VICKY DONAR - விக்கி, 54 குழந்தைக்கு அப்பாபல்தேவ் சத்தா ஒரு டாக்டர். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு மற்றவர்களின் உயிரணுக்களை தானமாக பெற்று அவர்களை குழந்தைப் பெற்றுக்கொள்ள வழி செய்யும் குழந்தைபேறு மருத்துவமனையை (ஆண்டிஃபெர்டிலிடி க்ளினிக்) நடத்திவருகிறார். தில்லிக்காரர். எனக்கு ஒரு கிரிக்கெட்டரின் உயிரணு வேண்டும், என் மகன் இந்தியாவிற்காக கிரிக்கெட் ஆட வேண்டும்என்று வரும் ஒரு கணவன், “எனக்கு ஒரு அழகான மாடலின் உயிரணு வேண்டும் என் மகள் அழகான மாடலாக வேண்டும்என்று வரும் மனைவி, சரியான உயிரணு கிடைக்காததால் எட்டு வருடமாக அவரிடம் தொடர்ந்து வரும் ஒரு தம்பதியினர், இப்படி நிறைய எதிர்பார்ப்புகளோடு அவரிடம் நிறைய தம்பதிகள் வருகின்றனர். ஆனால் அவருக்கு ஒரு சரியான உயிரணு தானம் செய்பவர்கள்  கிடைக்காமல் மருத்துவமனையே வெறிச்சோடிக் கிடக்கிறது.

கணவனை இழந்து மாமியார் மற்றும் மகனோடு வாழ்ந்துவரும் டோலி அரோரா. அவர் நடத்தும் ப்யூட்டி பார்லரின் வருமானத்தில் ஜாலியாக செலவு செய்துகொண்டு திரியும் ஒரு வெட்டி பஞ்சாபி பயதான் ஹீரோ, விக்கி அரோரா. அம்மாவோட காசிலேயும் பாட்டியோட செல்லத்திலேயும் பிரம்மாதமா வாழ்ந்திட்டிருக்கான். இப்படி ஹாயா திரியிற அவனை ஒருநாள் டாக்டர் பார்க்கிறார். ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கிறவன்  “ஸ்பர்ம்ஹெல்த்தியா இருக்கும்ங்கிற மெலோட்டமான முடிவில் அவனை உயிரணுக்களை தானம் செய்யசொல்லி விக்கியைப் பாடாய்ப்படுத்துகிறார்.  விக்கியும் அவரைத் தவிர்க்க எவ்வளவோ முயற்சி செய்கிறான். ஒருகட்டத்தில் டாக்டர் வீட்டுக்கே வர “வீட்டுக்குத் தெரிஞ்சா அசிங்கம்ங்கிற, தெரியான சும்மா பாக்கெட் மணி-செலவுகளுக்காக செய்யலாம் என்கிற நிலைக்கு வரான் விக்கி.

டெஸ்டிற்காக அவனது உயிரணுக்களைப் பெற்று அதை டெஸ்ட் செய்துவிட்டு 100% உயிர்ப்புள்ள உயிரணுக்கள் என்கிற ரிப்போர்ட்டோடு மீண்டும் விக்கியிடம் வருகிறார். நீ அலெக்ஸாண்டரோட நீட்சி, ஆரியகுலத்தின் வாரிசு என்றெல்லாம் அவனுக்கு விளக்கி ஒருவழியாய் அவனை சம்மதிக்க வைக்கிறார். ஒருநாள் விக்கி, விந்து தானம் செய்ய சம்மதிக்கிறான், ஒரு சுபயோக சுபதினத்தில் அதைச் செய்தும் முடிக்கிறான். பதிலுக்கு கைநிறைய பணம் கிடைக்கிறது, மேலும் அவன் பாட்டி ஆசைப்படி வீட்டிற்கு ஒரு LCD டிவியும் வந்து சேர்கிறது. இது என்ன டாக்டர்? என்றால் நீ தானம் செய்த பாட்டியாவின் மனைவி கருவுற்றிருக்கிறார். எட்டு வருடங்களாக குழந்தை இன்றி தவிக்கும் அவருக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி, இது அவரது சிறு பரிசு, என்கிறார், டாக்டர். விக்கிக்கு இது நல்ல சம்பாத்தியமாகப் பட தொடரந்து உயிரணுக்களை தானம் செய்கிறான்.

ஒருமுறை அம்மாவின் பணத்தை வங்கியின் செலுத்த வருமிடத்தில் ஆஷிமாவை சந்திக்கிறான். (யாமி கெளதம், என்னப்பொண்ணுடா!, ஸ்பெசலா அந்த 7ஆம் நம்பர கவுத்து வைச்ச மாதிரியான அந்த ஸார்ப் மூக்கு) அவளுடைய பாந்தமான அழகில் மயங்கி அவள்மேல் காதல் கொள்கிறான், விக்கி. ஆஷிமா, ஒரு பெங்காலிப் பொண்ணு. பெற்றோர் விருப்பத்திற்காக தன்னை மணம் புரிந்து, பின் முதலிரவின் போது அது தெரிந்ததால் அங்கிருந்து வெளியேறி விட்டு தனியாகவே வாழ்ந்துவிட முடிவெடுத்து டெல்லியில் வசித்துவருகிறாள். விக்கி தினமும் அவளை சந்திக்கிறான், மெல்ல அவளை தன்வழிக்கு கொண்டுவருகிறான். ஒருநாள் இருவரும் தங்கள் காதலை உணர்கின்றனர். அதை இருவரும் சொல்லிக்கொள்ளுமிடத்தில் ஆஷிமா தான் விவாகரத்து ஆனவள் என்கிற உண்மையை விக்கியிடம் சொல்கிறாள், விக்கியோ ஏற்கனவே பல பெண்களிடம் தானொரு விந்துதானம் செய்பவன் என்று சொல்லி அடிவாங்கியதால் அதை அவளிடம் மறைத்துவிட்டு  “பரவாயில்லை அதனாலென்ன, என்ன என் அம்மாவிடம் சொல்லாமல் விட்டுவிடலாம், அவங்க இன்னும் ரொம்ப பழைய பஞ்சாங்கம்தான் என்கிறான். 

ஒருவழியாய் இருவரும் வீட்டில் தங்கள் காதலைச் சொல்ல, வீட்டில் ஒரே களேபரம்தான். விக்கியின் அம்மாவும் சரி, ஆஷிமாவின் அப்பாவும் சரி, பஞ்சாபி-பெங்காலி குடும்பங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை இருவரும் பெரிதாக நினைக்கிறார்கள். இரண்டு பக்கமும் ஒருவரைப்பற்றி ஒருவர் கிண்டலடிப்பதும் கலாய்த்து தள்ளுவதுமாய் இருக்கின்றனர். குறிப்பாக ஆஷிமாவின் அப்பா ஒருத்தன் மீன் வாங்குற அழக வச்சே அவன் பெங்காலியான்னும், அவன் கேரக்டரையே கண்டுபிடிச்சிருவேன்னும், அவனுங்க (பஞ்சாபிகளை) நல்ல உருளை மசாலை தின்றுவிட்டு பல்லே பல்லேன்னு குரங்கு மாதிரி ஆடுவாங்க, நாகரீகம் தெரியாதவங்க, என்கிறார். ஒரு கட்டத்தில்  ஒரு நல்ல பெங்காலி படுக்கையிலும் கெட்டிகாரனாத்தான் இருப்பான், ம்க்கும்,ஆஷிமா! உனக்கு ஒரு பெங்காலி பையன் கூடவா கண்ணுடல படல இந்த டில்லியில, என்று புலம்புகிறார். எல்லாத்தையும் பொறுமையாக கேட்டிவிட்டு ஆஷிமா “சரி எப்ப விக்கி வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லுங்க என்கிறாள்.

விக்கியின் அம்மாவோ “இதோ பாரு விக்கி, நான் உன்னை எந்த விஷயத்திலேயும் கட்டுப்படுத்தியது இல்லை, ஆனா இது முடியாது. உனக்கு பஞ்சாபி பொண்ணுக ஏதும் கிடைக்கலையா? ஆவ்வ்வ்.. இந்த பெங்காலீஸ் எப்போதும் மீனைப் பொறித்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்களே, உவ்வேக்என்று புலம்ப, ஒருபுறம் விக்கியின் பாட்டியோ, விக்கியின் போனில் ஆஷிமாவின் போட்டோவை வாங்கி பார்த்துவிட்டு “ஆஹா என்ன அழகா இருக்கா, டேய் பேரா, உன்னோட தேனிலவு செலவு என்னோடது, ஜமாய்என்கிறார். (இந்த மாமியார் மருமகள் சண்டை அவ்வளவு சுவாரஸ்யம், அதிலும் பாட்டியின் கவுண்டர்ஸ், கலக்கல். அவ்வளவு சண்டையும் போட்டுவிட்டு பின்னிரவில் இருவரும் சேர்ந்து மதுவருந்தியபடியே ஒருவருக்கொருவர் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்) ஒருவழியாய், இரண்டு குடும்பமும் சந்தித்து சம்பந்தம் பேசுகிறார்கள். அங்கே ஆஷிமா விவாகரத்தானவள் என்பதும், திருமணத்தை எந்த முறைப்படி செய்யவென பல வாக்குவாதங்கள் நடக்கிறது, கடைசியாய் எல்லாம் பேசி இரண்டு முறைப்படியும் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். கல்யாணமும் முடிகிறது.

திருமணமாகி சில மாதங்கள் கழிந்து ஆஷிமாவிற்கு கருத்தரிக்க தகுதியில்லை என தெரிய வருகிறது. இருவரும்  உடைந்து போகின்றனர். விக்கி அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அப்போதைய தொடர் உரையாடலில் நீ ஏன் டெஸ்ட் எதுவும் செய்யலை, என்கிற கேள்விக்கு நான் முன்பு விந்துதானம் செய்திருக்கிறேன், அதனால் எனக்கு தெரியும் என்கிறான். ஆரம்பிக்கிறது அதகளம். நான் விவாகரத்தானதைக்கூட உன்னிடம் சொன்னேனல்லவா? நீ ஏன் என்னிடம் இதை மறைத்தாய்? என்று சண்டையிடுகிறாள். கோபத்தில் அப்பா வீட்டிற்கு சென்றுவிடுகிறாள். இதற்கிடையே நிறைய கருப்புபணம் வைத்திருந்த்தாக சொல்லி விக்கி கைது செய்யபடுகிறான். டாக்டர் போதுமான விளக்கங்கள் கொடுத்து அவனை பெயில் விடுவிக்கிறார். உண்மை அனைவருக்கும் தெரிகிறது. விக்கியின் அம்மாவும் பாட்டியும் அவமானத்தால் புழுங்க, வீட்டிற்கு போன் செய்யும் டாக்டரை விக்கியின் அம்மா கடுமையாக திட்டி தீர்க்கிறார். ஆஷிமாவைப் பிரிந்து விக்கி கவலையோடிருக்கிறான். ஆஷிமாவின் தந்தையோ இதிலென்ன தவறு இருக்கிறது, நல்ல விஷயம்தானே, என்கிறார். ஆனால் ஆஷிமாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் பிரிந்தே இருக்கின்றனர்.

டாக்டருக்கோ, விக்கியின் இந்த நிலைக்கு தான்தான் என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, மீண்டும் அவனை ஆஷிமாவோடு சேர்த்துவைக்க முடிவெடுக்கிறார். விக்கியால் உயிரணுக்கள் பெறப்பட்டு குழந்தை பெற்ற எல்லா தம்பதிகளுக்கும் தன்னுடைய மருத்துவமனையின் 25வது ஆண்டுவிழாவின் அழைப்பிதழை அனுப்புகிறார். விக்கியையும் ஆஷிமாவையும் சந்தித்து அவர்களையும் சமாதானப்படுத்தி விழாவிற்கு அழைத்து வருகிறார். அங்கே ஏராளமானவர்கள் குழந்தைகளோடு சந்தோசமாக வருகின்றனர். விக்கி ஆஷிமா இருவரையும் அழைத்து “இங்கே கூடியுள்ள இந்த தம்பதிகளைப் பாருங்கள், இவர்கள் அனைவருமே பலவருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்தவர்கள், இப்பொழுது இவர்களைப் பார், இவர்களின் சந்தோசத்தைப்பார், இந்த அழகான குழந்தைகளைப் பார், இவை அனைத்துமே உன் கணவனால்தான் சாத்தியப்பட்டது. இத்தனைப்பேரின் வாழ்வில் சந்தோசத்தை மீட்டுக்கொடுத்திருக்கிறான், இதிலென்ன தவறு என்று சொல்லி ஆஷிமாவிற்கு புரியச் செய்கிறார்.

அவர்களை நான் போய்ப்பார்க்கலாமா? என ஆஷிமா கேட்கிறாள். தாராளமாக, ஆனால் அவர்களிடம் உண்மையை சொல்லக்கூடாது, நியாயமாக நானே இந்த உண்மையை உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது, இருந்தாலும் இதை உங்களுக்காவே  செய்தேன் என்கிறார், டாக்டர். இதில் எத்தனை குழந்தைகள் என்னுடையது என்கிறான் விக்கி ஒவ்வொரு குழந்தையும் உன்னுடையதுதான், மொத்தம் 53 குழந்தைகள் என்கிறார். விக்கி வாயடைத்துப்போகிறான். ஆஷிமா, ஒவ்வொரு குழந்தைகளையும் பார்க்கிறாள். புரிந்துகொள்கிறாள், பின்னர் விக்கியிடம் இணைகிறாள், க்ளைமேக்ஸ்.

எல்லா ஃபீல் குட் படங்களிலும் வருவதுபோல ஒரு சினிமா கிளைமேக்ஸாக டாக்டர், 54 நாளாவது குழந்தையை காண்பிக்கிறார். விக்கியால் பிறந்த குழந்தைதான் ஆனால் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்துவிட்டு அனாதை ஆசிரமத்தில் இருக்கிறாள், ஒரு குட்டி தேவதை. விக்கி-ஆஷிமா அவளைத் தத்தெடுத்துக்கொள்ள சுபம்.


ஹீரோ விக்கியாக ஆயுஷ்மன் குரானா. எம்.டியில் ரோடீஸ் ஷோவில் பங்குபெற்று ஜெயித்து எம்.டிவியிலேயே அதே நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கியவர். ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். பய கோணவாய வச்சிகிட்டே சும்மா விளையாடுறான். முதன் முதலாக விந்துதானம் செய்ய முயலும்போதும், முடித்துவிட்டு வெளியே வரும்போதும் அவனுடைய ரியாக்‌ஷன்ஸ் சான்ஸே இல்ல. கலக்கல் இன்னொரு ஸ்பெசல் இந்தப்படத்தின் மிக அருமையான பாடலில் ஒன்றான பானி டா ரங் வேக்குகே பாடலையும் இவரேதான் பாடியிருக்கிறார். 

டாக்டராக அன்னுகபூர். தூர்தர்ஷனிலும் ஸீ டிவியிலும் அந்தாக்‌ஷரி என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியவர். நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட். இவரும் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். இந்தாளுதான் செம்ம பர்பாமன்ஸ். முட்டாப்பய, விளையாட்டுப்பய என்று நாம் பேச்சுவழக்கில் சொல்வதைப்போலம் விக்கி என்ன செய்தாலும், அவனை முட்டாள் ஸ்பர்ம்ம், விளையாட்டு ஸ்பர்ம்ம்ம் என்று சொல்லுமளவிற்கு இவருக்கு எல்லாமே “ஸ்பர்ம்”மயம்.மொத்த மனித குலத்தையுமே அவர் ஸ்பர்ம்களின் கூட்டமைப்பாகவே பார்க்கிறார். அதிலும் இவருடைய உச்சரிப்பில் ஸ்பர்ம்ம்ம் அவ்ளோ அழகு.


ஆஷிமாவாக 'யாமி கௌதம்'  ஃபேர்&லவ்லி மாடல். விளம்பரத்துலயே அம்சமா இருப்பா, அதுவும் இந்தப்படத்துல டார்லிங்கிற்கு காஸ்டிங் பண்ணவருக்கு கை கொடுக்கனும். சேலையும் சரி, மாடர் ட்ரெஸ்களும் சரி அவ்வளவு டீசண்டாக, அழகா பண்ணியிருக்காங்க. ஸ்ஸப்ப்பா என்னோட டார்லிங் லிஸ்ட் கூடிகிட்டே போகுது. தமிழில் ராதாமோகனின் கெளரவத்தில் அறிமுகம்.

இவர்கள் போக, ப்யூட்டி பார்லர் நடத்தும் விக்கியின் குண்டு அம்மா, அந்த செம்ம மாடர்னான பாட்டி (படத்திலேயே ஒரு டயலாக் வரும், டெல்லியிலேயே ரெண்டு விஷயம்தான் செம்ம மாடர்ன், ஒண்ணு மெட்ரோ ரயில், இன்னொன்னு பாட்டீன்னு), பங்ரா ஆடும் பெங்காலி அப்பா, பெப்ஸி ஆண்டி, மொட்டைமாடி ஒன்சைட் காதலி என நிறைய இண்ட்ரஸ்டிங் கேரக்டர்ஸ் படம் முழுக்க, அனைவருமே படத்துக்கு மிகவும் பொறுத்தமான பாத்திரத்தேர்வு. நல்ல பாடல்கள், அழகான கேமிரா ஒர்க்ஸ், நகைச்சுவையோடு தெளிவாக நகரும் திரைக்கதை இப்படி எல்லாமே படத்தில்  ப்ளஸ்தான்.


கொஞ்சம் முன்னப்பின்ன போனாலும் அருவருப்பான ஆபாசம் என்கிற எல்லையைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும், ஒருசில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதையும் நகைச்சுவையோடு மட்டுமெ கடந்துபோகும்படியாக அலுங்காம குலுங்காம நல்ல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் ஆப்ரஹாம் . நல்ல தைரியமான முயற்சி. அடுத்துகூட இலங்கை பிரச்சனையை சொல்லும் படம் தயாரித்து நடிக்கவும் செய்கிறார். வாழ்த்துகள் பாஸ்.

நல்ல அருமையான ஃபீல்குட் மூவி. ஜாலியா குடும்பத்தோட ஞாயிறுகளில் பார்க்கலாம்.


5 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விமர்சனம்... பாராட்டுக்கள்... நன்றி...

ஷஹி said...

அழகா எழுதி இருக்கீங்க முரளி ..

உலக சினிமா ரசிகன் said...

இன்றே இப்படத்தை பார்க்கப்போகிறேன்.
தமிழில்...இப்படத்தை ரீ-மேக்குகிறார்களா?

இளங்கோ said...

படம் பார்க்க வேண்டும் முரளி..

shri Prajna said...

Whenever i red your review, it's urging me to watch the movie..nicely written..ஆமா darling counts கூடிட்டே போகுது...enjoy nanba..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.