப்தான், இங்கே தாஜ் ஹோட்டலில் 12 வருடங்கள் பணி புரிந்தேன். நீ இங்கே பார்க்கும் பெரியவர் இருக்கிறாரே, இவர்தான் என் வாழ்க்கையை மாற்றியவர். ஒருநாள் ஒரு பாலத்திற்கு அடியில் பசி கொடுமைதாங்காமல் இவர் தன் சொந்த கழிவையே தின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் நொந்துபோய் ஒரு முடிவெடுத்தேன். எங்கெங்கிருந்தோ வரும் விருந்தினர்களுக்கு விதவிதமாய் சமைத்துபோடுகிறோம், ஆனால் இங்கே என் மனிதர்கள் ஒருவேளை சோற்றிற்கு வழியில்லாமல் இந்த நிலையில் இருக்கிறார்கள், அன்றே வேலையை விட்டுவிட்டு இவர்களுக்கு சமைத்துப்போடத் தொடங்கிவிட்டேன்’” என்கிறார். கலங்கி நிற்கிறான் ஃபைஸி.அடுத்தநாள்பைஸி! இன்று நீ சமையேன், இவர்களுக்காகஎனும் கிருஷ்ணனிடம், “என்ன செய்ய?” என்கிறான். வேறென்ன? பிரியாணிதான், கரீம் இக்கா பிரியாணி என்கிறார். அவன் செய்யும் அந்த உஸ்தாத் ஹோட்டல் பிரியாணியுடன் அவர்கள் ஒரு மனநலம் குன்றியவர்களுக்கான ஆசிரமத்திற்கு செல்கின்றனர். அனைவருக்கு ஃபைஸி தன் கையாலேயே பரிமாறுகிறான், குழந்தைகள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகின்றனர், அதைப்பார்க்கும் கிருஷ்ணன் “அவ்ளோ நல்லாவா இருக்கு? எங்கே எனக்கும் போடு ஃபைஸி”, என்று சாப்பிடுகிறார். சாப்பிட்ட குழந்தைகள் ஒவ்வொருவராக ஃபைஸிக்கு மெளன மொழியில் நன்றி சொல்கிறார்கள். முத்தாய்ப்பாய் ஒரு குழந்தை அவன் கன்னத்தில் முத்தமிட்டு செல்கிறத்உ. ஃபைஸி கலங்கிய கண்களுடன் ஏற்றுக்கொள்கிறான். “இதுவரை நீ செய்த பிரியாணியிலேயே இதுதான் பெஸ்டா இருக்கப்போகுது, ஃபைஸி” என்கிறார். கிருஷ்ணன்.

"யார் வேணும்னாலும் வயிறு நிறைய சமைக்க முடியும், ஆனா சாப்பிடுறவ்வங்க  மனசும் நெறையணும், ஃபைஸி" என்று தாத்தாவின் குரல் அவனுக்குள்ளாக கேட்கிறது. கனத்த மனதுடன் ஊருக்கு திரும்புகிறான். ஹோட்டல் மூடியிருக்கிறது. கரீம் இக்கா, போயிட்டார், ஃபைஸி, என்கிறார், உமர் இக்கா. ஃபைஸிக்கு மெல்ல பிடிபடுகிறது. வழக்கமாக கரீம் இக்கா அமர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்தபடியே கடலைப்பார்த்துக்கொண்டிருக்கிறான். அது அவன் கரீம் இக்காவின் இடத்தை நிரப்புவதாகவே பொருள். மீண்டும் ஹோட்டலை தாத்தா விட்ட இடத்திலிருந்து தொடங்கிறான், இன்னும் இன்னும் செழுமையாக....

தன் பேரனுக்கு தன்னால் இயன்றதைக் கற்றுக்கொடுத்துவிட்ட பெருமிதத்துடனும் தன் பணியை மிகச்சரியான ஒருவனிடம் ஒப்படைத்துவிட்ட நம்பிக்கையுடனும் அந்த பெரியவர் கரீம் இக்கா எங்கோ தூர தேசத்தில் அவர் விருப்பப்படியே அவரது புனித பயணத்தை தொடர்கிறார்... சுபம்.
.....................................................................................................................................................................................

கரீம் இக்காவிற்கும் ஃபைஸிக்குமிடையேயான சம்பாஷணைகள், அத்தனையும் ரசனையின் உச்ச கட்டம். வாழ்வைப் புரிந்து, சகமனிதகளோடு அன்பை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு, காதலித்து, அவளையே திருமணம் செய்து, நொடிநொடியாக வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்த ஒரு அனுபவக்கிடங்காய் கரீம் இக்காவாய் திலகன், வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதுகூட கொஞ்சம் குறைச்சலாய் இருக்கும். அவர் திலகன் அல்ல, உஸ்தாத் கரீம் இக்கா. இலக்கற்று திரியும் விடலைப் பேரனை அன்போடு வாஞ்சையாய் கைபிடித்து அழைத்துச் செல்லும் தாத்தாவின் பரிவு, அவர் பார்வையிலும் ஒவ்வொரு வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும் மிளிர்கிறது. நாம் சாதாரணமாக சொல்லும் “ம்’ என்ற வார்த்தைக்குக்கூட தன் நடிப்பால் அர்த்தம் கொடுத்திருக்கிற, இந்த பெருங்கிழவன் செத்துப்போனார் என்பது நல்ல சினிமாவை விரும்பும் எவர்க்கும் பேரிழப்பே.

உதாரணமாக இரு காட்சிகள்.


            ஒன்று, அந்த சுலைமானி அருந்தும் காட்சி, (எத்தனை முறை இதையே திரும்ப திரும்ப பார்த்தேன் என்று நினைவில்லை) தான் விரும்பியபடி உலகெங்கும் இருக்கும் தர்காவிற்கெல்லாம் செல்ல வேண்டும் என்கிற அவருடைய ஆசையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, காதல் வயப்பட்டிருக்கும் ஃபைஸி அவர் கொடுக்கும் சுலைமானியில் “என்ன தாத்தா போட்டிருக்கிங்க? ஏலக்காயா, கிராம்பா” எனக் கேட்கும் ஃபைஸியிடம் “என்ன போட்டிருக்கேன் என்கிற ரகசியம் கிடக்கட்டும், ஆனா அதைவிட முக்கியம், இப்போதைய உன் மனம்தான்” என்று சொல்லும் இக்கா, தொடர்ந்து “ஒவ்வொரு சுலைமானியிலும் கொஞ்சம் அன்பு கலந்திருக்கிறது, அதைக் குடிக்கும்போது நமக்கான உலகம் நம் கண்முன்னே விரியும்” என்று சொல்லும் திலகன் அவர்களின் மாடுலேஷனும், அதைத் தொடரும் மெல்லிய இசையும், க்ளாஸ்.

இன்னொன்று, அதன் தொடர்ச்சியாய், தன் காதல் கதையை பேரனிடம் சொல்லிக்கொண்டே வரும் கரீம் இக்கா “கடைசியில் நான் காதல் வயப்பட்ட பெண் யாரென்றால், எந்த பெண்ணுடைய கல்யாணத்துக்கு நான் பிரியாணி செய்யப்போயிருந்தேனோ, அதே பெண்” என்று நிறுத்துகிறார். “அப்புறம், நீங்க சமைச்ச பிரியாணியை சாப்பிட்டுட்டு அந்தப்பொண்ணும் மாப்பிள்ளையும் போயிட்டாங்களா?” என்று கிண்டல் செய்கிறான், ஃபைஸி. சிரித்தபடியே கடந்துபோகும் கரீம் இக்கா இரவில் படுக்கும் முன் “ஃபைஸி, அந்த கல்யாணப்பெண் யாரு தெரியுமா? அவதான் உன் பாட்டி” என்று சொல்லுமிடத்தில், அவருடைய முதிர்ந்த பக்குவப்பட்ட மனது புரிகிறது. பேரன் கிண்டல் செய்யும்போதே, இல்லை அப்படியில்லை என்று சொல்லியிருக்கலாம், ஆனா ஈகோ இல்லாத அந்த பெரியவர், கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகே அதைச் சொல்கிறார். அந்த உடையாடலின் தொடர்ச்சிதான் என்றாலும் சிறு இடைவெளிக்குப் பிறகு தொடரும் அந்த உரையாடல் அவ்வளவு அழகு. இப்படியாக எளிதில் கடந்துவிடக்கூடிய விஷயங்களையும் தன் அனுபவத்தால் அழகு படுத்தும் கரீம் இக்கா என் கனவு தாத்தா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாராயணன் கிருஷ்ணன், இவருடைய கதாப்பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் அற்புதமாக பொருந்திப்போகிறார். இருந்தாலும் இதில் அவரையே நடிக்க வைத்திருக்கலாமென்றும், வைத்திருந்தால் ஆவணப்படமாகவோ, விளம்பரப்படமாகவோ ஆகும் ஆபத்தும் தெரிகிறது. அந்த நாராயணன் கிருஷ்னன் பற்றிய கடைசி இருபது நிமிடங்கள் படத்தை வேறு ஒரு உயரத்திற்கு எடுத்து செல்கிறது. கண்கள் கலங்காமல் அந்த நிமிடங்களைக் கடக்கவே முடியாது. சோகம் அல்ல அது ஒருமாதிரியான, இயலாமை, குற்ற உணர்வு. நல்லா இருங்க நாராயணன் கிருஷ்ணன்.இது நாரயணன் கிருஷ்ணன் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.http://en.wikipedia.org/wiki/Narayanan_Krishnan

இது அவரது வீடியோ பதிவு -http://www.youtube.com/watch?v=RNJZdLpNuas

அஞ்சலி மேனன் திரைக்கதையில் அன்வர் ரஷீத் இயக்கியிருக்கும் இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், எளிமையான வசனங்கள், அற்புதமான இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் கலக்கியெடுத்திருக்கிறார்கள்.எந்த ஒரு திரைப்படம், வெறும் உணர்ச்சிக்குவியலாக மட்டுமல்லாமல் ஒரு அனுபவமாக இருக்கிறதோ, அது நிச்சயம் நல்ல படமே.அதுவகையில் ஒரு நல்ல படத்தை அறிமுகம் செய்த அல்லது எழுதிய திருப்தியோடு முடிக்கிறேன்.

ஃபைஸிக்கு ஒரு கரீம் இக்கா, அப்படி என் லைஃப்லயும் என்னுடைய கையப்பிடிச்சி நடத்திக்கொண்டிருக்கிற சிலபேர் இருக்காங்க. குறிப்பா இந்த வலையுலகில்  என் கரீம் இக்கா வெயிலானுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.