ஆயுள் - அ.முத்துலிங்கம்புத்தகம்    -    மகாராஜாவின் ரயில் வண்டி
ஆசிரியர்   -    அ.முத்துலிங்கம்
பதிப்பகம்  -    காலச்சுவடு
விலை    -    ரூ.75/-
இன்செப்ஷன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், அதில் ஒருவன் இன்னொருவனிடம் கேட்பான் “இப்போ நீ யானையைப் பற்றி நினைக்க்கூடாது என்றால் எதைப்பற்றி நினைப்பாய்  என்று, இவன் சொல்கிறான் “நிச்சயமாக யானையைப் பற்றிதான் என்று. அதுபோல ஒரு கதையை சமீபத்தில் வாசித்தேன். நண்பர் ஒருவர் சமீபத்தில் நானெழுதிய யூஸ் & த்ரோ (பொருட்கள் மற்றும் கலாச்சாரம்) பதிவை படித்துவிட்டு ஒரு மெயில் செய்திருந்தார் அதில் இதைப்படி என்று ஆயுள் என்ற ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தார்.

அது இப்படியாக ஆரம்பிக்கிறது. (இந்தக்கதையில் ஓர் ஆண்பாத்திரம் உண்டு. பெண் பாத்திரமும் இருக்கிறது. ஆனால் இது காதல்கதை அல்ல. இன்னொரு பாத்திரமும் வரும். அதைப்பற்றிய கதை. ஏமாற வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே செய்த எச்சரிக்கை இது)

இப்படி ஆரம்பிக்கும் கதையை உங்களால் படிக்காமல் இருக்க முடியுமா? என்னால் முடியவில்லை, படித்துமுடித்தேன். சுருக்கமாக இங்கே, அந்த ஆண் கதாப்பாத்திரம் ஒரு தேசாந்திரி, குழந்தையாய் இருக்கும்போது அவனது அம்மா அவனை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிசென்றிருக்கிறார், ஒருநாள் அதிலிருந்து தானாகவே இறங்கிக்கொண்டானாம், பின் அதை தள்ளியபடியே சிறிது தூரம் நடந்திருக்கிறான். கால்களை கண்டறிந்தபின் அவன் அதன்பிறகு வேறெந்த வாகனத்திலும் திரும்ப ஏறவில்லையாம். பின் ஒருநாள் இளைஞனானதும் பரதேசம் புறப்படுகிறான், அவன் முதுகில் ஒரு மூட்டை இருந்தது. கம்பளிப்போர்வை, அங்கி, சமையல் சாமான், ஒரு பிளாஸ்டிக் குடுவை அதில் குடிக்க தண்ணீர் என மிக அத்யாவசியமான பொருட்களை வைத்திருந்தான். நான்கு வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறான்.

இந்துகுஷ் மலைச்சிகரத்தை ஒட்டிய ரம்பூர் பள்ளத்தாக்கை அடைகிறான். அங்கு பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் அன்னியர்களின் வருகை அறியாத ஒரு குழுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பனி உருகி சில்லென தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது. அவன் தனது பிளாஸ்டிக் குடுவையில் நீர் நிரப்பி அருந்துகிறான். இளம்பெண்களும் மற்றவர்களும் அவனை அதிசயமாக பார்க்கின்றனர். அவனை என்றால் அவனை அல்ல அந்த குடுவையையை. வெறும் சுரைக்குடுவையையும் தோல்குடுவையையுமே பார்த்துப் பழகிய அவர்களுக்கு உள்ளே நீரை நிரப்பினால் வெளியே தெரியும் இந்த குடுவை அதிசயம். ஆனால் ஒருத்தி எந்த ஆச்சர்யமுமின்றி அவனை எதிர்கொள்கிறாள், அவன் ஹென்சாகூல். அவள்தான் அந்த பெண் பாத்திரம். அவன் அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அழகில் மயங்குகிறான், தன் இயல்பிற்கு எதிராக அங்கேயே தங்கிவிடவும் நினைக்கிறான்.

நாட்கள் நகர்கின்றன, அவன் அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கிறான், அவள் வன்மையாக மறுக்கிறாள். பின் அவள் தந்தையிடம் அனுகுகிறான். அவர், இந்த கிராமத்து பெண்கள், இங்கிருந்து வெளிவர விரும்புவதேயில்லை. நீயும் இங்கேயே தங்கி விடுவதாயின் எனக்கு ஆட்சேபம் இல்லை என்கிறார். அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு, ஆனால் அதற்குமுன் தான் வாழ்நாளில் செல்ல வேண்டிய சில இடங்கள் உண்டு என்றும் அங்கு சென்று திரும்பவருவேன், அப்போது உன்னை திருமணம் செய்துகொள்வேன், அதன்பின் திரும்ப செல்லமாட்டேன், இது நிச்சயம் என்கிறான். தனது குடுவையை அவளுக்கு பரிசாக கொடுத்து செல்கிறான்.

ஹென்சாகூலும் தினமும் அந்த குடுவையைப் பார்த்தபடியே நாட்களைக் கழிக்கிறாள். வருடங்கள் கழிகின்றன. அந்த கிராமத்தின் வலுவான இளைஞர்கள் பலரும் ஹென்சாகூலை மணக்க முன்வருகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு அதிலொருவனை மணந்து கொள்கிறாள். குழந்தை பிறக்கிறது. ஆனாலும் அவன் வரவேயில்லை. நூறு வருடங்கள் கழிந்தன. உலகத்து ஜீவராசிகள் அத்தனையும் மடிந்து மண்ணோடு மண்ணாகி மறைந்துபோயின. அவற்றின் இடத்தை முற்றிலும் புதிய ஜீவராசிகள் நிரப்பின. ஹென்சாகூலின் குடிசையும் சிதிலமானது. அந்தக் குடுவையும் இல்லை. அதுவும் எங்கோ மண்ணில் புதைந்து விட்டது. அதுதான் அந்த இன்னொரு பாத்திரம்.

ஹென்சாகூலின் காத்திருப்புக்கு சாட்சியாக இருந்த அந்தப் பாத்திரம் மட்டும் அந்த சூழலில் இன்னும் அழியாமல் கிடந்தது. அது மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்து போக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. ஆம் ப்ளாஸ்டிக்கின் வயது நானூறு வருடங்கள்.

இத்தோடு முடிகிறது கதை. பிளாஸ்ட்டிக்கின் கொடுமையை, ஆக்கிரமிப்பை அழகாகவும் ஆழமாகவும் சொன்ன கதையை என் அனுபவத்தில் வாசித்ததில்லை. உடனே அந்த தொகுப்பை தேடி கண்டுபிடித்து வாங்கியாயிற்று, அதுதான்மகாராஜாவின் ரயில் வண்டி, மிகச்சமீபத்தில் வாசித்த சிறுகதைத்தொகுப்பு. ஆசிரியர் - அ.முத்துலிங்கம். இந்தத்தொகுப்பில் வரும் பெரும்பாலான கதைகள், நேரேஷன் எனப்படுகிற கதைசொல்லல் வகையைச் சார்ந்தது. உதாரணமாக என் பாட்டி கதை சொல்லும்போது அவர் கேள்விப்பட்ட கதைகளில் கூட தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக்கொள்ளும் யுக்தியை பயன்படுத்தி கதை சொல்லுவார், கதை கேட்கிற யாவருக்கும் பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு இன்னும் ஆர்வமா கதை கேட்ப்பார்கள் இல்லையா? அதுபோல, இதில் பெரும்பாலும் கதைசொல்லி தன்னையும் ஒரு கதாபாத்திரமாகவே சொல்லிக்கொண்டு வருவார்.

மகாராஜாவின் ரயில் வண்டி, நாளை, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, மாற்று, அம்மாவின் பாவாடை, செங்கல், கடன், பூர்வீகம், கறுப்பு அணில், பட்டம், ஐவேசு, எதிரி, ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலபிள்ளையார் கோவில், கல்லறை, கொம்புளானா, ராகுகாலம், ஸ்டராபெரி ஜான் போத்தலும், அபிஸீனியன் பூனையும் என இருபது சிறுகதைகளை உள்ளடக்கியது இந்த தொகுப்பு.

இதுவரை முத்துலிங்கத்தை வாசிக்காதவர்கள், இங்கிருந்தே தொடங்குங்கள். மிகவும் எளிமையான நடையில் தோளில் கைபோட்டபடி கதை சொல்லும் பாங்கு இவருடையது. எல்லா கதைகளும் தனிச்சிறப்போடே இருக்கின்றது, ஒருபானை சோற்றுக்கு பதமாக இந்த கதையை மட்டும் இங்கே கொடுத்திருகிறேன்.

(ஏற்கனவே படித்தது போல இருந்தால் மன்னிக்கவும், சென்ற வருடம் அதீதம் இணைய இதழுக்காக எழுதியது, என்னுடைய வலைப்பதிவில் இப்பொழுதுதான் பதிகிறேன்)

3 கருத்துரைகள்:

அன்புடன் அருணா said...

க்ட்டாயம் படித்தே ஆகவேண்டும் என உணர்வு தருகின்ற விமரிசனம்!!

shri Prajna said...

நல்லா எழுதிருக்கீங்க முரளி.கண்டிப்பாய் படிக்கனும்னு தோனுது.உங்கள் கவிதைகளை விடவும் இம்மாதிரியான விமர்சனஎழுத்துக்களில்(கட்டுரைகளில்)உங்கள் style இன்னும் நல்லா இருக்கு..

அப்பாதுரை said...

படிக்கப் போகிறேன்.
இன்னொரு பாத்திரம் - எதிர்பார்க்கவில்லை இதை :)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.