வனப்ரஸ்தம் : கடைசி நடனம்.


கதை : குஞ்ஞுகுட்டன் ஒரு தேர்ந்த கதகளி கலைஞர். ஆனால், ஒரு உயர்சாதி ஆணால் கர்ப்பமாக்கப்பட்டு, குழந்தைக்கு அப்பாவாக ஒத்துகொள்ளாத ஒருவரால் கைவிடப்பட்ட தாழ்ந்த குலப்பெண்ணின் மகன். குஞ்ஞுகுட்டன். சாதீய அழுத்தங்களையும் மீறி ஒரு கதகளி கலைஞனாக, அவன் கடந்து வந்த பிரயத்தனங்களும்வலிகளும் அவனைப்போலவே நம்மாலும் கடைசி வரைக்கும் இறக்கிவைக்கப்பட முடியாத சுமையாகவே இருக்கிறது. சிறுவயதில் அவனது களரி வாத்தியார், ஒடுக்கப்பட்டவனென அவனை பிரம்பால் அடித்தது, அடிக்கடி நினைவில் வருகிறது, அப்பொழுதெல்லாம் அதே வலியை உணர்கிறான். நாமும். குஞ்ஞுகுட்டனை மகனாக ஏற்க மறுக்கும் தந்தை, தன் கடைசிகாலத்தில் அவனுக்கென ஒரு சொத்தை எழுதிக்கொடுக்கிறார். அவனோ, அந்த உயிலை தீயிலிட்டு கொழுத்தும் சுயமரியாதை கலைஞனாக இருக்கிறான். சாதீய கோட்பாடுகளைக் கொண்ட இந்த சமூகத்தில் தனக்கான அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு கலைஞன். அவனது ஒரே ஆசுவாசம் அவனது மகள். அந்த உயிலை அவரது மாமன் கொண்டு வந்து கொடுக்கும்போது, குஞ்ஞுகுட்டனின் மகள்“இது அப்பாவின் கதகளி நடனத்திற்கான அங்கீகாரமா, அம்மா?” என்கிறாள். அந்த கேள்வியும், அவள் அம்மாவின் மெளனமும், ஓட்டை செம்பிலிருந்து ஒழுகும் நீரும், இசையும், அந்த காட்சியை வேறெந்த வசனங்களுமின்றி புரிந்துகொள்ள செய்கிறது.

அதேசமயம், தன் கலையின் மீது தீராத காதல் கொண்ட சமஸ்தானத்தின் மருமகளான சுபத்ராவின் அறிமுகம் கிடைக்கிறது. குஞ்ஞுகுட்டனக்கும் அவளுக்குமான நெருக்கம் அதிகரிகரிக்கிறது. தன் கலையை அதன் நுணுக்கங்களை அறிந்த, ஒரு அறிவாளியாக சுபத்ராவைப் பார்க்கிறான். சுபத்ரா, அவனை அர்ச்சுனனாகப் பார்க்கிறாள். அர்ச்சுனன் மீது மோகம் கொள்கிறாள். ஒரு தபஸ்வியான அர்ச்சுனனை மோகித்து, மணந்த சுபத்ராவின் காதலை நாடகமாக எழுதுகிறாள். அதை தனக்கு மட்டுமாக நடித்து காண்பிக்க வேண்டுமென்கிறாள். அதில் அர்ச்சுனனுக்கும் சுபத்ராவிற்குமான காதலை குஞ்ஞுகுட்டன் நடிக்க தன்னை சுபத்ராவாக நினைக்கிறாள்.

    படம் நெடுக இசையும் கதகளி பாடல்களும் ஒரு பாத்திரமாக உலவுகிறது என்றாலும் இந்தஇடத்தில் வரும் அந்தப்பாடலும், அதைத் தொடர்ந்து குஞ்ஞுகுட்டனுக்கும் சுபத்திராவிற்குமான கூடலும், ஒரு அற்புதமான கலவை. ஆழிவிளக்கில் அருகருகே இரண்டு தீபங்கள். உஷ்ணம் காரணமாய் இரண்டு சுடர்களும் ஒன்றோடொன்று ஈர்க்க்கப்பட்டு நெருங்கி, பின் இணைந்து, ஒன்றாகும். முதலிரவு காட்சியின்போது வரும் பால் சொம்பு உருள்வதைப்போலவோ, இரு பூக்கள் உரசிக்கொள்வது போன்ற குறியீடுகளெல்லாம் இல்லை, இது கவிதை. உடலுறவினை அதுவும் எக்ஸ்டசி என்று சொல்லும் உச்சநிலை கலவியை இவ்வளவு திருத்தமாக, நேரடியாக, அழகான கவிதையாய் சொல்லவே முடியாது. மெல்ல பின்னணியில் மந்திரமா அப்பாடல் ஒலிக்க, தன் கதகளி ஆடைகளை சரி செய்தபடியே வெளியேறும் குஞ்ஞுகுட்டனும், பின் கண்ணாடியில் கதகளி வேஷத்தின் வர்ண மைகளால் தோய்ந்திருக்கும் சுபத்ராவின் முகமும் மறக்கக்கூடியதாய் இல்லை. சுபத்திராவிற்கு சுஹாசினி, சரியான தேர்வாய் படவில்லை எனக்கு, ஒரு இண்டலெக்ட்சுவலாக சரி, ஆனால் அந்த செட்யூசிங்கான கதாப்பாத்திரத்திற்கு இன்னும் அகண்ட கண்களோடு வேறு யாரையாவது தேடியிருக்கலாம்.

                இதில் கர்ப்பமுறும் அவள், குஞ்ஞுகுட்டனை தவிர்க்கிறாள். அர்ச்சுனனால் தனக்கு கிடைத்த பிள்ளையாகவே கருதுகிறாள். ஒருமுறை குழந்தையை அவனிடம் காண்பித்துவிட்டு, இனி உன் வாழ்வில் நானோ என் பிள்ளையோ வர மாட்டோமென திரும்புகிறாள். சுபத்ராவால் விரும்பப்பட்டது தானல்ல தன் ஒப்பனை, ஒப்பனையின் உருவமான அர்ச்சுனனை என்று அறியும்போது விரக்த்தியடைகிறான். இனி கதகளியின் கதாநாயகனாக நடிக்கப்போவதில்லை, அதன் எதிர்முகமாக தன்னை வெளிப்படுத்துகிறான், ஒரு உணர்ச்சிவசப்பட்ட கலைஞன் தன் உணர்வுகளை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும். ரொம்ப நேர்மையாக இருப்பவர்கள் தங்கள் கோபத்திற்கு தங்களுக்கே தண்டனை கொடுத்துக்கொள்வார்கள் என்று படித்திருக்கிறேன்.

                நாட்கள் சென்று கொண்டேயிருக்கிறது, தந்தையை பிரிந்த மகனாகவும், தன் மகனை இழந்த தகப்பனாயும் தன்னை அலைக்கழிக்கும் விதியை செய்த வினையின் கருமங்களாய் கொள்கிறான், அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. காசிக்கு செல்கிறான். திரும்பவரும் அவனுக்கு ஒரு நிதானம் இருக்கிறது. இவனது செயல்களில் சோர்வடையும் மனைவியோ பிறந்த வீடு செல்கிறாள். இவனும் தொடர்ந்து சுபத்ராவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான். தன் வாரிசை பார்க்க ஏங்குகிறான். பின் சுபத்ரா எழுதிய நாடகத்தை கடைசியாக ஒருமுறை அரங்கேற்றம் செய்ய நினைக்கிறான், எப்படியும் சுபத்ரா அதைக்காண வருவாள் என்பது கணிப்பு. தன் மகளையே மனைவியாக நடிக்க வைக்கிறான். சுபத்ராவை கட்டியணைத்து முத்தமிடும் காட்சியில் அர்ச்சுனனின் உள்ளே இருக்கும் குஞ்ஞுகுட்டன் உடைந்தழுகிறான். அவனை கொஞ்சமேனும் புரிந்து கொண்ட சுபத்ரா, அதைக் காணசகிக்காமல் வெளியேறுகிறாள்.

      அடுத்தநாள் குஞ்ஞுகுட்டனின் மகளுக்கு கடிதம் எழுதுகிறாள், என் ப்ரிய மகளே!, அப்பாவும் மகளும் கணவன் மனைவியாக அம்மாவின் முன் நடிப்பதை எப்படி என் வார்த்தைகளால் சொல்லமுடியுமென எழுத தொடங்குகிறாள். அந்த சமயம் ” நேற்றைய ஆட்டம் முடிந்து கிளம்பும்போது குஞ்ஞுகுட்டன் ஆசான் கோவில் வாசலிலேயே மாரடைத்து இறந்து போனார்” என்று பணியாள் சொல்லிப்போகிறான். குஞ்ஞுகுட்டன் அவளுக்கெழுதிய, அதுவரையிலும் பிரிக்காத ஏராளமான கடிதங்களில், கடைசியாய் ஒன்றைப் பிரித்து படிக்கிறாள்.

என் பிரியமான சுபத்ரா, நான் யாருக்கு செய்த பாவமோ, கடைசி வரை தன் மகனின் முகத்தை பார்க்க மறுத்த தந்தையையும், மகனைப் பார்க்க முடியாத தந்தையாயுமே என் காலம் கடந்துகொண்டிருக்கிறது. எனக்கு என்ன சமாதானம்?, ஆசுவாசம்? எதுவும் தெரியவில்லை. என் ஒரே நம்பிக்கை என் மகள். என் மனதின் குமுறலை உனக்கு தெரியச்செய்யவே, என் மகளை சுப்த்ராவாகவும் நானே அர்ச்சுனனாகவும் ஒருமுறை கடைசியாக உன் நாடகத்தை அரங்கேற்றுகிறேன். கடைசியாக. இன்னொன்றும் இருக்கிறது, என் மகனிடம் சொல், அவன் அர்ச்சுனனின் மகன், களங்கமற்ற பரிசுத்தமும், பரிபூரணமானவனும் கூட...

                இந்தக் கடிதத்தை படிக்கும் சுபத்ரா, நெஞ்சைப் பிடித்து கீழே விழுகிறாள். கதவு திறக்க அபிமன்யூ எட்டிப்பார்க்கிறான். காட்சி உறைய படம் நிறைவடைகிறது.

************************************************************************************************************


சமஸ்தானங்களின் ஆட்சிகள் முடிவுறும் காலம், கதகளி எனும் கலை நசியத் தொடங்குகிற காலம், கலைஞர்கள் வறுமையில் உழல்கிற காலம். கிழிந்துபோன செண்டை மேளத்தை சரி செய்ய இயலாத கலைஞர்கள். செண்டை மேளம் ஒரு குறியீடு. அது அவர்களின் கிழிந்துபோன வாழ்க்கை.

குஞ்ஞுகுட்டனுக்கும் அவன் மனைவிக்குமான உறவுசிக்கல், சுபத்ரா அவனை விலக்க அழுத்தமான காரணம் இப்படி கதைக்கு தேவைய சில விஷயங்களை சொல்லாமலே விட்டிருக்கிறார்கள். இருந்தும் இது குஞ்ஞுகுட்டனின் மனவிகாரங்களை, அதன் சிக்கல்களை மட்டுமே சொல்லும் படமாக எண்ணிக்கொள்ள முடிகிறது. ஆச்சர்யம். ஏனெனில் படம் முழுக்க அவன் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவனுடைய தேவைகளும், தர்மங்களும், நியதிகளுமே சொல்லப்படுகிறது.

ஓரிரு வருடங்களாக என் ஹார்ட் டிஸ்கில் உறங்கிக்கொண்டிருந்த படம், தீபாவளி விடுமுறையில் பார்க்கலாமென எடுத்துவைத் மூன்று படங்களில் ஒன்று. ஒரு எளிய கதகளி கலைஞனின் வாழ்க்கை.  நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு திரைப்படம், திரைப்படமாக மட்டுமல்லாமல் ஒரு அனுபவமாக மாறுவதில்தான் இருக்கிறது, அதன் தரம். அப்படியாகப் பார்த்தால் இது ஒரு சுஹானுபவம். ஏன் சொல்கிறேனென்றால், எனக்கு கதகளி தெரியாது, மலையாளம் தெரியாது, பெரிய இசைஞானம் கிடையாது. இருந்தாலும் ஒரு கதகளி சம்பந்தமான, ஒரு கலைப்படம் அல்லது ஆவணப்படத்தின் தொனி கொண்ட ஒரு மலையாளப்படத்தை அவ்வளவு ஒன்றி பார்க்க முடிந்தது. இரண்டு முறை பார்த்தேன், இருந்தும் ஆயிரம் கேள்விகள் இருக்கிறது. படத்தில். எல்லா கேள்விகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த வனப்ரஸ்தம் ஒரு அனுபவமாக நம்முள் நிறைகிறது.

காட்சி அழகியல் என்பதற்கும், திரைப்படத்தில் ஒரு ஒளிப்பதிவாளரின் தேவையென்ன என்பதற்கும் உதாரணமாக இந்தப்படத்தை சொல்லலாம். ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன்; இசை. ஜாகீர் உசேன். படத்தின் ஆரம்பத்திலும் ஒன்னுமொரு இடத்திலும் இடி இடிக்கக்கூடிய காட்சி ஒன்று இருக்கும். அதை காட்சிப்படுத்திய விதமும், அதற்கு கொடுத்துள்ள ஒலி அமைப்பும் உங்களை திரைவழியாக கதை நடக்கும் நம்மை சம்பவிக்கச் செய்கிறது. தொடர்ந்து வரும் நேர்த்தியாக கேமிராவும், இசையும், திரைக்கதையும், நடிப்புமாய், கடைசி வரை நம்மையும் உள்ளிழுத்து, வெளி வரமுடியாமல் செய்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடக்கிற கதை. அவ்வளவு அழகான, பசுமையான கேரளம். படம் நெடுக பறவைகளின் கீச்சுக்களும், பூச்சிகளின் ரீங்காரமும் நிச்சயம் வேறு உலகம்தான் அது.

உண்மையிலேயே இந்த திரைப்படம் எனக்குள் என்ன கொண்டுவந்து நிறைத்தது , என்று என்னால் சொற்களால் விவரிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறேன். அவசியம் படம் பார்த்தவர்கள் அல்லது பார்த்துவிட்டு வந்தால் பின்னூட்டத்தில் உரையாடலாம்.

************************************************************************************************************

 இது படத்தின் ட்ரெய்லர் http://www.youtube.com/watch?v=mYumKtoNVc0  பாருங்கள், கேளுங்கள். இந்த ட்ரெய்லர் முடிந்ததும் இரண்டு பாடல்கள் நினைவிற்கு வரலாம், எனக்கு வந்தது, கூடவே ரகுமான் மீது கொஞ்சம் கோபமும்.4 கருத்துரைகள்:

Murali Kumar said...

டெஸ்ட்

siva said...

குஞ்சுட்டன் தன் மகளை சுபத்ரவாக நடிக்க வைப்பதற்கான காரணம்..சுபத்ராவான சுஹாசினியை வஞ்சம் தீர்க்கவே..ஏனெனில் குஞ்சுட்டன் அதுவரையில் யாரையும் அவ்வளவு எளிதாக விரும்பயதில்லை..தன் மகளையும்..தனக்காக பாடும் கலைஞனையும் தவிர..ஆனால் சுபத்ராவின் கலைஞானம், இரசனை,இசைப்பயிற்சி,கதகளியின் ஈடுபாடு...அதனூடாக அவனின் நீண்ட நாள் ஆசையான அந்த அர்ச்சுனன் பாத்திரத்தையும் அவளாகவே முன் வந்து நாடகமாக எழுதி தருகிறாள்..இதெல்லாம் அவனை அவள் மீது அளவ்ற்ற காதல் கொள்ளச்செய்கிறது..எனவே தான் மிகுந்த சுயமரியாதை கொண்ட கலைஞன் சுபத்ராவிற்காக அர்ச்சுனன் பாத்திரத்தை நிகழ்த்துகிறான்.ஆனால் சுபத்ராவிக்கோ அவன் ஒரு பொருட்டே அல்ல...அவனில் உறையும் அந்த அர்ச்சுனன் தான்.அதனால் அவனுடன் அந்த அர்ச்சுன வேடத்திலேயே முயங்குகிறாள்.அந்த மோகம் தீரவே அதன் பரிசான மகனுடன் அவனை விலக்குகிறாள்..மேலும் அவள் சமூக மதிப்பும்,அவனுடைய சமூக மதிப்பும் வேறு.மேலும் அவள் மணமானவள்(??!!??.இந்த திடீர் விலகல் ஒரு கலைஞனாகவும்,ஏற்கனவே எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட யதார்த்ததில் சாமன்யமானவனாகவும், உயர்ந்த கலைஞன் என்ற நிலையினாலும் அவனால் சுபத்ராவின் விலகல் எளிதாக ஜீரணிக்கப்படமுடியாததாக இருக்கிறது.எனவே அவளை ஒரு தாளமுடியாத குற்றணர்வில் ஆழ்த்தவேண்டுமென்பதற்காகவே அவன் தன் மகளையே சுபத்ராவாக தேர்வுசெய்கிறான்.மேலும் இந்த மகனின் மீது பற்று வருவதற்கு காரணம் அவனுக்கும் ஏற்கனவேயிருக்கும் அவன் மனைவிக்குமிடையிலான உறவையும் வைத்துப்பார்க்கையில் அது காதலால் பிறந்த பிள்ளையில்லை...மேலும் ஒரு கலைஞன் என்கிற நிலையில் அவனுள் உறையும் ஒரு மனம் அந்த குழந்தையை தன் வரித்த ஒரு புராண கதப்பாத்திரத்திற்காவே பிறந்த குழந்தையாக நினைக்கத் தோன்றுகிறது.இன்னும் நிறைய இருக்கிறது...நேரமிருக்கையில் நேரிலேயோ..இல்லை இன்னொரு பின்னூட்டத்திலேயோ பகிர்கிறேன்...

சு.சிவக்குமார். said...

சுஹாசினியின் தேர்வு மீது எனக்கும் மிக அதிருப்திதான்..அதுவும் அவ்வளவு அரிதாரம் பூசியபின்னும் கூட பார்க்க சகிக்கவில்லை...

Murali Kumar said...

சிவா, இந்த போஸ்டையே உங்களுக்குத்தான் டெடிகேட் பண்றேன்.
நான் கிட்டதட்ட படம் மாதிரியே எழுதலாம்ன்னு ட்ரை பண்ணேன், சிவா. சொன்னதை விட, சொல்லாதது அதிகமா இருக்கனும். சொன்னதை புரியனும், சொல்லாததை உணரனும்.
படம்பார்த்தவங்களுக்கு மட்டுமே அல்லது அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே புரியனும்ன்னு எழுத ட்ரை பண்ணேன். சரியா பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்.

பேசலாம் சிவா, நிறைய பேசலாம். நேர்ல..................

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.