அசுரகணம்“அசுரகணம் நாவலில் ராமாயணத்திலிருந்து ஆரம்பித்து ஃப்ராய்ட் உட்பட பல நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் வரையில் ஏற்றுக்கொண்ட, கிளப்பிய சித்தாந்தங்கள் இடம்பெறுகின்றன, கிளப்பப்படுகின்றன. மனித மனத்துவம் என்பதிருக்கிறதே, அது ஒரு ஆழமான, கனமான விஷயம்.ஆழமும் கனமும் கூடக்கூட ஒரு நவீனச் சிக்கலும் கூடுகிற மாதிரி இருக்கிறது. அசுரகணம் என்பது எனக்கும், என்னைப்போல சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல்”
க.நா.சு.
உண்மைதான் அய்யா, இப்படி நான் என்னையும் அசாதாரணனாக எண்ணிக்கொண்டதுண்டு. அதனால் சாதாரண செயல்களை செய்தே ஆகவேண்டிய இடங்களில், மாற்றுக்கருத்து பேசி பைத்தியக்காரனாக கருதப்பட்டவந்தான், நானும். நான் மட்டுமல்ல இந்த நாவல் வாசிக்கும் அனைவருமே, கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள்வதுபோல நாவல் வழி அகம் பார்த்துக்கொள்ளப் போவது உறுதி. 

        மரத்தின் கீழ் உனக்காகக்  காத்திருக்கையில்
      மரமேறிப்பார்க்கும் என் மனது.
                                                   -யாரோ.
*************************************************************************

சென்றவாரம் அலுவலகத்திற்கு, நானில்லாத போது ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்.  அலுவலகத்திலிருந்து,  இப்படியாக ஒருவர் உன்னை சந்திக்கவேண்டுமென வந்து காத்திருக்கிறார், என்று போனில் அழைத்து சொன்னார்கள்.  உள்ளே நுழைந்ததும், அவராக எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். சிரித்தார். கைகளைப் பற்றியபடி நிறைய பேசிக்கொண்டிருந்தார். என் பெயரைக்கூட சரியாக சொன்னார். ஆனால், எனக்கு அவர் யாரென பிடிபடவில்லை. இருந்தாலும், சினேகப்  புன்னகையுடன் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். தொழில் பற்றி பேசினார். தான் இப்பொழுது இங்கேயே குடித்தனம் வந்துவிட்டதாகவும் சொன்னார். ம்ஹூம்! இன்னும் எனக்கு பிடிபடவில்லை. என்னைப் பற்றி, இவ்வளவு தெரிந்திருக்கும் ஒருவரை எனக்கு எப்படி தெரியாமல் போனது? இனியெப்படி, அவரிடமே நீங்கள் யாரெனக் கேட்பது? 

மனைவி எப்படி இருக்கிறாள்? எதுவும் விஷேசமா? என்றார். சிரித்தபடியே, எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தபடி இருந்தேன். தன் கைப்பையிலிருந்து ஒரு எவர்சில்வர் சம்படத்தை எடுத்து, பொட்டுக்கடலை உருண்டை, அச்சுவெல்லம் போட்டு செஞ்சது, அப்பாவுக்குப் பிடிக்கும். வீட்டுக்குப் போயிருந்தேன், வீடு பூட்டியிருந்தது. அதான் இங்க வந்தேன் என்று கொடுத்தார். எனக்குப் பைத்தியம் பிடித்தது போல இருந்தது. இதற்கு மேலும் அவர் பேசிக்கொண்டுதான் இருந்தார். என் காதில் எதுவுமே விழவில்லை. என் நினைவடுக்களில் இருந்த ஒவ்வொரு முகமாய் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். மனது எங்கெங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது இரவு வரை. 

அப்பா வீட்டுக்கு வந்ததுமே, அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன். அட செல்வமா? வந்திருந்தானா? என்றார். நீடாமங்கலத்தில் இருக்கும் அப்பாவின் சொந்தத்தில் ஒருவர். அட! அவன் உன் கல்யாணத்துக்குகூட வந்திருந்தானேடா? என்று தொடங்கி, அப்பா இன்னும் நிறைய சொன்னார். மீண்டும் மனது பயணிக்கத் தொடங்கி விட்டது. இது ஒரு சிறு சம்பவம்தான். உங்களுக்கு சொன்னதும் சிறு நிகழ்வுதான், ஆனால், என் மனது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னும் பின்னுமாய் அலைந்து, கொண்டு வந்த விஷயங்களை வைத்து ஒரு நாவலே எழுதலாம். பயப்படாதீர்கள். நான் எழுதமாட்டேன். ஆனால், அப்படியான ஒரு நாவலுக்கான அறிமுகம்தான், இது.

இது அப்படியான ஒரு நாவலுக்கான அறிமுகம்தான். நாவலின் பெயர், அசுரகணம். எழுதியவர், கந்தாடை நாரயணசாமி சுப்ரமணியம் என்கிற க.நா.சு.


 தன்னை ஒரு அசாதாரணமானவனாக, விசித்திர சிந்தனை கொண்டவனாக நம்பும் ஒரு கல்லூரி இளைஞனின் பார்வையில், பார்வையில் என்று சொல்வதைவிட, நல்லன கெட்டன என எல்லாவற்றை சுழற்றிக் கொண்டு ஓடும் காட்டாற்றின் வெள்ளம் போன்ற அவனது எண்ண ஓட்டத்தில், சுழன்று ஓடும் அவனது அக உணர்வுகளால் சொல்லப்படுகிறது, இந்த நாவல்.

இந்த நாவலில் நடக்கிற சம்பவங்கள், உடையாடல்கள் என்று பார்த்தால் மிகவும் சொற்பம். ஆனால் ஒவ்வொரு பக்கங்களும், வரிகளும் மனதில் அக உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. எந்த குறிக்கோளுமில்லாமல், விருப்பு வெறுப்புமில்லாமல், பேதமின்றி மனதில் அலைந்து திரியும் எண்ணங்களைப் பின் தொடர்ந்து, அது செல்லுமிடமெல்லாம் அதன் திசையிலேயே பயணித்து, அகண்டு விரிந்து பயணிக்கிறது, இந்த எழுத்துக்கள்.

வாழ்கையில் பல சமயங்களில் நாம் செய்கிற பல விசயங்கள், ஆர அமர உட்கார்ந்து யோசிக்கையில் நமக்கே பைத்தியக்காரத்தனமாய் தெரியும். ஆனால் அதற்காக நாம் பைத்தியம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. ஆனால் அப்படி ஒப்புக்கொடுக்கிற ஒரு அசாதாரணனின் கதை என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமேயில்லை. தொரந்து படித்தால் ஓரிரு மணிநேரத்திலேயே முழு நாவலையும் படித்துவிட முடியும் என்கிற அளவில்தான் நாவல் இருக்கிறது. ஆனால் இது கிளறிவிடுகிற நினைவுகளும், வாழ்வியல் கோட்ப்பாடுகளும் பலநூறு நாவல்கள் படித்த அனுபவத்தைக் கொடுக்கும்.

நாவலின் சில சுவையான அக உணர்வுகள்…….
 “நான் பைத்தியக்காரன் என்பது, எனக்கே யோசிக்கையில் விளங்குகிறது. ஆகவே, என்னை மற்றவர்கள் பைத்தியக்காரன் என்று சொல்கிற பொழுது கோபம் வருவதில்லை. ஏனென்றால் எனக்கு பைத்தியக்காரனாக இருக்கவும் உரிமை உண்டு, அந்த உரிமை உனக்கு கிடையாது என்று யாராவது சொல்கிற பொழுதுதான் உண்மையில் எனக்கு கோபம் வருகிறது. என் உரிமைகள் எதையும் பறிகொடுக்க நான் தயாராக இல்லை”

     “நான் பைத்தியக்காரன் என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகம் இல்லை. ஆனால் உலகில் உள்ள மற்றவர்களும் பைத்தியக்காரர்கள்தானோ என்கிற சந்தேகம் எனக்கு சில சமயங்களில் ஏற்படுவதுண்டு. இருந்தும் நான் அசாதாரணமானவன். ஆனால், பைத்தியக்கார உலகில் மாறுபட்டவனாக இருப்பதும், பைத்தியங்கள் அல்லாத உலகில் மாறுபட்டவனாக இருப்பதும், ஒன்றுதானே?”

“காலம் என்ற ஒன்றைப்போல காதலும் நாமாக நமக்காக சிருஷ்டித்துக்கொண்டுவிட்ட ஒரு பொய்தான். ஆனால் அந்தப்பொய்யின் உதவியில்லாமல் வாழ்வதே சாத்தியமில்லை, என்பதுபோலத் தோன்றுகிறது! பாவம்! இலக்கியத்தில் மட்டுமே ‘நிஜமாக’ இருக்கிற காதலை, கானல் நீரை எடுத்து நாம் நீர்நிலையாக மாற்றிக்கொள்ள முயன்று ஏமாறுகிறோம்”  


 “பிறர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப்பார்த்து, அதற்காக தயங்குகிறவன் இல்லை நான். என் உள்ளத்தில் அலைமோதி, பாய்ந்து, ஓயந்து அடங்குகிற சிந்தனைகளையே, அதன் ஓட்டத்தில், அதன் எல்லை வரை தொடர்ந்து சென்று முடிவு காண்பதற்கே எனக்கு தைரியமும் மனோபாவமும், தெம்பும், நேரமும் போதவில்லை. இதில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெண்ணி கவலைப்பட என்ன இருக்கிறது”
   
   "பழக்கப்பட்ட சுவட்டிலே, தேய்ந்துபோன தடத்திலே, மனித மந்தையிலே, நானும் ஒரு மந்தை ஆடாய், யார் கண்ணிலும் தனியாகப் படாமல் இருந்துவிட்டு சுவடு தெரியாமல் போய்விடுவதுதான் நல்லது என்று தோன்றுகிறது. இது தெரியாமல்தான் மனிதர்கள் நினைவுச்சுவடுகளை நிர்மாணிக்கிறார்கள்! பாவம்! கறையெல்லாமே அழுக்குதான், நினைவுச்சின்னங்கள் எல்லாமே மறதியையே சுட்டிக்காட்டுகின்றன”
      
     “சுலபமாக, சிரமப்படாமல், யாரையும் சிரமப்படுத்தாமல் வாழ்ந்துவிட்டு இறப்பவனே சிறந்த மனிதனாக இருக முடியும். அப்படியிருக்க, என்னைப் போன்றவன், மனிதர்களிடையே மனிதன் என்று சொல்லிக்கொண்டு, பிறரை ஏமாற்றிக்கொண்டு, மனதிலே வனவிலங்காக வாழ்வது, தவறு என்றும் தோன்றுகிறது. ஆனாலும் நான் சாதாரணன் அல்ல”

“கெட்டிக்காரனாக இருப்பதென்பது எதுவும் பேசாமல் இருப்பதல்ல, எதையும் சிந்திக்காமல் இருப்பதுதான். சிந்தனைதான் மனிதனை அசாதாரணமானவனாக மாற்றுகிறது”

இதற்கு முன் தல வெயிலானின் உறவினர், நினைவாகக் கொடுத்த பொய்த்தேவுதான் நான் வாசித்த க.நா.சு அவர்களின் முதல் நாவல். இது இரண்டாவது. பொய்த்தேவு பற்றியும் எழுதவேண்டும். வெறும் இரண்டே நாவல்களில் இவ்வளவு அகப்போராட்டங்களை கிளப்பிவிட்டது இவராக மட்டுமே இருக்க முடியும். நல்ல புத்தகங்களை தேடி வாசிக்கும் எவருக்கும், என்னால அற்புதமான புத்தகத்தின் அறிமுகம்தான் இது. அவசியம் வாசியுங்கள்.

9 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு நாவல் அறிமுகம்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

butterfly Surya said...

வாசிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி முரளி.

கோபிநாத் said...

லிஸ்டூல புது நாவலை ஏத்திட்டிங்க நன்றி தல ;-))

வெயிலான் said...

பொய்த்தேவு! மதுரையில் திரு. செல்வம் கொடுத்ததா முரளி?

☼ வெயிலான் said...

பொய்த்தேவு?

மதுரையில் திரு. செல்வம் கொடுத்த புத்தகமா முரளி?

Murali Kumar said...

தேங்க்ஸ் சார், இதோட விட்டுடாம நாவலை படிக்க முயற்சி செய்யுங்கள்.

Murali Kumar said...

ண்ணா! படிங்ணா. செம்ம செம்ம... :-)

Murali Kumar said...

சத்தியமா சொல்றேன் ஸ்டூல ஏத்திட்டிங்ன்னுதான் படிச்சேன். :-))

Murali Kumar said...

அதே அதே தல :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.