வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்


"ஒரு நொடி, ஒரு சிலிர்ப்பு,
ஒரு பொறி, ஒரு கீற்று"க்காகக் காத்திருக்கிறேன்
போதிமரத்து புத்தனைப்போல.....

      பேஸ்புக்கில் நண்பன் கிருஷ்ணபிரபுவின் இந்த வரிகளைப் படித்ததிலிருந்து மனது என்னவோ செய்துகொண்டிருக்கிறது. சும்மா இருப்பது என்பது ஒரு வேதனையான விஷயம். காலையில் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு சும்மா இருக்கிறேன்இன்னும் மோசமான பொருளாதார நிலையை எட்டிவிடவில்லை என்றாலும், இதுவே தொடர்ந்தால் அதுதான் நடக்கும் என்று தோன்றுகிறது. சமாளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சம்பாதிக்க முடியவில்லை. Positive / Optimistic சிந்தனைகள் கூட வருவதில்லை. ஒவ்வொரு நடுத்தர வர்க்க மனிதனும் அவன் வாழ்வில் மிகப்பெரிய சரிவையும் போராட்டத்தையும் சந்திப்பது, இந்த காலகட்டத்தில் மட்டுமே.

ஒற்றைத் தொழிலை வேராகக்கொண்டு, கிளைத்தொழில் பரப்பிவரும் எந்த நகரமும் ஒரு கட்டத்தில் சந்திக்கும் அழிவைத்தான் இப்பொழுது என் நகரமும் சந்தித்து வருகிறது. ஆனால், இது காலசுழற்சியில் நடக்கும் வாடிக்கையான சரிவாகத் தெரியவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய சந்தையைப் பெரிதும் சார்ந்து தொழில் செய்துவரும் திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்கள், அங்கு நடக்கும் ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியின் போதும், இங்கே நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறனர். அதேசமயம், மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்ததும், பருத்திப் பதுக்கலை கண்காணிக்காமல் விட்டதும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு நூல் விலையை உயர்த்தியது.  இதுபோக, அனேகமாக திருப்பூரில் இயங்கி வந்த சாயப்பட்டறைகளில் 80% மூடிவிட்டனர். நியாயமான காரணமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்தவர்களை ஒரேயடியாக முடக்கிவைத்தது இந்த சாயப்பட்டறைப் பிரச்சனை.

பருத்திவிலை அதிகரித்தால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி, திருப்பூர் சாயப்பட்டறையில் பிரச்சனையென்றால் லூதியானாவிலிருந்து சாயமிட்ட துணிகளை கொள்முதல் செய்தல் என்று எல்லாப்பிரச்சனைகளுக்கு தற்காலிகமாவும், சமயோசிதமாகவும் தீர்வுகள் இருக்கின்றன, என்றபோதும் பருத்தி வியாபாரம் மற்றும் சாயத்தொழிலை மட்டும் நம்பிவாழும் குடும்பங்களின் நிலை தான் என்ன? ரிலையன்ஸ், பிக் பஸார் என்று மால்கள் வந்தபிறகு காணாமல் போன அண்ணாச்சி கடைகளும், மிக்ஸியும், மசாலா பொடி பாக்கெட்டுகளும் வந்தபிறகு காணாமல் போன அம்மி கொத்துகிறவர்களையும் போல இவர்களும் தொலைந்து போகும் நிலை வெகுதூரமில்லை.

உள்நாட்டில் விளையும் பருத்தியை ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டு, அதே பருத்தியை, வேறொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது எதற்கு?  இது என்னவிதமான பொருளாதாரக் கொள்கை? உள்நாட்டில் இதே பருத்தியை நூலாக்கி, ஆயத்த ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது, பருத்தியின் மதிப்பை விட பல மடங்கு அந்நியச்செலவாணி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பிருக்கிறதே! உள்நாட்டில் பருத்தியின் விலையை செயற்கையாக ஏற்றுவதற்காக, மில் தொழிலாளிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செய்யும் ஒரு தந்திரம் தான் இது.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தான் பிரச்சனை என்று உள்நாட்டு வணிகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். உள் மற்றும் வெளிநாட்டு பிரபல ஆடை விற்பனையாளர்கள் (Branded) இந்தியாவில் தங்கள் கடைகளை பெருநகரங்களில் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக, கடந்த செப்டம்பர் மாதம்  பாரதப் பிரதமர். மன்மோகன் சிங் ஒரு ஒப்பந்தத்தில் (http://www.slideshare.net/mithuhassan/india-bangladesh-agreement) கையொப்பமிட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தப்படி, 46 வகையான ஆடைகளை இறக்குமதி வரியின்றி, பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்து கொள்ளலாம். உள்நாட்டில் ஆடைகளை வாங்கிக் கொண்டிருந்த விற்பனையாளர்கள், இதன் மூலம் வரி ஏதுமின்றி பங்களாதேசிலிருந்து வாங்கிக் கொள்வார்கள்.இது, திருப்பூர் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய ஆடை தயாரிப்பாளர்களின் வயிற்றில் விழுந்த மிகப்பெரிய அடி.

      இதுபோக, திருப்பூர் மற்றும் இன்றைய ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பொதுப் பிரச்சனையான மின்வெட்டு. குடிநீர் முதற்கொண்டு பிணம் எரியூட்டுவது வரை மின்சாரத்தின் துணையின்றி ஒன்றுமே செய்ய இயலாது என்கிற ஒரு நிலை உருவானபிறகு இந்த மின்வெட்டு நிச்சயமாக வாழ்வை நரகமாக்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் வீடு கட்டி முடித்து 25 வருடங்கள் ஆகிறது, இதுவரை ரூ.500க்கு மேல் மின்கட்டணம் வந்தது இல்லை, ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்ற கடுமையான மின்வெட்டு அமலில் இருக்கும் இப்பொழுது, மின்கட்டணம் ஆயிரத்துக்கு மேல் வருகிறது.

      கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட ஆரம்பித்தவுடன் நமது மின்சாரத் தட்டுப்பாடு பேரளவிற்கு குறைந்து விடும் என்று மூளை சலவை செய்தவர்களும், ஆமா! அப்படித்தான் என்று போராட்டம் நடத்தியவர்களும், “அணுமின் நிலையம் இயங்கினால் மின்சாரம் கிடைக்கும்என்பது போன்ற மக்களின் தினசரி பேட்டியை தினமும் வெளியிட்ட பத்திரிக்கைகளும், இன்று தொடரும் கள்ள மெளனத்தின் காரணம்தான் என்னஇன்னையப் பத்தியும் கவலை இல்லை, நாளையப் பத்தியும் அக்கறையும் இல்லை, என்னைத் தற்காத்துக் கொள்ள போதுமான ஏற்பாடுகள் உள்ளது என்பது போன்ற மனநிலை கொண்ட அரசியல்வாதிகளும், பெருஞ்செல்வர்களும் இருந்துவிட்டால் எத்தனை பெரிய போராட்டமும் பிசுபிசுத்துத்தான் போகும்.

எனக்கு அரசியல் பற்றித் தெரிய ஆரம்பித்ததிலிருந்து பார்க்கிறேன். அரசு நல்லதோ கெட்டதோ இருவருக்குச் செய்கிறது, ஒன்று அடித்தட்டு மக்கள், இன்னொன்று மேல்த்தட்டு மக்கள். இவர்கள் இருவருக்கும் ஒருபோதும் தொடர்பு இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் இறங்கிப் போராடப்போவதுமில்லை. இவர்களுக்கு இடையில் ஒரு தரப்பு இருக்கிறது, நடுத்தர வர்க்கம், கீழுள்ளவனைப்பார்த்து திருப்தியும், மேலுள்ளவனைப் பார்த்து பெருமூச்சும் விட்டுக்கொண்டிருப்பார்கள். இவர்கள் கூடுமிடமெல்லாம், நாளிதழ் செய்திகளையும், சமகால அரசியலையும் விமர்சனம் செய்தபடியே இருப்பார்கள். இவர்களால் மட்டுமே ஓரளவிற்கேனும் தன் பிரச்சனைக்கு மட்டுமின்றி, அடுத்தவர் பிரச்சனைக்கும் சேர்ந்து போராட முடியும். சம்பளத்தோடு ஒருநாள் விடுப்பிருக்கும் புண்ணியத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வருமளவிற்காவது அவனது போராட்டம் நடந்துகொண்டுதானிருக்கும். ஆனால் இன்று….

இவர்களைத்தான் இன்றைய அரசு குறிவைத்துத் தாக்குகிறது, எழமுடியாதபடி தொடர்ந்து அடித்து அமுக்குகிறது. இன்றைய திருப்பூரின் நிலைமை, கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூச்சு விடக்கூட நேரம் கொடுப்பதில்லை. வாழ்வாதாரத்திற்கான தொடர்போராட்டத்தில் மனம் வலுவிழந்து போகிறது. ஒருவேளை அரசின் சாமர்த்தியமான திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அடிப்படைத் தேவையையே தினமும் போராடிப்பெற வேண்டிய ஒருவன் சமூக அக்கறையோடு தெருவிறங்கிப் போராடிவிட முடியுமா, என்ன?

முதலில் 2 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் ஆ! ஊ! என்றார்கள். அரசை வசை பாடினார்கள். பிறகு, 3 மணி நேர மின்வெட்டு, பிறகு 5 மணிநேரம் இப்பொழுது அறிவிக்கப்பட்ட மின்வெட்டாக 8 மணிநேரமும், பின் அவரவர் விருப்பம் சார்ந்து ஓரிரு மணிநேரமும் மின்வெட்டை உண்டாக்குகின்றனர். இப்ப  யாரு சார், கேக்குறா? மனுஷன் எல்லாத்தையும் பழகிக்கிடுவான் சார்! என்னைக்கும் எதுக்காகவும், இவங்க ரோட்டுக்கு வந்து போராடப்போவதும் இல்லை, என்னிக்குமே இந்த நாட்டுல ஜனநாயகம் மலரப்போவதும் இல்லைஎன் நண்பர் அடிக்கடி சொல்வார்.
ஆனால், நிலைமை அப்படியில்லை, அன்றாடம் ஒவ்வொரு தினத்தையும் கடத்துவதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறபோது, எங்கே தெருவிறங்கிப் போராடுவது?

எப்பொழுதும் ஆட்கள் தேவை என்ற விளம்பரங்கள் தொங்குகிற கரண்ட் கம்பங்களில் இப்பொழுதெல்லாம் வீட்டிலிருந்தே பணம் பண்ணுவது எப்படி? ஈமு கோழி வளர்க்கலாம் என்கிற விளம்பரங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும், பன்னாட்டு நிறுவனங்களின் புற்றீசல் முதலீடும் தினக்கூலி பெறுபவர்களையும், வாரக்கூலி பெறுபவர்களையும் இது நமக்கான இடம் அல்ல என்று எண்ண வைத்துவிட்டது. என்னைப்போன்ற சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் (Job Work) வேலை செய்பவர்களுக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து வியாபாரத்தில் குறிப்பிட்ட சரிவை சந்தித்தே வந்திருக்கிறனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் திருப்பூரிலிருந்து வெளியேறிய மக்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பார்கள்.

ஊர்ல, வீட்டுக்கொல்லையில பாத்திரம் கழுவுற இடத்துல கொத்துக் கொத்தா கருவேப்பிலை செடி இருக்கும், சார்! இப்ப இங்க ரெண்டு ரூபாய்க்கு கேட்டா அஞ்சு ரூபாய்க்கு கம்மியா கிடையாதுங்கிறாங்க, போதும் சார்! இனி இங்க பொழப்போட்ட முடியும்ன்னு தோணலை என்று சொல்லிவிட்டு குடும்பத்தோடு ஊரைக் காலிசெய்து விட்டுப் போகிறான் முருகன்.
நான் என் அலுவலகம் தொடங்கிய வருடத்திலிருந்து மாரிமுத்து என்று மனிதரை எனக்குத் தெரியும். முதன்முதலாக பயோடேட்டா டைப் செய்யவேண்டும் என்று கடைக்கு வந்தார். அதன்பின், மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார். இல்லீங்க மாரிமுத்து, இப்ப இங்க டைப் பண்றதில்ல, ஆளுமில்லை என்றேன். இல்ல சார்! உங்க கைராசி, உடனே வேலைகிடைக்குது. இப்பவும் நீங்களே டைப் பண்ணி குடுங்க! என்று சொன்னார். பிறகு, அடுத்த வருடமே சின்னதா செக்கிங் சென்டர் ஆரம்பிக்கிறேன் சார்! கம்பெனி ப்ரொபைலையும் நீங்களே டைப் பண்ணிக்குடுங்க! என்று வந்தார். சந்தோசமாகச் செய்து கொடுத்தேன். போன வாரம் வந்தார், சார்! ஊருக்குப்போறேன். மாமனார் அங்கயே கடை வச்சித்தரேன்னு சொல்லியிருக்கார். உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்ன்னுதான் வந்தேன் என்றார். தொடர்ந்து மனம் இறுகிக்கொண்டே வருகிறது. என்ன செய்ய?

கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வெளியேறியிருக்கின்றனர்.  நாற்பது சதவிகிதம் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து முதல் பத்து பேர் வரை வேலைக்கு வைத்துக்கொண்டு குறுந்தொழில் செய்து வந்தவர்களில் இருபது சதவிகிதத்திற்கும் மேல் சொந்தத் தொழிலை விட்டுவிட்டு, மீண்டும் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கின்றனர். மிகப்பெரிய நிறுவனங்கள் கூட Cost Cutting என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்து வருகிறது. இது நிச்சயம் ஒரு சாதாரண விஷயம் அல்லவே?

ஆனாலும், ஏழை இன்னும் ஏழையாயிட்டே போறான், பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆயிட்டே போறான் என்ற சுஜாதாவின் வரிகளைப் போல, அமெரிக்க மிலிட்டரிக்கு கண்டுபிடித்த ஒரு கோடி ரூபாய் Hummerவாகனம் வைத்திருக்கும் முதலாளிகளும், கோடிக்கணக்கான மதிப்பில் ஜாக்குவார், ஆடி பென்ஸ் என்று கார்கள் சரமாரியா இதே ஊரில் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறன. காரணம் இங்கே  வலுத்தது வெல்லும்” என்கிற கானக விதியைப் போற்றத்துவங்கியாயிற்று. இங்கே அரசிற்கென்று எந்த தனி கொள்கையும் கிடையாது. சிறு, குறுந்தொழில் முனைவோர்களை நசுக்கிப் பிழிந்து அல்லது விலைக்கு வாங்கும் பன்நாட்டு நிறுவனங்களின் ” எனக்கு லாபம் உண்டெனில் உனக்கு நான் உதவுகிறேன். ” எனும் உயரிய கொள்கைதான், இங்கே அரசின் கொள்கையும்.

இந்த ஏற்றத்தாழ்வுகள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில் நகரைப் பொறுத்தவரை, இது நிச்சயம் சாதாரணமான பிரச்சனை அல்ல. அரசாங்கத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வுகள் தெரியாமல் போவதற்கும் வாய்ப்பில்லை. இருந்தும், அரசு தொடர்ந்து மெளனம் சாதிப்பது ஏன்?  ஏன் இது ஒரு பெரிய சமுதாயப் பிரச்சனையாக ஊடகங்களில் கூட பேசப்படுவதில்லை? ஏன் இதை ஒரு பெரிய  அரசியல் பிரச்சனையாக அரசு முன்னெடுக்கவில்லை? கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நிச்சயம் ஒரு கேள்விக்கு ஒரு பதில் மட்டும் இருக்கப் போவதில்லை இந்த ஜனநாயக நாட்டில்.

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்,
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

எனும் கண்ணதாசனின் நம்பிக்கை வார்த்தைகள் கூட நம்பிக்கையிழந்து கொண்டிருக்கின்றன..........

24 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said...

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.

வி.பாலகுமார் said...

தங்கள் வலியின் ஆழம் புரிகிறது. தோள் தொட்டு ஒரு உற்சாகத்தையும், சிறு புன்முறுவலோடு கட்டைவிரல் உயர்த்தி ஒரு நம்பிக்கையும் பகிர்ந்து கொள்வது தவிர வேறு என்ன தர !

நாளைக்கு விடியும், வாழ்த்துகள் !

மோகன் குமார் said...

உங்களின் முதல் இரு பாராவுக்கு பிறகு மற்ற பாராக்களை என்னால் முழு மனதோடு வாசிக்க முடிய வில்லை.

சுய தொழில் தவறல்ல. நானும் செய்துள்ளேன். அது சரியே வரா விடில் வேறு நிறுவனத்தில் சேர்வது பற்றி
யோசிக்கலாம். மேலும் திருப்போர் தான் என்று இல்லாமல் வேலைக்காக வேறு ஊர் சென்றாலும் நல்லதே

மன்னியுங்கள் எனக்கு மற்ற பிரச்சனை பற்றி தெரியாது. முன் பின் தெரியாதவர்கள் பற்றி வருந்துவதை விட நண்பரின் கஷ்டம் தான் பெரிதாக தெரிகிறது

nigalkalathil siva said...

இந்த பதிவின் உள்ளடக்கத்தோடு உடன்படுகிறேன் முரளி.,

திருப்பூர் சர்வ நிச்சயமாய் சிக்கலில் இருக்கிறது. அன்றாட வாழ்க்கைச் செலவு ராக்கெட் வேகத்தில்..

வருமானமோ பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த மாதிரிதான். என்னைப்போன்றவர்களுக்கும் பட்ஜெட் துண்டு விழ ஆரம்பித்துவிட்டது.

வேறு துறைக்கு மாறுவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். பனியன் சாரத தொழில்....

கோபிநாத் said...

மொத்த பதிவுக்கும் ஒரு பெரிய ரீப்பிட்டே தல...! என்னிக்கு சரியாகுமே...ம்ம்ம்

அகல்விளக்கு said...

ஈரோட்டிலிருந்து தினமும் ரயிலில் திருப்பூர் சென்னு பணிபுரியும் பல நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்...

வேலையில்லாத பல நாட்களில் பயணச்செலவை ஈடுகட்டுவதற்கே செலவு அதிகமாவதாக வருத்தப்பட்ட பலர் இப்போது திருப்பூரைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துள்ளனர்...

பொறுத்திருந்து பார்ப்போம்... :(

Murali Kumar said...

இராஜராஜேஸ்வரி
:-)

Murali Kumar said...

வி.பாலகுமார்
வேற என்ன வேணும் நண்பா! சொல்லுங்க? தோள்தொடும் நட்பின் உற்சாகத்தை காட்டிலும் வேறு என்ன வேணும்? மிக்க நன்றி

Murali Kumar said...

மோகன்குமார்
மோகன் ஜீ! எனது இந்தப்பதிவின் உள்ளடக்கமே, சுயதொழில் புரிபவனின் அக வேதனைதான். இதிலிருந்து தப்பி வெறியேறுவது அல்ல. கஷ்டம் யாருக்குத்தான் இல்ல சொல்லுங்க? அரசின் ஓரவஞ்சனை மனப்பான்மையை சுட்டிக்காட்ட ஆசைப்பட்டேன். அவ்வளவே! என் மகனையோ/மகளையோ கூட சுயதொழில் செய்பவராக நாலு பேருக்கு வேலை தரக்கூடியவராக வளர்க்கவே ஆசைப்படுகிறேன். :-)

நன்றி, சாலமன் ஐலேண்ட் கதைகளைப்போல எனக்காக நல்லது நினைக்கும் நண்பர்கள் இருக்குமவரை நானும் நல்லாவே இருப்பேன்னு நம்புறேன். :-)

Murali Kumar said...

நிகழ்காலத்தில் சிவா
அண்ணா! //வேறு துறைக்கு மாறுவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். பனியன் சாரத தொழில்....// திருப்பூரைப்பொருத்தவரை எதுவுமே அதைச்சார்ந்துதானே இருக்க வேண்டும். :-)

Murali Kumar said...

கோபிநாத்
தல, சரியாகும்ன்னு எனக்கு நம்பிக்கையே இல்ல, சரி பண்ணனும். அவ்ளோதான்.

Murali Kumar said...

அகல்விளக்கு
//வேலையில்லாத பல நாட்களில் பயணச்செலவை ஈடுகட்டுவதற்கே செலவு அதிகமாவதாக வருத்தப்பட்ட பலர் இப்போது திருப்பூரைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துள்ளனர்...//

இதுதான் நண்பா பிரசச்னையே, என் ஊர் , என் தொழில் என்று இருந்தவனையெல்லாம் வெளியேற்றிவிட்டு. முகமறியாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது, திருப்பூர். இனி கலிகாலமெல்லாம் இல்லை களவுகாலம்தான். :-(

உலக சினிமா ரசிகன் said...

முரளி...கிட்டத்தட்ட என் நிலைமையை பதிவாக்கியது போல் உள்ளது...
உங்கள் பதிவு.

போராடுவோம்...
அதற்க்காகத்தான் நம்மை படைத்திருக்கிறான்.

DHANS said...

not only tirupur mostly all business towns are affected like this.

most of my friends who do business in karur had this problem.

சுசி said...

:((
விரைவில் ஒரு தீர்வு/வழி கிடைக்கட்டும்..

shri Prajna said...

அரசாங்கம் என்னிக்காவது உருப்படியா ஏதாவது செய்திருக்கா?? கேட்டா இலவசம் கொடுக்கறத சொல்வாங்க.. மக்களுக்காக செயல்பட்ற govt.இந்தியாவுல இல்லை.நாம தான் ஏதாவது யோசிச்சுக்கனும்.அதுவும் இந்த congress govt சுத்த waste...allmost எல்லாரும் ups போட்டுட்டாங்க..என்ன current saving னு புரியலை.நிறைய business people அடிவாங்கறாங்கன்னு தெரியறது..

அப்பாதுரை said...

நிறைய முறை படித்துவிட்டேன் முரளி.. மனம் கனத்தாலும் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ஒவ்வொரு தடவை படிக்கும் பொழுதும் ஆத்திரம் அனுதாபம் வருத்தம் எழுச்சி என்று உணர்வுகள் ஊர்வலமாய் வருவதென்னவோ உண்மை -- இறுதியில் ஒரு நிலையில்லா நிலையிலேயே முடிகிறது. அதைத்தான் எதிர்பார்த்தீர்களா?

வெண் புரவி said...

இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன். எப்படி இவ்வளவு அருமையான பதிவைப் படிக்காமல் போனேன். என் மனதில் என்ன இருக்கிறதோ அப்படியே இந்தப் பதிவில் விழுந்திருக்கிறது. பொழப்புத்தனம் நடத்த குட்டிக்கரணம் போட வேண்டி இருக்கிறது.

Murali Kumar said...

@உலகசினிமா ரசிகன்
//முரளி...கிட்டத்தட்ட என் நிலைமையை பதிவாக்கியது போல் உள்ளது... உங்கள் பதிவு. போராடுவோம். அதற்க்காகத்தான் நம்மை படைத்திருக்கிறான்.//
நிச்சயமாக போராடுவோம்,

Murali Kumar said...

@தன்ஸ்
//not only tirupur mostly all business towns are affected like this.
most of my friends who do business in karur had this problem.\
உண்மைதான் நண்பா, குறுந்தொழில் செய்பவர்கள் எங்கிருந்தாலும் இன்று இதே கதிதான்.

Murali Kumar said...

@சுசி
தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது மேடம்.

Murali Kumar said...

ப்ரஜ்னா
ம்ம் ஸ்ரீ, அங்கயும் நிறைய அடி இருக்கும்போலயே? தனியா ஒரு பதிவு வரும் போலஇருக்கு... :-)

Murali Kumar said...

@அப்பாதுரை
//நிறைய முறை படித்துவிட்டேன் முரளி.. மனம் கனத்தாலும் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ஒவ்வொரு தடவை படிக்கும் பொழுதும் ஆத்திரம் அனுதாபம் வருத்தம் எழுச்சி என்று உணர்வுகள் ஊர்வலமாய் வருவதென்னவோ உண்மை -- இறுதியில் ஒரு நிலையில்லா நிலையிலேயே முடிகிறது. அதைத்தான் எதிர்பார்த்தீர்களா?//

கிட்டதட்ட அப்படிதான் சார்.
ஒரு சமயம் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்ன்னு தோனுது. ஒரு சமயம் அப்படியெல்லாம் விடமுடியாது போராடுன்னு தோனுது, சில சமயம் பயம், சில சமயம் கோபம், இப்படித்தான் இருக்கு மனசும்.
என்ன செய்யிறதுன்னு தெரியாத ஒரு மனநிலையிலதான் இருக்கேன்.இருக்கோம் :-(

Murali Kumar said...

@வெண்புரவி அருணா
ஏன் சார் நீங்க என்ன அமெரிக்காவுலயா இருக்கிங்க, ரெண்டுபேரும் ஒரே குட்டை. உங்க மனசில இருக்கிறது நான் எழுதுறது ஒண்ணும் ஆச்சர்யம் இல்லையே? :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.