பிரணயம்


மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட பின்னர், கிராமத்தில் இருந்தால் சிகிச்சைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் நகரத்தில் இருக்கும் தன் மருமகள் மற்றும் பேத்தியோடு தங்கியிருக்கும் அறுபதுகளில் இருக்கும் அச்சுதமேனனை (அனுபம் கேர்) அறிமுகம் செய்வதில் தொடங்குகிறது படம். விருப்பமில்லையென்றாலும் தன் மகனின் பாசத்திற்கு இணங்கி நகரத்திற்கு வருகிறார் மேனன்.  மகன் துபாயில் பணிபுரிந்து வருகிறான்.

இந்நிலையில் ஒரு நாள் மேனன் தன்னுடைய வீட்டிற்கு செல்ல லிஃப்டில் பயணிக்கும்போது கிரேஸைப் (ஜெயபிரதா) பார்க்கிறார். எதேதோ நினைவுகள் வர நெஞ்சைப்பிடித்தபடி மயங்கி சரிகிறார். கிரேஸ் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். அங்கே மருத்துவர் மேனனுடைய விபரங்களை கேட்கும்பொழுது வாட்ச்மேன் முதற்கொண்டு யாருக்கும் பெயரைத்தவிர வேறெந்த விபரங்களும் தெரியவில்லை, ஆனால் அவரது குடும்பப்பெயர் முதற்கொண்டு அனைத்து விபரங்களையும் சொல்லி அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார், கிரேஸ். இன்றுதான் இங்கே புதிதாக குடி வருகிற இவருக்கு அச்சுத மேன்னின் விபரங்கள் தெரிந்திருப்பது மற்றவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கிறது.

மேனன் வசிக்கும் அதே கட்டிடத்தில் மேல் மாடியில்தான் கிரேஸின் மகள் & மருமகள் வசித்து வருகின்றனர். வீடு திரும்பும் கிரேஸின் கணவர் மேத்யூ (மோகன்லால்)  “அவருக்கு எப்படியிருக்கிறது?” என்று கேட்கிறார். கிரேஸ்  “மேத்யூ, அவர்தான் அச்சுஎன்கிறார், அச்சுத மேனனா? என்கிறார் மேத்யூ. ஆமென்றபடி அழத்தொடங்கும் கிரேஸை சமாதானம் செய்ய ப்ளாஷ்பேக் தொடங்குகிறது.

// நாற்பது ஆண்டுகளுக்கு முன், சிறுவயதில் அச்சுதமேனன் கல்கத்தாவில் ஒரு மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கிறார். அதுசமயம் ஒரு தேர்விற்காக லகத்தா வருகிறாள் கிரேஸ். அழகான ஒரு மழை இருவரின் ரசனையையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய இருவரும் காதல் வயப்படுகின்றனர். ப்ளாஷ்பேக் முடிந்து மீண்டும் சமகாலத்திற்கு திரும்புகிறது காட்சி. //அடுத்தநாள் மேனனினுடைய வீட்டிற்கு சென்று அச்சுவின் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார் கிரேஸ். அவரது உடல்நிலையை அறிந்து கொள்வதில் கிரேஸிற்கு இருக்கும் ஆர்வம், காரணமாய் அவர்களது உறவு அனைவருக்கும் தெரிய வருகிறது. நீங்க யாரு? உங்களுக்கு எப்படி மாமாவைத் தெரியும் என்கிற மருமகளின் கேள்விக்கு, உன் கணவன், என் மகன் என்று சொல்கிறார், கிரேஸ். மொத்த ரகசியமும் வெளிவருகிறது. இதுவரைதான் ஒரு கதை என்கிற பாணியில் படம் நகர்கிறது. இதுவரை அச்சு, கிரேஸ், மேத்யூஸ் மூவரின் தற்கால நிலையும், அவர்களின் பின்புலமும் ஒரு அறிமுகம்போல சொல்லப்படுகிறது. அதன்பின் வரும் காட்சிகள் அனைத்துமே அவர்களில் மனப்போராட்டங்கள் மூலமும், உரையாடல்கள் மூலமும் மட்டுமே சொல்லப்படுகிறது.

தந்தையின் உடல்நலம் கருதி, மகன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். அவனுக்கு அனைத்து விபரமும் தெரிய வருகிறது. சிறு வயதிலேயே தன் அம்மா தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் என்கிற கோபம் அவனுக்கு இன்னமும் இருக்கிறது. அவன் தன் தாயுடன் இணங்கி செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறான்.

ஒருபுறம் கிரேஸின் கணவர் மேத்யூஸ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு ஒரு காலும், கைகளும் செயல் இழந்த நிலையில் இருக்கும் ஒரு ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியர். தன்னுடைய அத்யாவசிய இயற்கை உபாதைகளைக்கூட தனியாக செய்துகொள்ள முடியாத நிலையில் கிரேஸின் உதவியுடனே வாழ்ந்து வருகிறார். வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு முதிர்ந்த தம்பதியரின் பிணக்கமும், அன்பும் இவர்களின் வாழ்வில் அற்புதமாக கலந்திருக்கிறது. உடல்ரீதியான எந்த நெருக்கமுமில்லாத இந்த தம்பதிகள், ஒரு முழுமையான வாழ்வை அன்பின் பெயரால் வாழ்ந்து வருகின்றனர். உண்மையிலேயே படம் பார்க்கும்போது இப்படி ஒரு வாழ்க்கை இருந்துவிடாதாவென ஏங்க வைக்கும் அழகான ஜோடியாக இருவரும்.

நாற்பது வருடங்கள் பிரிவிற்குப் பிறகு சந்திக்கும், அந்திமகாலத்தில் இருக்கும் இரு இரு முன்னால் காதலர்கள் அல்லது தம்பதியர்கள். கிரேஸிற்கு குழந்தையோடு அச்சுதமேனனை தனித்துவிட்டு பிரிந்து வந்ததில் இருக்கும் குற்ற உணர்ச்சி, மகனுக்கு தாயின் மீதான வெறுப்பு, கிரேஸ்-மேத்யூ தம்பதியரின் முதிர்ந்த காதலுக்கு சாட்சியாய் அச்சுதமேனன், தன் தாய் ஏற்கனவே திருமணமானவள், அவளுக்கு ஒரு மகன், தனக்கு ஒரு அண்ணன் இருப்பதை இதுவரை மறைத்ததற்காக பெற்றவர்களிடம் கோபம் கொள்ளும் பெண், பெண்ணாசை பிடித்த அவள் கணவன், அச்சு-கிரேஸ் இருவரின் உறவில் களங்கம் காணும் இவர்கள் இருவர் இப்படியான கலவையான கதாப்பாத்திரங்களுக்கிடையே மறுபுறம், கிரேஸ் மற்றும் அச்சு இருவரும் மெல்ல தங்களது தற்சமய விபரங்களைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து ஆரம்பிக்கும் அடுத்த அதித்யாயத்தோடு நிறைவடைகிறது படம்.

அச்சுதமேனன், கிரேஸ் மற்றும் மேத்யூஸ் இந்த மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள்தான் முழுப்படமும். நாற்பது ஆண்டுகளாக காதல் என்ற ஒரு இழை இந்த மூவருக்குமிடையே நெளிந்து ஓடுகிறது. முதலில் அச்சு-கிரேஸ் இருவரில் தொடங்கி பின் கிரேஸ்-மேத்யூஸ் இருவருக்குள் வந்து பிறகு அச்சு-மேத்யூஸ் என்பதில் முடிகிறது, காதல். இல்லை தொடர்கிறது காதல். ஆம், சிலவிசயங்கள் புரிந்து கொள்ளப்படாமலேயே போய்விடும். ஆனால் இந்த இருவருக்கிடையே ஒரு புரிதல் இருக்கிறது. இருவரின் முதிர்ந்த மனதும் அதை அழகாக வெளிப்படுத்துகிறது.

       கிரேஸிற்கும் மேத்யூஸிற்கும் திருமணமாகி அழகான குடும்பத்தோடு வாழ்ந்து வருகிற நிலையில் முன்னாள் காதலர்கள் தங்கள் உணர்வுகளை அவர்களின் இலையுதிர்காலத்தில் கடந்தால் என்ன நடக்கும்?
இதன் காரணமாய் நிகழும் மனச்சங்கடங்களும், பிரிவுகளும், சந்தோசமும் புது உறவுகளும் என்னவாகும்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்ட அச்சு–கிரேஸ் இருவரும் ஓராண்டு திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாய் பிரிகிறார்கள் (மத வேறுபாடு). இவ்வளவுதான் சொல்லப்படுகிறது, அதுவும் வெறும் வசனங்களால் மட்டும். ஏன்?
ஆனால் இவர்கள் இருவரின் அந்த இளம்பிராயக் காதலோ அரைமணி நேரத்திற்கும் மேலாக வருகிறது. ஒரு மழைப்பாடல் கூட உண்டு. ஏன்?

இப்படியான கேள்விகளுக்கு தன் திரைப்படத்தின் மூலம் பதில் சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குனர். ஆனால் அவர் அப்படியேதும் சொல்லவில்லை. மாறாக பார்வையாளர்களுக்குள் அந்த கேள்விகளை விதைத்து செல்கிறார்.

மோகன்லால், அனுபம் கேர், ஜெயபிரதா மூவரும் மிகப்பெரிய ஆளுமைகள், ஆனாலும் மூவரும் பாத்திரமறிந்து அடக்கி வாசித்திருக்கிறார்கள். இதுவரை எழுதியதைப் படிக்கும்போது மேத்யூ என்கிற கதாப்பாத்திரம் படத்தில் என்ன செய்கிறது? என்றால் எதுவுமே இல்லை. ஆனால் படம் முடியும்போது மோகன்லாலின் கதாப்பாத்திரம்தான் மனதில் நிற்கிறது. அதிலும் எதற்காகவும் வருந்தாமல் தத்துவார்த்தமாக தேர்ந்த சொற்களால் உரையாடும் அவரது பாங்கு. ( Past means bucket of ashes)

அனுபம்கேர், ஆஹா என்ன ஒரு அருமையான பாத்திரபடைப்பு இவருடையது? ஒரு குழந்தையைபோல எல்லா இடத்திலும் தன்னை நிருவ முயன்றுகொண்டேயிருக்கும் மனிதர். தன் பேத்தியின் காதலனோடு சேர்ந்து கால்பந்து விளையாடுகிறார், மகனிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வந்ததற்காக வருத்தப்படுகிறார், ஒருநாள் மட்டும் என்னோடும், நம் மகனோடும் சேர்ந்து நாம் ஒரு கும்பமாக வாழவேண்டும் என ஆசைப்படுகிறேன் கிரேஸ், ஒருநாள் ஒரேநாள் என்று மறுகுகிறார். கிரேஸ்-மேத்யூ ஜோடியை சிறு இயலாமையுடன் பார்க்கும் பார்வை, இவருடைய உடல்மொழி அவ்வளவு அற்புதம்.


படம் பார்த்த ஒரு நண்பர் சொன்னார், இந்தப்படம் இந்த இயக்குனரின் (ப்ளஸி) சுமாரான படம்தான், அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவாக நிறைவேற்றவில்லை, என்று. ஆனால் நான் நிறைந்திருக்கிறேன். ஒரு அழகான ஃபீல் குட் மூவி பார்த்த திருப்தி இருக்கிறது, எனக்கு.

       மேலும் : படம் நெடுக ஒரு இசை பின்னணியில் ஒலிக்கிறதுவயலினாக, பியானோவாக, புல்லாங்குழலாக, ஆர்கனாக, ட்ரம்பெட்டாக மாறி மாறி ஒலிக்கிறது. குரு படத்தில் வரும் ஒரே கனா என் வாழ்விலே என்ற பாடலைப்போல இருந்தாலும் நல்ல ஃபீல். பின் அழகியராட்ஷசி ஸ்ரேயாவின் குரலில் ஒரு காட்டில் பாடல் கேட்டுக்கொண்டேஇருக்கலாம். ம்ம்ம்ம்ம்!!!! என்ன பொண்ணுடா......!!!!!
ஃபிலிம் வெர்ஷன் http://www.youtube.com/watch?v=S9ne0Bb2UoM

          மேலும் : படத்தில் மூவரும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே ஒரு பாடல் பாடிக்கொண்டிருக்கும், அடுத்ததாக கோஹனின் அருமையான பாடல் என்று சொன்னதும், மேத்யூஸ் “I’m ur man” என்று சொல்வார், தொடர்ந்து அதே கரகர குரலில் பாடலையும் பாடுவார். இந்தப் பாடலையும், அந்தப் பெயரையும் கேட்டதும் எங்கோ கேட்ட நியாபகம் வந்தது. உடனடியாக இணையத்திற்கு வந்து பெயரைத்தேடியதில் "Leonard Cohen “ கிடைத்தார். சித்தப்பா வீட்டில் ரேடியோவில் கேட்டிருக்கிறேன் இந்தப்பாடல்களை. கேசட்டில் பார்த்திருக்கிறேன் இந்த முகத்தை.  மாடியில் கைப்பிடி சுவரில் நான் அமர்ந்திருக்க, ரேடியோவைத் தட்டி தட்டி ஒருவழியாக இந்த அலைவரிசையை அடைந்து, கையை தலைக்குப் பின் கட்டியபடி, ஈஸி சேரில் சாய்ந்திருக்கும் சித்தப்பா முகம் நினைவிற்கு வருகிறது.

படத்தின் ட்ரெய்லர்