நம்பிக்கை - அதானே எல்லாம்


சமீபத்தில் ஆமிர்கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் பாலியல் வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் ஒரு சிறுவனுக்கு, பதிமூன்று வருடங்களாக நிகழ்ந்த பாலியல் கொடுமையை பற்றி சொல்லியிருந்தார்கள். ஆறு வயதில் ஆரம்பித்து பதினெட்டு வயதுவரை….. அதில் “எல்லாரும் என்னிடம் கேட்கிறார்கள், சரி ஆறு வயசுல உனக்கு இது தப்புன்னு தெரியலை, விபரம் தெரிஞ்சதும் இதைத் தடுத்திருக்கலாமில்லையா? என்று; ஆனால் இது வேண்டாம் என்று சொல்ல எனக்கு பதிமூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது” என்று ஒரு பெருமூச்சுடன் அந்த இளைஞனே சொல்கிறான்.
எட்டு வயதில் மற்ற பள்ளி சிறுவர்களோடு சுற்றுலா செல்லும் அவனுக்கு, அனைவரும்  கடலில்  இறங்கி  குளிக்க  செல்கையில் யாருக்குமில்லாமல் தன்னுடைய உள்ளாடையில் மட்டும் ரத்தம் கசிந்திருப்பதை வைத்து மட்டுமே இது தவறு என்று உணர்ந்திருக்கும் அந்த சிறுவனின் மனநிலையில் பார்த்தால் இந்த கேள்வியின் அனாவசியம் புரியும். அவனுடைய அந்த பெருமூச்சின் பின்னால் அவன் அனுபவித்த அத்தனை  வேதனைகளும் தெரிகிறது. கிட்டதட்ட ஓரிரு நாட்களுக்கு எனக்கு ஒரு கசப்பான மனநிலைதான் இருந்தது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இணையத்தில் எழுதத் தொடங்கியிருந்த சமயத்தில், என் பதிவுகள் பிடித்துப்போய் என்னிடம் மின்னரட்டையில் உரையாட வந்தார், ஒரு தோழி. “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நீங்களோ, உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நானும், எப்போதும் பேச வேண்டிய அவசியம் இல்லை, நமது உரையாடலகள் பதிவுகள் பற்றியும் புத்தகங்கள் பற்றியுமே இருக்கட்டும்என்ற கட்டுப்பாடோடுதான் என்னிடம் பேசவே துவங்கினார். முதலில் ஒன்றும் தெரியவில்லை, ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவ்வளவு வெளிப்படையாக குறை நிறைகளோடே வெளிப்படுத்திக்கொண்ட  என்னை, இன்னமும் ஒரு பெண்ணால் நம்ப முடியவில்லையா? என்று கோபமாக இருந்தது. ஆனால் வருடங்கள் ஓட ஓட இது எதுவும் தேவைப்படாமலேயே, எந்த கேள்விகளுமில்லாமல் இன்னமும் எங்களுக்குள் அழகான நட்பு வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கூட, இதுவரையிலும்  அவர் ஏன் என்னிடம் அப்படி ஒரு கட்டுப்பாடை வைத்தார் என்று யோசிக்கவோ, என்னுடைய கோபத்தை நினைத்து வெட்கப்படவோ இல்லை. இன்று யோசிக்கிறேன், வெட்கப்படுகிறேன்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. சிறிய என்றால் தொப்புள்கொடிபோல, அதிமுக்கியமான தொடர்பு.

படம், சாட் எனப்படும் இணைய அரட்டையில் சார்ளிக்கும், ஆனிக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனைகளிலிருந்து துவங்குகிறது படம். காலையில் எழுந்து ஜாக்கிங் கிளம்புவதிலிருந்து இரவு படுக்கைக்கு வந்தபின்னரும் எப்பொழுதும் காதில் ஹெட்போனும், ஐபோனும் கையுமாக இருக்கும், சமகால பதினைந்து வயது இளம்பெண்ணாக ஆனி. அன்பான அம்மா, அப்பா, தம்பி, குட்டி தங்கை என அழகான அந்த குடும்பத்திற்கு சாபமாக வருகிறது. ஆனியின் செக்சுவல் அசால்ட். ஆனியை தனியாக ஓட்டலுக்கு வரவழைத்து அவளை அனுபவித்து, அதை படமெடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான், சார்ளி.
சாட்டில் தன்னை இளைஞனாகக் காட்டிக்கொள்ளும் அவனை ஒரு முப்பதுவயது மனிதனாக நேரில் சந்திக்கும் ஆனிக்கு கோபத்தைவிட ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அவளால் அவன்,  அவ்வளவு நம்பப்படுகிறான். விஷயம் போலீஸிற்குப் போகிறது, ஆனி கண்கானிக்கப்படுகிறாள். விஷயம் பெற்றோருக்கு தெரிகிறது. தன்னுடைய குழந்தை ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள், என்பதை அறிகிற அவர்கள் உள்ளுக்குள் குமுறுகிறார்கள், உடைந்து போகிறார்கள்.
அம்மாவிற்கு தன் குழந்தை இந்த விஷயத்தால் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது, அவளுடைய எதிர்காலம் குறித்த கவலை. அப்பாவிற்கு கண்ணை மூடினால தன் மகளின் மீது இன்னொருவன் படுத்திருப்பது போலவே நினைவுகள் வந்து தொந்தரவு செய்கிறது. எதன்மீதும் கவனம் செலுத்த முடியாமல் துவண்டு போகிறார். ஒரு சினிமா ஹீரோவைப்போல அவனை போலிஸிற்கு முன் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் எதார்த்தமான வாழ்க்கை அப்படியில்லை.
ஆனியோ இன்னமும் சார்ளியை நம்புகிறாள். தன்னுடைய காதலனை அனைவரும் சேர்ந்து அசிங்கப்படுத்துவதாக நினைக்கிறாள், விஷயம் போலிஸ் வரை சென்றுவிட்டதால்தான் அவன் தன்னோடு பேசாமல் இருக்கிறான் என்று திடமாக நம்புகிறாள். இதன் காரணமாக அப்பாவிடமும், போலிஸில் தகவல்களை சொன்ன தன் தோழியிடமும் அதிக கோபமும் கொள்கிறாள். ”இது ரொம்ப சாதாரணம், நான் அவனை லவ் பண்றேன், அவனும்தான். இப்போ நீங்க போலீஸ் அது இதுன்னு போகலைன்னா அவன் இன்னும் என்னோடு இருந்திருப்பான்” என்று தந்தையிட சண்டையிடுகிறாள்.
போலிஸிற்கோ ஆனிதான் அவனைப்பார்த்த ஒரே சாட்சி, அவள் மூலமாக நகரில் இதுபோன்று நடைபெற்றுவரும் குற்றங்களின் நெட்வொர்க்கை கண்டுபிடித்தாக வேண்டும். ஆகவே ஆனியின் இந்த வழக்கு அவர்களுக்கு மிக முக்கியமானது. இப்படி, ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லருக்கான கதையம்சம், ஹீரோவாக வரும் க்ளிவ் ஓவனும், அப்படியான ஆள்தான், வாயில் கேரட்டை வைத்துக்கொண்டு SHOOT EM UP – ல் அவர் பண்ணிய அதகளமும், இந்த படத்தை இதுவரையிலும் இப்படித்தான் பார்க்க வைத்தது. ஆனால் படம் அப்படியே வேறு ஒரு திசையில் பயணித்தது.
அன்பான அந்தக் குடும்பத்தில், இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்ட பாதிப்பையும், அதன் காரணமாக எழும் உணர்வு சிக்கல்களையுமே இந்தத் திரைப்படம் சொல்கிறது. குறிப்பாக தன் மகள் ஒரு குழந்தை அவளை ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும், அந்த அப்பாவிற்கு போலிஸ் விசாரணயில் தன் மகளுடைய சாட் ஹிஸ்ட்ரியை படிக்க நேரிடுகிறது. அதில் மிகவும் விரசமாக இருவரின் அந்தரங்க உறுப்புகளைப்பற்றிய வர்ணனைகளும் வருகிறது. இதை படித்துவிட்டு வருகிற இயல்பான கோபமும், அதைத் தன் மனைவியிடம் படித்துக்காட்டுகிற ஆவேசமும், க்ளிவ் ஓவனின் அற்புதமான நடிப்பில், உணர்வுப்பூர்வமான காட்சிகள். ஆனால் அதே சூழ்நிலையை அவன் மனைவி கையாள்கிற விதம், இதை ஒரு பெண்ணின் பார்வையில் அணுகுவதாக இருக்கிறது. 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
“போனது போகட்டும் உங்களுடைய இந்த ஆராய்ச்சியை தயவு செய்து நிறுத்துக்கள். இப்பொழுது அவனை யாரென்று கண்டுபிடித்து, என்ன செய்யப்போகிறீர்கள்?

“அவனை கண்டுபிடித்து என் கையால் அடித்தே கொல்லப்போகிறேன், அவனுடைய ரத்தம் என் கை முழுவதும் வழிய வேண்டும்”

“அதனால், என்ன நடந்துவிடப்போகிறது?”

“மற்ற பெண்களாவது காப்பாற்றப் படுவார்களே”

“ஆனி, நம்ம பொண்ணு, அவ தூங்கி மூணு நாள் ஆகுது, முதலில் அவளுக்கு ஒரு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்துவிட்டு, அப்புறம் செய்யுங்கள், உங்கள் புலன்விசாரணையை”
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒரு கட்டத்தில் ஆனிக்கும் இது தெரிய வருகிறது, சார்ளி இன்னும் சில பெண்களோடு இப்படியான உறவினை தொடர்ந்திருப்பது. அதுவும் போலிஸ் அவளிடம், அந்த பாதிக்கப்பட்ட பெண்களை, அவர்களின் புகைப்படங்களை காண்பிக்கின்றனர். அனைவரும் அவளையும் விட சிறுமிகள். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கதறுகிறாள். மெல்ல இதிலிருந்து வெளியே வர நினைக்கிறாள். இதற்கிடையே, ஆனி கலந்துகொள்ளும் ஒரு விளையாட்டுப்போட்டியின் போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவனை சந்தேகத்தின் பெயரில் வில் (ஆனியின் தந்தை) தாக்குகிறான். ஆனால் அது ஒரு சக மாணவியின் தந்தை. ஆனி தன் தந்தையிடம் சொல்கிறாள் “ஏன் இப்படி பைத்தியம் போல நடந்துகொள்கிறீர்கள்? நானே எப்படியாவது இந்த சம்பவத்தை மறக்க நினைக்கிறேன், ஆனால் நீங்கள் எனக்கு அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நினைவுறுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். ப்ளீஸ் அப்பா, இதை நிறுத்துங்கள் எனக்கு வலிக்கிறது” என்று அழுகிறாள்.

சில நாட்களிலேயே ஆனியின் ஆபாசப்புகைப்படங்கள், இணையத்தளத்தில் தாராளமாக வெளியாகியிருக்கிறது, இதையறிந்து ஆனி தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளைக்காப்பாற்றி இரவு அவளோடு படுத்துக்கொள்ள அவளுடைய தோழியை உடனிருத்துகிறார்கள். அடுத்தநாள் காலை உறக்கம் இன்றி எழும் ஆனிக்கு வீட்டின் வெளியே நீச்சல் குளத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவை கவனிக்கிறாள். தொடர்ந்து அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான உரையாடல்களோடும் புரிதல்களோடும் படம் முடிகிறது.
எழுத்துக்கள் மேல் நோக்கி நகர நகர, ஒரு சிறிய பெட்டியில் ஒரு காட்சி வருகிறது. ஒரு அழகான குழந்தையையும், அதன் அம்மாவையும் சிரிக்கசொல்லி படமெடுத்துக்கொண்டிருக்கிற காமிராவின் வழியாக “எங்கே சிரி, சிரி, அப்படித்தாண்டா குட்டி” என்று குரல் வருகிறது. இவர்தான் என் ஆசிரியர், சார், இவர்தான் என் அம்மா என்று ஒரு சிறுவன் அறிமுகம் செய்ய, புன்னகையோடு கைகுலுக்குகிறார், ஆசிரியர் சார்ளி.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலையை உணர வேண்டியது அவசியம், வெறும் கோபம், உயிர்ச்சேதத்திலேயே முடியும், ஆணோ பெண்ணோ பதின்மங்களில் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றவர்கள் அவசியம் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய படம். தம் குழந்தைகள் இப்படி பாதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்தப்படத்தைப் பாடமாகவே பார்க்கலாம். குழந்தைகள் சொல்வதை அவசியம் கேளுங்கள், அவற்றை தயவுசெய்து விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இதுபோன்ற விஷயங்களை அவர்களின் குறியீடுகளின் மூலமாகவும், இயல்பின் மாற்றங்களையும் கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும். அதே சமயம் அவர்களின் நடத்தையை கண்காணியுங்கள், கொஞ்சம் தடுமாறுவது தெரிந்தாலும் உடனடியாக பெற்றவர்கள் அதில் தம்மை சம்பந்தப்படுத்திக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில நாம் சார்ளிக்களின் நடுவேதான் வாழவேண்டியிருக்கிறது.
இது எங்கோ அமெரிக்காவில் நடந்த, நடக்கிற நிகழ்ச்சி அல்ல, இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில், உங்கள் தெருவில் உங்கள் வீட்டிற்கு அருகேயே நடந்து கொண்டுதான் இருக்கிறது, என்பதை ஆமிரின் அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். செக்ஸ் கல்வியும், குழந்தைகளுக்கான குட் டச், பேட் டச் பற்றிய அறிமுகமும் எவ்வளவு அவசியம் என்று புரிகிறது. சேர்தளம் சார்பாக டாக்டர்.ஷாலினி அவர்களின் உதவியோடு குட் டச், பேட் டச் பற்றிய பயிற்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தோம், ஏதேதோ காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இனி அதை எப்படியாவது சீக்கிரம் முடிக்கனும்.
இதை எழுதிமுடிக்கும் பொழுதுகூட நாளிதழில் ”நாலுவயது சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞன்” என்ற செய்தி வருகிறது. இது செய்திமட்டுமல்ல, விழித்துக்கொள்ள ஊதும் சங்கு. வேக் அப் அலாரம்.