உலகின் பெரும்பான்மையானவர்களால் நம்பப்படும் கடவுளை மறுப்பவர்கள்கூட உண்டு. ஆனால் இசையை மறுதலிப்பவர்கள் இருக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை, கடவுளைப்போல இசையும் உணர மட்டுமே முடிந்த ஒரு விஷயம், உணர்ந்தவர் மனம் வாய்க்கப் பெறும் வரை இசையென்பது வெறும் பிணத்தோலின் இரைச்சல் தான். பாரதி பாஷையில் சொல்லுவதென்றால் தீதென்றும் நன்றென்றும் இல்லா நிலை இசை.
வேண்டும் மனம் வாய்க்க தரும் இசையே கடவுள். கூப்பிட்டகுரலுக்கு ஓடி வரும் கடவுளே இசை. அப்படியான இசைக்கு, ஆயிரம் மதமுண்டு, ஆயிரமாயிரம் தெயவங்களுமுண்டு. நானெப்போதும் அதிகமாகக் கும்பிடுற இரண்டு இசை தெய்வங்கள் ராஜாவும், ரஹ்மானும். முதலாமவரின் இசையே, கடவுள். இரண்டாமவரின் இசை, கடவுளை அடையும் வழி. ஆக இன்னைக்கு வழி காட்டுதல் மட்டுமே. : - )
இல்லை, சீக்கிரமா கடவுளை அடைய நினைப்பவர்கள் நேரா ஸ்கிப் பண்ணிகடைசி வரிக்கு போயிடுங்க.
ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு பேஸ்புக்கில் தொடர்ச்சியாக ரஹ்மான்பற்றிய குறிப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு விஷயம்எனக்கும் பிடித்திருந்தது. “இந்த உலகில் யாராவது ஒருவரால் மட்டும் ஒரு இசைரசிக்கப்படுகிறது என்றாலும் அது நல்ல இசையே” என்று ரஹ்மான் ஒரு பேட்டியில்சொல்லியிருந்ததாக இருந்தது அந்தக் குறிப்பு. எவ்வளவு நிதர்சனம்? இந்தியாவிற்குவெளியிலிருந்து பார்க்கும்பொழுது, கர்நாடக, ஹிந்துஸ்தானி உட்பட தொன்மையானஇந்திய இசைகளைத் தவிர்த்து, தொடந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும்நவீன இசையைப் பொறுத்தமட்டிலும் இந்தியாவின் அடையாளமாகப்பார்க்கப்படுபவர், ரஹ்மான். அவரது மிக சமீபத்திய ஆல்பம் ராக் ஸ்டார்.
சிறுவயதிலிருந்தே இசைக்கு அடிமையாகிப்போன ஒருவனின் கதை. புகழுக்குஏங்கும், அங்கீகரிப்பிற்கு தவிக்கும் ஒரு இசைக்கலைஞனின் வலி நிறைந்தவாழ்க்கை. எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும், அவனது இசைக்கு பின் ஒரு வலிஇருக்கும். அப்படி வலியைத் தேடி அலைந்து பெற்று, புகழின் உச்சியில் இருக்கும்அவனுக்கு, தன் சுய உலகிலிருந்து வெளியே போய்விட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது. அவனுடைய காதல், சந்தோஷம், வலி என அனைத்துமே வியாபாரமாக்கப்படும்போது, இந்த அத்தனை உணர்வுகளுக்கும் கோபம் எனும் ஒற்றை முகமூடியைக்கொண்டு மறைக்கும் ஒரு ஆக்ரோஷமான இளைஞனாக ரன்பீர்கபூர், அவரதுகதாபாத்திரத்தின் பெயர், ஜோர்டான் என்கிற நெகட்டிவ். (எதிர்ப்பதம்) ஒவ்வொருதினமும் ஆயிரமாயிரம் கேமிராக் கண்களில், வெளிச்சத்தின் பிடியில் தவிக்கும்அவனது புதைக்கப்பட்ட ரகசியங்கள் தான் இந்த ராக் ஸ்டார்.
இந்தப்படத்தை எழுதி, இயக்கியவர் இம்தியாஸ் அலி, (JAB WE MET, LOVE AAJ KAL) பொதுவாக இம்தியாஸ் அலியின் படங்களில் அழகான, ஷார்ப்பானவசனங்களும், திரைக்கதையும்தான் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருக்கும். ஆனால்இந்தப் படத்தின் மிகப்பெரிய குறை, இதன் திரைக்கதைதான். இன்னும் சரியாகச்செதுக்கப்பட்டிருந்தால் இந்தத் திரைப்படம் எட்டியிருக்கும் உயரம் வேறு.
கிட்டத்தட்ட, தன்னைப் போன்ற ஒருவனின் கதை எனும் வகையில் கதையைஉள்வாங்கி, ரஹ்மான் பின்னியெடுத்திருக்கிறார், ரஹ்மானால் இந்த நெகட்டிவ் எனும்கதாபாத்திரத்தோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால்ரஹ்மான் நிச்சயம் ஒரு பாஸிட்டிவ். (J) இசை மட்டுமே தனியாக நின்று, இந்தப்படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.உணர்வு ரீதியான கதைக் களன் கொண்ட எந்தப் படத்திலும் ரஹ்மானின் பங்களிப்புநிச்சயம் அசாதாரணமான ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு சமீபத்தியஉதாரணம், படத்தின் பின்னணி இசையோடு சேர்த்து, மொத்த ஆல்பமும்சக்கைப்போடு போட்ட விண்ணைத் தாண்டி வருவாயாவும், ராக்ஸ்டாரும் தான்.
குறிப்பாக இந்த ஆல்பத்தில் வரும் 14 பாடல்களில் அனேக பாடல்கள்மோஹித் செளகானால் பாடப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கலைஞனின் வெவ்வேறுகாலகட்டங்களில் பாடப்படுகிற பாடல்கள், ஒத்த குரலில் இருப்பது தான் சரி எனநினைத்திருக்கலாம். அதே போல மோஹித் செளகானும், மிக அற்புதமாக ஒவ்வொருபாடலுக்கும் உயிரூட்டியிருக்கிறார். சென்ற வருடத்தின் சிறந்த பின்னணி பாடகராகதேர்வு செய்யப்பட்டவர். இப்போது ரஹ்மானின் செல்லம் வேறு. இரண்டுவருடங்களுக்கு முன்பே மோஹித் செளகான் பற்றியும், அவரது SILK ROOT எனும்இசைக் குழுவைப் பற்றியும் என் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவர் பாடி நிறையமெலடி பாடல்கள் மட்டுமே கேட்ட எனக்கு SADDA HAQ பாடல் விஷேச விருந்துதான்.
இந்த ஆல்பத்தில் எனக்குப் பிடித்த ஓரிரு பாடல்களை பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
பாடியவர்கள் : A.R.ரஹ்மான், ஜாவேத் அலி, மோஹித் செளஹான்.
இது ஒரு சூஃபி பாடல். பொதுவாக பாடகர்கள் பிசிறற்ற குரலைக்கொண்டிருப்பார்கள். ஆனால் சூஃபி மற்றும் கவ்வாலி இசைப்பாடகர்களைப்பொறுத்தமட்டில் தேர்ந்த இசைப் பயிற்சியும், பிசிறற்ற குரல்வளமோஇல்லையென்றாலும் சூஃபியின் தன்மை, அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டி,அதற்கு நம்மை அடிமையாக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக சூஃபி இசையைரசிக்க எந்த இசையறிவும் தேவையில்லை, அமைதியான சூழ்நிலையும், பாசாங்கற்றமனநிலையும் இருந்தாலே போதுமானது. மேலும் நல்ல இசை என்பது இன, மொழி,மத வேறுபாடுகள் அற்றது. இவை யாவற்றையும் கடந்து ஆன்மாவிற்குள் பயணித்துஇறைநிலை அடையச்செய்வது. அந்த வகையில் சூஃபி, ஒரு எளிய வழி. அப்படிசூஃபியிஸத்தால் ஈர்க்கப்பட்ட ரஹ்மானின் சமீபத்திய பாடல்களில் நிறைய பாடல்கள்சூஃபி இசையை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தப் பாடலும் அப்படிப்பட்ட ஒன்றுதான், மேலும் ரஹ்மானின் சூஃபிபாடல்களின் கிரீடத்தில் மற்றுமொரு மயிலிறகு. பொதுவாக ரஹ்மானின்பாடல்களில் அதிக இசைக் கருவிகள் இம்ப்ரூவைஷேசனுக்காக சேர்க்கப்படும்.ஆனால், ரஹ்மான் ஒரு தேர்ந்த சூஃபி கலைஞராக பரிணமித்திருப்பது, அவர் தனதுசூஃபி பாடல்களில் ஆர்மோனியத்தையும், தபேலாவையும் மட்டுமே தனித்துஉபயோகிப்பதிலிருந்து, தொடர்ந்து சூஃபி பாடல்கள் கேட்பவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அதிலும் இந்தப் பாடலின் இடையே அகோஸ்டிக் கிதாரைஉபயோகித்திருப்பதும், பேஸ் கிதாரைப்போல பாடல் முழுவதிலுமாக, பாடலின்அடிநாதமாக அகோஸ்டிக் கிதாரை உருக வைத்திருப்பதும் அற்புதமான கலவை.
ரஹ்மானின் குரல் ஒரு மந்திரம். பொதுவாக குரலை SHARP VOICE, BASE VOICE என்று பிரிப்பார்கள், ஷார்ப் வாய்ஸில் நல்ல த்ரோ இருக்கும், எளியஉதாரணமாக நீள வாக்கில் பரவும் ஒலியமைப்பை ஷார்ப் வாய்ஸ் என்றூம், அகலவாக்கில் பரவும் ஒலியமைப்பை பேஸ் வாய்ஸ் என்றும் சொல்லலாம். ஆனால்ரஹ்மானுக்கு இது இரண்டும் கலந்தது போல ஒரு குரல். ஆலாப் பாடுவதற்கு ஏற்றகுரல். அதிலும் வாயை குவித்தபடி, குரல்வளையிலிருந்து ‘ஊ’ என்றபடிஉச்சஸ்தாயில் பாடும் ஹம்மிங் வகையிலான ஆலாப் பாடுவதில் ரஹ்மான், திபெஸ்ட். (நல்ல உதாரணம் : வந்தேமாதரம் ஆல்பத்தில் வரும் ஒன்லி யூ பாடல்)
அப்படியான ஒரு ஆலாபின் ரஹ்மான் ஆரம்பித்து வைக்க, ஜாவேத் அலியின்மந்திரக்குரலும், மோஹித்தின் மெலடியுமாய் கிறங்கடிக்கிற பாடல் இது. அவசியம்நல்ல ஹெட்போனில், ரம்மியமான சூழ்நிலையில் கேளுங்கள். மேலும், இந்தப்பாடலின் பொருள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு நண்பர் கருந்தேளின் இந்தப்பதிவை வாசியுங்கள்.
****************************** ************
பாடியவர் : மோஹித் செளஹானோடு, கீத் பீட்டர்ஸின் நாலைந்து பேஸ்கிதார்களும்.
இப்பொழுது வருகிற ரஹ்மானின் பாடல்களில் முன்னெப்போதும் இருக்கும்ஒரு புதுமை குறைந்து வருகிறது. இசைக்கோர்ப்பில் மாறாக பாடல்களின்கட்டமைப்பில் நிறைய மாற்றங்களை கொண்டுவருகிறார். உதாரணம்: விண்ணைத்தாண்டி வருவாயாவின் கடலினில் மீனாக இருந்தவள் நான், பாடலை சொல்லலாம்.இந்தப் பாடலும், அப்படி ஒன்று தான். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பாக, ஒருதொகையறா பின் அனேகமாக இரண்டு சரணங்கள் மட்டுமே கொண்ட பாடல். இந்தப்பாடலை முதன் முதலாகக் கேட்கப்போகிறவர்கள், பாய்ஸ் படத்திலிருந்து BREAK THE RULES பாடலை ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஒரே இசை, ஒரேகருத்தும் கூட.
நான் செய்வது சரியென்று நினைக்கும் பொழுதெல்லாம், அது தவறு என்றுசொல்லும் மனிதர்கள் தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள், நான் செய்வதுதவறு என்றால் இங்கே யார் செய்வது சரி? சுதந்திரம் என் உரிமை, அதையாரிடமிருந்து கேட்டுப்பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை, என்று உலகைப்பார்த்துப் பாடும் ஆக்ரோஷமான இளைஞனுக்காகவே எழுதிய பாடல், இன்றையதேதியில் இந்திய இளைஞர்களின் தேசிய கீதமும் கூட, எனக்கும்தான்.
இது ஒரு ராக் இசை வகையைச் சேர்ந்த பாடல் என்பதால் பேஸ் கிதாருக்குகுறைவேயில்லை. ஆனாலும் ஆரோஸ்மித் பாடல்கள் போல இரைச்சலாகஇல்லாமல், அதிலும் நல்ல மெலடியைக் கொடுத்திருக்கிறார், ரஹ்மான்.
****************************** ************
ஒரு வெகுளித்தனமான இளைஞனாக சுற்றித்திரிந்த பழைய நாட்களைஏக்கத்துடன் திரும்பிப்பார்க்கும் ஜோர்டான், தான் யதார்த்த உலகிலிருந்து வெகு தூரம்விலகி வந்துவிட்டதை உணர்கிறான். அந்த ஏக்கத்தின் வெளிப்பாடாக வரும்மென்சோகக் குமுறல்தான் இந்தப் பாடல். அவன் தன் காதலால் மட்டுமே தன்னைமீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறான்.
இந்தப் பாடலில் ஒரு கட்டத்தில், அடுத்த வரியைப் பாட இயலாமல், அவன்மெளனமாகும் பொழுது, அரங்கத்திலிருக்கும் ஒட்டு மொத்தக்கூட்டமும் “நாடான்பரிந்தே கர் ஆஜா” என்று பாடுவார்கள். தன் வலியை உணர்ந்து கொண்டு, அவர்கள்தனக்காகப் பாடுவதாக எண்ணி ஆச்சர்யம் கலந்த, சந்தோசத்தைவெளிப்படுத்துவதிலும், அடுத்து அதே வரியை மொத்த கூட்டமும் பாடும்பொழுது,அவர்கள் தன் இசையை மட்டுமே ரசிக்கிறார்கள் என்பதை உணரும்போது முகத்தில்காட்டுகிற ஏமாற்றமும், நொடிப்பொழுதில் தனது ரியாக்ஷன்களால் கவர்கிறார்,ரன்பீர். இந்தப்பாடல் மோஹித்தும், ரஹ்மானும் இணைந்து பாடியிருப்பார்கள்.இருவரின் குரலில் ஏகப்பட்ட ஆச்சர்ய ஒற்றுமை. இந்தப் பாடலின் உயிர் இருவரின்குரலும், ரன்பீரின் நடிப்புமே.
****************************** ************
4. இது போனஸ் பீஸ் : இந்த பாடலைக் கேட்கும்முன் சுகாவின் இந்தப் பதிவை(http://venuvanamsuka. blogspot.com/2011/04/blog- post.html ) ஒருமுறை வாசித்துவிட்டுவாருங்கள். பண்டிட் பாலேஷ் அவர்களும், ரஹ்மானின் ஆஸ்தான அகோஸ்டிக்கிடாரிஸ்ட் கபூலியும் சேர்ந்து நடத்தியிருக்கும், ஜுகல்பந்தி….
****************************** ************
முதல் பாராவிலிருந்து ஸ்கிப் செய்து வந்தவர்கள் நண்பர் கோபியின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள் . இது ஒரு பானை சோற்றின் ஒற்றை சோறு, இசையின் பயனே, இறைவந்தானோ?
(மூன்றாம் கோணம் இணைய இதழின் பொங்கல் மலருக்காக எழுதியது இந்தப் பதிவு)



3 பின்னூட்டம்:
இசையோ, படமோ, புத்தகமோ,அறியப்படவேண்டிய மனிதர் களோ உங்க எளிமையான நடையில அழகா எழுதிடறீங்க..நீங்க எழுதினதுக்கப்புறமாத்தான் கேட்பதோ, பார்ப்பதோ, படிப்பதோ நடக்கிறது (எனக்கு)...
ரொம்ப நல்ல பகிர்வு. அருமையா எழுதி இருக்கீங்க.
arumai nanbare
http://www.ambuli3d.blogspot.com/
Post a Comment