பீட்சா - வெறும் ட்ரெய்லர் மட்டும் இங்கே.....பீட்சா – தமிழில் அதிகம் தொடாத, ஆனால் தொடவேண்டியபடி தொட்டால் ஹிட்டடிக்கக்கூடிய ஜெனர், திகில். சமீபத்தில் அறிவழகனின் ஈரம், மற்றும் யாவரும் நலம் இந்த படங்கள் என்ன ஒரு இம்பாக்ட்டை ஏற்படுத்தியதோ, அதை இன்னும் இரண்டு டெசிபல் ஏற்றிவைத்திருக்கிறது, இந்த பீட்சா. கார்த்திக் சுப்புராஜ்.  

  கார்த்திக் சுப்புராஜின், நாளைய இயக்குனரில் வந்த எல்லா குறும்படங்களையும் கிட்டதட்ட பார்த்திருக்கிறேன். அதுபோக, அவருடைய DARK GAME என்ற ஒரு குறும்படத்தை ஒரு வருடம் முன்பு பார்த்தேன். அதில் “Playing in Dark, sometimes Thrill, Playing in Dark, sometimes kill” என்று ஒரு வசனம் வரும். அதன் முடிவைப் பார்க்கும்போதுதான் அந்த வரிகளின் டபுள்மீனிங் புரியும். அது ஒரு குப்பையான படம்தான், இருந்தாலும் அந்த ட்விஸ்ட் ஒரு சுவாரஸ்யம். குறும்படங்களில் நாம் கற்றுக்கொள்வது அதைத்தான். 5-6 நிமிடங்களில் ஒரு கதை சொல்ல வேண்டும், பரபரன்னோ, சுவாரஸ்யம் குறையாமலோ, 20-20 மேட்ச் மாதிரி இருக்கனும். 

ஏற்கனவே அருமையான குறும்படங்களை எடுத்த அனுபவம், இந்தப்படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் எடுத்திருக்கும் மெனக்கெடலில் தெரிகிறது. கொஞ்சம் நீளம் தெரிந்தாலும் கிளைமாக்ஸ் வரும்போது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாய் ஜஸ்டிஃபிகேசன் செய்து விடுகிறார். நேர்த்தியான திரைக்கதையும், கையைக் கட்டிப்போட்டு கதைசொல்லும் திறமையும் அனாயசமாக கைவருகிறது, இந்த கார்த்திகிற்கு, மனுசன் பின்னிட்டான்.

விஜய் சேதுபதி, பர்ஃபெக் காஸ்டிங், படத்துல ஒரு டயலாக் வரும் நீயே பேயின்னா பயப்படுவ, நீ எப்டிடா?ன்னு, அதற்கு விஜய் ‘பயப்படுறவனாலதான் பயப்படுறமாதிரி கதை சொல்லவும் முடியும்ன்னு அது எவ்ளோ நிஜம்ன்னு படம் பாக்கும்போது தெரிஞ்சுக்குவிங்க. அவர் எச்சிலைக்கூட்டி விழுங்கி மெதுவா திரும்பி பின்னாடி பார்க்கிற பொழுதுதெல்லாம், அவர் முகத்தைப் பார்த்தாலே நமக்கு பயமா இருக்குங்கிறதுதான் உண்மை. வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி. ரம்யா நம்பீசன், ம்ம்ம்ம்ம்!!!!! வேற என்ன சொல்ல? 

அப்புறம், பீட்சா ஷாப்பில் பில் கெளண்டரில் இருக்கும் கருணாவைத் தொடர்ந்து குறும்படங்களிலிருந்து கவனித்துவருகிறேன். அற்புதமான நடிகன். இவரது உடல்மொழியும், வாய்ஸ் மாடுலேஷனும் அசரடிக்குது. இவரையெல்லாம் நல்லா யூஸ் பண்ணனும். (ஒரு பொண்ணால ரயில்வே ட்ராக்ல எவ்ளோ வேகமாட நடக்க முடியும்? ஜல்லிக்கல்லெல்லாம் இருக்கும்ல? நான் பார்க்கிறேன் இந்தோ இங்கிருந்து அங்க , இப்டி போகுது- என்று கையை இடவலமாக ஆட்டி அவர் சொல்லும்போது, வாவ். இதெல்லாம் ஆடியன்ஸ், அவர் கவனிக்கப்படாமல் கடந்துபோய்விடுகிற இடம்தான். ஆனாலும் தன்னளவில் பர்ஃபெக்‌ஷனுக்கு உழைக்கிற மனிதனாயிருக்கிறார்)

பின்னணி இசையும், சவுண்ட் மிக்ஸிங்கும் “வாவ்” கிளாஸ். குறிப்பாக அந்த ‘நினைக்குதே’ பாடல். (நடுகடலுல கப்பல உட்ட கானா பாலா பாடிய பாடல்). மைக்கேலோடு நாமும் உடம்பின் ஒட்டுமொத்த அட்ரினல் சுரப்பிகளும் வேலை செய்ய, இருட்டு பங்களாவில், மெழுகுவர்த்தியின் துணையோடு நடக்கும்போது உச்சஸ்தாயில் வயலின்கள் கதறும்போதும், முதுகுத்தண்டு விரைக்கத்தான் செய்கிறது. சபாஷ்! சந்தோஷ் நாராயணன். 

கஜினியில் அசின் தலையில் விழும் அந்த சம்மட்டியின் அடி, அதற்கு கொடுத்த அந்த ஒலிக்குபிறகு, இதில் வரும் அந்த இரும்பு ஆப்பை, வெண்கல சம்மட்டியால் அடிப்பதுபோன்ற ”நங்’குனு ஒரு சவுண்ட். யப்பா! படம் முடியும் கடைசி நிமிடங்களில் இந்த இரண்டையுமே (சம்மட்டியடியும், நினைக்குதே ரிங்டோனும்) போனஸாக கொடுத்தனுப்புகிறார்கள். 

பீட்சா - ஒரு அருமையான ரொமாண்டிக் த்ரில்லர். பக்காவான டெக்னிக்கல் க்ரூ. அற்புதமான அவுட்புட். போஸ்டர் டிசைன்ஸ் முதற்கொண்டு ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கிறது.
எப்டி முடிப்பாங்க? இல்ல இப்டியே முடிச்சிருக்கலாம், ஆகா! இப்டித்தான் முடிக்கனும். இது எதுவேணுமானாலும் பொருந்தும் இந்த படக்ளைமேஸிற்கு.
 -----------------------  -----------------------   -----------------------   -----------------------
 படத்திலே ஒரு இடத்தில் நானும் அந்த படத்தில் வரும் கேரக்டரும் ஒரே மாதிரி ஒரே டெசிபல்ல கத்தினோம். பக்கத்துல உக்காந்து படம்பாத்த ஆதவா என்னை என்ன நினைச்சாதோ தெரியலை. அது எந்த இடம்ன்னு படம்பாத்தவங்களுக்கு தெரியும், பார்க்காதவங்க, பாத்துட்டு சொல்லுங்க. :-)