அப்பா என்கிற மனிதன்........        நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தக கண்காட்சியில்தான் அவரை முதலில் பார்த்தேன். தன் கடையில் வருபவர்களிடம், தன் மகன் எழுதிய கவிதைப்புத்தகங்களையும், குறும்படங்களையும் பற்றி பெருமையோடு சொல்லி விற்றுக்கொண்டிருந்தார். வாழ
்க்கையில் சில விஷயங்களை ஏன் செய்றோம் எதுக்கு செய்றோம்ன்னு தெரியாது, அப்படிதான் அவரிடம் நானாகப் போய் பேசினேன். அதன்பின் நாலு வருஷமா பேசினோம், புத்தகம், சினிமா, வாழ்க்கை, கம்யூனிசம் இப்படி நிறைய பேசினோம். என்னை ஏன் அவருக்குப் பிடித்ததுன்னுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவருக்கு பிடித்திருந்தது. பழகிய குறுகிய காலத்திலெயே அப்பா-மகன் என்ற உரிமை இருவருக்குமே சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டது, ஆச்சர்யம். 
      நான் பதிவுகளில் எழுதியவற்றை, அச்செடுத்துக் கொண்டுபோய் அம்மாவிடம் காட்டுவதுபோலவே, அவரிடம் காண்பிப்பேன். திரும்ப திரும்ப படித்துப்பார்ப்பார், ஒருநாள், எந்தவொரு விஷயத்தையும் உனக்கான அழகியலோடு படிப்பவர்களுக்கு கடத்தும் திறன் உனக்கு இருக்கு, அதனால கதை எழுது, ஒரு புத்தகமா போடலாம். நான் செய்றேன், என்றார். நான் பதிவுகளில் எழுத ஆரம்பித்ததிலிருந்து, எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் அது. என்னுடைய வளர்ச்சியை உண்மையா நேசிச்ச, அதனால சந்தோசப்பட்ட மனிதர்களில் ஒருவர், அவர். 

         எனக்கு அறிமுகமில்லாத பல பெரியவர்களிடம் என் தோளில் கைபோட்டுக்கொண்டு சொல்லுவார் “இவன் என் பெரிய பையன்” என்று. “உனக்கு வீட்ல விருந்து வைக்கனும், அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்ல, அவ உடம்பு சரியானதும் சொல்றேன், உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வா” என்று என் திருமணம் முடிந்தபின், அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். 

         ஓரிரு வாரங்களுக்கு முன், அவர் ஒரு விபத்தை சந்தித்து பின் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அப்பா சீக்கிரம் குணமாகி விரைவில் என்னோடு பழைய படி பேச வருவார் என்றும் சிந்தன் தன் முகநூலில் குறிப்பிட்டிருந்தான். அதைப்படித்து ஒருவாரம் கூட இல்லை, அவர் இறந்து விட்டார் என்ற செய்திதான் வந்தது. 
          வாழ்க்கையில் இப்படி எல்லா சாவும் நம்மை கலைத்துப்போடுவதில்லையே? வீட்டிற்கு சென்றேன். கூடத்தில் அவரது உடல் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழையும்போதே “அண்ணி நல்லாயிருங்காங்களாண்ணா” என்று தம்பி கேட்கிறான். அம்மா “முரளி, உனக்கு விருந்து போடனும்ன்னு ரெண்டு நாள் முன்னாடி கூட சொன்னாரே, என்று அழ ஆரம்பிக்கிறார். இந்த இரண்டு பேருக்கும், நான் என்ன சொல்ல? 
        ஒண்ணேஒண்ணு மட்டும் நிச்சயம், அந்த ஒரு வாரத்தில் ஒருமுறையாவது அவரைப்போய் பார்த்திருக்கனும்ங்கிற நினைப்பு என்னை வாழ்க்கை முழுவதும் துரத்தத்தான் போகிறது.

3 கருத்துரைகள்:

நிகழ்காலத்தில் சிவா said...

//ஒண்ணேஒண்ணு மட்டும் நிச்சயம், அந்த ஒரு வாரத்தில் ஒருமுறையாவது அவரைப்போய் பார்த்திருக்கனும்ங்கிற நினைப்பு என்னை வாழ்க்கை முழுவதும் துரத்தத்தான் போகிறது.//

உங்க உணர்வுகள் புரியுது முரளி., ஆனா இத விட்டுருங்க., நீங்க ஒன்னும் பிடிவாதமா போய்ப் பார்க்கக்கூடாதுன்னு இருக்கலையே.. காலம் எல்லாத்தையும் நிர்ணயிக்கிறது. அதை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பாவுடனான மகிழ்வான தருணங்களை மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள்..

கோபிநாத் said...

:-(

shri Prajna said...

"எந்தவொரு விஷயத்தையும் உனக்கான அழகியலோடு படிப்பவர்களுக்கு கடத்தும் திறன் உனக்கு இருக்கு" it's true...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.