Warriors of the Rainbow: Seediq Bale


கொஞ்ச காலமாக மலையாளத் திரைப்படங்களைத் தாண்டி எதையும் பார்க்கவில்லை. மூன்று வருடங்களுக்கும் மேலாக, நல்ல உலகத்திரைப்படங்களைத் தேடித்தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அதை அடியோடு நிறுத்தி வைத்த ஆண்டு 2012. சொல்லப்போனால், மலையாள சினிமாவின் ஆண்டு. மீண்டும் இந்த வருடம் உலக திரைப்படங்களைப் பார்க்கலாமென சில படங்களை வாங்கினேன். இதுவரை ஒரு 25 படங்கள் பார்த்திருக்கிறேன். எப்படியும் பத்து படங்களுக்கு மிகாமல் தனிப்பதிவும் எழுத இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் தூக்கி பின்னுக்கு வைத்துவிட்டு கடைசியாகப் பார்த்த ஒரு படம், பதிவாக முன்னால் வந்து நிற்கிறது. அதுதான் ‘Warriors of the Rainbow: Seediq Bale’ 


உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட திரைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, அட்டைப்படத்தின் வசீகரத்தால் தரவிறக்கிய படம் இது. யூ டியூபில் இதன் ட்ரெய்லரைப் பார்த்தபோது, அபொகலிப்டோ மாதிரியான படம் என்றதால் ஒரு ஆர்வம் வந்தது.


இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தின் முதல் பாகத்தில் சரியாக இரண்டு மணிநேர முடிவில் வரும் காட்சி, தைவான் நாட்டின் ஒரு பகுதி, ஒரு மைதானத்தின் மையத்தின் ஜப்பானியக் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. மைதானமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து கொடியேற்றப்படுகிறது. அதிகாரி ஒருவனின் மிரட்டலுக்கு பயந்தபடியே, மைக்கில் ஒருவன் தேசிய கீதத்தை பாடத்தொடங்குகிறான். அவன் கண்ணில் மட்டும் ஒரு கலவரம் தாண்டவமாடுகிறது. மைதானமே அமைதியாயிருக்க, அவன் பாடுகிறான். அப்பொழுது, அந்த இடத்திற்கு சம்பந்தமேயில்லாத ஒருவன் கத்தியோடு மைதானத்தில் நுழைகிறான். அணிவகுப்பில் கடைசியில் இருக்கும் வீரனின் தலையை வெட்டுகிறான். அனைவரும் திகைத்து நிற்கும்போது, ஒரு துப்பாக்கி சத்தம் வருகிறது. அதன் பின், “இவர்களை ரத்தக்காவு வாங்குங்கள், நம் முன்னோர்களுக்காக” என்று ஆரவாரமான குரலோடு பெரிய கூட்டமே மைதானத்திற்குள் பாய்கிறது. ஒவ்வொரு ஜப்பானியனாக தேடித்தேடிக் கொல்கிறது. ஆண்-பெண் என்ற எந்த பாகுபாடுமில்லாமல் தலைகள் வெட்டி எறியப்படுகிறது. சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான உயிர்கள். யார் இவர்கள்? எதற்காக இந்த படுகொலை? முதலிலிருந்து பார்க்கலாம்.


படத்தின் முதல் காட்சி, பன்றியை வேட்டையாடுகிறது ஒரு ஆதிவாசி கூட்டம், அவர்களை, இன்னொரு கூட்டம் தாக்குகிறது. ஆற்றின் மறுகரையிலிருந்து அம்பெய்துவிட்டு, ஆற்றில் குதித்து தான் தாக்கிய இரண்டு எதிரிகளின் தலையை கொய்தெடுத்துக்கொண்டு, அந்த பன்றியையும் தூக்கிக்கொண்டு ஓடுகிறான் மோனோ ரூடோ. எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்தும், அம்பிலிருந்தும் தப்பித்து, ஆற்றில் குதித்து மறுகரையேறி ஓடி மறைகிறான்.  அவனைக் கொல்ல முயன்று தோற்றவர்களுக்கு கவனியுங்கள் என் பெயர் மோனோ ரூடோ, அடுத்தமுறை இந்தப் பெயரைக் கேட்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்” என்ற அவனது இறுமாப்புடன்கூடிய குரல் மட்டுமே கேட்கிறது.


எதிரிகளின் தலையோடு தங்கள் குடியிருப்புக்கு தன் சகாக்களோடு திரும்புகிறான் மோனோ ரூடோ. ஊரே அவர்களை களிப்புடன் வரவேற்கிறது. மோனோ ரூடோவிற்கு முகத்தில் பச்சை குத்துகிறார்கள். தங்களது இனத்தின் வீர அடையாளமான, நெற்றியிலும், முகவாயிலும் பச்சை குத்திக் கொள்ள வேண்டுமானால், அவன் எதிரியின் தலையைக் கொண்டு வர வேண்டும். அப்படி பச்சை குத்தப்பட்ட வீரனுக்கு மட்டும், இறந்த பின் வானவில் பாலத்தில் இறந்தும் வாழும் தங்களது மூதாதையரிடம் சேர முடியும் என்பது அந்த பழங்குடியினரின் நம்பிக்கை. 1865ல் சீனாவிலிருந்து தைவான், ஜப்பானின் ஆளுகைக்குக் கீழ் வருகிற சமயம், இவர்களின் மொழி சீதிக், இவரகள் சீதிக் இனம்மக்கள் என்று அறியப்படுகின்றனர். இவர்களின் பூர்விகம் இப்பொழுது ஆளுகைக்கு மாறுகிற தைவானின் அடர்ந்த மலைக்காடுகள்.

தைவானின் அந்த அடந்த காடுகளில் கிடைக்கும் கனிமங்களுக்காக காடுகளில் ஜப்பான் ராணுவம் மெல்ல ஊடுருவுகிறது.  அங்குதான் இந்த பழங்குடியினர் வாழந்து வருகின்றனர்.  அந்த காடுகளையே தங்கள் பூர்வீகமாக கொண்டு வாழும் அந்த மக்களுக்கு, தங்க பரம்பரையாக வாழ்ந்து கொழித்த பூர்வீக பூமியை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, ஜப்பானியர்களை எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது.  இதில் துப்பாக்கி, குண்டுகள் என வலிமையாக இருக்கும் ஜப்பானியர்கள், இந்த ஆதிவாசிகளை ஆயுதத்தால் அடக்குகின்றனர். இந்த சண்டையில் பெரும்பாலான பழங்குடியினர் கொல்லப்படுகின்றனர். மேலும் லர் , சிறைபிடிக்கப்படுகின்றனர்.  இதில் மோனா ரூடோவின் தந்தையும் அந்த குழுவின் தலைவருமான, ரூடோ கொல்லப்படுகிறார். மோனோ ரூடோ சிறைபிடிக்கப்படுகிறான். சிறைபிடித்தவர்களை உலக வழக்கம்போல் அடிமைகள் என முத்திரை குத்தப்பட்டு, கடுமையான வேலைகள் வாங்கப்படுகின்றனர்.


1910, வருடங்கள் வேகமாக நகருகின்றன. அந்த மலைக்கிராமத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்டு வாழ்ந்தார்களோ, அவர்களை வைத்தே மெல்ல அதை அழித்து, அங்கே ஒரு கிராமத்தை நிறுவுகின்றனர் ஜப்பானியர்கள். குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், காவல் நிலையம் என கிராமங்களை அமைக்கின்றனர். கவரும் கனிமங்களை கொண்டு செல்ல ஏதுவாக, ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், ஆகியவற்றையும் அமைக்கிறனர். இவையனைத்தும் திடகாத்திரமான இனக் குழுவினராலேயே செய்து முடிக்கப்படுகிறது. மனதுக்குள் குமுறிக்கொண்டே அனைத்தையும் செய்கின்றனர். நிமிர்ந்து பேசினாலோ, கொஞ்சம் எதிர்த்தாலோ கொடுமையான தண்டனைக்குள்ளாயினர். சில சமயம், அந்த இளைஞர்கள் ஒன்றாக கூடும்போதெல்லாம், ஜப்பானியர்களுக்கு எதிராக ஏதாவது கலகம் செய்ய ஆலோசிக்கின்றனர். ஆனால், அப்பாவின் மறைவிற்குப்பின் குழுத்தலைவரான மோனா ரூடோ, அமைதியாக இருக்குமாறு அவர்களை அடக்குகிறார். இருந்தாலும், தங்கள் காடும் நிலமும் தங்களாலேயே அழிக்கப்படுவதும், சொந்த நிலத்திலேயே அடிமையாய் இருப்பதும், அவர்களின் நெஞ்சில் ஒரு கனலாகவே இருக்கிறது. இருந்தும் ஏதும் செய்ய இயலாதவர்களாயிருக்கின்றனர்.1930, மேலும் வருடங்கள் ஓடுகிறது. இனக்குழுத் தலைவர்களின் மகள்களை, மகன்களை தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது, அவர்களுக்கு ஜப்பானிய கல்வியைக் கற்றுத்தருவது என அவர்களை ஜப்பானியர்களாகவே மாற்றத் தொடங்குகின்றனர். ஜப்பானியர்கள். அப்படி திருமணம் செய்து ஜப்பானிய வீடுகளுக்கும் போன பழங்குடிப்பெண்கள் அங்கே வேலைக்காரிகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களின் குழந்தைகளை பள்ளியிலும் கேவலமாகவே நடத்துகின்றனர். இந்த இனமாற்றுத் திருமணம் என்பதே வெறும் சம்பிரதாயமான ஒரு செயல், பழங்குடியினருக்கு தங்களை எதிர்க்கும் பழக்கம் மரத்துப்போக ஜப்பானியர்கள் செய்யும் ஒரு யுக்தி, இந்த கலப்புத்திருமணங்கள். இதில் மோனோ ரூடோவின் மகளும் விதிவிலக்கல்ல. அவரது மகளை, ஒரு ஜப்பானிய காவல் அதிகாரி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மெல்ல போராட்ட குணம் மறைந்து, அவர்கள் அடிமையாகவே வாழத்தொடங்கிவிட்ட காலம், ஒரு நாள் மோனாவின் மகன் டோடா மோனாவுக்கு திருமணம் நடக்கிறது.  அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் குழுத்தலைவரின் மகன் திருமணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அங்கே வேவு பார்க்க வரும் ஒரு ஜப்பானிய காவலரை தங்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றனர். அவர் மறுக்க, அவரை விடாப்பிடியாக பிடித்து மணமகன் மதுகுடிக்க வற்புறுத்த, அவர் அவனைத் தாக்கி கடுமையாக வசை பாடுகிறார். கடைசியில் அந்தச் சண்டை கடுமையாகி அவரை கொலை செய்ய முயலும்போது, மோனா ரூடோ அவர்களை அடக்கி, காவலரிடம் மன்னிப்புக் கேட்கிறார். தன் மகனையும், அவன் சகாக்களையும் கடுமையா கோபிக்கிறார்.  தாக்கப்பட்ட அதிகாரி உங்களை என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியும்என்று கோபமாக சொல்லிவிட்டுப் போகிறான்.


      அடுத்த நாள், மோனா ரூடோ அந்த காவல் அதிகாரியை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நேற்றைய சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரியோ, அவரைக் கேவலமாகத் திட்டி வெளியே பிடித்து தள்ளுகிறான். மோனா இதுவரை இல்லாத ஒரு கடுமையான முகத்தோடு, அதிகாரியை முறைத்துப் பார்த்தபடியே தன் இருப்பிடத்திற்கு வருகிறார். இது மெல்ல ஒரு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. பழங்குடியினத்தவராயிருந்து, படித்து ஜப்பானிய காவலாளியாக பணியாற்றும் ஒருவன், மோனாவை தனியாக சந்தித்து உங்கள் கோபம் என்ன விளைவை ஏற்படுத்துமோ? என்ற கலக்கம் ஜப்பானியர்களிடம் வந்துவிட்டது, உங்களுக்கு அப்படியேதும் எண்ணம் இருக்கிறதா? என்கிறான். மோனாவோ முப்பது வருடங்களாக அடிமையாய் இருந்தாகிவிட்டது, அதுவும் ஆயிரக்கணக்கில் வீர்ர்களும் கணக்கிலடங்கா ஆயுதங்களையும் கொண்டிருக்கும் உங்களை எதிர்த்து, வெறும் கத்தியோடு நாங்க என்ன செய்ய முடியும்?  மேலும், என்னிடம் அப்படியான எந்த எண்ணமும் இல்லை என்கிறார். ஆனால், அவன் போனபிறகு தன் தந்தையின் நினைவுகளோடு அவர் பேசுவது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. “உங்களைக் கொன்று , நம்மை வேட்டையாடி கையகப்படுத்திய நம் பூர்வீகத்தை  எதிகளிடமிருந்து கைப்பற்றுவேன், அதை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாய் கொடுத்துவிட்டு உங்களை வானவில் பாலத்தில் சந்திக்கிறேன், அதுவரை நீங்கள் அங்கே எனக்காக காத்திருங்கள் என்று சொல்லி பாடியபடியே ஆடுகிறார். (இந்தப்பாட்டுதான் இப்ப என் ரிங்டோன்). குடியிருப்பிற்கு திரும்பும் மோனா குழுவினரைக்கூட்டி தன் ரகசியத்தைக் காண்பிக்கிறார். அது அவர் புகைப்பதற்காக வாங்கிய தீப்பெட்டிக் குச்சிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சேகரித்த வெடி மருந்துகள். கொஞ்சம் நஞ்சமல்ல, பானை பானையாகச் சேமித்திருக்கிறார். (படத்தில் ஒரு இடத்திலும் அவர் தன் புகைப்பானை தீக்குச்சியால் பற்ற வைப்பதேயில்லை, அத்தனையும் சேமிப்புதான்... ). அவரது இந்த மெளனமான போராட்டம், தான் அடிமையாக சிறைபிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இத்தனை வருடங்களாக சரியான நேரத்திற்காக, திட்டமிட்டபடியே காத்திருக்கிறார். அப்போதுதான் அவர் மகனும் மற்றவர்களும், தங்களுக்குள் கணலும் நெருப்பை, அவர் தன் மனதிற்குள்ளும் அணையாமல் ஊதி ஊதி எரிய வைத்துக்கொண்டிருப்பதை உணர்கின்றனர். சரியான திட்டமிடலும், பொறுமையும்தான் ஒரு வீரனுக்கு வெற்றியைப் பெற்றுதரும் என்பதை உணர்கின்றனர். 


தன் தாக்குதல் திட்டத்தை முழுமையாக தன் மக்களிடம் முன்வைக்கிறார். காடுகளிலும், முகாம்களிலும் வாழும் வெவ்வேறு குழுக்களுக்கு ரகசியமாக இந்த போராட்டத்தின் திட்டம் போய் சேருகிறது. பல குழுவினர்கள் மோனாவின் கீழ் வருகின்றனர். சிலரைத்தவிர (பன்றி வேட்டையில் கொல்லப்பட்ட அந்த எதிர் குழுவினர்). மெல்ல சிறுசிறு தாக்குதல்களாக நடத்தி ஜப்பானியர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து, தங்கள் போராட்டத்திற்கு தயாராகின்றனர். திட்டமிட்டபடி தன் முதாதையர்களுக்காக எதிரிகளை காவு வாங்கும் அந்த நாள் வருகிறது. 1930, பெரும்பாலான ஜப்பானியர்கள் ஒன்று கூடும் இந்த நாளை தேர்வு செய்து, அந்த மைதானத்தை சுற்றி வளைக்கின்றனர். மோனா ரூடோவின் தலைமையில் முதலில் சொன்ன அந்த தாக்குதலை நடத்தி முடிக்கின்றனர். அதில் அங்கு கூடியிருந்த மொத்த ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். கழுகுப்பார்வையில் அந்த மைதானம் காட்டப்படுகிறது, இறந்து கிடைக்கும் ஜப்பானியர்களிடமிருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பழையபடியே காட்டுக்குள் நடக்கின்றனர், சீதிக் பாலே எனும் அந்த பழங்குடி மக்கள். முதல்பாகம் முடிகிறது.                இரண்டாவது பாகம், சில முன்குறிப்புகளோடு ஆரம்பிக்கிறது. WUSHE என்ற இடத்தில நடந்த அந்தப்போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக அங்கே குழுமியிருந்த அத்தனை ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். சீன-தைவானியர்களையும், ஜப்பானிய-தைவானியர்களையும் அவர்கள் கொல்லவில்லை, அவர்களுக்குத் பயணத்திற்குத் தேவையானவற்றைக் கொடுத்து அவர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கின்றனர். WUSHE பகுதியை மீண்டும் சீதிக் பாலே பழங்குடியினருக்குக் கீழ் வருகிறது. தேமூ வாலிஸ் (பன்றி வேட்டையில் எதிரி) தலைமையிலான குழுவினருக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. WUSHE பகுதியை மோனா ரூடோ தலைமையில் நம்மவர்கள் கைப்பற்றிவிட்டனர். இங்கே இருக்கும் ஜப்பானியர்களை கொன்றுவிட்டு இந்தப்பகுதியையும் கைப்பற்றி இணைந்துபோராட மோனா ரூடோ அழைப்புவிடுக்கிறார். ஆனால் அவர்களோடு நட்பு பாராட்டும் ஜப்பானிய அதிகாரி, நயவஞ்சகமாகP பேசி, தேமூ குழுவினரை அவர்கள் சொந்த இனத்துக்கு எதிராக போராட செய்கிறான்.

                இதற்கிடையே இந்த போராட்டம் பற்றிய செய்தி ஜப்பான் அரசுக்கு சேர்கிறது, ஆயிரக்கணக்கில் வீரர்களையும், விமானங்களையும், பீரங்கிகளையும், WUSHE பகுதிக்கு அனுப்புகிறது. காடுகளைத் தவிர வேறொன்றும் அறியாத அந்த முன்னூறு பேர் கொண்ட அந்த பழங்குடி மக்களை கொல்ல ஜப்பான் ஆயிரக்கணக்கான வீரகளுடன் களமிறங்குகிறது. காடுகளை முழுவதுமாய் அறிந்திருந்த அந்த உண்மையான வீரகளுக்கு முன், மோனாவின் அற்புதமான திட்டமிடலுக்கு பின் ஜப்பானியப்படைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். மறைந்திருந்து தாக்குவது அவர்களது யுக்தி. நேரடியாக இவர்களை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்கிறான் ஜப்பானிய தலைமை அதிகாரி. மோனா ரூடோவின் குழுவினருக்கு எதிராக தேமூ குழுவினரை மறைந்திருந்து தாக்க பழக்குகின்றனர். இஅவையனைத்தையும் தாண்டி இன்னும் ஆராய்ச்சியே முற்றுப்பெறாத, விஷகுண்டுகளை விமானங்கள் வழியாக காடெங்கும் வீசுகின்றனர். இந்த புதிய ஆயுதத்தை எதிர்கொள்ள முடியாமல் குழுவினர் ரத்தம் கக்கி இறந்துபோகின்றனர். அரைகுறை உயிரோடு தப்பித்தவர்களும் போராட வழியின்றி கூட்டமாய்த் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


                மோனாவிற்கு தங்கள் முடிவு தெளிவாக தெரிகிறது. எப்படியும் சாகப்போகிறோம், எனவே இறுதிவரை போராடுவதென முடிவெடுக்கிறார். அவரது யோசனைப்படி ஜப்பானியர்களிடம் சரணடையச்சொல்லி கர்ப்பிணிப்பெண்களை மட்டுமனுப்பி வைக்கிறார். குழந்தைகள் கையில் ஆயுதங்களைக் கொடுத்து மற்ற பெண்களை தனியாகப் பிரித்து காடுகளுக்கு ஊடாக அனுப்புகிறார். நாங்கள் போரில் ஜெயித்து மீண்டு வருவோம், அங்கே எங்களுக்காகக் காத்திருங்கள் என்கிறார். ஆனால் அவர்கள் வரப் போவதில்லை என்பதை அந்தப்பெண்களும் அறிந்தே இருக்கின்றனர். அதனால் அவர்கள், பாதி வழியிலேயே சிறுவர்களை நிறுத்தி நீங்களும் உங்கள் தந்தைகளுக்கு உதவியாக போராடுங்கள், எங்கள் பாதுகாப்புக்கு வரவேண்டாம் என்று அனுப்பிவிட்டு, க்கைகளிலிருக்கும் தங்கள் பச்சிளம் குழந்தைகளை கொன்றுவிட்டு, கூட்டம் கூட்டமாய் காட்டுக்கொடிகளில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கின்றனர். இனத்திற்காகப் போராடும் தங்கள் வீர ஆண்மகன்களுக்கு தங்கள் நினைவுகள் கூட பாரமாக இருந்திடக் கூடாது என அவர்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். (ஒன்று இரண்டு அல்ல, 168 பெண்கள் ஒரே இடத்தில் தூக்குமாட்டியிறந்திருக்கின்றனர்)

( குழந்தையை தூக்கிலிடும் பெண்)
(கூட்டமாக தூக்கில் தொங்கும் சீதிக் பாலே இனப்பெண்கள்)

                ஆண்களோ, மரணம்தான் இறுதி என்பதை உணர்ந்திருக்கின்றனர். இயன்றவரை தங்கள் மூதாதையருக்கான இரத்தக்காவை” நிறைவேற்ற தங்கள் வீடுகளை தாங்களே கொளுத்திவிட்டு, தங்கள் கிராமங்களிலிருந்து மொத்தமாக வெளியேறினர். பல்வேறு இடங்களில் அவர்கள் ஜப்பனியர்களுக்கு எதிராக கடுமையாக போராடினர். ஆனால் துப்பாக்கி, பீரங்கி, விஷகுண்டுகள் என பெரும்  ஆயுதங்களுக்கு முன் தாக்கு பிடிக்க முடியாமல் பலரும் இறந்து போகின்றனர்.  போராட்டம் முடிவை எட்டிவிட்டதை உணர்கிறார் மோனோ ரூடோ. ஜப்பனியர்களின் கையில் பிடிபட்டு அவமானப்படுவதை அவர் விரும்பவில்லை. தன் மகனை அழைத்து இனி இந்த போராட்டத்தை நீ முன்நின்று நடத்து” நான் இந்த காடுகளில் மறைந்துபோவேன், எதிரிகளின் தலைகளை எடு, இந்த பூமியை உனதாக்கு, இறுதியில் நான் உன்னை வானவில் பாதையில் சந்திக்கிறேன் என்று சொல்லி காடுக்குள் செல்கிறார். மிச்சமிருந்த சில வீரகளும் ஒரு கட்டத்தில் ஜப்பானிய வீர்ர்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதில் மோனா ரூடோவின் மகன் டோடோ மோனாவும் அடங்கும். காடுகளுக்குள் மறைந்த மோனோ ரூடோவின் பிணத்தை நாலு வருடங்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் ஒரு பழங்க்குடியின சிறுவன் மான் வேட்டையின்போது கண்டுபிடிக்கிறான். வானவில் பாலத்தில் தங்கள் பாரம்பரியமான பாடலைப் பாடிக்கொண்டு மோனா ரூடோவின் தலைமையில் அனைத்து வீர்ர்களும் தங்கள் மூதாதையரை நோக்கி நடந்து கொண்டிருக்கின்ற காட்சியை அச்சிறுவன் பார்க்கிறான். படம் நிறைவடைகிறது.

                இது வெறும் திரைப்படமாக எனக்கு பதியவில்லை, பூர்வகுடி இனக்குழு மக்கள் தங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக வீரத்தோடு போராடி தோல்வியடைந்த கதை. எங்கோ தைவானில் நடந்தது மட்டுமல்ல இது, கிழக்கு சல்வதோரிலும், அர்மேனியாவிலும், இந்தியாவிலும், சமீபமாக இலங்கையிலும் நடந்ததுதான். அடிமைப்படுத்தப்பட்ட அந்த மக்களின் வலிநிறைந்த வாழ்க்கையையும், வீரமான, விவேகமான அந்த போராட்டத்தையும், சோகமான அவர்களின் அழிவையும் இவ்வளவு நெருக்கமாக இதுவரை நான் பார்த்த எந்தப் படமும் பதிவு செய்ததில்லை. இந்த ஐந்து மணிநேரத்திலும், சம்பளம் வாங்கிக்கொண்டு பழங்குடியினத்தவராய் உடையுடுத்துக் கொண்டு, ஒளிவீசும் கேமிராவின் முன் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், என்று ஒரு நொடிகூட உணரமுடியவில்லை. அதியற்புதமான நடிப்பு, அதுவும் மோனோ ரூடோ. அற்புதமான உடல்மொழியும், அவரது அக்ரோஷமான கண்களும் நம்மை அவரின் கீழ போராடும் அவரது வீரகளில் ஒருவராகவே உணரச்செய்கிறது. சேகுவேராவிற்குப் பிறகு மனதில் அழுத்தமாக பதிந்த பெயர் மோனோ ரூடோ, முகம் மோனோ ரூடோவாக நடித்த லிங் சிங் சாய்.


(கைப்பற்றிய மனித தலைகளுடன் ஜப்பானிய அதிகாரிகள், ஆவணப்புகைப்படம்)

 WUSHE வில் நடந்த இந்தப்புரட்சி  போராட்டம் குறித்த தகவல்கள் WUSHE சம்பவம் என்கிற தலைப்பில் விக்கிபீடியாவில் கிடைக்கின்றன. இன்னும் ஏராளமான தலைப்புகளில் இணையமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன மோனோ ரூடோ தலைமையில் நடந்த இந்தப் புரட்சி பற்றிய தகவல்கள்.  இந்த போரில் 1500க்கும் மேற்பட்ட சீதிக் பாலே மக்கள் பங்கேறிருக்கின்றனர். வ்வூஷே புரட்சியில் 300க்கும் மேல் ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழியாக 1300க்கும் மேல் சீதிக் மக்கள் கொல்லப்பட்டனர். 600 பேருக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டனர். காடுகளுக்குள் மறைந்த மோனோ ரூடோவின் பிணத்தை நாலு வருடங்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் ஒரு பழங்குடியின சிறுவன் மான் வேட்டையின்போது கண்டுபிடிக்கிறான். அதன் பின் அவரின் உடலை கைப்பற்றி  ஜப்பானிய அரசு, அதை அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது.  அதன்பின் தைவான் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டபின் அவரது உடல் காணாமல் போனது. அதன்பின் 1981-இல் மீண்டும் அவரது உடல் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் கண்டுபிக்கப்பட்டு அவரது பூர்வீக பூமியிலேயே புதைக்கப்பட்டதுஎன நான் படித்த வரையில் அறிகிறேன்.நடுவில் நிற்பவர்தான் நிஜமான மோனோ ரூடோ

 ஐந்து மணிநேரம் இரண்டு நாட்கள் பார்க்கஒரு நாள் எழுத என என் மூன்று இரவுகளை காவு வாங்கியும் இன்னும் மனதில் ஆறாத ஒரு வடுவை உருவாக்கிவிட்டதுஇந்த திரைப்படம். மோனோ ரூடோவும் அவர் மக்களும், எளிதாக வெளியேறிவிட முடியாதபடிக்கு மனதில் அடியாழத்தில் இன்னும் நிறைந்திருக்கிறார்கள்.


9 கருத்துரைகள்:

நிகழ்காலத்தில் சிவா said...

பார்த்துத்தான் ஆகணும்னு தோணுது முரளி....முயற்சிக்கிறேன்

Murali Kumar said...

பாருங்கண்ணா, படம் வேணும்னா டவுன்லோட் பண்ண வேணாம். நான் தரேன்.

Manavalan said...

பாரம்பரியம் மிக்க ஒவ்வொரு இனக்குழுவும் சம காலத்திய மக்களால் அழித்தொழிக்கப்படுதல் என்பது மனம் முழுவதும் பாரத்தை தருவது. இன்றும் பழங்குடியினரை காட்சி பொருளாக காணும் நம் பழக்கம், அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நம் சிந்தனை பலவீனமானது. இயற்கையோடு வாழும் அவர்கள் மனதளவிலும் பலமானவர்கள். நாம் செயற்கையான வாழ்க்கை ஓட்டத்தில் நிழலான நினைவுகளோடு நாகரீகம் என்ற போர்வையில் சாயம் பூசி திரிகிறோம். இன அழித்தொழிப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்தேறிவருகிறது. சமூக, பொருளாதார முஜ்ரைகளின் மாற்றம், அடிப்படை போட்டி நிலைகளிலான பிரதிநிதித்துவம்......

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல...

நாம் ஒரு திரைப்படத்தை இருவரும் சேர்ந்து பார்த்து அதனை பதிவாக்க முயற்சி செய்யலாமா? தங்களது தோள்மீது ஏறி திரைப்படம் காண ஆவல்!

உதய் பிரபு said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது இந்த பதிவு. விரைவில் படத்தை காண முயற்சி செய்கிறேன் :-)

உதய் பிரபு said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது இந்த பதிவு. விரைவில் படத்தை காண முயற்சி செய்கிறேன் :-)

Arun said...

Excellent review. I was a bit skeptic initially, since the movie resembled 'Apocalypto' and it was very long, close to 5 hours. But, the movie was fantastic. A detailed study on a indigenous culture.

This is my blog. Take a look at your free time.
http://movieretrospect.blogspot.com/

kalai selvan said...

Hi. I saw the trailer of the movie.
Padam sema. How can i get the movie?

Murali Kumar said...

Thanks boss. :-)

Murali Kumar said...

I dont know about the DVD, but its avail in Torrent sites. If u r chennai, u can get it by DVD.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.