ஷஷாங்கில் ஒரு தண்டனைக்காலம் - THE SHAWSHANK REDEMPTIONதி ஷஷாங்க் ரெடம்ப்ஷன், மர்மகதை மன்னனான ஸ்டீபன் கிங்கின் குறுநாவலானரீட்டா ஹோவர்த் & தி ஷஷாங்க் ரெடம்ப்ஷன் என்கிற குறுநாவலை மையமாகக்கொண்டு ஃப்ராங்க் ட்ராஃபோன்ட் திரைக்கதையெழுதி இயக்கியபடம்.

1947ம் வருடம். ஆண்டி டூஃப்ரோன், ஒரு பேங்கர், பெரிய வங்கி ஒன்றில் கணக்கராக இருப்பவன். தன் மனைவி இன்னொரு இளைஞனுடன் படுக்கையிலிருப்பதைப் பார்த்து அவர்கள் இருவரையும் கொலை செய்ததற்காக கைது செய்யப்படுகிறான். அவன் கைது செய்யப்பட்டபோது முழுபோதையில் இருந்திருக்கிறான். இருந்தும் அந்த கொலைகளை ஆண்டி செய்திருக்கவில்லைஆனால் அப்படி செய்ய நினைத்திருக்கிறான். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவனுக்கு பாதகமாக இருக்க, கோர்ட் அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கிறது, 50 வருட சிறை தண்டனையை அனுபவிக்க ஆண்டி வருவது ஷஷாங்க் சிறைச்சாலை.

வட அமெரிக்காவில் ஷஷாங்க் நகரில் உள்ள 180 வருட பழமையான அந்த சிறைச்சாலை, இதுபோன்ற நீண்ட ஆயுள்தண்டனை கைதிகளுக்கான  ‘ப்ரத்யேகமான சிறைச்சாலை. கடுமையான சிறை அதிகாரிகள், கொடூரமான கைதிகள், ஐந்தடி அகலம் கொண்ட சுவர்களையும், சன்னல்களற்ற சிறிய அறைகளும் கூடிய அந்த கொடிய சிறைச்சாலையில் ஆரம்பிக்கிறது, ஆண்டியின் சிறை வாழ்க்கை.

சிறைக்குள் நுழைந்த காட்சியிலிருந்து கதை ரெட், என்பவரது கோணத்திலிருந்தும், அவரது குரல் வழியாகவுமே சொல்லப்படுகிறது. ரெட், இருபது வருடங்களாக அந்த சிறையில் இருக்கும் ஒரு சக கைதி. ஆனால் சிறைச்சாலையின் நீக்குபோக்குகளை அறிந்தவராக இருக்கிறார், போலவே கைதிகளையும் அதிகரிகளையும் அவர்களின் குணாதியங்களோடு அறிந்திருக்கிறார். சிறையிலிருந்து வெளியே லாண்டரிக்கு செல்லும் துணிமணிகளோடு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தேவையானவற்றை உள்ளே கொண்டுவரும் லாவகம் கொண்டிருக்கிறார், அவர்களிடமிருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு, ‘எதையும்அவர்களுக்காகஉள்ளேகொண்டுவந்துவிடுகிறார். ஆக ரெட், அனைவருக்கும் வேண்டியவராய் இருக்கிறார்.

இந்த சிறையில் தன்னை ஒரு தனித்துவம் வாய்ந்தவனாக கருதும் ரெட்டிற்கு, சிறைக்கு வரும் புதிய கைதிகளில் ஒருவனான ஆண்டியின் மெளனமும், நடவடிக்கையும் அவனை வித்தியாசமானவனாக உணர்த்துகிறது. இருவருக்குமிடையே மெல்ல நட்பு மலர்கிறது. முதன்முதலில் ரெட்டிடம் பேசும் ஆண்டி, உங்களால் எதையும் சிறைக்குள் கொண்டு வரமுடியுமெனில் எனக்கு பாறைகளை உடைக்கும், சுத்தி ஒன்று தருவிக்கமுடியுமா? என்கிறான். முடியும் ஆனால் ஆபத்தான பொருளாக இருப்பதால் கொஞ்சம் அதிகம் கமிஷன் வேண்டும் என்கிறார். அந்த சுத்தியலைப்பார்த்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள், அது மிகவும் சிறியது, கல்லை செதுக்கி சிறிய சிறிய சிற்பங்களை செய்வது என் பொழுதுபோக்கு என்கிறான். பத்து டாலர் செலவில் அது ஆண்டிக்கு கிடைக்கவும் செய்கிறது.புதிதாக சிறைக்கு வருபவர்களை தொடர்ந்து தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி அவர்களை ஓரினச்சேர்க்கையாளராக மாற்றிக்கொள்ளும், ஓரினச்சேர்க்கையாளர்களின் குழுவினரால் அடிக்கடி துன்புறுத்தப்படுகிறான், ஆண்டி. அவர்களுடன் சற்று முன்னெச்சறிக்கையாக இருக்குமாறு சொல்கிறார், ரெட். ஒருமுறை அவர்களால் மோசமான செயல்களுக்கு உட்படுத்தப்படுகிறான், அடுத்த முறை அவர்களை தைரியமாக தடுக்கிறான், அதனால் மோசமாக தாக்கப்படுகிறான். இது தொடர்கிறது.

இப்படியே சிலவருடங்கள் ஓடுகின்றன, சிறைக்கைதிகள் அருகிலுள்ள சிறைக்கு சொந்தமான கட்டிடத்தை சரி செய்ய அழைத்து செல்லப்படுகிறார்கள். இப்படி சிறைக்கு வெளியே சென்று செய்யும் எந்த வேலைக்கும் செல்ல அனைத்து கைதிகளும் விரும்புகின்றனர். ஆனாலும் ரெட்டின் செல்வாக்கில் அவர் தேர்வு செய்யப்படும் நபர்கள் மட்டுமே அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அனைவருக்கும் கடுமையான வெயிலில் மச்சுவிற்கு தார் பூசும் வேலை கொடுக்கப்படுகிறது. அவர்கள் வேலையிலிருக்கும்போது, சிறை அதிகாரியில் ஒருவர் தனக்கு தன் மாமனார் வகையில் கிடைத்த சொத்தை அரசாங்கத்தில் கணக்கு காட்டாமல் இருக்க வேண்டும், அதுவும் இப்பொழுது இருக்கும் வருமானவரித்திட்ட்த்தில் எனக்கு கிடைத்த இந்தப்பணத்தில் பாதியை வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று சக அதிகாரிகளிடம் புலம்புகிறார்.

அப்பொழுது ஆண்டி, நீங்கள் இப்படி செய்தால் நீங்கள் வரியேதும் செலுத்த வேண்டியிருக்காது என்று தானாக முன்வந்து சில யோசனைகளை சொல்கிறான். இதனால் உங்கள் பணம் உங்களிடமே இருக்கும், இந்த சந்தோசத்தை நீங்கள் எங்களுக்கு பியர் வாங்கிக்கொடுத்து பகிர்ந்துகொள்ளலாமே, என்றும் சொல்கிறான். அது அதிகாரிக்கு கோபத்தை வரவழைத்தாலும், பேங்கராக ஆண்டியின் அனுபவமும், அந்த யோசனையும் அவருக்கு சரியாய்ப்பட, ஒத்துக்கொள்கிறார். விளைவு, மொட்டைமாடியின் கத்திரி வெயிலில் ஆண்டியின் புண்ணியத்தில், சகாக்களுக்கு சில்லென பியர் கிடைக்கிறது. அதுவும் மிகவும் கடுமையான அந்த சிறை அதிகாரிகள், பாகுபாடின்றி அவர்களோடு சேர்ந்து மதுவருந்துகின்றனர். ஆண்டி மெல்லிய புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான். சக சிறைக்கைதிகளுக்கு ஆண்டியின்மீது பிரியம் அதிகமாகிறது. சிறையில் அனைத்து அதிகாரிகளுக்கும் ஆண்டி இலவசமாக வரி ஏய்ப்பு செய்துதருகிறான். அதனால் அதிகாரிகளுக்கும் நெருக்கமானவனாய் இருக்கிறான்


       ஒருநாள் சிறையில் அனைவருக்கும் சினிமா காட்டப்படுகிறது, அதில்வரும் கதாநாயகியை ஆண்டிக்கு மிகவும் பிடித்திருக்கிறது, ரெட்டிடம் எப்படியாவது இவளை இங்கே அழைத்து வரமுடியுமா? என்று கேட்கிறான். ஏன் முடியாம, என்ன கொஞ்ச காலம் ஆகும், ஆனா செய்திடலாம் என்கிறார் ரெட் உறுதியாக. தொடர்ந்து, சிறையில் யாருக்கும் அடங்காமல், அதிகாரிகளுக்கு தெரிந்தும் அடவடிகளில் ஈடுபடும் அந்தஹோமோகுழுவினர்களால் ஆண்டி மீண்டும் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் இந்தமுறை திருப்பி தாக்குகிறான். இதை நிறுத்திக்கொண்டால் உங்களுக்கு நல்லது, என்று அவர்களை எச்சரிக்கிறான். இதனால் கடுமையாக தாக்கப்படுகிறான். இதன் காரணமாக ஆண்டி ஒருமாதம் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இங்கே, ஆண்டிதான் சிறை அதிகாரிகளுக்கும் வேண்டியவனாய் இருக்கிறானே, அந்த ஹோமோ குழுவினரின் தலைவன், சிறை அதிகாரிகளால் நன்றாக கவனிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்கிறான். கைதிகள் அவனால் இனி எழுந்து நடமாடவே முடியாதாம், இனி அவன் தொந்தரவு நமக்கு கிடையாது என்று சந்தோசப்படுகின்றனர். இதைச் சாதித்த நமது ஆண்டிக்கு, மருத்துவமனையிலிருந்து வரும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும், அவனுக்கு சின்ன சின்ன சிலைகளை செதுக்க தேவையான கற்களை கொடுக்கலாம் என்கிறார், ரெட்.

குணமடைந்து மீண்டும் சிறைக்கு ஆண்டிக்கு அந்த கதாநாயகி ரீட்டா ஹேவர்ட்டின் போஸ்டர் காத்திருக்கிறது, “இதற்கு கமிஷன் எதுவும் வேண்டாம்என்கிற ரெட்டின் குறிப்போடு. அதை தன் அறையில் ஒட்டிக்கொள்கிறான். மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட சிறுகற்களில் செஸ் காயின்களை சிலைகளாக செதுக்க ஆரம்பிக்கிறான், ஆண்டி. ஒருநாள் சிறை அதிகாரி வழக்கம்போல கைதிகளின் அறைகளை சோதனையிட வருகிறார். அப்பொழுது ஆண்டியின் அறையில் ரீட்டாவின் போஸ்டரையும், சிறு கற்சிலைகளையும் பார்க்கும் வார்டன், இதெல்லாம் பொதுவாக அனுமதிப்பதில்லை, இருந்தாலும் ஆபத்தில்லாத காரணத்தினால் அனுமதிக்கிறேன், என்கிறார். மேலும் கையில் பைபிளோடு இருக்கும் ஆண்டியிடம், பைபிளிலிருந்து சில கேள்விகள் கேட்கிறார். அதற்கு ஆண்டியின் அருமையான விளக்கங்களில் வியக்கிறார். தொடர்ந்து பைபிளைப் படி, அது ஒன்றுதான் உன்னை குற்றங்களிலிருந்து விடுவிக்கும் என்று சொல்லி கிளம்புகிறார்.

வருடங்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. சிறையில் ஆண்டியின் செல்வாக்கு கூடிக்கொண்டேயிருக்கிறது. சிறையில் அனைத்து அதிகாரிகளுக்கும் வருமான வரியை ஏய்த்து கட்டுவது, சிறை சம்பந்தமான கணக்கு வழக்குகளை செய்வது என்று ஆண்டி பிஸியாகவே இருக்கிறான். இப்படி அனைத்து அதிகாரிகளின் கருப்புப் பக்கங்களையும் அறிந்திருக்கிற ஆண்டிக்கு சிறையில் நூலக அதிகாரியாக பொறுப்பு கொடுக்கப்படுகிறது. மேலும் வார்டன் சிறைக்கைதிகளை வெளி வேலைக்கு அனுப்பும் திட்டத்தின் மூலமாக ஏஜென்களிடம் லஞ்சமாக ஒரு பெருந்தொகையை வருடாவரும் பெற்று வருகிறார். அதை ஏய்க்க ஆண்டியே கணக்கில்லாமல் கணக்கிடுகிறான். இதற்காக ராண்டல் ஸ்டீவன்ஸ் என்கிற ஒரு கற்பனை கதாப்பத்திரத்தை வார்டனுக்கு பினாமியாக உருவாக்குகிறான், அதாவது இல்லாத ஒரு மனிதனின் பெயரில் வங்கியில் தனிக்கணக்கும், ஓட்டுனர் உரிமம் என அனைத்துமே தொடங்குகிறான், இத்னால் எந்த சிக்கல் வந்தாலும் அந்த மனிதனை யாராலும் பிடிக்கமுடியாது என்பதால் கொள்ளையடிக்கிற பணம் பிரித்து இந்த கணக்கில் கட்டப்படுகிறது. இதன்மூலம் அவரது லஞ்சப்பணம் இரண்டாக பிரிகிறது, இதனால் வரியாக பணம் கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது, ஆண்டியின் இந்த யோசனகள் அனைத்தையும் சிறை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
     
இதுகுறித்து ரெட்டிடம் பேசும் ஆண்டி “நான் வெளியில் இருக்கும் வரை ஒழுக்கம் மிக்கவனாகத்தான் இருந்தேன், சிறைதான் என்னை உண்மையிலேயே குற்றவாளியாக ஆக்கியிருக்கிறது” என்கிறான்.
     
மேலும் வருடங்கள் ஓடஓட ஆண்டியின் அறையில் கதாநாயகிகளின் படம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆண்டி தனக்குக் கொடுக்கப்பட்ட நூலகர் பணியையும் செவ்வனே செய்கிறான். மற்ற சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி நிறைய புத்தகங்களையும், நிதியுதவியையும் பெறுகிறான், இதன்மூலமாக நூலகத்தை அருமையாக நிர்மாணிக்கிறான். இதற்கிடையே அவனுக்கு முன் அங்கு நூலகராக இருக்கும் ப்ரூக்ஸ், தனது 50வருட ஆயுள் தண்டனையிலிருந்து பரோல் கிடைத்து வெளியே வருகிறார். வெளியே அவருக்கென கொடுக்கப்பட்ட அறையில் தங்கி கொடுக்கப்பட்ட வேலையை செய்யவேண்டும், ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது பரோலில் வெளிவரும் கைதிகளுக்கான எழுதப்படாத உத்தரவு. ஆனால் சிறையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக கழித்துவிட்ட ப்ரூக்ஸிற்கு இந்த கட்டுப்பாடுகளற்ற சுதந்திர உலகின் சுதந்திரம் மூச்சடைக்கிறது. அறிமுகமற்ற இந்த உலகில் வாழமுடியாமல் தூக்கிலிட்டுக்கொள்கிறார். ஆண்டி இந்த புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை ப்ரூக்ஸிற்கு அர்பணித்து, நூலகத்திற்கும் அவர் பெயரையே வைக்கிறான்.


ஒருநாள் மீண்டும் நூலகத்திற்கு நிறைய புத்தகங்களும் சில இசைத்தட்டுகள் வருகின்றது. அதில் மொஸார்ட் அமேதியஸின் சிம்பொனி இசைத்தொகுப்பும் இருக்கிறது. அதைக்கேட்க விரும்பி அதை வார்டனின் அறையில் இருக்கும் கிராமபோனில் இடுகிறான். மயக்குமந்த இசையை அனைத்து கைதிகளும் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறான். கதவை உட்புறமாக தாளிட்டுக்கொண்டு, சிறையின் ஒலிப்பெருக்கியில் பாடலை போடுகிறான். ரம்மியமான இசை மொத்த சிறையிலும் மெல்ல பரவுகிறது. கைதிகள் ஆங்காங்கே மெய்மறந்து நிற்கின்றனர். ரெட்டிற்கு இதை யார் செய்திருப்பார் என்று புரிகிறது, அதன் பின்விளைவுகளை நினைத்து ஆண்டிக்காக கவலைப்படுகிறார். அதிகாரிகள் வார்டனின் அறைகதவை தட்டுகின்றனர். தனக்கு கிடைக்கப்போகிற தண்டனையை அறிந்திருந்தும் ஆண்டி, பாடல் முடியும் வரை கதவை திறப்பவனாயில்லை. பாடல் முடியும் முன் கதவை உடைத்து ஆண்டியை இரும்புத்தடியால் விளாசுகிறார்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் மெளனமாக அடியை வாங்கிக்கொள்கிறான் ஆண்டி. மேலும் ஒருவார இருட்டறை தண்டனையும் கிடைக்கிறது. இது சக கைதிகளுக்கு ஆண்டியின் ஸ்திரத்தை உணர்த்துகிறது, தான் நினைத்ததை சாதிக்க ஆண்டி எதையும் தாங்குவான் என்கிறதை உணர்கிறார், ரெட். ஒருவாரம் கழிந்து வெளியேவரும் ஆண்டிக்கும் ரெட்டிற்கும் நம்பிக்கை குறித்தான ஒரு அழகான விவாதம் நடக்கிறது. அது ஆண்டியின் கேரக்டரை பார்வையாளர்களுக்கு கடத்தும் காட்சிகளில் ஒன்று.
    
சிறைக்கு மேலும் புதிய கைதிகள் வருகின்றனர், அதில் டாமி எனும் இளைஞன் புதிய கைதியாக வருகிறான். சிறுசிறு திருட்டுக்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு செல்லும் அவனுக்கு இரண்டாண்டு தண்டனைக்காக அங்கே வருகிறான். ரெட்டிற்கு ஆண்டி போல, ஆண்டிக்கு டாமி.  படிப்பறிவற்ற அவனை மெல்ல படிக்க வைக்கிறான், ஆண்டி. டாமி, தபாலிலே படிக்கிறான்.

“ஆனா சிறையில் நேரம் ரொம்ப மெதுவாகதான் போகும், நீங்க என்ன வேணாலும் செஞ்சிக்கலாம், சில பேர் ஸ்டாப் கலெக்ட் பண்ணுவாங்க, சிலபேர் தீக்குச்சி வச்சி பொம்ம வீடு கட்டுவாங்க ஆனா ஆண்டி ஒரு லைப்ரரிய உருவாக்கினான், அடுத்து என்ன பண்ண போறான்னு நினைக்கிறப்போ டாமிய உருவாக்க ஆரம்பிச்சான். ஆனா என்ன பண்ணாலும் நீங்க பண்றதுக்கு சிறையில நேரம் மிச்சமிருக்கும்”  
      -    ரெட்.
ஒருநாள் சககைதிகளோடு பேசிக்கொண்டிருக்கும்போது ரெட், டாமியிடம், ஆண்டி சிறைக்கு வந்த காரணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார். அதைக்கேட்கும் டாமி அதிர்ச்சியடைகிறான். ஏனென்றால் அவன் இதற்குமுன் சிறையில் இருந்தபோது அவனது சக கைதியான ஒருவன், தான் செய்த விசித்திரமான கொலையாக ஒரு கள்ளகாதல் ஜோடியைக் கொன்றதையும், அந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவனாக ஒரு பேங்கர் மாட்டிகொண்டான், என்று சொன்னதையும் ரெட் மற்றும் ஆண்டியிடம் சொல்கிறான்.

     பத்தொன்பது வருட சிறைவாழ்விற்கு பின்பா தனக்கு இந்த உண்மை தெரியவேண்டும் என்று கலங்கும் ஆண்டி, பின் மிகுந்த நம்பிக்கையுடன் வார்டனிடம் செல்கிறான். இந்த செய்தியை தெரிவித்து தனது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறான். ஆனால் வார்டனோ “அந்த சின்னப்பையன் சொல்றத என்னால நம்பமுடியலை” என்று உதாசினப்படுத்துகிறார். இதனால் கோபமடையும் ஆண்டி, நான் ஒருவேளை வெளியே போனா உங்களை நிச்சயம் காட்டிக்குடுக்க மாட்டேன், என் மீது தப்பு இல்லன்னு தெரிஞ்சும் நீங்க என் தடுக்குறீங்களா, சார்? என்று கத்துகிறான். விளைவு, இதுவரை ஷஷாங்க் சிறைச்சாலை வரலாற்றிலேயே இல்லாதபடிக்கு ஆண்டிக்கு ஒருமாத இருட்டறை தண்டனை கிடைக்கிறது. இதற்கிடையே டாமி கல்லூரி தேர்வில் வெற்றிபெற்ற செய்தி இருட்டறைக்கு வருகிறது. ஆண்டி ஒருபுறம் இந்த அதிகாரிகளுக்காக தவறு செய்தாலும் லைப்ரரி மூலமாக நிறையபேரை படிக்க வைத்ததற்காகவும், டாமியை உருவாக்கியதற்காகவும் பெருமிதமடைகிறான். அந்த இரவே வார்டன் டாமியை அழைத்து “ஆண்டி பற்றி நீ சொன்ன உண்மைகளை உன்னால் மேல் கோர்ட்டில் சொல்லமுடியுமா” என்கிறார். டாமி, நிச்சயம் சொல்கிறேன். என்கிறான். மெல்ல சிரித்துக்கொண்டு மேலே பார்க்கிறார் வார்டன், டாமியும் மேலே பார்க்கிறான், அங்கிருந்து வருவது மூன்று துப்பாக்கி குண்டுகள்.

இருட்டறையில் ஆண்டியை சந்தித்து, தப்பிக்க முயன்ற டாமியை சுட்டுக்கொன்றதாய் சொல்கிறார். ஆண்டி, உண்மையை உணர்கிறான் “நீங்க சொல்ற கதையை மற்றவர்கள் நம்பலாம், ஆனால் நான் நம்ப மாட்டேன்” என்கிறான். வார்டன் ”ஆண்டி, எங்கள் ரகசியம் தெரிந்த நீ வெளியே செல்வது என்பது வாய்ப்பே இல்லை, நீ எங்களோடு இணங்கியிருப்பதே உனக்கு நல்லது, இன்னும் ஒரு மாதம் இங்கேயே இருந்து, யோசித்து முடிவெடு” என்று சொல்லி மீண்டும் கதவடைக்கிறார்.

ஒருமாதம் கழித்து ஆண்டி வெளியே வருகிறான். ரெட்டிடம் தான் இங்கே இருக்கவேண்டியவனில்லை என்று வருத்தப்படுகிறான். தான் இங்கிருந்து நிச்சயம் வெளியே வருவேன், வந்து பசுபிக் கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஜோஹார்ட்டன் ஹில் என்கிற இடத்தில் இருக்கும் தீவில்தான் வசிப்பேன், அங்கு பழைய படகுகளை வாங்கி புதுப்பிக்கும் வேலையை செய்வேன், என்று நம்பிக்கையோடு சொல்கிறான்.  “தனியாக எப்படி ஆண்டி? அதுவும் இவ்வளவு வருட சிறை வாழ்விற்கு பின்? ப்ரூக்ஸ் போல வெளியே போனா வாழமுடியாம தற்கொலைதான் பண்ணிக்கனும்” என்கிறார் ரெட். மேலும் நீ சொல்றமாதிரி நடக்கப்போவதில்லை, வெறும் நம்பிக்கை என்பது மணல் கயிறுபோல, அதை பின்தொடராதே, என்கிறார்.

விரக்தியோடு புன்னகைத்தபடியே ஆண்டி “ரெட், ஒருவேளை நீங்க வெளிய வந்தா, பங்க்ஸ்டன் நகரில் இருக்கும் வயலில் ஒரு நீண்ட கல் சுவர் இருக்கும், அதன் கடைசியில் ஒரு பெரிய ஓக் மரம் இருக்கும், அதன் கீழே, அங்கிருக்கும் கற்களுக்கு சம்பந்தமில்லாமல் எரிமலை குளம்பிலான ஒரு கல் இருக்கும் அதற்கு கீழே உங்களுக்காக ஒரு விஷயம் இருக்கும். அதில் உங்களுக்கான கடைசி வாழ்க்கை தொடங்கும், என்று சொல்லி விட்டு போகிறான்.

ரெட்டோ, ஆண்டி இரண்டுமாத இருட்டறை வாசத்தில் புத்தி குழம்பி போயிருப்பான் என்று நினைக்கிறார். மேலும் சககைதிகளில் ஒருவன் ஆண்டி ஒரு ஆறடி கயிறு கேட்டான், கொடுத்தேன் என்கிறான். மன உளைச்சலில் இருக்கும் ஆண்டி, இன்றிரவு தற்கொலை செய்துகொள்வானோ என்கிற பயம் அனைவருக்கும் வருகிறது. இரவு வழக்கம் போல வார்டனுக்கு கணக்கு எழுதிவிட்டு, கணக்கு புத்தகங்களை வார்டனின் ரகசிய இடத்தில் வைக்கிறான். வார்டன் ஆண்டியிடன், தன் ஷூக்களுக்கு பளபள’வென பாலிஷ் செய்யும்படி சொல்கிறார். ஆண்டி அனைத்தையும் முடித்துவிட்டு தன் அறைக்கு திரும்புகிறான்.

கயிறுடன் சென்ற ஆண்டி என்ன செய்வானோவென பதறும் ரெட் அந்த இரவு முழுவதும் தூங்காமல் இருக்கிறார். விடிந்ததும் ஆண்டியை சந்திப்பதற்காக காத்திருக்கிறார். மெல்ல விடிகிறது, அனைவரும் அறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். ஆண்டியின் அறையிலிருந்து அவன் வெளியே வரவில்லை. அதிகாரிகள் அவனை வெளியே வரசொல்லி கட்டளையிடுகின்றனர். மெளனம். வார்டனின் அறையில் தினமும் வார்டனில் ஷூக்களை பாலிஷ் போட்டு வைக்குமிடத்தில் ஆண்டியின் பழைய ஷீ இருக்கிறது, அவரது கோட் இல்லை. அலாரம் அடிக்கிறது. ஆண்டியின் அறை காலியாக இருக்கிறது. ஆண்டி இல்லை.

அனைவருக்கும் தலை சுத்துகிறது, அந்த அறையில் ஆண்டி சிறு சிலைகள் செய்ய வைத்திருந்த கற்களும் கதாநாயகியின் போஸ்டரும் மட்டுமே இருக்கிறது. ரெட் அழைத்து விசாரிக்கப்படுகிறார். கோபமடையும் வார்டன், அங்கிருந்த கற்களை எடுத்து உனக்கு தெரியுமா? அந்த ஆண்டி எப்படி தப்பிச்சுப்போனான்னு என்றபடி கற்களை போஸ்டரில் எறிகிறார். கல் போஸ்டரை துழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறது. வார்டன் மிரண்டு போய் போஸ்டரைக் கிழிக்க ஒரு ஆள் செல்லுமளவிற்கு சுவரில் துளை. ஐந்தடி சுவரில் ஓட்டை.


ஆண்டி தப்பித்து விட்டான், எப்படி? சிலை செய்யும் சிறுசுத்தியால் தினமும் மெல்ல சுவரைக் குடைந்து, அந்த சுத்தியலை எப்போது கையிலே வைத்திருக்க ஏதுவாய் பைபிள் சுத்தி வடிவில் துளையிட்டு, சுத்தியை பத்திரப்படுத்தி, துளையிட்டு, அந்த மணலை தனது பேண்டின் படிப்புகளில் வைத்து தினமும் வெளியே நடக்கும் போது உதறி, அதன் வழியாக வெளியேறி, சிறையின் கழிவு நீர் செல்லும் குழாயை உடைத்து, கழிவுநீரில் முச்சை அடக்கி கிட்டதட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள அந்த குழாயின் நீளத்தில், மல நாற்றத்திற்கிடையே ஊர்ந்து வெளியேறி, ஆண்டி தப்பிக்கிறான். இந்த ஐந்தாறு வரிகளில் சொல்வதுபோல எளிதாக அல்ல, ஏறத்தால இருபது ஆண்டுகளாக, சொல்லப்போனால் சிறைக்கு வந்த முதல் மாததிலிருந்தே, மெல்ல இதனை திட்டமிட்டு செய்ல்படுத்தியிருக்கிறான். இவையனைத்தும் ரெட்டின் பார்வையில் காட்சிகளாக விரிகிறது.

வெளியே, ஆண்டி. கழிவுநீர் குழாயிலிருந்து வெளியே வருகிறான். அவன்மீது இருக்கும் அத்தனை கசடுகளை கழுவியபடி மழை அடைந்து பெய்கிறது. தன் காலில் கட்டி இழுத்துவந்த பாலிதின் பையில் தான் உருவாக்கிய ராண்டல் ஸ்டீவன்ஸின் எல்லாப் பத்திரங்களோடு, வார்டனின் கோட்டும், ஷூவும் இருக்கிறது. அதிகாரிகளுக்கு முன்னதாக கள்ளப்பணத்தை டெபாசிட் செய்திருக்கும் வங்கிக்கு ராண்டல் என்ற மனிதனாக செல்கிறான். அங்கு இருக்கும் மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை எடுத்துக்கொண்டு, சிறை அதிகாரிகளின் மொத்த கள்ளக்கணக்கையும், அதை எழுதிய புத்தகங்களையும், பிரபல தினசரிக்கு அனுப்பிவிட்டு தன் இலக்கை நோக்கி பயணிக்கிறான், ஆண்டி.
     
ஆண்டியின் பிரிவில் சிறையில் தனித்திருக்கும் ரெட்டிற்கு சில வருடங்கள் கழித்து பரோல் கிடைக்கிறது, ப்ரூக்ஸ் தங்கியிருந்த அதே அறை, அதே வேலை. தனிமை. ப்ரூக்ஸைப் போல சாக நினைக்கிறார், இருந்தாலும் ஆண்டி சொன்னபடி அந்த இடத்திற்கு சென்று பார்க்க முடிவெடுக்கிறார். பரோலில் வெளியே வந்த கைதி வெளியூருக்கி செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் மீறி பங்க்ஸ்டன் நகருக்கு கிளம்புகிறார். ஆண்டி சொன்னபடியே அந்த லாவா கல்லின் கீழே ஒரு பெட்டி இருக்கிறது. ஒரு கடிதமும் இருநூறு டாலர் பணமும்.

”அன்புள்ள ரெட், இந்தக்கடிதத்தை படிக்கின்றீர்கள் என்றால், ரெட் நீங்க வெளிய வந்துட்டிங்கன்னு அர்த்தம், இவ்ளோதூரம் வந்த நீங்க இன்ன கொஞ்ச தூரம் வருவீங்கன்னு நம்புறேன். நான் வெளிய வந்தா எங்க வசிப்பேன்னு சொன்னது உங்களுக்கு நியாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அங்கதான் நான் வசிக்கிறேன், உங்களைப்போன்ற ஒரு நண்பர் இருந்தால் நான் இன்னும் சந்தோசமாக இருப்பேன். நான் சொன்னது போல நம்பிக்கைதான் வாழ்க்கை, அது சிறந்த விஷயமும் கூட, நிச்சயம் ஒருநாள் நீங்க இந்த கடிதத்தை படிப்பீர்கள் என்கிற என் நம்பிக்கைதான் இந்த கடிதம். நீங்க வருவீங்கன்னு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்,
      -அன்புடன் ஆண்டி’
கண்ணீருடன் அந்த கடிதத்தைப் படித்து முடிக்கிறார்.

ஆண்டி சொன்னது சரிதான், நாம் எதை முடிவெடுக்கிறோமோ அதுதான் விதி. எனக்கு இனிமேலாவது வாழனும்ம் நான் நண்பன் ஆண்டியை சந்திக்க முடிவெடுத்தேன், ஆனால் என்னால இந்த தடையை மீறி அங்க போக முடியுமா என்பது தெரியாது, நம்பிக்கை இருந்தா வாழமுடியும்ன்னு அவன் சொன்னது உண்மையான்னு எனக்கு தெரியலை ஆனா ஆண்டி சொன்னது உண்மைன்னு நம்பி என் பயணத்தை தொடங்கினேன். நம்பிக்கைதானே வாழ்க்கை”
                                                                  -ரெட்
ரெட்டின் குரல் வழியாக கதை தொடர, அங்கே ஆண்டி சொன்னபடியே படகுகளை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறான். இருவரும் கட்டியணைத்துக்கொள்ள படம் நிறைவடைகிறது.

ப்ரூக்ஸ், ஆண்டி, ரெட், வார்டன் இப்படி படத்தின் பலமுக்கியமான கதாப்பாத்திரங்கள் வருகிற அனேக காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை அல்லது கவிதை. இன்னும் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றது, இந்தப்படத்தில். சில என் பார்வையில் விடுபட்டவையாகவும் இருக்கலாம். இந்தப்படமும் இந்தப் பதிவைப்போல நீளமான ஒன்றுதான், ஆனாலும் ஒரு மனிதனின் இருபது வருட வாழ்வை அவனோடு இருந்து வாழ்ந்த அனுபவத்தைத் தர இந்த இரண்டரை மணிநேரங்கள் தேவைதான். ஒருவேளை என்பதிவு படிக்க அயற்சியாக இருக்கலாம், படம் அப்படியில்லை. மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையினால் தொய்வின்றி நகர்கிறது.

உண்மையாக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் நம்பிக்கை என்ற சொல்லின் அர்த்தத்தை மனதிற்குள் விதைக்கும் ஒரு அற்புதத்தை செய்துவிடும், இந்தபடம். உலகின் நூறு முக்கியமான படங்களில் முதலில் இருக்கும் இந்தப்படம். சிறந்த திரைக்கதைக்கான பட்டியலிலும் முதலில் இருக்கிறது.

ஆண்டியாக டிம் ராபின்ஸன், ரெட்டாக மார்கன் ஃப்ரீமேன். பலமுறை ஆங்கிலத்திலும், தமிழிலும் திரும்ப திரும்ப பார்த்தபடம். கூடுமான வரை உரையாடலை சிதைக்காமல் அழகாக மொழிமாற்றம் செய்திருப்பார்கள். குறிப்பாக தமிழில் ரெட்டிற்கு குரல் கொடுத்திருப்பது நம்ம பட்டாபி எம் எஸ் பாஸ்கர். ஃப்ரீமேனுக்கு அழகாக பொருந்திப்போகிறது அவர் குரல். இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை இப்படி படத்தை தனித்தனியாக எழுத முடியும். ஆனால் அது பார்ப்பதுபோல வராது, ஆகவே அவசியம் இது பார்த்தே ஆகவேண்டிய படம்.

நட்பும், நம்பிக்கையும் எவ்வளவும் அழகான விஷயங்கள். நாம் இவைகளுக்கு இடையேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், அதை உணராமலேயே. உணரப்படும் எந்த விஷயமும் அவ்வளவு அழகு. பொதுவாக நான் ரசித்த நல்ல திரைப்படங்களை, இசையை, புத்தகங்களை என் பதிவுகளின் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இதை படிக்கிற அனேகம் பேர் இந்தப்படத்தை என்னைப்போல ஏற்கனவே பலமுறை பார்த்திருக்க கூடும், இருந்தாலும் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் இது பார்க்க சொல்லி இங்கே பகிரவில்லை. பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே பதிந்திருக்கிறேன்.//சில திரைப்படங்களில் பார்க்கலாம், காதலிக்கு கடிதம் எழுதும் அவன், கடிதத்தில் திருப்தி அடையாமல் அதை கசக்கி சுருட்டி வீசுவான். ட்ராலி பின்னால் நகர அறை முழுவதும் சுருட்டி எறியப்பட்ட காகிதக்கோளங்களுக்கிடையே அவன் அமர்ந்திருப்பான் . அப்படி அனேகம்முறை எழுதி, எனக்கு நானே திருப்தி அடையாமல், எதையோ எழுதாம விட்டுட்ட மாதிரியே இருக்கும். எனவே பதிவேற்றாமல் வைத்திருந்த பதிவு இது. //