பாட்டி, என்றொரு தேவதை.


தேவதை கதை சொன்ன என் கதை சொல்லும் தேவதை, மங்களத்தம்மா எனும் என் பாட்டிக்கு.....

ஓம் சக்தி­­ என்று சொல்லிவிட்டு பாட்டி சொல்ல ஆரம்பிக்கிற கதைகளைக் கேட்டே வளர்ந்தவன் நான். எனக்குத்தான் அது கதை, சொல்லப் போனால்  பாட்டி எதைச் சொன்னாலும் அது எனக்குக் கதைதான். கடவுள் என்ற விஷயத்தைக் கூட இன்று வரை முழுமையாக நம்பி விடாமல் கேள்விக்குட்படுத்தியே வைத்திருப்பது கூட, பாட்டியிடம் கேட்ட சாமி கதைகளால் கூட இருக்கலாம். (சாமி கதையில வரதால சாமியும் கதைதான்னு ஒரு நெனப்பு) எதையெதை, எங்கே, எவ்வளவு சேர்க்கனுமோ  அதையதை, அங்கங்கே, அழகாகச் சேர்த்து வெகு சுவாரஸ்யமான கதைகளாய் எங்களுக்குச் சொல்கிற அனைத்தும், அவர்களின் கசந்த கடந்த காலத்தையும், 70-80 வருட வாழ்க்கையும்அதன்  நினைவுகளையும் என்பதெல்லாம் புரியும்போது பாட்டி இல்லை.

எனக்குத் தெரிந்து நான் கண்டறிந்த வரையிலும் பாட்டி மூன்று வகைக் கதைகளை எங்களுக்குச் சொல்வார்கள். ஒன்று, ராஜா, ராணி, தேவதைகளெல்லாம் வரும் பேண்டஸிக் கதைகள். ஒவ்வொன்றும் LORD OF THE RINGS, HARRY POTTER -யெல்லாம் தூக்கி சாப்பிடும் படியான கதைகள். நார்னியா போன்ற பெரிய பெரிய பெயரில்லாத  ராஜ்யங்களும் (எல்லாக் கதைகளுமே ஒரு ஊர்லன்னுதான் ஆரம்பிக்குது), தவளை அரசனும், நெடுமுடி இளவரசியும், ஒருவிரல் மந்திரியுமாக கதை நெடுக வினோதங்கள் அரங்கேறியபடியே இருக்கும். கதை முடிந்த பின்னரும், பாட்டியின் விரல்களைப் பற்றியபடி அந்த இல்லாதக் காட்டிற்குள் திரிந்து கொண்டிருப்பேன். இந்த வகைக் கதையில் அதிகம் வருகிற வரி அந்த ராஜாவுக்கு ஒரு புத்திசாலி மந்திரி இருந்தானாம்!”

இரண்டு, எங்க நெருங்கிய உறவினர்கள் பெயரெல்லாம் வருவதுபோல கதை சொல்ல ஆரம்பித்து விட்டால் நாங்களும் திருவாரூரிலோ, மன்னார்குடியிலோ எதோ தெருக்களில் பாட்டியின் கைபிடித்து நடந்து கொண்டிருப்பது போல இருக்கும், அது அனேகமாக பாட்டியின் சொந்தக் கதையாக இருக்கும். இந்தக் கதைகளை சொல்லும்பொழுது பொதுவாக பாட்டி எங்களைப் பார்த்தது கிடையாது, பெரும்பாலும் விட்டத்தைப் பார்த்தபடியே சொல்வார்கள். சில சமயம், முந்தானையால் கண்களை துடைத்துவிட்டுக் கொள்வார்கள். விளங்காமல் கூடவே அழுததும் உண்டு. இந்தக் கதைகளில் அதிகம் சொல்கிற விஷயம் ம்ம்ம்ம்! அதெல்லாம் ஒரு காலம்

மூணாவது கொஞ்சம் ஸ்பெசல், சாமிக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு பயபக்தியோடு சொல்வார்கள். பாட்டி ராஜாக் கத சொல்லுன்னு எவ்ளோ அரற்றினாலும், சிவராத்திரி இரவுகளில் விடிய விடிய கடவுள் பலரூபங்களில் கதைகளில் வந்து படுத்துவார். மகாபாரதம், ராமாயணம் இதெல்லாமே இன்றுவரை பாட்டியின் வாய்வழிக் கதைகளாகக் கேட்டது மட்டும்தான். படித்ததில்லை. அருகிலுள்ள சாமுண்டிபுரம் கோவிலுக்கு நடந்து செல்லும் போது, குறுக்கே வந்த பாம்பு, ஓம்சக்திஎன்று கண்ணை மூடி வேண்டியதும், விலகிச் சென்றது. உச்சி வேளையில் மயக்கம் வந்த பொழுது யாரென்றே தெரியாத உருவில் அம்பாளே வந்து உதவி செய்து வீட்டில் விட்டுபோனது, போன்ற உண்மை(?) கதைகளையும், சாமிக் கதைகளிலேயே சேர்த்திக் கொள்ளலாம். இதுல அடிக்கடி உபயோகிப்பட்ட வார்த்தை நீங்க நினைத்தது போலவே ஓம் சக்தி.

கதை கேட்பவர்களில் நான் கொஞ்சம் ஸ்பெசல், சாப்பிட்டுக் கொண்டிருப்பேன், அக்காவும் தோழிகளும் சாப்பிட்டுவிட்டு பாட்டி கதை சொல்லுங்க, ’கதை சொல்லுங்க என்று நச்சரித்தபடிக்கு, பாட்டியைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். இருங்கடீ! அந்தப்புள்ளையும் வந்துறட்டும்பாங்க... வேணும்ன்னே அம்மா இன்னும் கொஞ்சம்னு கேட்டு பொறுமையா சாப்பிட்டுட்டு வருவேன். ஏன் ஸ்பெசல்ன்னா? பாட்டிக்கு கதை சொல்லும்போதுஊம்கொட்டனும். அதை ஒரே டெம்போவில் சரியான இடைவெளியில் ஊம் கொட்டுவதில் நான் எக்ஸ்பர்ட். இன்னொன்னு மத்தவங்க பாதி கதை கேட்கும்போதே தூங்கிடுவாங்க, இல்ல அவங்கவங்க அப்பாம்மா வந்து கூட்டிப் போய்விடுவார்கள். நான்தான் கதை முடியும் வரையும், முடிந்த பின்னரும் இருப்பேன். முழுவதும் கேட்டுவிட்டு அடுத்தடுத்த நாட்களில் பாதிக் கதைகளில் தூங்கியவர்களுக்கு நானே ஒரு கதையைத் தயாரித்துச் சொல்லுவேன். ஏனெனில் உண்மையான கதையின் முடிவு எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

உணர்ச்சிப் பெருக்கோடு பாட்டி சொல்கிற எல்லா கதைகளும் புரியாவிட்டாலும், எனக்குக் கேட்கப் பிடிக்கும். நான் ஒருவன் கேட்கிறேன் என்பதே பாட்டிக்கு ஒரு திருப்தி மாதிரி. கதை, எந்த வகையாய் இருந்தாலும்.. பாட்டி சொன்ன ஒவ்வொரு கதைகளுமே எனக்குள் பெருங்கனவுகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. ஒரே பாட்டிஎத்தனை இரவுகள்எத்தனை கனவுகள்? எத்தனை மனிதர்கள்? ஆனால் இப்பொழுது என் மனதில் அந்தக் கதைகள் இல்லை. இப்போன்னு சொல்வதைவிட அப்பவே அப்படித்தான்.. ஏனெனில் ஒரு கதையை தூக்கிச் சாப்பிடும் படியாகத்தான் இன்னொரு கதை இருக்கும்.  அத்தனையும் நினைவில் சுமக்க முடியாதபடி கணக்கிலா கதாப்பாத்திரங்களைக் கொண்ட கதைகள். அதையும் மீறி சில சமயங்களில், சில கதைகளைக் கேட்கும்போது அன்னிக்கு சொன்னியே, அந்த பொம்ம செய்ற கிழவின்னு... அதே கிழவியா? பாட்டி, இதுவும்?” என்று கேட்பேன். பாட்டி பூரித்துப்போய், என் மோவாயைப் பிடித்து உச்சந்தலையில் முத்தமிட்டபடி ஆமாண்டா, எங்கண்ணுக்குட்டி! அதே கிழவிதான்...”ன்னு கதையைத் தொடர்வார்கள். காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது போல ஒரே பெருமையா இருக்கும்.

சிறுவயதில் கால் முளைத்து மனதிலிருந்து கனவுகளுக்கு நடந்து கொண்டிருந்த, எந்தக் கதையும் இப்பொழுது என்னிடம் இல்லை. நான் வளர, வளர அந்தக் கதைகள் கனவிலிருந்து, சிந்தனைக்கும், அறிவிற்கும் பயணப்பட்டு வளர்ந்த மூளை கதைகளை என் நினைவுகளிலிருந்து மழுங்கடித்துவிட்டது.  பாட்டி! உன்னை விடவும், தடயமேதுமின்றி  என் மனதிலிருந்து வெளியேறிப் போன அந்தக் கதைகளைத் தான்  தேடிக்கொண்டிருக்கிறேன்.மரப்பாச்சி பொம்மைகள், அதைச் செய்யும் கிழவி, அன்பு தியேட்டர், கமலாலயக்குளம், மும்மூர்த்திகள் சபா என கதைகளில் வருகிற ஒரு சில சம்பவங்களும், இடம், பெயர்களும் மட்டுமே கதைகளின் மிச்சம்போல மனதின் அடியில் படிந்து கிடக்கிறது. எவ்வளவு யோசித்தாலும் கோர்வையாக , ஒரு கதையாக என்னிடம் எதுவுமேயில்லையே?

பாட்டி! எனக்கு இப்பொழுது ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அவள் பெயர், யாழினி! அவளுக்கு ஒண்ணுக்கு ரெண்டா பாட்டியிருந்தாலும், நீயில்லையே? உன்னைப் போல ஒரு தேர்ந்த கதைசொல்லியில்லையே, அவளுக்கு? என் தேவதைக்கிழவியே! உன் கதைகளை என்னில் கிளர்த்திவிட்டுப்போ! 

எப்பவோ எழுதிய என் கிறுக்கல்.....


வெண்டைக்காயை நறுக்கியபடி
தொலைகாட்சி பெட்டியில்
யாரோ ஒருத்திக்காய்
அழுதுகொண்டிருக்கும், அக்காவை
திட்டியபடித் திரும்பினேன்.

ஆறுவயது, அக்கா மகன்,
கால்களுக்கு கீழே
கரையான் புற்றுவைப்பதை
அறியாமல்
பார்ம்வேலியில் பயிர்செய்து,
கிடாரைக்கூட கீபோர்டில்
வாசித்துக்கொண்டிருக்கிறான்.

’ஒரு ஊர்ல, ஒரு ராஜா……
எனத் தான் சொன்ன கதைகள் யாவும்
படிந்திருந்த சுவற்றில்
தொங்கும் சட்டத்தில் சிரித்தபடி
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
பாட்டி!

6 கருத்துரைகள்:

வெண் புரவி said...

கதை சொல்லாமல் அல்ப ஆயுசில் போய் விட்ட என் பாட்டியை திட்டிக்கொண்டிருக்கிறேன். காட்டிலும் நூல் ராட்டைக்கடியிலும் தன் வாழ்க்கையை தொலைத்துவிட்ட என் பாட்டிகளுக்கு என் வயிற்றை நிரப்புவதே பெரிய பாடாக இருக்கும்போது கதை எங்க சொல்வது. இருந்தபோதிலும் வருத்தமில்லை. 'கதை சொல்லும் பாட்டி' கதைகளை கேட்கும்போது அந்த தினவு தீர்கிறது. நன்றி முரளி.

Sri Vithush said...

நானும் பாட்டிட்ட கதை கேட்டிருக்கன் ஆனா இந்தளவுக்கெள்ளாம் இல்லை
எனோ என் பாட்டி நினைவு வருது.... ரொம்ப நாளைக்கு பின்பு

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

Sugirtha Dhandapani said...

ஹேய் நல்லாருக்குப்பா.

பாட்டி இல்லாட்டி என்ன நீங்க கூட நல்ல கதை சொல்லி ஆச்சே!

Sugirtha Dhandapani said...

ஹேய் நல்லாருக்குப்பா. பாட்டி இல்லாட்டி என்ன நீங்க கூட நல்ல கதை சொல்லி ஆச்சே!

TamilzhIlakkiya said...

மிக அருமை. என் பாட்டி குறித்த - கடந்த காலத்திற்கு சென்று வந்தேன். என் பாட்டி இறந்து 5 வருடங்கள் ஆகி விட்டன. செல்ல பேத்தி நான். ரொம்ப - ரொம்ப செல்லம். என்னை தினமும் பாராட்டிட்டே இருப்பாங்க. உருளைக்கிழங்கு போண்டாவும் , நறுக் நறுக் - நு - CRISPNESS மாறாம இருக்கற - மரவள்ளி சிப்ஸ் - இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ( அப்பா - அம்மா தனிக்குடித்தனம் ) - பாட்டி வீட்டுக்கு போகும்போது - வாங்கி வச்சு குடுப்பாங்க. அது ரொம்ப ஸ்பெஷல். நம்ம தேவைகளை ரொம்ப ஆசையா யோசிக்கற ஒரு ஜீவன் - நமக்கு எப்பவுமே ஸ்பெஷல் தானே. சுயநலம் கொஞ்சமும் இல்லாம வாழ்ந்த ஜீவன் எங்க பாட்டி. இப்ப அவங்களை பத்தி நெனைச்சாலும் என் கண்ணு ரெண்டும் கலங்குது. நீங்க - மிக - மிக அழகா - வாசிக்க - வாசிக்க - நேசிக்க வைக்கற மாதிரி எழுதறீங்க சார். கண் முன்னே - வந்து போற ஒரு வாழ்க்கை - உங்க வரிகள்ளே இருக்கு. FANTASTIC WRITING AND GREAT DAY.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.