அப்பாவைக் கொஞ்ச நாளா காணல.


எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கலாம், போர்டிகோவில் தங்கையோடு அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன். அப்பா, தன் ஹெர்க்குலஸ் சைக்கிளை, நைந்துபோன தன் பழைய கைலியை கிழித்து, மண்ணெண்ணை தொட்டுத் துடைத்துக் கொண்டிருப்பார். வேலிச் செடிகளுக்கிடையே செருகி வைத்த ரேடியோவில் செய்திகளை யாராவது வாசித்துக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலான சைக்கிள் துடைக்கிற நேரங்களில் அப்பா, 80-களில் வெளிவந்த கும்னாம் படத்தின் கும்னாம்ஹே கோயி என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை முணுமுணுத்துக்கொண்டே அதைச் செய்துகொண்டிருப்பார்.

திருப்பூருக்கு வந்த புதிது. அமராவதிப்பாளையம் என்கிற கிராமத்தில் இருந்தோம். அங்கிருந்து அப்பா அலுவலகம் செல்லவோ, நாங்கள் அனைவரும் பள்ளி செல்லவோ நேரத்திற்கு செல்லவேண்டுமென்றால் காலை 7.10-க்குள்ளாக வீட்டிலிருந்து கிளம்பியிருக்க வேண்டும். அந்த நேரங்களில் வீடே போர்க்களம் போல மாறியிருக்கும், அனைவருமே அவதி அவதியாகக் கிளம்பிக்கொண்டிருப்போம், அதிலும் 8 மணி பேசஞ்ஜரை பிடிக்க அப்பாதான் இன்னும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருப்பார், ஆனாலும் குளியலறை நுழைந்ததும் சன்னமான குரலில் தனக்குப் பிடித்தமான ஹிந்திப்பாடல்களைப் பாட ஆரம்பிப்பார்,   பெரும்பாலும் ச்சோதுவீக்கா சாந்து ஹோ பாடலைப் பாடிக்கொண்டிருப்பார், அதிலும் லா ஜவாப் ஹோஎன்ற வரியைக் கொஞ்சம் அதிக உற்சாகத்தோடும், அழுத்தமாகவும் பாடுவார்.

ஒருமுறை இரவில், வீட்டில் பழைய பாடல்களைப் பற்றி பேச்சு வந்தபொழுது, ஆளாளுக்கு பழைய பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்தோம். எனக்கு பத்மா மேடம் சொன்ன ஒரு பாடலைப் பாடலாமென தோன்றியது. ஆனால் பாடல் சுத்தமாக நினைவில் இல்லை. என்னென்னவோவற்றை சம்பந்தப்படுத்தி யோசிக்கிறேன்., ஊகும். அருமையான பாட்டுப்பா, பிபிஎஸ் பாடியது, ரொம்ப ஸ்லோவா இருக்கும், ரொம்ப பழைய பாட்டு, அந்த லேடி வாய்ஸ்ல வரஊகும்என்ற அந்த அழகுக்காகவே அந்தப்பாட்ட கேட்டுட்டே இருக்கலாமென திரும்ப திரும்ப அப்பாவிடம் சொல்கிறேன். அப்பாவும் இந்தப் பாட்டா? அந்தப் பாட்டா?ன்னு ஏதேதோ பாடுறார். சரியாவரலை. இந்த நேரத்துல பத்மா மேடமுக்கு கூப்பிடலாமான்னு ஒரு பக்கம் யோசனை. சரி, ஆகட்டும்னு கூப்பிட்டேன், மேடம் அன்னிக்கு ஒரு பாட்டு பாடினீங்களே, ஊகும்ன்னுஅப்டீன்னேன். மேடம், போனில் அந்தப்பக்கம் பாட ஆரம்பித்தார்கள் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் சோலையிலே, சிட்டுக்குருவி ஆடுது, தன் பெட்டைத் துணையைத் தேடுது ஸ்பீக்கரில் பாடலைக் கேட்ட அப்பாவும் அம்மாவும், அவர்களோடு சேர்ந்து அந்த ஆலாபைப் பாடி முடித்தார்கள்.

மரச்சட்டமிட்ட, அடிக்கடி தண்ணீர் பட்டு ரசமிழந்து போன கண்ணாடியில் முகம் பார்த்து சவரம் செய்வார், மழித்து முடித்தபின் இடவலமாக முகத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு, தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” என்று முணுமுணுக்க ஆரம்பிப்பார். பின் மேலுதடின் பின்னால் நாக்கால் உந்தியபடி கண்ணாடி அருகில் சென்று மீசையில் ஆங்காங்கே நரைத்த முடிகளை ஒவ்வொன்றாக தேடித்தேடி வெட்டிக் கொண்டிருப்பார். உரிமை இழந்தோம், உணர்வை இழந்தோம்……” இந்த வரிகளைக் கேட்டால் அப்பா எல்லாம் முடித்து, முகம் கழுவிவிட்டாரெனப் பொருள்.

ஏம்மா எஸ்.ரா ஒரு கதையில, ஒரு சித்தி ஓயாம பாடுவான்னு, ஒரு பாட்ட சொல்லியிருப்பாரே அது என்ன பாட்டுமா?ன்னு சமயலறையில் வேலையாயிருக்கும் அம்மாகிட்ட என் ரூம்ல இருந்து கத்திக் கேட்பேன். (அம்மாவிற்குமெனக்குமான இந்த சம்பாஷணை, வீட்டில் ஒருநூறு முறையாவது நடந்திருக்கும். எத்தனை முறை கேட்டாலும், தேவைப்படும்போது மட்டும் மறந்துபோவதின் பட்டியலில் இந்தப்பாடலும், மனோரஞ்சிதப்பூவின் பெயரும் முதலில் இருக்கிறது) அதையெல்லாம் கேட்டுப்பழகிய என் அப்பா, ஹாலில் இருந்தபடிக்கே பால் போலவே, வான் மீதிலே, நீ ஓடிவா என்று முடிப்பார், அடுத்த வினாடி நீங்க யூகித்தபடியே மூன்று அறைகளிலிருந்து, மூன்று குரல்களில், ஒரே பாடல் தொடங்கும் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா, நிலா”.

என்னாம்மாஇது? சாம்பார்ல சுத்தமா உப்பேயில்லன்னு அம்மாவிடம் கடிந்து கொண்டிருக்கும்போது, இப்பதானடா, அப்பா சாப்ட்டாரு? அவரு ஒண்ணும் சொல்லலையே?ம்பாங்க அம்மா, துண்டில் கையைத் துடைத்தபடி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கிற தொணியில் முகத்தை வைத்துக்கொண்டு எங்களை கடந்து போயிருப்பார். அதுபோலவே அப்பா, இப்போது எந்தப் பாடல்களையும் முனுமுனுப்பதில்லை, எதன்மீதும் பற்றில்லாமல் இருக்கிறார். எப்போதும் சினிமா பாடல்களால் நிரம்பிய வீடு எங்களது. எப்படி யோசித்துப் பார்த்தாலும், என் வீட்டின்  எல்லா சுக, துக்கத் தருணங்களிலும் எதோவொரு மூலையில் ஏதோவொரு பாடல் இசைத்து கொண்டேதான் இருந்திருக்கிறது. ஒருவேளை, அவருக்குப் புதிய பாடல்களில் ஈர்ப்பில்லாமல் போனாலும், அந்த பழைய பாடல்களை எப்படி இவ்வளவு எளிதாக மனதிலிருந்து இறக்கி வைத்திட இயலும்?

சதா முனுமுனுத்துக் கொண்டிருந்த ஹிந்தி பாடல்களை, ஹிந்தி எதிர்ப்பிற்குப் பிறகு, எப்படி எந்த சலனமும் இன்றி இறக்கி வைத்தாரோ, அதைப்போலவே இப்பொழுதும் மொத்தமாக பாடல்களை, இசையை விட்டு மொத்தமாய் வெளியேறிவிட்டார். அப்பாவின் இப்போதைய முகம், இசையில்லாத முகம். சுரத்தில்லாத முகம். இதெல்லாம் போகட்டும், போன வாரத்தில் ஒருநாள், கடல் படத்தின் மூங்கில் தோட்டம், மூலிகை வாசம் பாடலைக் கம்ப்யூட்டரில் கேட்டுக்கொண்டிருந்தேன். இல்ல கூடவே பாடிக்கொண்டிருந்தேன். என் அறைக்குள் அப்பா வந்தார். பாட்டு கேட்கணும்ன்னா ஹெட் போனப் போட்டு கேளேன், இல்ல கதவ சாத்திட்டு கேளுஇப்டி சொல்லிட்டு கதவையும் சாத்திட்டு போயிட்டார். என்னாச்சு அப்பாவுக்கு? பேர்போன கர்நாடக சங்கீத வித்வான், மன்னை ராஜகோபால் மகன் பத்மநாபன் என்கிற என் அப்பாவை, இப்ப கொஞ்ச நாளா காணல...


(அப்பாவிற்கும் மகளுக்குமான இந்த சந்தோச நிமிடங்களுக்கு பின்கூட ஒரு அழகான பாடல் இருக்கிறது)


எதாவது ஒருநாள் வரும், ஒரு நேரம் வரும், இலை விழுவதுபோல இயல்பாய் ஒரு நொடி வரும், அப்பாவும் வருவார்.‘கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’ என அவருக்கே உரித்தான குரலில் பாடிய படியே அப்பாவும் திரும்ப வருவார். வரனும்.

12 கருத்துரைகள்:

Krithiha said...

Nostalgic...reminded me of my childhood in a similar home.
//“உரிமை இழந்தோம், உணர்வை இழந்தோம்……” இந்த வரிகளைக் கேட்டால் அப்பா எல்லாம் முடித்து, முகம் கழுவிவிட்டார் என்றுப் பொருள்.
Way similar to our home's :
டேப்ல கந்தர் சஷ்டி கவசம்: அப்பா எழுந்திட்டார்
ஆல் இந்தியா ரேடியோ- ஈஸ்வர ஜனதோ: அப்பா ஷேவ் பண்ணி முடிச்சிட்டார்
//என் அப்பா, ஹாலில் இருந்தபடிக்கே “பால் போலவே, வான் மீதிலே, நீ ஓடிவா” என்று முடிப்பார்,
அதே ...even its always my dad, who gets it right, everytime.
The feel of missing such a dad..I get it. Beautiful write-up. Keep it up !!

கோபிநாத் said...

ம்ம்ம்...!

Sugirtha Dhandapani said...

முரளி,

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. ம்யுசிக்கலா இருந்த அப்பாவோட தற்போதைய மௌனம் கஷ்டமா இருக்கும் ஆனாலும்
...அப்பாவும் வருவார்ன்னு முடித்திருப்பது நல்லா இருக்கு.

Liked the new look of ur blog too...

Sri Vithush said...

அண்ணா நான் ரொம்ப நாளாக உங்க ப்ளாக்க தொடர்ந்து வந்திருக்கன் ரொம் நல்லா எழுதுறீங்க உங்க எழுத்து நடை ரொம்ப வித்தியாசமா இருக்கு. உங்க ப்ளாக்க பார்த்து தான் நான் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கன் பாத்துட்டு சொல்லுங்க...

vaaninnaduveanaan.blogspot.com

Sri Vithush said...
This comment has been removed by the author.
shri Prajna said...

முரளி,

படிக்கப் படிக்க பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது.. எங்கப்பா கூட ”வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி”.. அப்புறம் ரொம்ப சோகமா இருந்தா “ பேர்தெரியா அன்னையெனை பெற்றெடுத்தாளே” தாலாட்டு பாட்றதாயிருந்தா “ காலமிது, காலமிது, கண்ணுறங்கு மகளே” ன்னு ஏதாவது பாடிட்டிப்பார்...

ஆனா யாரும் எதுவும் ஒரெமாதிரி இருப்பதில்லை.. மாற்றம் மட்டும் தான் மாறாம இருக்குது..

சமீபத்தில நானும் சுகியும் trek போனப்போ ஒரு ஆத்தில படுத்திட்டு வாய்க்கு வந்த பாட்டெல்லாம் பாடிட்டு இருந்தோம்...ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..

சின்ன சின்ன சந்தோஷங்களை கொண்டாட்ற மனசு எப்பவும் வேணும்..
நல்லா எழுத்தி இருக்கீங்க.. murli..

Murali Kumar said...

@க்ருத்திகா
நன்றி க்ருத்திகா, அப்பாவுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கமும்.

Murali Kumar said...

@கோபிநாத்
ம்ம்ம்ம்ம்...:-)

Murali Kumar said...

@சுகிர்தா
//அப்பாவும் வருவார்ன்னு முடித்திருப்பது நல்லா இருக்கு//
வந்துதானே ஆகனும்., பத்மா மேடம் சொன்னதுபோல பேத்திய கைல குடுத்தா ஒரே ஒரு ஊரிலேன்னு பாட ஆரம்பிச்சிடுவார்ன்னு நினைக்கிறேன்.

//Liked the new look of ur blog too.//
தேங்க்யூ. :-)

Murali Kumar said...

@ஸ்ரீ விதூஷ்
நன்றி தொடர்ந்து படிங்க, இங்க தளத்தையும் பார்த்தேன், தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்.

Murali Kumar said...

@ஸ்ரீ
அம்மா படிச்சிட்டு அப்பாகிட்ட பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்பா இப்ப காலைல உரக்க பாடுறார், எனக்கு கேட்க்கனும்ன்னோ, என்னவோ?
ஹேப்பி. :-)

butterfly Surya said...

அன்பின் முரளி..

உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த வரிகள்.

அதனால்தான் நாம் பேச / பாட ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறோம்.

அருமையாக எழுதியிருக்கிறாய்.

வாழ்த்துகள். :)


Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.