உன்னதமான மனிதன் பாரஸ்ட் கம்ப்


பதின்ம வயதுக்குப் பிறகு நிறைய படங்கள் பார்த்தாயிற்று. நிறைய என்றால் நிறைய…. அதில் பல படங்களைப் பார்த்ததும் இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். நான் அனுபவித்ததை அப்படியே யாரிடமாவது சொல்லிவிட மாட்டோமாவென, இங்கே பதிவுகளில் கொட்டியிருக்கிறேன். முடிந்தவரை எனக்கு புரிந்த விஷயத்தை, என் அனுபவங்களை கூடுமானவரை எழுத்தில் கடத்தியுமிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
சில படங்கள் பசுமையாய் நினைவில் நின்றுகொண்டிருக்கும் (Children of Heaven மாதிரி), சில படங்கள் பெரிய அதிர்ச்சியை மனதில் விதைத்திருக்கும், அந்த அதிர்வுகள் குறைய பல வருடங்கள் பிடிக்கும் (Life is Beautiful மாதிரி), சில படங்கள் நெகிழ்ந்து அழ வைத்து தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன ( Pursuit of Happyness, Cast Away மாதிரி) சில படங்கள் கவிதை எழுதத் தூண்டியிருக்கும் ( Notebook, Last Song மாதிரி), ஆனால் சில படங்கள் இருக்கின்றன. எதோவொன்று படத்தோடு நம்மை வசியப்படுத்தி வைத்திருக்கும்.


"Life's a box of chocolates, Forrest. You never know what you're gonna get"
சில சமயம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லுவேன் “இந்தப்படத்தைப் பார்க்காம செத்துடாதே” என்று. அவ்வளவு அருமையான படமா? அப்படியென்ன ஸ்பெசல்? என்றெல்லாம் நிறைய கேள்விகள் வரும். எதற்கும் என்னிடம் பதில் இருந்ததில்லை, “நீ பாரு அப்புறம் வேணும்னா பேசலாம்” என்று சொல்வேன். அப்புறம் நாங்க பேசிகிட்டதேயில்லை. அப்படி பேசவோ, எழுதவோ ஏதுமின்றி சில படங்கள் ஒரு மெளன நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ரசிப்பின் உச்சம் என்று நான் அதை நினைப்பதுண்டு.மிகவும் பிரயத்தனப்பட்டு அதை எழுதவோ, பேசவோ நினைக்கிற பொழுதுகளில் உணர்ச்சிவசப்படுவது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதே மனநிலையில் மீண்டும் ஒருமுறை அந்தப்படத்தைப் பார்த்துக்கொள்வேன். அப்படி அடிக்கடி எங்காவது யாராவது சொல்ல நினைவில் வரும்பொழுதெல்லாம் எழுதனும்ன்னு நினைக்கிற சில படங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று Shawshank Redemption இன்னொன்று Forest Gump. இந்தப் படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி, திருத்தி, பின் ஏதோ ஒன்றை எழுத மறந்துவிட்டேன் என்று மீண்டும் அதை ட்ராஃப்டாகவே பதிவு செய்து வைத்துவிடுவேன்.
Forest Gump. சமீபத்தில் நண்பர் ரவி, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ”ஏன் என்னிடம் இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை, எப்படி இவ்வளவு நாள் இந்தப் படத்தை தவறவிட்டேன். லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் படத்திற்கு பிறகு ஒரு படம் பார்த்து நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டது கிடையாது என்று அவர் சொல்லும் பொழுதே அவர் குரல் கம்மியிருந்தது. வாங்க ரவி நேரில் பேசலாம் என்று சொல்லியிருந்தேன், நேரில் சந்திக்கும் பொழுதும்கூட உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார், இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா சார்? இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா சார்? என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். எனக்கு படத்தைப் பற்றி பேசுவதைவிட ரவியைப் பார்த்துக்கொண்டிருக்கவும், கேட்டுக்கொண்டிருக்கவும் பிடித்திருந்தது.
இந்த இரு படங்களை எழுதுவதில் எனக்கு இரண்டு பிரச்சனை. எனக்கு ஏற்பட்ட அனுபவம், எல்லோருக்குமே கிடைக்குமா? என்பது. ( அதுகூட பிரச்சனையில்லை, இந்தப் படங்கள் பிடிக்கவில்லை என்றால் அது புரிதலில் உள்ள குறைபாடுகளின் காரணமாகவேயிருக்கக்கூடும்) இன்னொன்று, எங்கே நான் மொன்னையாக எழுதி படத்தில் மீது ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி விடுவேனோ? என்பதும்தான். ஆனாலும் ரவியுடன் பேசியதிலிருந்து இந்தப் படத்தை எப்படியாவது எழுதிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
நல்லவனா இரு போதும் உன்னை நல்லவனாக நிருபிக்க முயலாதே! என்று ஒரு தத்துவம் உண்டு. அதுதான் இந்தப் படம். எதன்மீதும் புகாரற்ற ஒரு மனிதனை சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். அவன் பெயர் பாரஸ்ட் கம்ப். ஆம், ஃபாரஸ்ட் கம்ப்பை நான் என்றைக்குமே ஒரு திரைக்கதாப்பாத்திரமாக உணர்ந்ததேயில்லை. அவனிடம் கதைகேட்ட ஒரு வழிப்போக்கனாகவே என்னையும், என் வாழ்வில் நான் சந்தித்த அற்புத மனிதர்களில் ஒருவனாகவே இவனையும் உணர்கிறேன்.
இந்தப்படத்திற்கு முன் டாம் ஹேங்க்ஸ் நடித்து நான் பார்த்த ஒரே படம் BIG (தமிழில் நியூ என்ற பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் காப்பியடிக்கப்பட்ட படம்). ஆனால் பாரஸ்ட் கம்ப் பார்த்த பின் நான் பார்க்காத டாம் ஹேங்க்ஸின் படங்கள் ஒன்றிரண்டுதான் இருக்கும். அவ்வளவு இயல்பாக கல்லூரி மாணவனாய், ராணுவ வீரனாய், ஒரு கம்பெனி முதலாளியாய் இந்தப்பாத்திரங்களோடு ஒன்றியிருப்பார்.(இதைப்படிக்கும்பொழுது வாரணமாயிரம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல). உடல் மெலிந்து கதாப்பாத்திரத்திற்கு தேவையான உடல் மொழியையும் கொண்டு வந்திருப்பார். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் படத்தின் முதல் பத்து, கடைசி பத்து நிமிடம் தவிர மீதம் இரண்டு மணிநேரமும் பிளாஷ்பேக்தான், அதுவும் நேரேஷன் வகையான ( வா.ஆயிரத்தில் சூர்யா பேசிகிட்டே இருப்பாரே, அப்படி) ப்ளாஷ்பேக். ஆக அந்தந்த வயதிற்கான குரலும், மொழி ஆளுமையுமாய் கலக்கியெடுத்திருப்பார் டாம் ஹேங்க்ஸ். இவரது குரலும் உச்சரிப்பும் மிகவும் பிரசித்தி. The Terminal பார்த்தவங்களுக்கு தெரிந்திருக்கும். டாவின்சி கோட் படத்தை புரிவதற்காக தமிழிலும், ஹேங்க்ஸின் குரலுக்காக ஆங்கிலத்திலும் பார்த்தவன், நான். (ஆனால் தமிழ்லில் கூட ஒரு அற்புதமான குரலைத்தான் அவருக்கு கொடுத்திருந்தார்கள், அவரை யாருக்கும் தெரியுமா?)
காற்றில் அசைந்து வரும் ஒரு பறவையின் இறகோடு தொடங்கி, முடியும் இந்தத் திரைப்படம். இலக்கற்ற இலகுவாக பறக்கிற இறகினைப் போன்ற ஃபாரஸ்ட் கம்பின் கதை இது என்பதை குறியீடாக உணர்த்தும் கவிதை அது. ஒரு பேருந்திற்காகக் காத்திருக்கும் கம்ப், தனது பெஞ்சில் உடன் அமரும் ஒரு பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் கதையை சொல்கிறான். இது ஒருவரிடம் சொல்லும் கதையல்ல, ஒவ்வொருவராக தனக்கான பேருந்து வந்ததும் விடைபெறுகின்றனர். ஆனாலும் கதை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிலர் அவன் கதைவிடுகிறான் என்கின்றனர், சிலர் அவனைப் பைத்தியம் என்கின்றனர், சிலர் அவனுக்காக அழுகின்றனர். கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கிறவன் இல்லை கம்ப், ஒரு நதியைப்போல தன்னால் சொல்ல முடிந்ததை சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
நிச்சயம் நான் அந்தக் கதையை சொல்லப்போவதில்லை, ஏனெனில் கம்ப் அளவிற்கு அதை சுவாரஸ்யமாய் சொல்ல என்னால் முடியாது. ஒரு கட்டத்தில், தன்னிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்ணின் கேள்விக்கு “தான் இங்கே தனது காதலியைத் தேடி வந்திருப்பதாகவும், அவளுடைய முகவரியை அடைய பேருந்திற்காகக் காத்திருப்பதாவும்” சொல்கிறான். அந்த முகவரியை கவனிக்கும் பெண், இதற்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தாய், இந்த இடம் நடந்தே அடைந்துவிடக்கூடிய தொலைவில்தான் இருக்கிறது, என்கிறாள். வீணாக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டோமே என்கிற எந்த பதபதைப்பும் இல்லாமல், நிதானமாக ஆனால் மகிழ்ச்சியோடு காதலியை சந்திக்கக் கிளம்புகிறான்.
பாரஸ்ட் கம்ப், ஒரு சுயமாக சிந்திக்கத் தெரியாத ஒருவன். யார் என்ன சொன்னாலும் அதைச் செய்வான். ஆனால் கர்ம சிரத்தையோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும். ஆபத்து வந்தால் திரும்பி நின்று எதிர்கொள்ளாதே, ஓடு, ஓடிக்கொண்டேயிரு என்று சொல்லும் தன் பால்ய கால தோழி ஜென்னியினுடைய வாக்கையும், “அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் அதிசயங்களை யாராலும் அறிய இயலாது, வாழ்க்கை அவ்வளவு அழகானது” என்று சொல்லும் தன் அம்மாவின் வார்த்தையையும் கடைசி நொடி வரை மனதில் இருத்தி அதன்படியே இருக்கிறான். எனக்கு எதையும் புரிந்து கொள்கிற மாதிரி சொல்ல அம்மாவால் மட்டுமே முடியும் என்று உறுதியாக நம்புகிறான்.
தன் ராணுவ நண்பன் புப்பாவின் ஆசை, இறால் பிடி படகு ஒன்றை சொந்தமாக வாங்கி, மீன்பிடித்து தொழில் நடத்தவேண்டும் என்பது, அவன் கம்பிடம் நாம் இருவரும் ராணுவத்திலிருந்து விடுப்பு கிடைத்ததும் கூட்டாக இதைச் செய்யலாம் என்கிறான். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் கம்ப்பின் கண்முன்னேயே இறந்தும் போகிறான். ஆனால் அவன் ஆசையை, அவனுக்கு செய்த சத்தியத்திற்காக, தானே ஒரு மீன்பிடி படகை வாங்கி தன்னோடு ராணுவத்தில் பணியாற்றிய இரண்டு கால்களையும் இழந்த அதிகாரியையும் துணைக்கு வைத்துக்கொண்டு இறால் பிடித்து வியாபரம் செய்கிறான். அதற்கு புப்பா-கம்ப் என்று பெயரும் இடுகிறான். மேலும் அதில் கிடைக்கிற லாபத்தில் பாதியை புப்பாவின் வீட்டில் கொடுக்கிறான். இது அவனது பணம் மீதான எதிர்பார்ப்பின்மையும், செய்த சத்தியத்தை காப்பாற்றவும் எடுக்கிற முயற்சியை காண்பிக்கிறது.
அவன், யார் மீதும், எதன் மீதும் புகார்களற்ற ஒரு மனிதனாக இருக்கிறான். யாரையும் அவன் எதிரியாக பார்க்கவில்லை, எதன் பொருட்டும் யார் மீதும் கோபமற்றவனாக இருக்கிறான், குறிப்பாக தான் சந்திக்கும் ஓவ்வொரு மனிதரும் தன்னை முட்டாள் என்று சொல்லும் பொழுதும் அவர்கள் மீது கோபமற்றே இருக்கிறான். எதைச் செய்யும்பொழுதும் அதில் மன நிறைவோடும், முழு ஈடுபாட்டோடும் செய்கிறான். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டேயிருக்கிறான்.  ஈடுபாடும், விடாமுயற்சியும் இருந்தால், சுயமாக சிந்திக்க திராணியற்ற ஒரு மனிதனாலேயே இவ்வளவையும் சாதிக்க முடிகிற இந்த உலகத்தில், கணினி முன் அமர்ந்தோ, செய்தித்தாளை வாதித்தபடியோ உலகை குறை சொல்லிக்கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருக்கும், எவருக்கும் இந்தப்படம் ஒரு மருந்து. ஆனால் மருந்து வாசமே அடிக்காத ஒரு மருந்து.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனாக வெகுளியான பாரஸ்ட் கம்ப், இருக்கிறான். வெறும் எளிமையான குணமே அவனை அங்கேயிருந்து அழகு பார்க்கிறது. இது வெறும் படமாக உங்களால் பார்க்கப்பட்டால், தவறு உங்களிடமே இருக்கிறது.
இந்தக்கதை இதே பெயரில் நாவலாக வந்து பரவலாக கவனம் கொள்ளப்பட்டது. நியூயார்க் டைம்ஸில் பெஸ்ட் செல்லர் வரிசையில் விற்பனையான நாவல் இது. வியட்நாம் போரில் பங்கேற்ற ஒரு அதிகாரியான விஸ்டன் க்ரூம் அவர்கள் எழுதிய நாவல்.. இப்படி ஒரு கதையை ஒரு இயக்குனர் யோசித்து எடுத்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, ஏனெனில் இப்படியா வித்தியாசமான அனுபவம் ஒருவனுக்கே வாய்க்க் வாய்ப்பேயில்லை. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை தொடர்ந்து வாசித்து, அதை திரைக்கதை என்ற தனி இலாகாவிற்கு அனுப்பி, அதை நேர்த்தியாக்கி திரைப்படமாக இயக்கும் பணியை ஏற்றுக்கொள்வதால் மட்டுமே, இப்படியான அழகான திரைப்படங்கள் கிடைக்ககூடும்.

கதையின் சுருக்கம் :
சுயமாக சிந்திக்கும் திறமையற்ற, சரியாக நடக்க இயலாத சிறுவன், பாரஸ்ட் கம்ப். தன் தாயின்மீது அளவில்லாத பாசத்தோடு இருக்கிறான். வெகுளியாக இருக்கும் அவனைப் பள்ளியில் சேர்க்க தன் உடலைக் கொடுக்கிறாள், அவன் அம்மா. பள்ளிப்பருவத்திலிருந்து தனது தோழியாய் இருக்கும் ஜென்னியை மனதாரக் காதலிக்கிறான், பாரஸ்ட் கம்ப். தன் அன்னைக்குப் பிறகு அவளது வார்த்தைகளையே அவன் அதிகம் நம்புகிறான். ஆனால் அவளது வளர்ப்பு தந்தையே அவளை தன் காம இச்சைக்கு பயன்படுத்துகிறான். இதில் திசை மாறும் ஜென்னி ஒரு கால் கேர்ளாக, போதைக்கு அடிமையானவளாக மாறுகிறள். ஆனாலும் அவளையே விரும்புகிறான், கம்ப்.

மறுபுறம் கம்ப்போ, கல்லூரி கால்பந்து அணி, ராணுவம், அமெரிக்க டேபிள் டென்னிஸ் அணி, இறால் வியாபாரம் இப்படி எதில் கால்வைத்தாலும் தனது தொடர் முயற்சியாலும், ஈடுபாட்டாலும் வெற்றியை பெற்றுக்கொண்டேயிருக்கிறான். கூடவே நல்ல மனிதர்களின் நட்பையும். ஆனால் எங்கிருந்தாலும் தன் தாயின் நினைவாகவும், ஜென்னியின் நினைவாகவுமே இருக்கிறான்.

வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் ஜென்னியை சந்தித்துக்கொண்டேயிருக்கிறான். அவளை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாவும் சொல்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஜென்னி அவனை மறுக்கிறாள். அழுக்கான தன் வாழ்வை, கறைகளற்ற கம்போடு இணைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவன் விருப்பப்படி ஒருநாள் அவனோடு தங்குகிறாள், பின் அவனிடம் சொல்லாமல் வெளியேறவும் செய்கிறாள்.

ஒருநாள், தனது முகவரியை கொடுத்து தன்னை சந்திக்க சொல்லி ஜென்னியிடமிருந்து கடிதம் வருகிறது. அந்த முகவரியைச் சென்றடையும் வழியில் உள்ள பேருந்து நிறுத்ததில் சந்திக்கும் சக பயணிகளிடம் கதையாக சொல்லிக்கொண்டிருக்கிறான். ஜென்னியை அங்கே சந்திக்கிறான், ஒரு ஐந்து வயது சிறுவனோடு, அவன் பெயர் பாரஸ்ட் கம்ப். இவன் உன் மகன் தான் என்கிறாள், ஜென்னி. குற்ற உணர்வில் அழுகிறான் கம்ப், பின் இவன் என்னைப் போல முட்டாளா? என்கிறான். (டாம்ஹேங்க்ஸின் நடிப்பிற்கு இந்த ஒரு காட்சி போதும்). ஜென்னியை திருமணம் செய்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் நோயின் முற்றலில் ஜென்னி இறந்து போகிறாள். அவளது கல்லறை முன், நம் மகன் என்னைப்போல இல்லை, அவன் மிகவும் அறிவாளியாக இருக்கிறான். என்று சொல்கிறான்.

இது ஜென்னியின் கல்லறையில் கம்ப் பேசும் வசனம் அப்படியே கொடுத்திருக்கிறேன்.
                “Jenny! You died on a Saturday morning. And I had you placed here under our tree. And I had that house of your father's bulldozed to the ground. Momma always said “dyin' was a part of life”, I sure wish it wasn't. Little Forrest, he's doing just fine. About to start school again soon. I make his breakfast, lunch, and dinner every day. I make sure he combs his hair and brushes his teeth every day. Teaching him how to play ping-pong. He's really good. We fish a lot. And every night, we read a book. He's so smart, Jenny. You'd be so proud of him. I miss you, Jenny. If there's anything you need, I won't be far away” 
மறுநாள், தனது மகனை பள்ளிக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு அங்கேயிருக்கும் பெஞ்சில் அமர்கிறான். அவன் காலடியிலிருந்து கிளம்பும் ஒரு பறவையின் இறகு மெல்ல பறக்கிறது, இலக்கற்று, இலகுவாய். பெருகும் இசையோடு நிறைவடைகிறது படம். ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த மனிதனை நேரில் சந்தித்த திருப்தி மனதிற்கு எழுகிறது. காரணமேயில்லாமல் கண்கள் குளமாகிறது. சத்தியமாக அது சந்தோஷத்தாலும் அல்ல, துக்கத்தாலும் அல்ல….. இது வேறு, உணரவேண்டுமென்றால், அவசியம் அழுது பாருங்கள்.
ஒன்று குறைந்தாலும்......


சுஹுவாங், சீனாவில் ஒரு சிறிய மலைக்கிராமம். அதிகபட்சம் இருநூறு குடும்பங்கள் வசிக்கிற ஒரு கிராமம். அந்த கிராமத்தின் 30 மாணவ, மாணவியர் படிக்கிற ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தின் ஒரே ஆசிரியர் காவ் எம்மான். அவருடைய தாயாருக்கு உடல்நலம் குறைவாக இருப்பதால் ஒரு மாதம் விடுப்பு தேவைப்படுகிறது. ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அந்தக் கிராமத்தில் ஆசிரியர் காவின் வற்புறுத்தலின் பேரில்தான் அந்த குழந்தைகள் அங்கே படித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் பலநேரங்களில் குழந்தைகளை அருகிலுள்ள ஏதாவது ஒரு நகரத்திற்கு வேலைக்கு அனுப்புவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
அப்படியான ஒரு சூழலில் ஒரு மாதம் விடுப்பு எடுத்தால் அனேகமாக அத்தனை குழந்தைகளும் வேலைக்கு சென்றுவிடக்கூடும் என்று கருதுகிறார். அதனால் ஒரு மாதத்திற்கு ஒரு மாற்று ஆசிரியரை நியமனம் செய்ய முடிவெடுத்து, கிராம அதிகாரியிடம் உதவி கேட்கிறார். கிராம அதிகாரி தனக்கு தெரிந்த ஒரு ஊரிலிருந்து பதிமூன்று வயது வேய் மின்ஷி-யை அழைத்து வருகிறார். அவளும் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை முடிக்க முடியாத ஒரு மாணவிதான்.
ஆசிரியர் காவ், அவளோடு பேசும் பொழுது அவள், உயர்கல்வி முடித்திராதவள் என்பதை தெரிந்து கொள்கிறார். இருந்தும் அவருக்கு உடனடியாக ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம். எனவே தன்னுடைய குறிப்புகளை அவளிடம் கொடுத்து, “இதை போர்டில் தினமும் எழுது, அதை குழந்தைகளை எழுதசொல். இந்த தூணில் வெளிச்சம் இந்த கோடு வரும் வரை பள்ளி நடத்து, பின் குழந்தைகளை அனுப்பிடலாம், மழை அதிகமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டாம், இரவு நீ இங்கே தங்கும் பொழுது உனக்கு துணையாக இந்த மாணவிகளை உன்னோடு வைத்துக்கொள்”, இப்படியாக அவளுக்கு மிகவும் தேவையான சில அடிப்படை விதிகளை மட்டும் சொல்லிக்கொடுக்கிறார்.
மேலும், அவளிடம் 30 சாக்பீஸ்களை கொடுத்து, நான் வரும்வரை தினமும் ஒன்றாக இவற்றை உபயோகி, அதிகம் செலவழித்து விடாதே, பள்ளியில் புதிதாக சாக்பீஸ் வாங்குமளவிற்கு நிதிவசதி இல்லை என்கிறார். அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் வேய்எனக்கு, நீங்கள் 500 யுவான் சம்பளமாக தருவதாக, கிராம அதிகாரி சொன்னார், எப்பொழுது தருவீர்கள்என்று கேட்கிறாள். அதற்கு அவர்தானே சொன்னார், நீ அவரிடமே வாங்கிக்கொள், இங்கு எனக்கே சம்பளம் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது என்கிறார். அடுத்த நாள், ஆசிரியர் காவ் கிளம்புகிறார்


அவரை அழைத்து செல்ல வரும் கிராமத்தலைவரிடம் தனது சம்பளம் குறித்து கேட்கிறாள், அவரும் முதலில் பள்ளியை சரியாக கவனித்துக்கொள், ஆசிரியர் திரும்பி வந்ததும், நாங்கள் உனக்கு பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார். தலையைக் குனிந்தபடி அமைதியாக நிற்கும் வேயிடம் ஆசிரியர்குழந்தைகளைப் பணிக்கு அனுப்புவது, இங்கே அவசியமாக இருக்கிறது, ஆனாலும் அவர்கள் குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியையாவது முடிக்க வேண்டும், அதனால் நான் வரும் வரை இந்த எண்ணிக்கை ஒன்று கூடக்குறையமல் பார்த்துக்கொண்டால், நான் இன்னும் ஒரு 100 யுவான் அதிகமாக தருகிறேன்என்று சொல்லி கிளம்புகிறார்.

அடுத்தநாள் பள்ளிக்கு வரும் கிராமத்தலைவர், எப்படி கொடி ஏற்றுவது, ப்ரேயர் நடத்துவது என்று அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார், மேலும் குழந்தைகளை அவளுக்கு அறிமுகம் செய்கிறார். அப்பொழுது ஜங் ஹுயிக் எனும் சிறுவனைக் காண்பித்து இவன் இங்கே அகராதிபிடித்தவன், இவனிடம் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார். பின் குழந்தைகளிடம் ஆசிரியர் வேய்-க்கு வணக்கம் சொல்லுங்கள், என்கிறார். அப்பொழுது ஜங் ஹுயிக், “இவள் ஒன்றும் ஆசிரியர் இல்லை, இவள் என் பெரிய அக்கா வீட்டின் அருகே வசிக்கிறாள், எனக்குத் தெரியும் இவள் ஒன்றும் ஆசிரியர் இல்லைஎன்கிறான். அவனை மிரட்டும் கிராமத்தலைவரையும் கேலி பேசுகிறான்.
எவ்வித பிடிப்புமின்றி வகுப்பெடுக்க ஆரம்பிக்கிறாள். ஆசிரியர் காவ் எழுதிக்கொடுத்து சென்ற குறிப்பை கரும்பலகையில் எழுதுவதும், குழந்தைகளை அவற்றை அவரவர் நோட்டுபுத்தகங்களில் எழுத சொல்லிவிட்டு, அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே அமர்ந்திருப்பதும்தான் வேயின் தினசரி வேலை. மாணவர்கள் வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கு காவல் போல வெளியே அமர்ந்தபடி தரையில் எதாவது கிறுக்கியபடியே அமர்ந்திருக்கிறாள்.
ஜங் ஹுயிக் அவளிடம் தினமும் எதாவது வம்பு செய்து கொண்டேயிருக்கிறான். ஒருநாள், கிராம அதிகாரி அந்தப் பள்ளியின், ஒரு வேகமாக ஓடக்கூடிய மாணவியை, அருகிலுள்ள நகரத்தில் இருக்கும் விளையாட்டிற்கு சிறப்பு பயிற்சியளிக்கும் பள்ளிக்கு அனுப்பிவைக்க திட்டமிடுகிறார். ஆனால் ஒரு குழந்தையையும் இழப்பதற்கு வேய் தயாராக இல்லை, எனவே அவளை ஒளித்து வைக்கிறாள். அவளைத் தேடி பள்ளிக்கு வரும் தலைவரும், பயிற்சிப் பள்ளி ஆசிரியரும் சிறுமியைத் தேடுகிறனர். வேய் அவள் பள்ளிக்கு வரவேயில்லை என்று சமாளிக்கிறாள். பின் கிராமத்தலைவர் ஜங் ஹுயிக்-ற்கு பணம் கொடுத்து அவள் இருக்கும் இடத்தை அறிந்து அழைத்துசெல்கிறார். வேய், தயவு செய்து அந்த சிறுமியை விட்டுச்செல்லுங்கள் என்று கதறியபடியே அவர்களின் காரின் பின்னால் வெகுதூரம் ஓடுகிறாள். அவர்களும் அவளைப் பார்க்க பாவமாக இருக்கிறது. ஆனாலும் கார் இன்னும் வேகமாக செல்கிறது.
அடுத்தநாள், ஜங் ஹுயிக் ஏதோ செய்து கொண்டிருக்கிறான், என்னவென்று விசாரிக்கையில் அவன் அந்தப்பெண்ணின் டைரியை எடுத்து படிக்க முயற்சிப்பது தெரிகிறது. அதற்கு வேய் அந்த டைரியை படி என்கிறாள். ஜங் ஹுயிக் அதைப் படிக்கிறான். இந்தக் காட்சி ஒரு கவிதை. அந்த பள்ளியில் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும் அவளுக்கு பள்ளியின் மீதும் குழந்தைகள் மீதும் ஒரு பிடிப்பு வருவதற்கு காரணமான காட்சி இது அவசியம் படத்தில் பாருங்கள்.
இன்னொருநாள் வேய் வகுப்பில் குழந்தைகளின் வருகையை பதிவு செய்து கொண்டிருக்கும்பொழுது ஜங் ஹுயிக் இல்லாததை அறிகிறாள், மற்ற குழந்தைகளிடம் விசாரிக்க அவர்கள் அவன் அருகிலுள்ள நகரத்திற்கு வேலைக்கு சென்று விட்டதாய் கூறுகின்றனர். உடனே கிராம அதிகாரியை சந்திக்கிறாள், ஜங் ஹுயிக்-கை திரும்ப அழைத்துவர நகரத்திற்கு செல்லவிருப்பதாகவும், அதற்கு பேருந்திற்கு பணம் வேண்டும் என்கிறாள். அதற்கு தலைவர்அவன் குடும்ப சூழலுக்கு அவன் வேலைக்கு செல்லவேண்டியது அவசியம், அவன் திரும்ப வரமாட்டான், மேலும் என்னிடம் பணம் ஏதும் கிடையாதுஎன்று ஒட்டு மொத்தமாய் மறுத்துவிடுகிறார்.
ஏமாற்றத்துடன் பள்ளிக்கு திரும்பும் வேய், சிறுவர்களிடம் அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல பேருந்துக் கட்டணம் எவ்வளவு? என்று வினவுகிறாள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கின்றனர். பின் ஒருவழியாக இங்கிருந்து நகரத்திற்கு செல்ல மூன்று யுவான் செல்வாகும் என்று உறுதியாய் சொகின்றனர், வேய் ஊருக்கு சென்று திரும்ப ஆறு யுவான் மற்றும் ஜங் ஹுயிக் திரும்பிவர மூன்று யுவான் என மொத்தம் ஒன்பது யுவான் தேவைப்படுகிறது. குழந்தைகளிடமிருந்து பணம் வசூலிக்கிறாள், ஆனால் அது மொத்தம் இரண்டு யுவான் கூடத்தேறுவதில்லை. ஒரு மாணவி அருகிலுள்ள செங்கல் சூளையில் கற்களை சூளையில் அடுக்கிக்கொடுத்தால் 40 பைசா (நம்ம ஊரு பைசா மாதிரி 1000 பைசா சேர்ந்தால் ஒரு யுவான்) கிடைக்கும் என்று சொல்கிறாள்.
இதில் தங்களுக்கு தேவையான பணத்திற்கு எவ்வளவு செங்கல்களை அடுக்கவேண்டும் என்று குழந்தைகளை வைத்து கணக்கு போடுகிறாள், இந்த காட்சியைப் பார்க்கும்போது ஒரு கட்டிடத்தை இத்தனை பேர் சேர்ந்து இத்தனை நாட்களில் முடிப்பார்கள் என்றால் இத்தனை நாட்களுக்குள் முடிக்க எத்தனை பேர் தேவை எனும் பால்யகால கணக்குகளும், அதை சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.
பின் குழந்தைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு செங்கல் சூளைக்கு சென்று ஆயிரக்கணக்கில் செங்கல்களை அடுக்குகின்றனர். அப்பொழுது அங்கே வரும் சூளையின் முதலாளிஉங்களையெல்லாம் யார் உள்ளே விட்டது, இப்படி அடுக்குகிறேன் என்று இத்தனை செங்கல்களை உடைத்து வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு பணம் ஏதும் தர முடியாது, அனைவரும் வெளியே செல்லுங்கள்என்று சத்தம் போடுகிறார். அவரிடம் மன்றாடி பனிரெண்டு யுவான்களைப் பெற்றுக்கொண்டு திரும்புகின்றனர்.  


இதற்கடுத்த காட்சி ஒரு கவிதை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்

பேருந்து நிலையத்திற்கு வரும் வேய்க்கு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லவே 23யுவான்கள் தேவைபடுகிறது என்பதை அறிகிறாள். வேறு வழியில்லாமல் குழந்தைகள் உதவியுடன் திருட்டுதனமாக பேருந்தில் பயணிக்கிறாள், ஆனால் வழியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இறக்கியும் விடப்படுகிறாள். பின் அங்கிருந்து நடந்தே செல்கிறாள். ஒட்டுமொத்தமாக ஐம்பது பேருக்கு மேல் பார்த்திராத அவளுக்கு நகரம் மிகவும் பிரம்மிப்பாகவும், பயமளிப்பதாகவும் இருக்கிறது.
இருப்பினும் ஜங் ஹுயிக்-கை வேலைக்கு அழைத்துவந்த நிறுவனத்தைதேடி அடைகிறாள். ஆனால் அங்கேயும் அவன் இல்லை. அவன் வரும் வழியில் ரயில்நிலையத்திலிருந்து காணமல் போய்விட்டதாக சொல்கின்றனர். அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் தனக்கு அவனைத் தேடுவதில் உதவி செய்யுமாறு அழைக்கிறாள், அவள் என்னுடைய வேலையை விட்டுவிட்டுதான் வரவேண்டும் அதற்கான பணத்தை தருவதாயிருந்தால் வருகிறேன், என்கிறாள். பின் இருவருமாய் ரயில் நிலையத்தை சுற்றி தேடுகின்றனர். மதியம் வரை தேடியும் அவன் கிடைக்கவில்லை. பின் அங்கே இருக்கும் விளம்பர ஒலிப்பெருக்கியில் அவனுடைய அடையாளங்களை சொல்லிஎங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்மாதிரி ஒரு விளம்பரம் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். வேயுடன் வந்தவள்என்னால் இப்படி காத்திருக்க முடியாது, அவன் வந்தால் நீ கூட்டிச் செல், நான் கிளம்புகிறேன், என்றுசொல்லி அவள் பணத்தை விடாப்பிடியாக பெற்றுக் கொண்டு கிளம்புகிறாள்.
இரவு வரைக் காத்திருந்தும் அவன் கிடைக்காததல், தன் கையில் இருக்கும் மிச்ச பணத்தில் 100 பேர்ப்பர்களையும், ப்ரஸும் மையும் வாங்கிகாணவில்லைஎன்று நோட்டீஸ் தயாரிக்கிறாள். விடியவிடிய அமர்ந்து நோட்டீஸ் எழுதுகிறாள். காலையில் அவள் எழுதிக்கொண்டிருப்பதை கவனிக்கும் ஒருவன், “இதெல்லாம் வேலைக்கு ஆகாது, பையன் போட்டோ இல்லை, கிடைத்தாலும் தொடர்பு கொள்ள சரியான விலாசம் இல்லை. நிச்சயம் இது யோசனை வேலை செய்யாது, நீ டி.வி ஸ்டேசனுக்கு போய் விளம்பரம் கொடு, நிச்சயம் அது வேலை செய்யும்என்கிறான்.
இதற்கிடையே, வேலைக்கு வருமிடத்தில் நகரத்தில் தொலைந்து போன ஜங் ஹுயிக், ஒரு ஓட்டலின் முன்பு நின்று விதவிதமாக பரிமாறப்பட்டுள்ள உணவுகளையும் அதை சாப்பிடும் மனிதர்களையும் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான், அதை கவனிக்கும் அந்த ஓட்டல் முதலாளி அவனை உள்ளே அழைத்துஇப்படி வெளியே நின்று சாப்பிடுவதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தால், இங்கு யாரும் வரமாட்டார்கள், அதனால் உனக்கு பசித்தால் உள்ளே வா சாப்பிடு, பதிலுக்கு பாத்திரங்களை கழுவிவைஎன்று நாசூக்காக அவனை பணியிலமர்த்துகிறாள்.
இங்கே, ஒருவழியாக விசாரித்து டி,வி ஸ்டேசனை அடையும் வேய்-யை, சரியான காரணம் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் உள்ளே விட மறுக்கிறார்கள். கிட்டதட்ட ஒண்ணரை நாளாக வெறும் தண்ணீரைக் குடித்துக்கொண்டும் வீதியில் உறங்கியும் காத்திருக்கிறாள். தொடர்ந்து வாசலில் நிற்கும் அவளை ஸ்டேசன் மேனேஜர் கவனிக்கிறார். தனது உதவியாளரிடம் விசாரிக்கிறார். உங்களை பார்க்கத்தான் அவள் காத்திருக்கிறாள், சரியான பேப்பர்ஸ் இல்லாததால் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை என்கிறாள். அவளை கடிந்துகொள்ளும் மேனேஜர் வேய்-யை உள்ளே அழைத்தும் மொத்த விஷயத்தையும் கேட்டறிகிறார்.
பின் விளம்பரம் கொடுத்தால் நிறைய செல்வாகும், அதனால் உன்னை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்கிறோம், அதில் நீ தொலைந்த சிறுவனைப் பற்றிய விபரங்களை சொல்லிவிடு, நிச்சயம் அவன் கிடைப்பான்என்று சொல்லி ஒரு நிகழ்ச்சியாக பதிவு செய்கின்றனர். அதில் பேட்டி எடுப்பவர், வேயிடம் நிறைய கேள்வி கேட்கிறார், அவளுக்கோ கேமிராக்களும் மைக்குகளும் மிரட்சியைக்கொடுக்கிறது, மெளனமாக அமர்ந்திருக்கிறாள். கடைசியாகஅந்தக்கேமிராவைப் பார், அந்த லென்ஸ்தான் உனது ஜங் ஹுயிக் என்று நினைத்துக்கொள், அவனைப் பார்த்து பேசு, அவன் உன் பேச்சினைக் கேட்க கூடும்என்று சொல்கிறார். கேமிராவை மிரட்சியுடன் பார்த்தபடி மெல்ல பேச ஆரம்பிக்கிறாள். முடிக்கமுடியாம கண்ணீர் திரண்டுவர அழுதபடியே, ஜங் ஹுயிக் நீ எங்கே போனாய், உன்னைத் தேடி நான் மிகவும் சிரமப்படுகிறேன், தயவு செய்து வந்துவிடு என்று முடிக்கிறாள்.

அந்தக்காட்சியும் அதைத் தொடர்ந்து ஜங் ஹுயிக் அதை டிவியில் பார்ப்பதும், அழுவதும் வசனமேதுமின்றி மொழியேதுமின்றி சகலருக்கும் புரியும் சினிமா மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் உருக்கமான காட்சி.
ஜங் ஹுயிக்-கோடு வேய்-யையும் அந்த டிவி ஸ்டேசன் மேனேஜரே தன் காரில் கொண்டுவந்து கிராமத்தில் விடுகிறார். அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அந்த கிராமப்பள்ளிக்கும் நிறைய அன்பளிப்புகள் கொடுத்தனுப்பிருக்கின்றனர். அதில் கலர் கலரான நிறைய சாக்பீஸ் பெட்டிகளும் அடக்கம். குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் மீண்டும் பள்ளி ஆரம்பிக்கிறது. கலர் கலர் சாக்பீஸ்களை அதிசயமாகப் பார்க்கும் குழந்தைகள், இனிமேல் நம் பள்ளிக்கு சாக்பீஸே வாங்க வேண்டாம், அவ்வளவு சாக்பீஸ்கள் நமக்கு கிடைத்திருக்கிறது, அதிலும் ஆசிரியர் காவ் இதைப்பார்த்தால் மிகவும் சந்தோசப்படுவார், என்கிறார்கள்.
மேலும் அதில் எழுதிப்பார்க்க ஆசைப்படுகின்றனர், “எழுதுங்கள் ஆனால் ஒருவர் ஒரு எழுத்து மட்டுமே எழுதவேண்டும்என்கிறாள் வேய். ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு எழுத்தாய் எழுத வண்ணங்களால் நிறைகிறது, கரும்பலகை. மெல்லிய இசையுடன் படம் நிறைவடைகிறது.
ஒரு கிராமம், அதில் ஒரு ஆரம்பப்பள்ளி. மாணவர்கள் அடிப்படை ஆரம்பக் கல்வியாவது பெற்றிருக்க வேண்டும் என்கிற ஒரு ஆசிரியரின் போராட்டம், குழந்தைகள் உலகம், சீனாவின் கிராம பள்ளிகளின் நிலை, கிராம மக்களின் மீதான நகர மக்களின் பார்வை, எதையும் காசாக்க நினைக்கும் மீடியாக்கள் என எடுத்துக்கொண்ட அத்தனை விஷயங்களையும் விட்டுவிடாமல், யதார்த்தமாக சொல்லியிருக்கும் அருமையான திரைக்கதையையும், சீனாவின் கிராமப்புற கல்வி வறுமையை அதன் பிரச்சனையை விவரிக்கும் ஒரு ஆவணப்படமாகவும் இந்தத் திரைப்படத்தை வகைப்படுத்த முடியும்.
சிறுவனை எப்படியாவது மீட்டுக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற போராட்டமும், விடாமுயற்சியுமாய் அந்த கதாப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார், வேயாக நடித்த பெண். அவசியம் பார்க்க வேண்டிய அழகான உலக சினிமா.
இது பண்புடன் இணைய இதழுக்காக எழுதிய உலகசினிமாவின் அறிமுகக் கட்டுரை.